துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

சோதிப் பிரகாசம்


14-4-2004, துக்ளக் இதழின் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் ‘சோ ‘விடம் எழுப்பப் பட்டு உள்ள ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்து உள்ள பதிலும் பின் வருமாறு:

‘ஸ்ரீவத்ஸன், சீர்காழி

கே : ‘தனியார் துறையில் இட ஒதுக்கீடு தர ஊக்குவிக்கப் படும் ‘ என்று பா.ஜ.க.வின் தொலைநோக்கு அறிக்கை கூறுவது பற்றி ?

ப : இது தொலை நோக்கு அல்ல; தொல்லை நோக்கு. தொழில் மற்றும் வர்த்தகத்தைக் கெடுக்கக் கூடிய வழி முறையை, ஓட்டுக்காக பா.ஜ.க. ஏற்க முனைந்திருப்பது வருந்தத்தக்கது. ‘

‘யாருக்கும் வெட்கம் இல்லை ‘ என்று ஜெய காந்தன் எழுதிய ஒரு வரிதான் இங்கே நம் நினைவுக்கு வருகிறது.

துக்ளக் ‘சோ ‘ ஒரு சாமானியர் அல்லர்!

‘மூதறிஞர் ‘ என்று கருணா நிதியாரால் பாராட்டப் பட்டவர்!

‘சோ ‘வினது அறிவின் ஆழத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டத்தினை அவருக்குக் கருணா நிதியார் வழங்கினாரா ? அல்லது அவரது சாதியினைச் சுட்டிக் காட்டுகின்ற வகையில் இப்படி ஒரு பட்டத்தினை அவருக்கு வழங்குவதுதான் உசிதம் என்று அவர் கருதி இருந்தாரா ? என்பன வெல்லாம் நமக்குத் தேவை இல்லாத விசயங்கள்!

ஏனென்றால், தந்திரக் காரர்களின் மூளைகளுக்குள் புகுவதும் பின்னர் வெளியேறி விடுவதும் நம்மைப் போன்றவர்களுக்கு இயலாத காரியங்கள்! எப்படியும், தாம் ஒரு தமிழர் என்பதிலோ, இந்தியர் என்பதிலோ, ஓர் இந்து என்பதிலோ பெருமைப் பட்டுக் கொள்வதை விட, குறிப்பிட்டது ஒரு சாதிக் காரர் என்பதில்தான் உண்மையாக துக்ளக் ‘சோ ‘ பெருமைப் பட்டுக் கொண்டு வருகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

அதே நேரத்தில், ‘வீண் பெருமை ‘களைத் தங்கள் ‘பிறவிப் பெருமை ‘களாக(!)ச் சாதி அடையாளங்களில் காட்டிக் கொண்டு வருகின்ற க்ஷத்ரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களும் நிறைந்த ஒரு நாட்டில், சாதியைத் துறந்து விட்ட ஒரு விடுதலையான தனி மனிதராகத் துக்ளக் ‘சோ ‘ இருந்திட வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பதிலும் ‘சாதிய ஞாயம் ‘ எதுவும் இல்லை.

(சாதிய ஞாயம் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள், துக்ளக் எஸ். குருமூர்த்தி அவர்களின் எழுத்துகளைப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்— துக்ளக் துறவியான தயானந்த சரஸ்வதி அவர்களின் எழுத்துகளைத் துக்ளக் இதழ்களில் இப்பொழுது நாம் காண முடிவது இல்லை என்பதால்!)

எனினும், ஒரு சாமானியர் அல்லர் துக்ளக் ‘சோ ‘!

அவர் ஓரு வழக்கறிஞர்; உயர் நீதி மன்றங்கள் முதல், உச்ச நீதி மன்றம் வரை வழங்கப் பட்டு வருகின்ற அனைத்துத் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்திடக் கூடிய ஒரு சட்ட வல்லுனர்!

அவர் ஓர் எழுத்தாளர்; அதுவும், தமிழ் எழுத்தாளர்; கதை-திரைக் கதை முதல், நையாண்டிக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் வரை சுவையாக எழுதிடக் கூடியவர்!

இவை மட்டுமா ?

அவர் ஒரு பத்தரிகையாளர்; ஆனால், வயிற்றுப் பிழைப்புக்காகப் பத்தரிகை நடத்திக் கொண்டு வருகின்ற ஒரு பத்தரிகையாளர் அல்லர் அவர்; பொருளாதாரம் முதலிய பிற அனைத்துத் துறைகளிலும் இந்த நாடும் மக்களும் முன்னேறிட வேண்டும் என்னும் தொலை நோக்குடன் துக்ளக் பத்தரிகையை நடத்திக் கொண்டு வருபவர்!

அனைத்திற்கும் மேலாக, ‘மக்கள் மடையர்கள் ‘ என்னும் தமது அரிய கண்டு பிடிப்பின் அடிப்படையில், சுழலும் விழியுடனும்—சுடரும் அறிவுடனும்—மக்களுக்கு அறிவு புகட்டிடப் புறப்பட்டு வந்து இருப்பவர் அவர்!

எனினும், இடை விடாமல் வழங்கிக் கொண்டே இருப்பதற்கு அறிவு ஒன்றும் அள்ள அள்ளக் குறைந்திடாத ‘அமுத சுரபி ‘ அல்லவே! தங்கள் மண்டையில் இருப்பதைத்தானே யாரும் கொட்டிக் கொண்டு வந்திடவும் முடியும்!

பார்ப்பனர்களின் பார்ப்பனியம் அல்ல, சூத்திரர்களின் பார்ப்பனியம்தான் ‘ஹிந்துத்வம் ‘ என்பதைக் கூட இன்னமும் இவரால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கு, வற்றிப் போன இவரது ‘அறிவுச் சுரபி ‘தான் காரணம். அதே நேரத்தில், அதனை அவர் புரிந்து கொண்டும் வருகிறார் என்பது, ஒட்டாமல் ஒட்டியும் வெட்டாமல் வெட்டியும் பா.ஜ.க.வுடன் அவர் உறவாடிக் கொண்டு வருவதில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது.

‘மக்கள் மடையர்கள் ‘ என்னும் தமது கண்டு-பிடிப்பின் அடிப்படையில் தமது சமுதாயப் பணியினைத் தொடங்கித் தொடர்ந்து கொண்டு வருகின்ற துக்ளக் ‘சோ ‘விற்குத் தெரியாத ‘மடமை ‘கள் என்னென்ன ? என்பதை முதலில் நாம் பார்ப்போம்.

இந்திய ஒன்றியத்தைப் புரிந்து கொள்வது என்பது கருணா நிதியாரையோ பா.ஜ.க.வையோ கிண்டல் அடிப்பது போன்று அவ்வளவு எளிதானது அல்ல என்பது துக்ளக் சோவிற்குப் புரிய வில்லை.

தனியார் துறையைப் பற்றியும் தொழில் மற்றும் வர்த்தகத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன் வந்து இருக்கின்ற இவருக்கு, அன்றைய உலக மயமாக்கலின் விளைவாக ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்குக் கொண்டு வரப் பட்டு இருந்ததுதான் புதினத் தொழில் நுட்பம் என்பதும் அவர்கள் அறிமுகம் செய்து வைத்த முதலாண்மை உற்பத்தி முறைதான் இந்திய ஒன்றியத்தில் இன்றும் வளர்ந்து கொண்டு வருகிறது என்பதும் புரிய வில்லை.

இந்தியா என்பது என்றும் ஒரு தேசமாக இருந்தது இல்லை என்பதையும் ஆங்கிலேயர்களின் வல்லதிகாரப் படைப்புதான் இன்றைய ‘இந்திய ஒன்றியம் ‘ என்பதையும் புரிந்து கொள்வதற்கு இவர் விரும்ப வில்லை என்பது வேறு விசயம்!

இதற்காக, ஆங்கிலேயர்களின் படைப்புதான் இந்தியப் பேரரசு என்பதையும் அவர்கள் கொண்டு வந்ததுதான் முதலாண்மை உற்பத்தி முறை என்பதையும் சாதியச் சமுதாயத்தினது வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்து இருந்தது இந்த முதலாண்மைதான் என்பதையும் நாம் மறுத்து விட முடியுமா, என்ன ?

அன்னை இந்திரா அவர்களால் இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்ட பொழுது துக்ளக் ‘சோ ‘ எழுதினார்— ‘சரஸ்வதி தேவி ‘யின் குரல் வளையை இந்திரா காந்தி(பத்ர காளி) நெரித்துக் கொண்டு இருக்கிறார் என்று! ஆனால், ‘லக்ஷ்மி தேவி ‘யின் கரங்கள்தாம் இந்திராவின் கரங்களாக அன்று செயல் பட்டுக் கொண்டு வந்து இருந்தன என்பதை இன்னமும் இவர் புரிந்து கொள்ளாததற்கு, இவரே கூறிக் கொள்வது போல, ‘முதிர்ச்சி அடையாத இவரது இளமை ‘தான் காரணம் போலும்!

லெனினின் ஆட்சிக் காலம் முதல் சோவியத் ருஷ்யாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு வந்து இருந்த ‘அரசு முதலாண்மை ‘, ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்திய ஒன்றியத்தில் வேர் ஊன்றிடத் தொடங்கி, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அடைந்து இருந்த எழுச்சியின் விளைவுதான் அவசர நிலைப் பிரகடனம்! அரசு முதலாண்மைக்கு எதிராக எழுந்து வந்து இருந்த ‘தனியார் முதலாண்மை ‘யின் எதிர்ப்புதான் ஜெ.பி. நாராயணனின் பொது நாயக இயக்கமும் ஆகும்.

இறுதியில், நரசிம்மராவின் ஆட்சிக் காலத்தில் புத்துயிர் பெற்று எழத் தொடங்கி இருந்த தனியார் முதலாண்மை, கட்சிகளின் ஆட்சி வேறுபாடுகளை எல்லாம் கடந்து இந்தியாவில் இன்று வெற்றி நடை போட்டுக் கொண்டு வருகிறது. ஆனால், தமிழ் நாட்டில் பத்தரிகை நடத்துவதற்கு இது பற்றி எல்லாம் எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்பதால்தான், இவற்றை எல்லாம் துக்ளக் ‘சோ ‘ புரிந்து கொள்ள வில்லை என்று அவரை நாம் ஞாயப் படுத்திக் கொள்ளலாம்.

இத் தகு வித்தகரான துக்ளக் ‘சோ ‘விற்கு, இந்திய ஒன்றியத்தில் இன்று வளர்ந்து கொண்டு வருவது மேலைப் பண்பாடு அல்ல, முதலாண்மைப் பண்பாடுதான் என்பது எப்படிப் புரிந்து இருக்க முடியும் ? இவர் கிண்டல் அடித்துக் கொண்டு வருகின்ற எதிர்த் தரப்பாளர்தம் அறிவினை விட அதிகமாக இவரது அறிவு வளர்ந்து விட முடியுமா, என்ன! எனினும், ‘மக்கள் மடையர்கள் ‘ என்பதைக் கண்டு பிடித்து வைத்து இருக்கின்ற பேரறிஞர் இவர் என்பதை மட்டும் யாரும் மறுத்து விட முடியாது.

நமது இந்தியப் பண்பாட்டின் மரபுதான் என்ன ?

ஒரு சிலரை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் தாயின் கருவிலேயே கடவுள் படைத்து விடுகிறார் என்று சொல்லிக் கடவுள் நம்பிக்கையை இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற ஒரு காட்டுமிராண்டிப் பண்பாடுதானே நமது இந்தியப் பண்பாடு! பெருமைப் படுவதற்கு உரிய பண்புகளோ அல்லது தகுதிகளோ தம்மிடம் இல்லாதவர்கள் மட்டும்தாம் இத் தகு வீண் பெருமைகளைத் தமது தலைகளில் தூக்கிச் சுமந்து கொண்டு வந்திடவும் முடியும்.

ஆனால், முதலாண்மைப் பண்பாடு என்பது, சாதிய முறையான ‘பிறவிப் பெருமை ‘களுக்கும் ‘பிறவி ஞானத் ‘திற்கும் ஒப்புதல் நல்குகின்ற ஓர் இழிவுப் பண்பாடு அல்ல; மாறாக, இவை அனைத்தையும் வரலாற்றின் குப்பை மேட்டில் தூக்கி வீசுகின்ற ஒரு பண்பாடு! ஏனென்றால், சமுதாயப் புரட்சியினைக் கருவிலே சுமந்து கொண்டு வந்து இருக்கின்ற ஒரு புரட்சிகரமான உற்பத்தி முறைதான் முதலாண்மை உற்பத்தி முறை!

ஸ்தாலினிஸ்டுகளான இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு இது புரியாமல் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லைதான். ஏனென்றால், அரசு முதலாண்மை வாதிகள் அவர்கள்! ஆனால், தனியார் முதலாண்மையின் காவலராகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு வந்து இருக்கின்ற துக்ளக் ‘சோ ‘விற்குக் கூட இது புரியாமல் போய் இருக்கிறதே எப்படி ? ஏனென்றால், நாடகம் எழுதுவது போன்றும் நடிப்பது போன்றும் அவ்வளவு எளிதானது அல்ல முதலாண்மைச் சமுதாயத்தைப் புரிந்து கொள்வது என்பது!

உற்பத்தி செய்வது என்றாலும் சரி, உற்பத்தி செய்யப் பட்ட சரக்குகளை நுகர்ந்து மகிழ்வது என்றாலும் சரி, பணம் கொடுத்துதான் சரக்குகளை மனிதர்கள் வாங்கி ஆக வேண்டும்; நுகர்வதற்கு முன்னர் ‘சரக்குகளின் கைமாற்று உறவில் ‘ அவர்கள் ஈடுபட்டுதான் ஆக வேண்டும். இதற்கு என்ன பொருள் ?

சரக்குகளின் மூலமாகவும் பணத்தின் மூலமாகவும் தங்களுக்குள் உறவுகளை மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்று பொருள்!

ஆறறிவு படைத்த மனிதர்கள், தங்கள் அறிவின் மூலமாகவும் உணர்மை மூலமாகவும் உயிர்மை மூலமாகவும் அன்றி, சரக்குகளின் மூலமாக—கேவலம், பருப் பொருள்களின் மூலமாக—தங்கள் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான் முதலாண்மை உற்பத்தி முறையின் அவலம்!

இதனை விளக்கிக் காட்டுகின்ற கார்ல் மார்க்ஸ், முடிவாக எடுத்துக் காட்டுகிறார்— ‘விடுதலையான தனிமனிதர்களின் விடுதலையான உறவு ‘களாக விரிந்திடக் கூடிய ஒரு பொதுமைச் சமுதாயம் நாளை உருவாகிடத் தக்க கூறுகள் முதலாண்மையின் வயிற்றிற்கு உள்ளேயே கருக் கொண்டு இருக்கின்றன என்று!

இதற்காக, முதலாண்மை உற்பத்தி முறையின் புரட்சிகரக் கூறுகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

தமது சரக்கினைக் கொடுத்து மற்றவர் சரக்கினை ஒருவர் கைமாற்றாகப் பெற்றுக் கொள்கிறார் என்றால்—கைமாற்றாக அன்றி வல்லதிகாரமாக மற்றவர்களின் உடைமைகளை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்றால்—

ஒருவருக்கு ஒருவர் சமமான சமுதாய நிலையில் மனிதர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று பொருள்;

இந்தச் சமுதாயச் சமன்மைக்கு ஒவ்வொருவர் இடத்தும் அவர்கள் ஒப்பளிக்கிறார்கள் என்று பொருள்;

எந்தச் சரக்கினையும் யாரும் எங்கும் விற்றிடவும் வாங்கிடவும் முடியும் என்கின்ற இந்தச் சமுதாயச் சமன்மை, மனிதர்களின் விடுதலையினை–உரிமையினை—சுதந்திரத்தினை—உறுதிப் படுத்துகிறது.

தாழ்த்தப் பட்டவர்களாகவும் ஒடுக்கப் பட்டவர்களாகவும் முன்னர் அடிமைத் தனத்தில் அமிழ்த்தி வைக்கப் பட்டு இருந்த உழைப்பாளர்கள், விடுதலையான தனி மனிதர்களாக இன்று உயர்ந்து நிற்கிறார்கள் என்றால், ஒரு சரக்காகத் தங்கள் உழைப்பு ஆற்றலினை முதலாளிகளுடன் அவர்கள் கைமாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.

அனைவருக்கும் உரிமையான இந்தத் தனி மனித விடுதலையோ, மனிதர்களின் கிளைமை உறவுக்கு—சகோதரத்துவத்திற்கு—வழி வகுக்கிறது.

இப்படி, சாதியத்தின் வேர்களை அடியோடு சுட்டுப் பொசுக்குகின்ற புரட்சிகரக் கூறுகளைக் கருவிலேயே சுமந்து கொண்டு வந்து இருப்பதுதான் முதலாண்மை!

ஆனால், முதலாண்மையின்—தனியார் முதலாண்மையின்—தீவிரமான பாது காவலராக முன் வந்து நின்று கொண்டு இருக்கின்ற துக்ளக் ‘சோ ‘விற்கோ, முதலாண்மையின் இந்த முற்போக்குக் கூறு புரிய வில்லை.

இது மட்டுமா, புரிய வில்லை ? போட்டிகள் நிறைந்த ஒரு விடுதலையான உழைப்புச் சந்தை உருவாவது முதலாண்மையின் அடிப்படையான ஒரு தேவை என்பதும், எனவே, தீண்டாமை போன்ற சாதி இழிவுகளைக் கருவோடு அறுத்து எறிவது முதலாண்மை வாதிகளின் முதல் கடமை என்பதும் கூட இவருக்குப் புரிய வில்லை.

அதே நேரத்தில், இவர் போன்ற முதலாண்மை வாதிகளை நம்பிக் கொண்டு முதலாளர்கள் செயல் படுவது இல்லை என்பதையாவது இவர் புரிந்து கொண்டு இருக்கிறாரா ? என்றால் அதுதான் நமக்குத் தெரிய வில்லை.

அனைவருக்கும் பூணூல் போட்டு விடத் துடித்துக் கொண்டு இருந்த இராமானுஜரைத் துக்ளக் ‘சோ ‘விற்குப் பிடிக்காமல் போகலாம்—திருப்பதி முருகனுக்கே ‘நாமம் ‘ போட்டு விட்டவர் என்பதால் கூட இது இருக்கலாம்!

ஆனால், ஆதி சங்கரரை இவருக்குப் பிடிக்காது என்பது மட்டும் நிச்சயம்.

ஏனென்றால், ‘தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும், உன்னையும் கண்டேன்; என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன் ‘ என்று பட்டினத்து அடிகள் மொழிந்து இருப்பதைப் போல, பரத்தில்—பரம் பொருள் நிலையில்—கடவுளும் மனிதனும் ஒன்றே என்று கூறியவர் அவர்!

ஆதி சங்கரரைப் பற்றிக் கட்டி விடப் பட்டு இருக்கின்ற கதைகள் எப்படி இருந்து விட்ட போதிலும், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள சமன்மையினை—எனவே, மனிதர்களின் சமுதாயச் சமன்மையினை—உள்ளடக்கமாகக் கொண்டு தமது கருத்துகளை வெளிப் படுத்திக் கொண்டு வந்து இருந்தவர் அவர் என்பது மட்டும் உறுதி. புத்த மதத்தின் சாரத்தை எல்லாம் சிவ மதத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து இருந்தவரும் அவர்தாம்!

சரி, இது போகட்டும் என்றால், இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்டம் கூட துக்ளக் ‘சோ ‘விற்கு புரிய வில்லை.

சமன்மை உரிமையும் தனி மனித விடுதலையும் அனைவருக்கும் உரியவை என்று மொழிகிறது இந்திய அரசமைப்புச் சட்டம்! இந்த வகையில், சாதி இழிவுகளை ஒழித்துக் கட்டுகின்ற அடிப்படைகளைத் தன்னுள் கொண்டு இருப்பது அது!

ஆனால், துக்ளக் ‘சோ ‘வோ ஒரு சட்ட வல்லுனர்; அனைத்துத் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து கொண்டு வருபவர்! வேடிக்கையாக இது இல்லையா ?

கருத்துக் கூறும் உரிமையின் முக்கியம் அம்பேத்கருக்குக் கூட புரியாமல் போய் இருந்தது என்றால், துக்ளக் ‘சோ ‘விற்கு எங்கே சமன்மை உரிமையின் முக்கியம் புரிந்திடப் போகிறது ?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால்—கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்றால்—தலித் மக்களுக்கும் பிறருக்கும் மட்டும் இவற்றில் எல்லாம் இட ஒதுக்கீடு செய்யப் படுவது ஏன் ? என்னும் கேள்வி இங்கே எழலாம்.

ஆனால், சமுதாய நிலையில் சமமாக நின்று கொண்டு இருப்பவர்களுக்கு மட்டும்தான் சமமான வாய்ப்பு என்பது பொருந்துமே ஒழிய, சமுதாய நிலையில் தாழ்த்தப் பட்டும் ஒடுக்கப் பட்டும் வந்து இருக்கின்ற மக்களுக்கு அது பொருந்தாது என்று ஒரு காரண வயமான கருத்தமைவு மெய்மைப் படுத்தப் பட்டு, அதன் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு வருவதுதான் இட ஒதுக்கீடு ஆகும்—ஆனால், கருணையாக அல்ல, சமுதாயக் கடப்பாடாக! தனியார் துறைக்கு மட்டும் அல்ல, துக்ளக் ‘சோ ‘விற்கும் கூட இந்தக் கடப்பாடு உண்டு என்பதில் நமக்கு ஐயம் இல்லை.

உழைத்து உழைத்துக் காலம் காலமாகச் சமுதாயத்திற்கு உணவு அளித்துக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு மக்களுக்கு—அனைத்து மக்களுக்கும் வாழ்வு அளித்துக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு மக்களுக்கு—சமுதாயம் செய்திட வேண்டிய ஒரு நன்றிக் கடன் என்றும் இதனை நாம் குறிப்பிடலாம்—நன்றி என்று ஒன்று நமக்கு இருந்தால்!

ஆனால், துக்ளக் ‘சோ ‘ கூறுகிறார்—தனியார் துறையில் இட ஒதுக்கீடு கூடாது என்று; தொழிலும் வணிகமும் அதனால் கெட்டு விடும் என்று!

இதன் உள்ளடக்கம் என்ன ? என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல.

தலித் மக்களுக்கும் பிற பிற்பட்ட மக்களுக்கும் தகுதி இல்லையாம்; திறமை இல்லையாம்; வாய்ப்புக் கிடைத்தால் கூட அதனை வளர்த்துக் கொள்வதற்கு அவர்களால் முடியாதாம்!

சாதிக்கு என்று ஒரு மூளை—அந்த மூளைக்குள் கட்டுண்டு கிடக்கின்ற ஒரு திறமை—என்று எதுவும் இருந்திட முடியாது என்பது கூட இன்னமும் இவருக்குத் தெரிந்திட வில்லை என்பதுதான் இங்கு வேடிக்கை!

மூடி மறைத்துக் கபட நாடகம் ஆடாமல் மிகவும் வெளிப் படையாகவே நாம் பேசுவோம்:

சாதியக் கருத்தாக்கத்தின் படி நாம் பார்ப்போம் என்றால்—

துக்ளக் ‘சோ ‘ ஓர் உயர் பிறப்பாளர்; ஓர் உயர் பண்பாளர்; ஓர் உயர் அறிவாளர்; எனவே, தகுதியும் திறமையும் நிறைந்தவர்!

இப்படித்தான் இவரை நாம் கருதிட வேண்டும் என்று இவர் நினைக்கிறார். ஆனால், தகுதியும் திறமையும் நிறைந்தவர்தாமா, இவர் ? என்றால் அதுதான் இல்லை.

சட்டம் பற்றிப் பேசுகின்ற இவருக்குச் சட்டத்தின் சமுதாய அடிப்படையும் அதன் நுட்பங்களும் தெரிய வில்லை.

பொருளாதாரம் பற்றிப் பேசுகின்ற இவருக்கு முதலாண்மை உற்பத்தி முறையும் அதன் பண்பாடும் தெரிய வில்லை.

பார்ப்பனர்களை எதிர்த்துக் கொண்டு வந்து இருந்த ஈ.வெ.ரா., பண்ணையத்திற்கு(பிரபுத்துவத்திற்கு) எதிராகவும் முதலாண்மைக்கு ஆதரவாகவும்தாம் குரல் கொடுத்துக் கொண்டு வந்து இருந்தார் என்பது இவருக்குத் தெரிந்து இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது வேறு விசயம்.

தேசம் பற்றிப் பேசுகின்ற இவருக்கு, மனிதர்களால்தான் தேசங்கள் ஆக்கப் பட்டு இருக்கின்றனவே ஒழிய வெறும் மண்ணினால் அல்ல என்பது தெரிய வில்லை.

மனிதர்களை மனிதர்கள் இழிவு படுத்திக் கொண்டு வருகின்ற ஒரு நாடு, உலக அரங்கில் இழிவு படுத்தப் பட்டுதான் தீரும் என்பதும் இவருக்குத் தெரிய வில்லை.

வேதம் பற்றிப் பேசுகின்ற இவருக்கு வேதங்களும் தெரிய வில்லை; உபநிஷதங்களும் புரிய வில்லை. வெறுமனே இதிகாசங்களையும் புராணங்களையும் தெரிந்து வைத்து இருப்பது, வேதங்களையும் உபநிஷதங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது ஆகாது என்பது இவருக்குத் தெரிய வில்லை.

இப்படி, எதைப் பற்றி எல்லாம் இவர் பேசுகிறாரோ அதைப் பற்றி எல்லாம் எதையும் தெரிந்து வைத்துக் கொள்ள முடியாத இவர் கூறுகிறார்—இட ஒதுக்கீட்டினால் தனியார் தொழிலும் வணிகமும் கெட்டு விடும் என்று! எனினும், இப்படிக் கூறுகின்ற அளவுக்கு அப்படி என்ன தகுதியையும் திறமையையும் இவர் வளர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் நமக்குப் புரிய வில்லை.

ஒரு தலித் குடும்பத்திற்கு மூன்று தலை முறைகளுக்கு மேலும் ஒரு பிற்பட்ட குடும்பத்திற்கு இரண்டு தலை முறைகளுக்கு மேலும் இட ஒதுக்கீடு அவசியம் அற்றது என்றும் தொடர்ந்த இட ஒதுக்கீடு என்பது ஒரு வகையான சார்புத் தன்மையினை உருவாக்கி விடக் கூடும் என்றும் கூறுவதற்கோ அல்லது இது போன்ற வேறு ஏதேனும் யோசனைகளை நல்குவதற்கோ இவர் முன் வருவார் என்றால், இவரது நல் எண்ணத்தை நாம் வரவேற்கலாம்.

மாறாக, நலிந்து கிடப்பவர்களை உயர்த்துகின்ற நடவடிக்கைகளில் தனியார் துறைக்கு எந்தப் பங்கும் இருந்திடக் கூடாது என்று இவர் கூறுவது என்ன நேயம் ? மனித நேயமா ? தேசிய நேயமா ? அல்லது சாதியப் பண்பாட்டு நேயமா ?

சரி, இவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்து மதத்தைப் பற்றியாவது எதையாவது இவர் தெரிந்து வைத்து இருக்கிறாரா ? என்று பார்த்தால் அதுவும் எதுவும் இல்லை.

இவருக்குத் தெரிந்து இருக்கின்ற இந்து மதம், பார்ப்பனியத்தால் தீண்டப் பட்டுத் தீட்டுப் பட்டுக் கிடக்கின்ற ஒரு மதமே ஒழிய அடிப்படையான இந்து மதம் அல்ல.

உண்மையான இந்து மதம்—

சிவ-விண்ணவ மதங்களின் ஒன்றிப்பில் உருவாகி வந்து இருக்கின்ற ஒரு மதம்;

பதி-பசு-பாசம் என்னும் முக் கூறுகளின் ஒன்றிப்பினைத் தனது கொள்கையாகக் கொண்டு இருக்கின்ற ஒரு மதம்!

சொத்து-சுகங்களுக்காக அண்ணன்-தம்பிகள் கூட அடித்துக் கொள்ளலாம் என்று கூறுகின்ற பகவத் கீதைக்கும் இந்து மதத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இருந்திட முடியாது; அது வைதீக மதமும் இல்லை.

‘அன்பே சிவம் ‘ என்பதுதான் இந்து மதத்தின் அடிப்படையான கொள்கை! மனித நேயத்திற்கு மட்டும்தான் அதில் இடம் உண்டு; சாதிய நேயத்திற்கு அல்ல!

இறுதியாக, துக்ளக் ‘சோ ‘ அவர்களே,

உண்மையான இந்துவாக இருங்கள்! மனிதர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்! சாதி இழிவுகளை விட்டுத் தொலையுங்கள்!

தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது முதலாளர்களின் கடமை மட்டும் அல்ல; சமுதாய வளர்ச்சியின் அவசியமும் கூட!

ஒன்றை மட்டும் நினைவில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்:

சாதி ஒழியாமல்—

இந்தியா ஒளிர்ந்திடப் போவது இல்லை;

தன் மானம் வாய்ந்த ஒரு மனிதனாக எந்த ஒரு தனி மனிதனும் இந்தியாவில் வளர்ந்திடப் போவதும் இல்லை!

ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டு வருகின்ற தலைவர்கள் ஒழிந்திட வேண்டும் என்றால்—

படித்துப் பட்டம் பெற்றுப் பதவிகளில் அமர்ந்து கொண்டு இருக்கின்ற அதிகாரிகள், அலுவலகப் பணிகளில் பிட்சை எடுத்துக் கொண்டு வருகின்ற இழி நிலை ஒழிந்திட வேண்டும் என்றால்—

முதலில் சாதிகள் ஒழிக்கப் பட வேண்டும்; தனி மனிதர்களின் மாண்பும் மானமும் வீறு கொண்டு எழுந்திட வேண்டும்!

மானம் கெட்டுப் போன மனிதர்கள் வாழுகின்ற ஒரு நாடு, ஒரு வல்லரசாக வேண்டும் என்றால் வளர்ந்திடலாமே ஒழிய, மரியாதைக்கு உரிய ஒரு நாடாக வளர்ந்திடவே முடியாது என்பது நிச்சயம்!

எப்படியும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், என எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக யார் இருந்து விட்ட போதிலும், மனித நேயம் இல்லாதவர்களை இறைப் பற்றாளர்களாக ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்லர்!

19-4-2004

sothipiragasam@lycos.com

Series Navigation