திரைக்குள் பிரதிபலிக்கும் நிழல்

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

எச்.பீர்முஹம்மது



நவீன உலகில் காட்சித்திரை அகோன்னத வெளியை கொண்டது. அதன் பிரதிபலிப்பு திரும்ப திரும்ப நிகழக்கூடியது. அதற்கு அப்பால் பட்டுத் தெறிப்பவை அனைத்தும் நிழல்களின் ஸ்பரிசமே.உலக வரலாற்றில் திரையை ஊடகமாக கொண்ட திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது உணர்வுபூர்வமானது. மனிதனின் அகத்தை நோக்கிய தேடலை நிகழ்த்துவதிலும், அதனை வெளிப்படுத்துவதிலும் இதன் பங்களிப்பு அபாரமானது. சில திரைப்படங்கள் புரட்சிகர உணர்வை ஏற்படுத்துபவை.உலகில் நடந்த எல்லா புரட்சிகளை பற்றிய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, இரண்டாம் உலகப்போர், செப்டம்பர் 11 போன்றவை பற்றிய படங்கள் முக்கியமானவை. மேலும் இலத்தீன் அமெரிக்க புரட்சியாளரான சே குவாராவை பற்றி அமெரிக்க இயக்குநர் சோடர்பக் திரைப்படம் எடுத்திருக்கிறார். இவை எல்லாமே தமிழ்படங்களின் சண்டையிடுதல்கள், பின்துரத்தல்கள் இவற்றின் எல்லைக்கு அப்பாற்பட்டவை. தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்தொடர்தலில் திரைப்படங்கள் இன்று குறும்படங்கள், ஆவணப்படங்கள் என்ற போக்காக உருமாறி இருக்கின்றன. சமூகத்தின் பரப்பில் எழுத்து ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சற்றும் குறையாமல் இவையும் தாக்கமுறுகின்றன. இது ஒரு நல்ல தொடக்கமே.

கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு செயல்திட்டங்களோடும் அதற்கான முனைப்போடும் செயல்பட்டு வரும் இலைகள் இலக்கிய இயக்கம் ஒரு நாள் முழுதான திரையிடல் விழாவை கடந்த 10-04-2011 ஞாயிறு அன்று நாகர்கோவில் சுங்கான்கடை விடிவெள்ளி தொழில்நுட்ப அரங்கில் நடத்தியது. விழாவுக்கு இலைகள் இயக்க தலைவர் அகமது கபீர் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் அருட்தந்தை விக்டர் தொடக்க உரை நிகழ்த்தினார். இயக்க செயலாளர் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் கணிசமான இளைஞர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டது கவனிக்கத்தக்கது. ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜீத் மஜிதின் The Children of heaven, பிரெஞ்சு இயக்குநர் ஆல்பர்ட் லாமொரைசெயின் The Red Baloon, சீன இயக்குநர் யுமௌ சாங்கின் The Road home, இரஷ்ய இயக்குநர் அலெக்சாண்டர் சுக்ரோவின் Mother and Son ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அரங்கம் எல்லாவித வசதிகளோடு படம் பார்ப்பதற்கான சூழலோடு இயைந்திருந்தது. புரொஜெக்டர் உதவியுடன் திரையிடப்பட்டதால் முழுநீள திரைப்படத்தை அசலாக காட்சி உணர்ந்த அனுபவத்தை பார்வையாளர்கள் அடைந்தனர். நாவலாசிரியர் மீரான்மைதீன் விவாதத்தை ஒருங்கிணைத்தார். குறிப்பாக Children of heaven படத்தின் காட்சி அனுபவம், கதையாடல், காட்சிகளின் தத்ரூபமான ஒளியூட்டம், குழந்தைகளின் உலகை படத்தில் இயக்குநர் சித்தரித்த விதம் ஆகியவற்றை குறித்த கருத்துக்களுடன் விவாதத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இது குறித்த பரவலான கருத்துக்கள் பார்வையாளர்களிடமிருந்து வெளிப்பட்டன. குறிப்பாக அரபுச்சூழலில் பெண்களை காட்சிப்படுத்தும் விதம், அதன் திடத்தன்மை குறித்த கருத்துகள் முக்கியமாக வெளிப்பட்டன.மேலும் Red ballon, Mother and son ஆகிய படங்கள் உருவாக்கிய மனச்சித்திரம் குறித்த கருத்துக்களும் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன. இலைகள் இயக்க உறுப்பினர் சம்சுதீனின் நன்றியுரையோடு நிகழ்வுகள் முடிந்தன. மற்றுமொரு திரையிடல் இதே அரங்கில் நிகழ வேண்டும் என்ற உணர்வோடு பார்வையாளர்கள் கலைந்து சென்றார்கள்.

Series Navigation

author

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது

Similar Posts