திண்ணை

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார்.தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது வெற்றிலை,பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் லேசான அதிர்வை உண்டாக்கியது என்னில்.

ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா,கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன்.இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.

சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப்பெய்யலாயிற்று.மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று.மழையின் எந்தப் பிரஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது.மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக,நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது.ஊருக்கே பழம் வீடாக இருப்பதில் மாமா சற்றுப்பெருமையும் கொண்டிருந்தார்.

சிவப்பு,கருப்புப் பூ அலங்காரங்களைக் கொண்ட வெண்சீமெந்துத் தரை எப்பொழுதும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டிருக்கும்.அந்தக் குளிர்மை,மாமாவின் வீடுமுழுக்க, அனல்பறக்கும் கோடை காலத்திலும் ஒரு புகையைப் போலப் படர்ந்திருக்கும்.வெளித்திண்ணை மிக அகலமாகவும் நான்கு தூண்களுடனும் இரண்டு அடிக்கும் சிறிது அதிகமான உயரத்துடனுமிருக்கும்.அதில்தான் நின்றுகொண்டிருந்தேன்.

இந்த வீட்டைப்பற்றி பெரியாச்சி என் சிறுவயதில் கதை,கதையாகச் சொல்லியிருக்கிறார்.முன்னர் பாய் பின்னுவதற்கும்,அவித்த நெல் காயப்போடுவதற்கும் பயன்பட்ட திண்ணை இப்பொழுது பெரியாச்சியின் வெற்றிலை இடித்தலையும்,மாமாவினுடைய பேரப்பிள்ளைகளின் விளையாட்டுக்களையும் அமைதியாகப் பார்த்தபடியிருக்கிறது.

பெரியாச்சியின் கணவர் கட்டிய வீடு இது.முற்காலங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து எங்களூர் பெரியாஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக வரும் ஜனங்கள் இரவுப்பொழுதைத் தங்கிச் செல்வதற்காகப் பொதுநோக்கில் இத்திண்ணை கட்டப்பட்டிருந்தது.திண்ணையிலிருந்து பார்த்தால் வீதியைத் தாண்டிப் பரந்த,எப்பொழுதும் வயல்காற்றைச் சுமந்தவண்ணமிருக்கும் வயலும் அதற்கப்பாலுள்ள ஆற்றங்கரை மூங்கில்களும் தெளிவாகத் தெரியும்.நான் முன்னர் அதில் பட்டம் விட்டிருக்கிறேன்.

பட்டம் நூலறுந்து போய் வயல்வெளிக்கடுத்து இருந்த பாடசாலைக் கூரையில் சிக்கும்,அந்தப் பாடசாலையில்தான் டீச்சர் அந்த நாட்களில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.டீச்சர் வீட்டுக்கு வயல்வெளியினூடாக நடந்து போகவேண்டும்.ஐந்தாம் வகுப்புப் பரீட்சை சமயம் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க வயல்வரப்பின் ஊடாக மழைக்கால இரவொன்றில் தவளைகள் கத்தக் கத்த,வெளிச்சத்திற்காக காய்ந்த தென்னஞ்சூளை எரித்து அவர் வீட்டுக்கு நான் சென்ற இரவு இன்னும் நினைவில் இடறுகிறது.

டீச்சர் வீடுதான் ஊரிலேயே மிகப்பெரிய தோப்பில் அமைந்த வளவு வீடு.வீட்டைச் சுற்றிலும் அழகிய சமதரைப்புல்வெளி.அழகழகான ரோஜாக்களும்,ஓர்க்கிட்களும் பூத்துக்குலுங்கும்.தெளிந்த நீரைக் கொண்ட பெருங்கிணறு ஒன்று அவர் வீட்டின் முன்னால் இருந்தமை ஊர் மக்களுக்கும்,அவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஐந்தாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் அவரது வகுப்புப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் சிறப்பாகச் சித்தியெய்தியமை அவரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.மாணவர்களெல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்து முற்றத்தில் பாய் விரித்து கேக்,பிஸ்கட்,இனிப்பு தந்து உபசரித்து மகிழ்ந்தார்.

டீச்சரின் கணவரை நான் பார்த்திருக்கிறேன்.டீச்சருக்கு நேர்மாறு அவர்.டீச்சரின் புன்னகை முகம் அவருக்கு எள்ளளவும் வாய்க்கவில்லை.எப்பொழுதும் ஏதோ கடுப்பானதொன்றை விழுங்கிவிட்ட மாதிரியொரு பார்வை, பிதுங்கிய விழிகளில் மிச்சமிருக்கும்.அவர் வாய்விட்டுச் சிரித்து யாராவது பார்த்திருந்தால் உலகின் எட்டாவது அதிசயம் அதுவெனச் சொல்லலாம்.

மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது.எதற்கோ வெளியே வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார்.

“ஐயோ..உள்ளே வாங்க மகன்..தெரியாத ஊடு மாதிரி வெளியே நின்னுக்கிட்டு..மழையில நல்லா நனஞ்சுட்டீங்களா?
மருமகன் வந்திருக்கிற விஷயத்தை நீங்களாவது சொல்ல வாணாமா?”
பெரியாச்சியை லேசாகக் கடிந்துகொண்டார் மாமா.

நான் சப்பாத்தைக் கழற்றிவிட்டு உள்ளே போக முற்பட்டேன்.அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும்.நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.

“பரவாயில்ல மகன்.அப்படியே வாங்க..மழை வரணும் போல இருக்கு..உங்கள இங்கே கூட்டி வர.”
மாமியின் குரலில் ஒளிந்திருந்த கிண்டலோடு நானும் அப்படியே உள்நுழைந்தேன்.

பெரியாச்சி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.மழையும்,திண்ணைகளும் அவருக்குத் தோழிகள் போலும்.அவரது பொக்கை வாய் வெற்றிலையை மெல்லுவதைத் தூரத்திலிருந்து பார்க்கையில் மழையோடும்,திணணையோடும் அவர் கதைத்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.இடைக்கிடையே சிவந்த வெற்றிலைச் சாற்றினை தெருவில் வழிந்தோடும் மழை நீரில் துப்புவதானது மழைத் தோழி மீதான செல்லக் கோபத்தை வெளிப்படுத்துவதாகப் பட்டது எனக்கு.

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்?இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்?அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

மாமா சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார்.பழங்காலத்தை மரச்சட்டங்களில் பிணைத்துக் கொண்டுவந்ததைப் போல வீட்டுக் கூடத்தின் வலது மூலையில் அது அன்றையகாலம் தொட்டு இருந்து வருகிறது.புதிதாகத் திரும்பவும் பின்னியிருந்தார்கள்.மதிய சாப்பாட்டிற்குப்பின்னரான பகல்தூக்கம் மாமாவுக்கு அதில்தான் என்பது ஞாபகமிருக்கிறது.சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.எந்தவொரு அசைவுமற்று,சாய்த்து உட்காரவைக்கப்பட்ட சிலை மாதிரி தூங்கிக் கொண்டிருப்பார்.

அப்பொழுதுகளில் நானும்,என் வயதொத்த சிறுவர்களும் தூங்கும் இவர் மூக்குக்கருகில் மிளகாய்த் தூளை விசிறிவிட்டு ஒளிவோம்.பெரும் தும்மல்களோடு எழுந்து ஒன்றும் புரியாமல் மிக நீண்ட நேரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி விழிப்பார்.மாட்டிக் கொண்ட ஒரு நாளில் இடது காதைச் செமத்தியாகத் திருகிவிட்டார்.

இப்பொழுது தூங்கவில்லை அவர்.நான் வரமுன்பே தூங்கியெழுந்திருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் இருபது வருடத்திற்கு முன்னைய மிளகாய்த் தூள் இப்பொழுது அவர் மூளையில் உறைத்திருக்கவேண்டும்.மழைக்கு இதமானதாக மாமி கோப்பி தந்தார்.

“மகன் எங்கட ஊட்டுக்கெல்லாம் வரணுமெண்டா இப்படித்தான் மழை பெய்யணும் போல”
“அப்படியில்ல மாமி.சரியான வேலை.சனி,ஞாயிறு லீவு எண்டாலும் சனிக்கெழம விடிய முந்தி ஊருக்கு வர பஸ் எடுத்தா,பாருங்க எத்தனை மணிக்கு வந்து சேர்றதுன்னு”.

கொழும்பிலிருந்து பஸ் ஏறும்போது மழையிருக்கவில்லை.இடையில் தாண்டி வந்த எந்தெந்த ஊர்களில் மழை பெய்துகொண்டிருந்தது எனவும் தெரியாதவாறு பஸ் இருக்கையில் அமர்ந்து டிக்கட் எடுத்ததுமே தூங்கிவிட்டிருந்தவனை பழகிய கண்டக்டர்தான் எழுப்பி,இறக்கி விட்டிருந்தார்.பஸ் செல்லும் தெருவோரத்து வீடென்பதனால் மழை தொப்பலாக நனைத்துவிடும் முன்பு மாமா வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி விட்டிருந்தேன்.

பெரியாச்சிக்கு இந்த விடயம் எப்படித்தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்? உலகத்தின் ஓசைகளெல்லாம் கேட்டு ஓய்ந்த பெரியாச்சியின் செவிகள் இப்பொழுது வேறு ஓசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை.காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது.ஏதாவது அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டுமென்றால் கூட செய்கை மொழி மட்டுமே உதவும் நிலையில் அவரது காதுகள் இருந்தன.

இந்நிலையில் டீச்சர் பற்றிய விபரம் எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? ஒருவேளை பொய்யாக இருக்குமோ?யாராவது வெற்றிலை ஒரு வாய்க்கு வாங்கவந்தவர்கள் சொன்னதை பெரியாச்சி தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ?டீச்சரின் ஐம்பது வயதுகளைத் தாண்டி,இருபத்தாறு வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு அவர் எதிர்பார்த்திருந்த விவாகரத்துக் கிடைப்பது என்பது கிராமங்களில் இன்னும் அதிர்ச்சிக்கும்,சலனத்துக்கும் உரிய விடயமாகவேயிருந்தது.

டீச்சர் எனக்கு எனது இரண்டாம் வகுப்பிலேயே அறிமுகமானார்.மடக்கக் கூடியதான சிறுகுடையும்,கைப்பையும் எப்பொழுதும் அவர் கூடவே வரும்.காலைவேளைகளில் எப்பொழுதும் சிவந்திருக்கும் விழிகளிரண்டும் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன.இரண்டாம் பாடவேளையின் போது தினமும் ஒரு இளமஞ்சள் நிற மாத்திரையை கைப்பையில் இருக்கும் சிறுபோத்தலிலுள்ள நீரைக் கொண்டு குடித்துக் கொள்வார்.

அன்றொருநாள் அப்படித்தான்.மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டவர் தண்ணீர் கொண்டு வர மறந்திருந்தார்.ஒரு மாணவனை அனுப்பி வெந்நீர் கொண்டுவரச் சொன்னார்.அவனோ ஏதுமறியாதவனாக ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் கொண்டுவந்து கொடுக்க,அப்படியே வாயிலூற்றிக் கொண்ட டீச்சருக்கு புரையேறி,வாயெல்லாம் வெந்துவிட்டது.டீச்சர் கைக்குட்டையால் வாய்பொத்திக் கொண்டு மௌனமாக அழுததை அன்றுதான் கண்டோம்.நாங்களெல்லோரும் பதறிவிட்டோம்.அந்த மாணவனும் பயத்தில் அழுததைக் கண்டவர் ‘எனக்காக வருத்தப்பட நீங்களாவது இருக்கீங்களே’ எனச் சொல்லி அணைத்துக் கொண்டார்.

“மாமி,பெரியாச்சி சொல்வது உண்மையா?”
“என்ன மகன்?”
“இல்ல ! டீச்சர்…?”
“ஓ மகன்..அவங்க விரும்பின விடுதலை கிடைச்சிட்டுது.எவ்ளோ காலத்துக்குத் தான் தன்ட புருஷன் இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறதப் பொறுத்துக்கொண்டிருக்குறது?அவ இருபது வருஷத்துக்கும் மேல பொறுத்துப் பார்த்தாச்சுதானே…?”
“இனி எதுக்கு 20 வருஷம் காத்திருக்கணும்? இந்த விஷயம் தெரிய வந்த உடனே டிவோர்ஸ் கேட்டிருக்கலாமே?சும்மா அவங்க வாழ்க்கையையும் வீணாக்கிக் கொண்டு…”
“அப்டியில்ல மகன்.நாலு பொம்புளப் புள்ளைகள வச்சிக்கொண்டு,இதுல தகப்பனும் இல்லையெண்டா அதுகளிண்ட எதிர்காலத்துல எவ்வளவு சிக்கல் வருமெண்டு டீச்சர் யோசிச்சிருப்பாங்க.இப்ப எல்லோரையும் நல்லபடியாக் கரை சேர்த்திட்ட பிறகு அவங்க தன்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டிருக்காங்க.இனி யாரையும் அவ எதிர்பார்த்துட்டிருக்கத் தேவையில்ல.பென்ஷன் காசு வருது.புள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்குறதாலக் காசு வருது.பின்னக் காலத்துக்கு அது போதும்தானே ”
மாமா சொன்னதற்கு எந்தவொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை.

டீச்சரின் இருபது வருடப் பொறுமையின் பலனாக அவர் எதிர்பார்த்திருந்த விடுதலை கிடைத்திருக்கிறது.டீச்சரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.அன்றைய காலத்தில் அத்தனை கவலைகளையும் நெஞ்சுக்குள் புதைத்துக் கலங்கிய செவ்விழிகளோடு உலவும் டீச்சரின் விழிகள் இப்பொழுது பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கக் கூடும்.

மழை விட்டிருந்தது.மாமா,மாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தேன்.திண்ணையின் மூலையில் துளித்துளியாய் வாளியில் சேர்ந்திருந்த மழைநீரைக் கொண்டு பெரியாச்சி திண்ணையை முழுமையாகக் கழுவி விட்டிருந்தார்.மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து,நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Series Navigation

திண்ணை

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

ஹ¤சைன்



திண்ணையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், விவாதங்கள் என பலதரப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆக்கங்கள் இடம் பெறுவது மகிழ்ச்சி.

கவிதைகள் ஓரளவு மாறுபட்டு வெளிவருகிறது. கதைகளில் போதாமை தெரிகிறது. இஸ்லாம் குறித்த கட்டுரைகளும், விவாதங்களும் ஆரோக்கியமாக உள்ளது. இதுபோன்ற திறந்த உரையாடல்கள் ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும்.

எனது வேண்டுகோள் ஒன்று. திண்ணைக்கு பங்களிப்பு செய்யும் சிறந்த கவிதையாளர் / கதையாளர் / கட்டுரையாளர் என தேர்வு செய்து ஒரு பாராட்டு விருதும், பரிசும் சாத்தியப்படும் அளவுக்கு வழங்கலாம். இதனை ஒவ்வொரு ஆண்டில் ஜனவரியிலும் செய்யலாம். இது இன்னும் திண்ணை படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும்.

திண்ணையின் தமிழ் சிந்தனைப் பணிக்கு என் வாழ்த்துக்கள்.

ஹ¤சைன்


imagenagercoil@yahoo.com

(அப்படி எந்த எண்ணமும் இல்லை – திண்ணை குழு)

Series Navigation

திண்ணை

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

அறிவிப்பு


சுந்தர ராமசாமியுடனான உரையாடலின் தொடர்ச்சியும், வே சபாநாயகத்தின் சீஷெல்ஸ் பயணத் தொடரும் இந்த வாரம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிவரவில்லை.

Series Navigation