தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

முத்துகிருஷ்ணன் காசிநாதன்


….இதனால் தெரிவிப்பது என்னவென்றால் 27-01-2007 அன்று நடைபெற இருக்கும் ஹிந்து ஒற்றுமை மாநாட்டிற்கு

1) நமது மசூதிக்களின் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு “சர்பத்” பானம் வழங்கப்படவேண்டும்.

2) ஹிந்துக்களை தூண்டும் வகையில் எந்தவித சுவரொட்டிகளோ, விளம்பரங்களோ, சுற்றறிக்கைகளோ முஸ்லீம் இளைஞர்கள் ஒட்டவோ/விநியோகிக்கவோ கூடாது.

3) எந்தவித சச்சரவுகளையும் ஏற்படுத்தாமல் ஹிந்து மாநாட்டிற்கு பரஸ்பர ஒத்துழைப்பை முஸ்லீம் பெருமக்கள் தந்திடவேண்டும்.

என்ன ஆச்சரியமாயிருக்கிறதா? இது எங்கு நடந்தது எனக் கேட்க தூண்டுகிறதா?
உங்களது ஆச்சரியம் நியாமானதுதான். ஏனென்றால் இது நமது இந்தியாவில் நடந்த சம்பவம்தான்.

கடந்த அன்று கர் நாடகாவில் உள்ள மங்களூரில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்ற ஹிந்து ஒற்றுமை மாநாட்டிற்காகத்தான் இந்த அறிவிப்பு.

மாநாட்டில் சில காட்சிகள்:

முஸ்லீம்கள் வழி நெடுகிலும் சர்பத் விநியோகித்தனர்

கிறிஸ்தவர்கள் மாநாட்டினை வரவேற்று Digital banners வைத்திருந்தனர். அதில் பகவான் கிருஷணர் ஒருபுறம், மற்றொரு புறம் இயேசு கிறிஸ்து இரண்டுக்கும் நடுவில் R.S.S-ன் 2வது தலைவர் ஸ்ரீ.குருஜீ கோல்வல்கரின்(இவருடைய நூற்றாண்டு விழா நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது) படம் வரையப்பட்டிருந்தது.

முஸ்லீம்கள் வலியவந்து மாநாட்டிற்காக நிதி வழங்கினர்.

காங்கிரஸ், ஜனதாதளம், பாரதிய ஜனதா, முஸ்லீம் பிரதிநிதிகள்: Indian Union Muslim league,Muslim Central Committee, கிறிஸ்தவ பிரதிநிதிகள்:Catholic Sabha, Chair in Christianity of Mangalore University,காவல் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.

எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்?

நம் நாட்டிற்கு எந்தவிதத்திலும் சம்மந்தமில்லாத சதாம் ஹீசேனுக்காக ஊர்வலம் நடத்தி பெங்களூரில் கலவரத்தை ஆரம்பித்த நிலையில், கேரளாவிற்குள் நரேந்திர மோடி வரக்கூடாது என்ற எதிர்ப்பு போன்ற எதிர்மறை செய்திகள் பத்திரிக்கை உலகை ஆக்கிரமித்திருந்த வேளையில்(ஒரு ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் நரேந்திர மோடியின் திருவனந்தபுரம் வருகைப் பற்றிய செய்தி சொல்லும் பொழுது குஜராத்தில் ஒரு விஜயதசமி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று ஆயதங்களுக்கு பூஜை செய்யும் காட்சியை திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள்;எப்படிபட்ட வக்கிரமான புத்தி பாருங்கள்!) நேர்மறையான இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதை நாம் அனைவரும் (இப்படிப்பட்ட நல்ல நிகழ்வுகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருவாரியான அளவில் எடுத்து சொல்லாத பத்திரிக்கைகள் உட்பட) சிந்தித்து புரிந்துகொள்ள வேண்டும்.

பூஜனீய ஸ்வாமிஜி ஒருவர் சொன்ன உதாரணம் நினைவுக்கு வருகிறது.

நெருப்பு தீபத்தில் சுடராக ஒளிவீசிக்கொண்டிருக்கும் பொழுது காற்று வீசினால் அந்த சுடர் தொடர்ந்து ஒளிர்வதற்கு தள்ளாடும்; காற்றோ தீபத்தை அனைக்க முயற்சிக்கும்.

அதே நெருப்பு சற்று பெரியதாக ஒரு குடிசையை பற்றிக்கொண்டு எரியுமானால் அந்த நேரத்தில் காற்றானது, ‘வா, நாம் அடுத்த குடிசைக்கு செல்வோம்’ என்று நெருப்பை கூடவே அழைத்துக் கொண்டு செல்லும்.

எப்படி சிறிய தீபச்சுடருக்கு விரோதியாக இருந்த காற்று, பெரிய நெருப்புக்கு நண்பனாகியதோ அதுபோல் சாதி ரீதியாக பிரிந்திருந்த ஹிந்து மக்கள் தங்களை ஹிந்து என்ற தன் சுய அடையாளத்திற்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். காலம் காலமாக மதமாற்றங்களுக்கும், அரசியல்வாதிகளின் சுயலாபங்களுக்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஹிந்துக்கள், தேசத்தை பாதிக்கும் இன்றைய அபாயங்களை அறிந்து அதற்கு தீர்வாக “ஹிந்து” என்பதில் பெருமை கொள்கிறோம் என்று வீறு கொண்டெழுந்து இந்த தேசத்தை உலகரங்கில் உயர்வான நிலைக்கு உயர்த்த தயாராகி வருகிறார்கள். இயற்கையாகவே மற்ற மதத்தினர்களும் இணக்கம் உண்டாக்கி கொள்கிறார்கள்.

நாடெங்கிலும் நடைபெறும் ஹிந்து ஒற்றுமை மாநாடுகளில் மக்கள் திரண்டதின் ரகசியம் இதுதான்.

இந்த ரகசியம் வெளிப்பட்டதின் விளைவு மக்களை பிரித்தாளும் அரசியல் சக்திகளையும் ஒரே மேடையில் பங்கேற்க செய்துவிட்டது.

* தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் பங்கேற்றார்.

* சென்னை பெரம்பூரில் வட்டார காங்கிரஸ் தலைவர் கலந்து கொண்டார். எதிர்த்த மற்ற காங்கிரஸார் அவருடைய வீட்டை சேதப்படுத்த முயற்சித்தனர். அதனைக் கண்டித்து அந்தப் பகுதியில் கடையடைப்பு
நடைபெற்றது. காங்கிரஸிலிருந்து என்னை நீக்கினாலும் தொடர்ந்து ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக உழைப்பேன் என்றார்.

*பண்ருட்டியில் தி.மு.க சேர்மன் தலைமையேற்றார், புதுச்சேரியில் காங்கிரஸ் பஞ்சாயத்து சேர்மன் தலைமையேற்பு.

* வேலூரில் ம.தி.மு.க மாவட்ட நிர்வாகி காவிக் கொடிக்கு பூஜை செய்தார்.

* தமிழகமெங்கும் ஹிந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் மக்கள் பங்கேற்பு.

இவையெல்லாம் சொல்வது என்ன?

1) சாதிப் பெயரால் ஹிந்துக்களை பிரிக்கமுடியாது.

2) மதமாற்றத்தின் அபாயங்களை சாதாரண மக்களும் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள்.(தர்மபுரியில் R.S.S அமைப்பினர் மாநாட்டிற்காக பிரசுரங்களை விநியோகிக்கும் சமயத்தில் மழைக்காக ஒதுங்கிய சமயத்தில் ஈரத்தலையை துவட்டிக்கொள்வதற்காக மாடு மேய்க்கும் பெரியவர் ஒருவர் தன்னுடைய மேல்துண்டை கொடுத்துதவினார். அவர்கள் கையில் பிரசுரங்களை கண்ட அவர் ‘வந்துட்டானுங்க மதம் மாத்தறதுக்கு’ என்று சொல்லிக்கொண்டே வெடுக்கென்று துணியை பிடுங்கிக் கொண்டார். பிறகு R.S.S அமைப்பினர் தாங்கள் மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் என்று புரியவைத்தனர்)

3) வேலூர் மாவட்டத்தில் K.வேலூரில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் இதுவரை கோவிலில் நுழையாத தாழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் மக்களும் பங்கேற்றார்கள். கோவில் பட்டாச்சாரியார் தன் சகோதர ஹிந்து மக்களாகிய அவர்களின் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்.

இப்படி ஏகப்பட்ட சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஹிந்துக்கள் “ஹிந்து” என்பதில் பெருமை கொண்டு ஒற்றுமையாகி சங்கமிக்கும் பொழுது அங்கே தீண்டாமைக்கும், பயங்கரவாதத்திற்கும் இடமில்லை.

அந்த நேரத்தில், அரசியல் சாக்கடையில் ஊறி நாட்டை நாறடித்துக் கொண்டிருக்கும் ஜன்மங்கள் அந்த சங்கமத்தில் குளித்து புனிதம் அடைவது திண்ணம்.


muthush@yahoo.com

Series Navigation

முத்துகிருஷ்ணன் காசிநாதன்

முத்துகிருஷ்ணன் காசிநாதன்