திபேத்தியப் பழமொழிகள்

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

தேவமைந்தன்



இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப் பாலைவனமான மலைப்பகுதிதான் ‘லே’[Leh] எனப்படும் லடாக்கின் தலைநகர். இந்த ‘லே’நகரில் எப்பொழுதும் மிகுதியான குளிரும் மிகுதியான வெப்பமும் மாறி மாறி நிலவும்.

இந்திய ஒன்றியத்தின் மிகப் பெரிய மாநிலம் (முன்பு மாவட்டம் என்றே அழைக்கப்பெற்றது) லடாக்; அதேபொழுது அதன் மக்கள் தொகையோ மிகவும் குறைவு. இப்பொழுது உள்ள மக்கள் தொகை மிகுதி .

1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பெற்ற கணக்கீட்டில், லடாக்கின் 95,876 ச.கி.மீ. பரப்பில், 1,05,000 மக்களே வாழ்ந்தனர் என்று உள்ளது. உணவையும், விலங்கினங்களுக்கான தீனியையும் வேண்டும் அளவுக்குமேல் உருவாக்கிய மக்கள் அவர்கள்.

கிழக்குத் துருக்கிஸ்தானிலிருந்து பயணம் செய்து வரும் ஒட்டக வண்டியொழுகைக்கும், மாந்தருக்கும், அவர்களின் குதிரைகளுக்கும், கோவேறு கழுதைகளுக்கும் போதும் போதும் என்கிற அளவு உணவும் தீனியும் தந்த பின்பும் தங்களுக்கும் தங்கள் வீட்டு விலங்குகளுக்கும் உணவும் தீனியும் மிகுந்திருப்பதைக் கண்டு நிறைவுடன் வாழ்ந்தவர்கள் லடாக் மக்கள்.

வடக்கே துருக்கிஸ்தானும்; கிழக்கே சீனாவும்; தெற்கே குலு, அமிர்தரஸ் முதலான இந்திய நகரங்களும்; மேற்கே ஆப்கானிஸ்தானும், காஷ்மீரும் என்பது லடாக்கின் நிலத்தியல் நிலை. ‘லே’ நகரம், நடுவண் ஆசிய வணிகப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற நடுவமாக உள்ளது. நெடும் பயணத்தால் களைத்துவரும் ஒட்டகங்களுக்கு நல்ல உணவும் நீரும் ஓய்வும் மருத்துவமும் அளிக்கும் புகலிடம் இது.

இத்தகைய சூழலில், லடாக்கில் வாழும் திபேத்திய மொழி மக்களின் பண்பாடு, முற்றிலும் உணவு- உடை- உறையுள் தொடர்பானதாகவும்; விருந்தோம்பல் என்பதற்கும் மேலாக விலங்குகளுக்கும் விருந்தோம்பல் என்பதாகவும் அமைந்திருக்கிறது.

நம் தமிழ்நாட்டின் தமிழ்ப் பழமொழிகளில் பெரும்பான்மையும் நல்ல தமிழ்ச் சொற்களே காணப் படுகின்றன. ஒலிப்பும் அவ்வாறே. ஆனால் திபேத்தியப் பழமொழிகளிலோ மிகவும் இயல்பாக திபேத்தியம் அல்லாத மொழிகளின் சொற்கள் ஊடுருவியுள்ளன. எந்த அளவுக்கு மொழி ஊடுருவல் நிகழ்ந்துள்ளது என்றால் ஏற்கெனவே பழமொழிகளில் இருந்த தூய திபேத்தியச் சொற்கள் அகற்றப்பட்டு, அங்கே காஷ்மீரி, இந்துஸ்தானி, துருக்கிச் சொற்கள் மிகவும் இடம்பெற்று விட்டன.

நிலத்தியல் அடிப்படையிலும் மொழிநிலையிலும் வேறுபட்ட மக்களுக்கு இடமும் உணவும் தரும் பண்பாடு திபேத்தியருக்கு இருந்ததால், மெல்ல மெல்ல “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல” பிற மொழிகளின் ஆதிக்கம் வந்தது. பழமொழிகளுக்கே இந்த நிலை என்றால், திபேத்திய மொழி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

இதனால்தான் அவர்களின் பழமொழி – “வருகைதரும் நல்ல வணிகப் பெருமக்களுக்குத் தோழமை காட்டு; களவாணிகளை விரட்டியடி!” (மறைத்திரு ஜெர்கன் தொகுப்பு: எண்.644) என்று கூறுகிறது.

வணிகத்தோடு வந்த மொழிதானே தமிழுக்கு வினை ஆனது? குறைந்த ஊதியத்துக்கு வேலைபார்க்கும் வீட்டுவேலைக்காரப் பெண்கூட இன்று தன் பிள்ளையை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கத்தானே விரும்புகிறாள்? “ஏதோ என் பிள்ளை நாலெழுத்து இங்கிலீஷில் பேசினால் போதுமுங்க!” என்று அவளைச் சொல்ல வைத்திருப்பதும் அந்த மொழியே அல்லவா?

“வந்தவரெல்லாம் சந்தையில் குடியா?” என்ற தமிழ்ப் பழமொழி, ஏறத்தாழ இந்த கருத்தைத்தான் உணர்த்துகிறது. நான்கு திசைகளிலிருந்தும் வேற்று நாட்டவரும் இனத்தவரும் திபேத்துக்குள் எளிதில் புக நேர்வதால் அங்கு பழமொழி சற்றுக் கசப்பானதாகி, “களவாணிகளை விரட்டியடி!” என்பதும் அத்துடன் இணைகிறது. இன்று, மேற்கு வங்கத்தில் இந்நிலை இருப்பதைப் பார்க்கலாம்.

திபேத்தியப் பழமொழியொன்று, “தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வான்!”(மேற்படி: எண்.656) என்று சொல்கிறது. கஞ்சனைக் குறித்துக் கூறப் பெறுவது இது. “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தடவமாட்டான், ஆண்டி வந்தாலும் பிச்சை போடமாட்டான்!” என்ற தமிழ்ப் பழமொழி, ஒத்த கருத்தை உடையது; ஆனால் உணர்த்துவது வேறாயிருக்கிறது. இந்தத் தமிழ்ப் பழமொழி, ‘கழகப் பழமொழி அகரவரிசை’ நூலுள்(ப.27:எண்.798) இந்த வடிவில் உள்ளது.

மக்கள் சொலவடை வழக்குகள் –

“அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது,”

“அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்” என்பவையே.

கைவிரல் குறித்து ஒரேமாதிரிக் கருத்துடைய பழமொழிகள் தமிழிலும் திபேத்தியத்திலும் உள்ளன. ஆப்பிரிக்கப் பழமொழி ஒன்று, “வெறும் கையை நக்குவாரில்லை” என்று கையளவு மட்டிலும் போகிறது. அவ்வளவுதான்.# தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வதென்பது ‘லே’ நகரின் குளிர்ச்சி மிகுந்த அன்றாடத் தட்பவெப்ப நிலைக்குத் தேவையானதே.

“சாவையே சந்திக்க நேர்ந்தாலும் சொந்த நல்லியல்பிலிருந்து வழுவ மாட்டார்கள் நேர்மையாளர்கள்!”(மறைத்திரு ஜெர்கன் தொகுப்பு: எண்.988) என்ற திபேத்தியப் பழமொழி, பழமொழியின் இயல்பில் குன்றி, பொன்மொழி போலத் தெரிகிறது.

பின்வரும் திபேத் பழமொழியைப் பார்த்தால்,

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்” (திருக்குறள்: 969)

என்ற திருக்குறள் கருத்தினைத் திபேத்தியர் அறிந்து வைத்திருப்பது போலுள்ளது.

‘கவரிமா’ என்பதைக் ‘கவரிமான்’ என்று சொல்லக்கூடாது என்றார் மொழிஞாயிறு பாவாணர். ஏனெனில் ‘கவரிமா’ என்பது குளிர் மிகுந்த நிலப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியது; பசுவைப் போன்ற தோற்றம் உடையது என்றார் அவர். [பாவாணர் நேரில் மொழிந்த இந்தக்கருத்து, அவர் எழுதிய ‘திருக்குறள் தமிழ் மரபுரை’யில், காணப்படவில்லை.]

திபேத்தியருக்குச் சினம் வந்தால், தங்களுக்குச் சினம் ஊட்டியவரைப் பார்த்து, “உடம்பில் மயிர் முளைக்காத விலங்கே!” என்று திட்டுவார்களாம்.

சூழலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பவே ‘கெட்ட வார்த்தைகள்’ எனப்படும் வசைமொழிகள் பிறக்கும் என்று மலினோவ்ஸ்கி கூறினார்.(‘Sex Life of the Savages.’) மீன்விற்கும் பெண்ணொருத்தி புதுச்சேரி மீன் அங்காடியொன்றில் பயன்படுத்திய – அமைப்பில் இதேபோன்றதும் – ஆனால், வேறு யாரும் பயன்படுத்த முடியாததுமான வசைமொழியைத் தன் ‘மீன்’ என்ற சிறுகதையில் பிரபஞ்சன் பதிவு செய்திருக்கிறார்.(‘ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ தொகுப்பு, 1972)

ஓரிடத்தில் விருந்துச் சாப்பாடு போடுகிறார்கள் என்றால் விழுந்தடித்துக் கொண்டு ஓடுபவர்களைக் குறித்து, “உடம்பில் மயிர்முளைக்காத பன்றியைப் போன்றவர், உணவுக்குப் பின்னால் ஓடத்தானே செய்வர்?” என்றொரு திபேத்தியப் பழமொழி சொல்கிறது.(மேற்படி, எண்:991)

“அடுத்தவர் நலமாக வாழவேண்டும் என்று விரும்பாதவர்கள் விலங்குகளே போல்வர்” (அதே நூல்: எண்:989), “பருகவும் தின்னவும் மட்டுமே விலங்குகள் அறியும்” (அதே நூல், எண்:990) என்ற திபேத்தியப் பழமொழிகளை மறைத்திரு ஜெர்கனின் தொகுப்பு தெரிவிக்கிறது.

“சோம்பேறிக் கழுதைக்குப் புல்லைத் தின்னவும் தெரியாது” என்ற திபேத்தியப் பழமொழி, அதிகம் வேலை செய்யாமலேயே மிகவும் களைத்துப் போகிறவனை நையாண்டி செய்கிறது.[அதே நூல், எண்:367] இவை போன்ற பழமொழிகள் பல.

பெரும்பாலும் மிகுந்த குளிர்வீசும் நிலையையே உணர நேர்வதால் [மிகுந்த வெப்பமும் அங்கே நிலவும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்] திபேத்திய மக்கள், தாம் என்ன சொல்லியும் திருந்தாதவர்களிடம் பின்வரும் பழமொழியைச் சொல்வர்:

“மூக்கின்மேல் குளிர்ந்த காற்று மோதும்பொழுதுதான், உனக்கு அறிவு வரும்!” .(மேற்படி, எண்: 392)

கடினமாகப் பாடுபட நேரும்பொழுது,

“மண்டைத்தோல் கழன்று மலைகளுக்குப் போகிறது!”

என்ற பழமொழியைச் சொல்கிறார்கள்.

திபேத்தில் ‘லாமாசரி’ என்றழைக்கப்பெறும் மடங்களும் லாமாசரிகளின் தலைவர்களும் எப்படிப்பட்டவர்களாம்?

“மடத்தில் வளர்க்கும் நாயை அடிக்காதே,
மடத்தில் வளர்க்கும் நாயை அடித்துவிட்டு
மதகுருவின் பகையை சம்பாதித்துக் கொண்டுவிடாதே!”

இதைப் பின்பற்றி இன்னொரு பழமொழியும் உண்டு.

“ஒருபொருள் மிகவும் தேவையென்று வரும்பொழுது [லாமாசரி மடத்தில் வளர்க்கும்] நாயின் மலம்கூடக் கிடைக்காது!”(அதே நூல், எண்:172)

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களைப் பற்றிய பழமொழி ஒன்று:

“இலையுதிர்காலம் வந்து விட்டால், உன் நாய்க்கு மோரைத் தராதே!”
காரணம், ‘லே’(Leh) நகரில் இலையுதிர்காலத்தின் பொழுது பால்வளம் மிகுந்திருக்கும்.

காலமும் மண்ணும் மக்களும் விலங்குகளும் திபேத்தில் எந்த அளவு இணைந்து உள்ளன என்பதை இதனால் உணர முடிகிறது.

லடாக்கில் வாழும் மக்கள், தம் நாட்டை விடுத்து அயல்நாட்டை விரும்புகிறவர்களை வெறுக்கிறார்கள்:

“நீ சென்று, இருந்து, வாழ்ந்து பார்க்காத நாடு,
உனக்கு மிகவும் இனிமையானதே!”
என்பது அதற்கான திபேத்தியர் பழமொழி.

இன்னும் எத்தனையோ பழமொழிகள் திபேத்தில் புழங்கினாலும், ஆயிரம் பழமொழிகளை மட்டுமே தொகுத்திருக்கிறார் மறைத்திரு ஜெர்கன். அவற்றில் மிகச் சிலவற்றையே இக்கட்டுரையில் கண்டோம்.

******
#சான்று:
ப. இராமசாமி, உலகப் பழமொழிகள், வள்ளுவர் பண்ணை, சென்னை 1964.

நன்றி:
Rev. J. Gergan, A Thousand Tibetan Proverbs and Wise Sayings, 1976 என்ற நூலைப் பார்வையிடத் தந்த புதுச்சேரி சேன் லூயி வீதியிலுள்ள பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவன நூலகத்துக்கு.

********
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation