துன்பம் ஒரு தொடர்கதை

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

என் எஸ் நடேசன்


மொபைல் தொலைபேசி அடித்தது.

கைகளால் எடுத்படி தலைமாட்டில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.

ஐந்துஅரையாக இருந்தது,

தொலைபேசியில் ‘ ‘நொயல், இந்த நேரத்தில் அழைப்பதற்கு மன்னிக்கவும். நான் ஆர்தர் பேசுகிறேன். ஒஸ்காருக்கு பின்கால்கள் நடக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது.

‘ஒஸ்காருக்கு என்ன வயது ? ‘ ‘

‘ ‘பத்து அல்லது பன்னிரண்டாக இருக்கலாம் ‘ ‘.

‘ ‘சரி, அரைமணி நேரத்தில் கிளினிக்கில் சந்திக்கிறேன். ‘ ‘

ஒஸ்கார் நாயோ,பூனையோ என உறுதிப்படுத்த முடிவில்லை. பெரும்பகுதி உரையாடல் நித்திரையின் மயக்கத்தில் நடந்தது, கனவில் நடந்தது போல்கூட இருந்தது, ஆர்தரின் குடும்பப் பெயரைக் கூட கேட்கவில்லை. பலர் தங்களது பெயருடன் செல்லப்பிராணிகளின் பெயர்களையும் நினைவு வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ!

தூக்க மயக்கத்தில் காலைக்கடன்களை அவசரமாக முடித்துக்கொண்டு காரை வெளியே எடுத்தேன். மெல்பேன் முதல்இரவின் பின்பாக துயில் எழும் தம்பதிகள் போல் அரைகுறையாக பனிப்புகாரை விலக்கிக் கொண்டு மெதுவாகத் துயில் எழுந்தது, வாகனங்களின் கெட்லைட் மட்டுமே பனிப்போர்வையை ஊடறுத்து தெரிந்தது.

கிளினிக்கை அடைந்தபோது, மிகவும் அறிமுகமான ஆர்தர் பேட்டன் பூனையை கொண்ட பெட்டியைத் தூக்கிக்கொண்டு எனக்காகக் காத்து நின்றார்.

கதவைத் திறந்து உள்ளே சென்றதும் ஆர்தர் பூனையை எடுத்து பரிசோதனை மேசையில் வைத்தார். கறுப்பும் வெள்ளையும் கலந்த பூனை, நெற்றியில் பொட்டு வைத்ததுபோல் கருப்பின் முன்னால் வெள்ளைப்புள்ளி இருந்தது, வழக்கமான நாள்களில் வர்ணக்கலப்பை சிறிதுநேரம் ரசிப்பேன். ஒஸ்காரின் நிலை இன்று நேரடியாக உடல் நலத்தை கவனிக்க இறங்கிவிட்டேன்.

இடுப்புக்கு கீழே எதுவித அசைவும் இல்லை. உடலின் முன்பகுதி வேகமாக துடித்தது, சுவாசிப்பதற்காக ஒஸ்காரின் மார்பும் வயிறும் பட்டறை துருத்தி போல் அசைந்தது, சிறிய இதயத்தில் துடிப்பு கண்ணால் பார்க்க முடியாது,

எவ்வளவு நாட்களாக இப்படி இருக்கிறது ?

‘ ‘மூன்று நாட்கள் ‘ ‘

பின்னங்கால்களைத் தொட்டேன். குளிர்ந்தது, தொடையின் உள்பகுதியில் உள்ள இரத்த நாடியில் துடிப்பு இல்லை.

ஆர்தர் வயிற்றுக்கு கீழ்பகுதியில் உள்ள முக்கியமான இரத்த நாடியில் இரத்தம் உறைந்துவிட்டது. இதனால் இரத்தம் கீழ்பகுதிக்கு செல்லவில்லை. மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் எந்தவிதமான மருந்துகளாலும் பிரயோசனம் இல்லை.

எனது பதிலை ஆமோதிப்பவராக தலையை ஆட்டினார்.

‘ ‘நான் ஒஸ்காரை கருணைக்கொலை செய்ய விரும்புகிறேன் ‘ ‘ ஆர்தரை தவிர்ந்த வேறு ஒருவராக இருந்தால் மூன்று நாட்கள் பிந்தி வந்ததற்குக் கண்டித்திருப்பேன். குறைந்தபட்சம் அவர்களின் கவனக்குறைவை எடுத்துக்காட்டியிருப்பேன். ஆர்தரின் நிலைமை எனக்குத் தெரிந்தபடியால் எதுவும் பேசவில்லை.

சிறிதுநேரம் கலங்கிய கண்களுடன் நின்றுவிட்டு பின்னர் எனது கையை பிடித்து நன்றி சொல்லிவிட்டு வெளியேறினார்.

—-

எனது கிளினிக்கில் சில தச்சுவேலைகளை செய்வதற்காக அறிமுகமாகிய ஆர்தர் பின்பு தனது செல்லபிராணிகளை என்னிடமே கொண்டுவருவார்.

பதின்மூன்று வயதான லாபிரடோரை என்னிடம் கொண்டு வந்து, மக்ஸ் என அறிமுகப்படுத்திவிட்டு ‘ ‘ கழுத்தில் ஒருகட்டி இருக்கிறது ‘ ‘ என்றார்.

கழுத்துக்கட்டியை பார்த்துவிட்டு முழங்காலுக்கு பின்னால் கையை விட்டுத் தடவினேன். அங்கும் ஒருகட்டி தட்டுப்பட்டது. பல கட்டிகள் பரிசோதனைக்குப் பின் தெரியவந்தது,

‘ ‘ஆர்தர் இது கொச்சின் லிம்போமா என்று ஆட்களுக்கு வரும் கான்சராகும். இதைக் குணப்படுத்த முடியாது. தற்போதைக்கு அப்படியே விடுவோம். ‘ ‘

நான் சொல்லியதும் தாமதம், ‘ ‘Bloody Hell ‘ ‘ எனது மனைவிக்கும் தொண்டையில் கான்சர் என இரண்டு நாட்களுக்கும் முன்பாகத்தான் சத்திரசிகிச்கை செய்யப்பட்டது.

‘ஐ ஆம் சொறி என கூறினேன். ‘ ‘

சிலமாதங்களின் பின் ஆர்தரின் மனைவி ஒரு சிறிய லாபிறடோர் நாய்குட்டியுடன் வந்தார். அழகான பொன்னிறமான குட்டி.

திருமதி ஆர்தரின் முகத்தைப் பார்த்ேதுன். சிவப்புச்சாயம் பூசிய உதடுகள் மெல்ல அசைந்தன. ஆனால் கழுத்துப் பகுதியில் இருந்து கரகரத்த குரல் வந்தது, வொய்ஸ் பொக்ஸ் (Voice Box)) மூலமாக குரல் வந்தது, கழுத்தை பார்த்தா அல்லது முகத்தைப் பார்த்தா பதில் சொல்வது என ஒருகணம் தடுமாறினேன். கவனமாக உதடுகளையும் குரலையும் அவதானித்தபோது புரிந்து கொள்ள முடிந்தது.

மாக்ஸ்க்கு துணையாகவும் உற்சாகமூட்டவும் இந்த சிறிய குட்டியை வாங்கினோம் என்று கூறினார். குட்டிநாயின் பெயர் பென் என்றும் புரிந்துகொண்டேன்.

வயதான, கான்சரால் பீடிக்கப்பட்ட மாக்ஸ்சுக்கு மட்டும் அல்ல ஆர்தரின் குடும்பத்துக்கே இந்த சிறுநாய்குட்டியின் வரவு தேவையாகவுள்ளது. துக்கம், துயரங்கள் நிறைந்த இடங்களில் நாய்,பூனைகுட்டிகளின் வரவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். துள்ளிக் குதிக்கும் ‘ ‘பென்னால் ‘ ‘ ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

பென்னை பரிசோதித்து தடுப்ப மருந்து கொடுத்து அனுப்பினேன். திருமதி ஆதருக்கு வாசல்கதவை திறந்தபோது தனது கையில் உள்ள நகக்கீறல்களை காட்டி ‘ ‘இவை பென்னின் பரிசுகள் ‘ ‘ என்றார்.

குட்டிநாயின் நகக்கீறல்கள் அவருக்கு சந்தோசத்தை அளிக்கிறது.

சிலமாதங்களின் பின் மீண்டும் ஆர்தர் பென்னை காட்டிக் கொண்டு வந்து புழுவுக்கு மருந்து தரும்படி கேட்டார். பென் இப்பொழுது பெரிய நாயாக இருந்தது,

எவருக்கும் கேட்பது போல் ‘ ‘எப்படி சுகம் ‘ ‘ என கேட்டுவைத்தேன். பதில் வராமல் இளையோடிய சிரிப்பு மட்டும் வந்தது.

மாத்திரையைப் பெற்றுக்கொண்டவர் ‘ ‘எனது மகள் டண்டினேங் வைத்தியசாலையில் ‘ ‘ என்றார்.

அவரது மகளை நாள் பார்த்திருக்கிறேன். இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளம் பெண், உயரமான மெல்லிய உடலமைப்பு – மாடல் பெண்களை நினைவுக்கு கொண்டுவரும் உடலமைப்பு.

‘ ‘என்ன நடந்தது ? ‘ ‘

‘ ‘நத்தார் தினத்தன்று ரோட்டில் காரால் மோதப்பட்டு கால்களிலும் எலும்பு முறிந்துள்ளது. ‘ ‘

‘ ‘இப்பொழுது எப்படி ‘ ‘

‘ ‘பரவாயில்லை. பலமாதங்கள் எடுக்கலாம்.

‘ ‘விரைவாக குணமடைய வேண்டும் ‘ ‘ என கூறி விடைகொடுத்தேன்.

ஆர்தரின் மகள் குணமாகிய பின்பு தனது பூனையை கொண்டுவந்து என்னிடம் சோதித்தாள் நாகரீகம் கருதி இளம் பெண்ணிடம் எதுவும விசாரிக்கவில்லை.

சிலமாதத்தின் பின்பு ஆதரைச் சந்தித்தேன்.

‘ ‘மகளுக்கு முற்றாக குணம்தானே ‘ ‘ என எதேச்சையாக வினவினேன்.

‘ ‘கால்கள் குணமாகிவிட்டது. ஆனால் கர்ப்பப்பையின் கழுத்தில் புற்றுநோய்க்கான ஆரம்பகுறிகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆதருக்கு அனுதாபத்தைத் தெரிவித்துவிட்டு இனிமேல் அவரிடம் சுகம் விசாரிப்பதில்லை என முடிவெடுத்தேன்.

ஆர்தரின் நிலையில் நாய் பூனையைப் பற்றிக் கவலைப்படுவதே பெரிய விடயம்தானே.

—-

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா

readers@uthayam.net

Series Navigation