திண்ணைப் பாடல்கள்
Published July 28, 2002 • By
அனந்த்
அனந்த்

திண்ணையிலே காற்றுவாங்க வந்தேன்
தெருவில்இலை அசைவுமிலை நொந்தேன்!
….. கண்திறக்கும் நேரத்திலே
….. கடைசிவீட்டு ஓரத்திலே
விண்மடந்தை! உடலெலாம்கு ளிர்ந்தேன்!
***
உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன்
உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன்
….. அண்டியென்னை ஏதோஒன்று
….. அணைத்ததது யாரோவென்று
கண்திறந்தால் நாய்!நிலைபெ யர்ந்தேன்!
***
திண்ணையென்ற சொல்லையிங்கு யார்தான்
தேர்ந்தெடுத்தார் அவர்ரசனை ஜோர்தான்!
….. கண்ணையள்ளும் நிறத்தினிலே
….. கவிதைகளின் திறத்தினிலே
விண்ணையெட்டும் இவ்விதழின் பேர்தான்!
***