தில்லை வாழ் அந்தணர்களுக்கு

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


[திண்ணையில் வெளியான திரு.மலர்மன்னன் அவர்களின் கட்டுரையான ‘நந்தன் இல்லாமல் நடராஜரா ? ‘ எனும் கட்டுரையால் தூண்டப்பட்டு தில்லை வாழ் அந்தணர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்]

மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய தில்லை வாழ் அந்தணர்களுக்கு,

தாழ்மையான வணக்கங்கள்.

நான் ஒரு தமிழ் ஹிந்து. ஹிந்து தர்மத்தின் மீதும் ஹிந்து சமுதாயத்தின் மீதும் ஹிந்துஸ்தானத்தின் மீதும் பற்று கொண்டவன். ஹிந்துஸ்தானத்தில் அதிலும் தெய்வத் தமிழ் பேசும் இம்மண்ணில், நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பக்தி வளர்க்கப்பட்ட இம்மண்ணில் பிறந்த பெரும் பாக்கியத்திற்காக என்றென்றும் பெருமிதமும் அடையும் ஒரு எளிய ஹிந்து.

அண்மையில் முது பெரும் எழுத்தாளரான திரு மலர்மன்னன் அவர்கள் ‘திண்ணை ‘ இதழில் எழுதிய கட்டுரை மூலம் தங்கள் திருக்கோவிலில் நந்தனாரின் திருவுருவச்சிற்பம் இத்திருக்கோவிலிலிருந்து அகற்றப்பட்டதாக அறிகிறேன். திருக்கோவிலில் நந்தனாரின் திருவுருவ சிலை இருந்தது மகோபாத்யாயர் உ வே சாமிநாத ஐயர் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலருடைய தவறான எண்ணப்போக்கினால் அத்திருவுருவ சிலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அதர்மமான அநியாய செயல் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் நடந்ததாக தெரிகிறது.

இன்று ஹிந்து சமுதாயம் தன்னிடையே உள்ள அனைத்து சமுதாய குறைகளையும் களைந்து ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய காலகட்டத்தில் இந்த அநியாய செயலை நாம் தட்டிக்கேட்பது முதன்மையான விஷயமாகும். ஹிந்து சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தில்லை வாழ் அந்தணர்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரிய ஒன்றாகும். மாலிக் காஃபூரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் போது தமது உயிரினை தியாகம் செய்து தமிழகத்தின் ஆன்மிக கலைப் பொக்கிஷங்களான தெய்வத் திருவுருவச்சிலைகளை காத்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அமீர் குஸ்ரு தாரிக்-இ-அலை எனும் நூலில் பின்வருமாறு தில்லைவாழ் அந்தணர் அனுபவித்த கொடுமைகளை கூறுகிறான்: ‘மாலிக் மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரங்களை பெயர்த்தெடுத்தான். பிராம்மணர்கள், விக்கிர ஆராதனையாளர்கள் தலைகள் அவர்கள் கழுத்துக்களிலிருந்து நடனமாடியபடி தரையில் அவர்கள் கால்களில் விழுந்தது. இரத்தம் ஆறாக ஓடிற்று. ‘ என்ற போதிலும் அந்தணப்பெருமக்கள் தம் தலைகளை கொடுத்த போதிலும் தர்மத்தை விடவில்லை. தெய்வத் திருவுருவச்சிலைகளை காப்பாற்றினர். இன்று உலகெங்கிலும் நடராஜ தாண்டவ சிற்பம் அடைந்துள்ள மேன்மையான வணக்கத்திற்கு தெய்வத்திருவருளும் உங்கள் முன்னோர்களின் தியாகங்களுமே காரணம். அத்தகைய தியாக பரம்பரையில் வந்துள்ள நீங்களே அண்மைக்காலத்தில் நடந்தேறியுள்ள இந்த அநியாய அநீதியை நிவர்த்தி செய்ய முடியும். எனவே உலகெங்குமுள்ள ஹிந்துக்களிடம் நிதி வேண்டி ஒரு மிகச்சிறந்த நந்தனார் திருவுருவச் சிலையை சிதம்பரத்தில் நிறுவும் முயற்சியை நீங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென உங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன். திருநாளைப்போவாரின் குருவருள் மூலமும் தில்லையம்பல எம்பெருமானின் திருவருள் மூலமும், தேவையற்ற சாதி பூசல்கள் இச்சமுதாயத்தில் அகன்று மேன்மையான ஆரோக்கியமான நிலையை நம் சமுதாயம் பெறும் என நான் நம்புகிறேன்.

இதன் மூலம் சனாதனமாக ஆன்ம நேய ஒருமைப்பாட்டினையும் சமத்துவத்தையும் ஏற்கும் தர்மமான வேத தர்மத்திற்கும், அதனை ஏற்று காப்பாற்றி வரும் ஹிந்து சமுதாயத்திற்கும், தர்மத்தினால் உலகினை உய்வித்திடுவதையே தம் ஜீவித நியாயமாக கொண்டு விளங்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் மீண்டும் ஒரு ஒப்பற்ற சேவையை செய்தவர்களாவீர்கள். உங்களுக்கு ஏற்கனவே கடன்பட்டுள்ள ஹிந்து சமுதாயம் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு தலை வணங்கும்.

நன்றி.

வணக்கங்களுடன்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

[விரும்பும் அன்பர்கள் இக்கடிதத்தினை நகல் எடுத்து அல்லது விரும்பிய மாற்றங்களை செய்து தங்கள் பெயர்களில் அனுப்புமாறு வேண்டுகிறேன்]

Series Navigation