திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

உதயகண்ணன்


(புத்தகத்தில் இருந்து … பேட்டி)

*

கதாசிரியராக அறியப்பட்ட நீங்கள் சட்டென்று கவிஞராக உருமாற்றம் கண்டாப் போலிருக்கிறது… அதன் காரணம் என்ன ?

இல்லை. நான் அடிப்படையில் கவிஞன்தான். என் கதைகளில் கவிமுகங்களைக் காட்டாமல் என்னால் எழுத முடிந்ததேயில்லை. வாழ்வின் தரிசனங்களில் கவிதையின் வாசனை எட்டாமல் எந்த எழுத்தாளனும் எழுத வர முடியாதுதான். தற்காலத்திய எனது உடல் அலுப்பு, அதை மீறி நான் காட்ட நினைக்கிற உற்சாகத்துக்குச் சின்னச் சின்னக் கவிதைகள் வடிகாலாக ஆகக்கூடும் என நம்பினேன்.

மரபு, புதுக்கவிதை வடிவங்களை விட ஹைகூ கவிதை உங்களை ஈர்த்தது எப்படி ?

அதன் நவீனத் தன்மைதான், முதல் அடையாளம். தவிர மரபின் வார்த்தையாடல்களில் உணர்ச்சித் திவலைகள் வாசகனை ஜன்னல்வழியே போல எட்டுவதற்கு ஆயிரம் தடைகள் – சந்தம், வார்த்தைத் தேர்வு… இப்படி. புதுக்கவிதையில் உணர்ச்சிகளை நேரே தொட்டுவிட வாசகனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள்… எனக்கு இரண்டும் வேண்டும். அறிவின் விளையாட்டு என் பிறவியம்சம். உணர்ச்சி மீட்டல் அதன் பயன், எனவே பழக்கப் பட்டுவிட்ட எனக்கு ஹைகூ வடிவம் உவப்பாய் இருக்கிறது.

பொதுவாக ஹைகூ கவிதைகள் சில தளங்களில் திரும்பத் திரும்ப இயங்கி வருவதாகத் தோன்றுகிறது. ஏன் அப்படி ? இதில் இருந்து நீங்கள் எப்படி மாறுபட்டு இயங்குகிறீர்கள்

அதில் ஆச்சர்யம் இல்லை. ஹைகூ கவிதையின் சிறப்பே அதன் நம்பகத்தன்மை, வாழ்வு சார்ந்த அதன் உத்திரவாதம், மற்றும் சிறு ஆசுவாசப் புன்னகை. அவநம்பிக்கையூட்டும் ஹைகூக்கள் குறைவு. அதாவது தெரிந்த உலகின் தெரியாத பக்கத்தை கிளர்ச்சியுடன் ஒரு ஆஹாஹாரத்துடன் ஹைகூ முன்வைக்க முடியும். தெரிந்த காட்சிகளில் புதிய பரிமாணங்களை அது அறிமுகப் படுத்துகிறது. ஒரு காட்சிப் பதிவையே வெவ்வேறு கவிஞர்கள் தத்தம் பார்வை தரிசன அடிப்படையில் கவிதையாக முன்வைப்பது வாழ்க்கைக்கு மேலதிக நியாயம் சேர்க்கிற அழகான விஷயம்தானே ?

என் கவிதைகளில் இந்த அழுகைமீறிய சமதளம் அல்லது உற்சாகம்… ஹைகூவை மேலும் நகர்த்திச் செல்ல வேண்டியிருக்கிறது.

பறந்துசெல் குருவியே

உத்திரம் வேண்டும்

துாக்கில் தொங்க

கூட்டிப் பெருக்கும்

குப்பாயி மகன்

கணக்கில் புலி

மாவுத்தன் ஆயிரம்

சூழ வலம் வந்த

நாரணன் நம்பி

மரபு சார்ந்த பதிவுகளை மறுபரிசீலனை செய்கிற பழக்கத்தைக் கொணர முடியுமா ? நவீனத்தன்மைக்கும் புராணங்களுக்கும் பாலம் கட்ட முடியுமா ?

திருமதி சரஸ்வதி

வீணையை மூடிவை

குழந்தை அழுகிறது பாலுக்கு

இதில் குழந்தைக்குப் பால் கொடுக்கும் காட்சியே வீணையைச் சரித்துக் கிடத்திக் கொண்ட காட்சியம்சத்தோடு ஒத்துப்போகிறதை கவனிக்கலாம்.

ஒரு பதிவில் முரண் அம்சம் கிட்டிவிட்டால் ஹைகூ ஆகிவிடுமா ?

ஆகிவிடும். நிச்சயமாக. ஆனால் அதை மேலதிக தளங்களுக்கு எடுத்துச் செல்கிற வார்த்தைத் தேடல்களில் அதிகம் கவனம் எடுத்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது. காட்சிகளாக, சம்பவ உருவாக அந்த முரணை எத்தனை மென்மையாக முன் வைக்கிறோமோ அது அதன் வெற்றியாக உணரப்படும்.

தீபாவளிக்குப் பட்டுப்புடவை

வாங்கினாள்

காபரே அழகி

காபரா அழகி

வீடு திரும்பினாள்

முகம்வரை போர்த்தி

ஹைகூ கவிதைப் பதிவுகளைச் சிறுகதையாக உணர்ந்திருக்கிறீர்களா ?

நிறையக் கதைகள் எழுதப்படாமல் மனசில் சேர்ந்து விடுகிறபோது ஹைகூவாகப் பதிவு செய்து கொள்வது நல்லது என உணர்ந்திருக்கிறேன். சில சமயம் அதைப் பிற்பாடு சிறுகதை வடிவிலும் செய்திருக்கிறேன்.

மாவுத்தனுக்கு மரண தண்டனை

யானை மிதித்தது

ராஜாவை

வார்த்தை வார்த்தையாக உணர்வைக் கோர்த்துக் கொண்டே ஒரு வெடித்தாக்குதலை நிகழ்த்த ஹைகூ அருமையான வடிவம்.

மோப்ப நாய்

ஓடி நின்றது

பிஸ்கெட் கடையில்

கதைக்கான அழகான கரு பற்றிய இன்னொரு பதிவு –

சிஷ்யனாக ஏற்றுக் கொள்க

வந்து நிற்கிறான்

ரெண்டாவது கணவன்

இது நான்காவது கவிதைத் தொகுதி. மற்ற மூன்று தொகுதிகள் பற்றிய உங்கள் அனுபவம்… அதுசார்ந்து நீங்கள் பெற்ற விமரிசனங்கள் பற்றிச் சொல்லுங்கள்.

கூறாதது கூறல் – தலைப்பின் அடிப்படைப்படியே புதிய என் வரவின் நியாயம் சார்ந்த முயற்சி. முரணும், நகைச்சுவையும், சமுதாய விமரிசனமும் அந்த நுால். கொஞ்சம் தத்துவ பாவனை கொண்டாடி ஞானக்கோமாளி. ஊர்வலத்தில் கடைசி மனிதன் – சில காய் நகர்த்துதல்கள். சற்று பரவலான வேறு தளங்களில் ஹைகூவை நதியோடச் செய்கிற பேராசை இதோ தொடர்கிறது.

வகுப்பறை வெளியே

மண்டியிடும் மாணவன்

பூ உதிர்க்கும் மரம்

தோள்ப்பையில்

ஃபீடிங் பாட்டில்

மீனாட்சி மும்முலைக்காரி

அழுதிடு வானமே

இறந்து விட்டான்

தோட்டக்காரன்

விமரிசன அளவில் நான் பெற்ற வரவேற்பு அபாரமானது. இந்த நான்காவது தொகுப்பின் நியாயமும் வேகமும் அதனால்தான். தவிர ஒருவர் வெறும் நகைச்சுவைதானா இவர் கவிதை – என ஆதங்கப்பட்டால் கூட, அதைமீறிய தளங்களை அவருக்கு முன்வைக்க நான் கடப்படுகிறேன் – உந்தப் படுகிறேன், அன்னாருக்கான மரியாதையுடனும் நன்றியுடனும்.

உங்கள் கவிதைகளின் தன்னடையாளம் என எதைச் சொல்வீர்கள் ?

அது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். பொதுவாக என் கவிதைகளில் காட்சிகளின் நேரடி அனுபவத் தாக்குதல் சித்திப்பதாகச் சொல்கிறார்கள். சந்தோஷம்.

ஹைகூ கவிஞர்களை சில பெரிய கவிஞர்கள் பொருட்படுத்துவதில்லையே…

அப்படியா ? நீண்ட கவிதைகளில் கூட மத்தியில் தெறிக்கிற பொறிதானே கவிதை முழுக்க வியாபிக்க முடிகிறது. அந்தப் பொறியைச் செதுக்கிய வார்த்தைகளில் ஹைகூவில் சொல்ல முடிகிறது. நீர்த்த பரப்பில் சொல்லின் சாரம் குறைந்து போகிற அபாயம் ஹைகூவில் இராது.

ஹைகூ கவிதைகளின் நல்ல விஷயம் – ஒரு பார்வையில் பாதிக்காத அதே கவிதை இன்னொரு உணர்வுகட்டத்தில் மனசை அள்ளும். பல முரண்கள் சாதாரணத் தன்மையுடன் தோன்றியும் சில விபரீத கணங்களில் குபீரிட்டு மேலெழும்.

கழுத்தை நீட்டி

தடவச் சொல்லும்

கசாப்புக்கடை ஆடு

***

Series Navigation