திசைமாறும் போராட்டக்களங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

புதியமாதவி.


கற்பு.. ?

கருப்பா சிவப்பா ?

இருக்கிறதா..இல்லையா ?

கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா சீதையா ?

எது கற்பு ?

இப்படி காலம் காலமாய் கற்பின் சித்தாந்தங்கள் பேசப்பட்டு வந்துள்ளன.

கற்பு பெண்ணின் தொடைகளுக்கு நடுவில் மட்டுமே எழுதப்பட்டிருப்பதாக ஆண்வழி சமூகம் இன்றும் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது!

‘கற்பு நிலையென்று சொல்லவந்தார்..ஆண்-பெண் இரு கட்சிகளுக்கும் அதைப் பொதுவில் வைப்போம் ‘ என்று பெண்ணடிமைத் தீர இந்த நூற்றாண்டின் மகாகவி பாரதி சொல்லியது சிலருக்கு மறந்துவிட்டது.

கற்பு என்றால் chastity, virginity என்பதே பொருள்.அதன்படி பார்த்தால் கற்பு என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் உரியதாகவே ஏற்கவேண்டும்.

‘உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும்நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்புமுறை ஏற்படவேண்டும்.

மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை இயற்கைக் கற்பை சுதந்திரக் கற்பை நிர்பந்தங்களாலும்ஒரு பிறப்புக்கொரு நீதியாலும் வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாது. ‘ என்ற இந்த நூற்றாண்டின் சிந்தனையாளர் தந்தை பெரியார்.

கற்பு என்றால் கற்றல், கற்பிக்கப்பட்டது என்றே பொருள்.

களவுக்கூட்டத்துப் பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும்ஒழுக்கம் ‘என்று தமிழ் லெக்சிக்கன் கறிபின் பொருளைப் பற்றி விளக்கம் சொல்கிறது.

‘கற்பெனப்படுவது கரணமொடு புணரக்

கொள்ளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே ‘ என்கிறது தொல்காப்பியம்.

ஆண்களும் பெண்களும் திருமணத்திற்கு முந்திய களவுக்காதல் உறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தில் அக்காலக்கட்டத்தில் திருமணத்திற்கு முந்திய கன்னித்தன்மை பொருட்படுத்தப்படவில்லை ஆரியர் வருகையும் அவர்களின் திருமணச்சடங்கின் ஒரு பகுதியான கன்னிகாதானம் என்பதும்தான் பெண்ணின் கன்னித்தன்மையை வலியுறுத்திய பண்பாட்டு மாற்றங்கள்.

பரத்தையர் குடியிருப்புகள், பரத்தையர் பிரிவு இவை எல்லாம் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பதற்கு எண்ணிலடங்கா சங்க இலக்கியச் சான்றுகள் உண்டு.

இவ்வளவு தெளிவான கற்பு, பெண்ணியச் சிந்தனைகள் மலர்ந்த தமிழ் மண்ணில் இன்று திரை நட்சத்திரம் குஷ்பு இந்தியா டுடே (தமிழ்) இதழில் கொடுத்த நேர்க்காணலில் கற்பழிக்கப்பட்டு விட்டதாக ஒட்டுமொத்த தமிழகமே கூப்பாடு போடுகிறது.

தமிழ் மொழியின் காவலர்கள், தமிழ்ப் பண்பாட்டின் காவலர்கள் என்று தங்களை அடையாளம் காட்டத் துடிக்கும் சிலரின் அரசியல் நாற்காலி ஆசைகளால் பிரச்சனை இல்லாத ஒன்று பிரச்சனை ஆக்கப்பட்டு உண்மையான பிரச்சனைகளை ஓரங்கட்டி ஒரு போர்க்களம் தயாராகிவிட்டது.

குஷ்பு சொன்னது என்ன ?

‘பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். பெண் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். பெண்கல் தமது செக்ஸ் விருப்பங்களைப் பற்றிப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும் ‘ என்பது தான்.

இந்த வரிகளின் எங்காவது குஷ்பு தமிழ் சமுதாயம் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.

மேலும் இந்தக் கருத்துகள் முழுக்க முழுக்க குஷ்பு என்ற ஒரு பெண்ணின் தனிப்பட்ட கருத்துகள்.

அவருக்கு அவருடைய கருத்துகளைச் சொல்வதற்கு முழுச்சுதந்திரம் இருக்கிறது. அவருடைய செவ்வியில் எங்காவது அவர் தமிழ்ப் பெண்களை இவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பது போல அவமானப்படுத்தி இருக்கிறாரா ?

குஷ்புவைவிட இந்த விஷயத்தில் சற்று அதிகக்கூர்மையுடன் இந்தியாடுடேயில் சொல்லியிருப்பவர் கவிஞர் சுகிர்தாராணி அவர்கள் என்பதை எல்லோரும் இருட்டடிப்பு செய்திருப்பது ஏன் ?

இங்கே எழுந்திருக்கும் குஷ்புவுக்கு எதிரான அலை ஓர் அரசியல் ஆதாயத்துடன் எழுப்பப்பட்டிருக்கும் எதிரலை.

பெண்ணடிமைத் தனத்தை மட்டுமே காதலாகவும் கற்பியலாகவும் காட்டும் தங்கர்பச்சான் என்ற திரைப்பட இயக்குநர் சினிமா நடிகைகளை விபச்சாரிகள் என்று சொல்லிய உளறலுக்கு கொதித்துப்போனவர்களில் ஒருவர் குஷ்பு என்பதால் மட்டுமே இன்று இந்த விவகாரம் பலரால் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது.

–இந்தியாவில் பால்வினை வியாதிகள் அதிகமாகப் பரவியிருக்கும் மாநிலங்களில் இரண்டாவது

இடத்தில் இருப்பது தமிழகம்..இந்த உண்மையை மறந்து குஷ்பு சொல்லிய ‘ பால்வினை வியாதிகள் வராமல் பெண் தன்னைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் ‘ என்பதில்தான் தமிழ்ப் பண்பாடு சீரழிக்கப்பட்டுவிட்டது!

–குப்பைத்தொட்டியில் குழந்தைகளை வீசும் தமிழ்ப்பெண்களின் அவல வாழ்க்கை, பெருகிவரும் அனாதைக்குழந்தைகள்.. பெண் இதிலிருந்தெல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.. கர்ப்பமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதில்தான் தமிழ்ப்பெண்களின் கற்பு கருக்கலைப்பு செய்யப்பட்டுவிட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்!

–தமிழ்த் திரைப்படங்களின் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள், ஆடல் காட்சிகளில் எவரையும் தலைகுனியச் செய்யும் நடன அசைவுகள், உள்ளாடை விளம்பரங்கள், ஏன் கதாநாயகியின் தொப்புளில் ஆம்லேட் போட்டு பம்பரம் விட்ட போது பறந்து போகாத தமிழ்ப் பெண்களின் மானம் இப்போது இதில் பறந்துவிட்டது.. !

–ஜெயலட்சமிகளும் செரினாக்களும் இருக்கும் மண்ணில் இருப்பதெல்லாம் ஜெயலட்சுமிகளும் செரினாக்களும் மட்டும்தானா ?

–மும்பையின் ஒரு கல்லூரி மாணவியை பட்டப்பகலில் காவல் நிலையத்தில் ஒரு காக்கிச்சட்டை வல்லாங்கு செய்துவிட்டது உண்மைதான். அதற்காகவே மும்பை மாணவிகள் அனைவரையும் மும்பை காவல்நிலையங்கள் வல்லாங்கு செய்வதாக யாரும் நினைப்பதில்லை. அப்படி நினைத்தால் அது அப்படி நினைப்பவனிடன் இருக்கின்ற மனவியாதியைத்தான் காட்டுமே தவிர இந்த ஒட்டு மொத்த சமுதாயத்தைக் காட்டுவதாக அமையாது.

இந்தியா டுடே..செப்டம்பர் 19 தலையங்கம் sex & the single woman- an exclusive survey இதழும்,

அவுட்லுக் செப்டம்பர் 26, women buy men for sex + nationwide survey on forbidden sex என்று இரண்டு பத்திரிகைகளும் மட்டமான போர்னோகிராஃபி புகைப்படங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ளன. நியாயமாகப் பார்த்தால் இந்தப் பத்திரிகைகளை அதன் புகைப்படங்களை எதிர்த்து இந்த பண்பாட்டு காவலர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எல்லாம் குரல் கொடுத்தால் அது சிந்திக்க வைத்துவிடும் பொதுஜனங்களை.

பெண்ணுக்கு 33% இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுக்காதவர்கள்-, விபச்சாரி என்று ஒரு பெண்ணைச் சொல்லும்போது பலவிபச்சாரன்களால்தான் ஒரு விபச்சாரி உருவாக்கப்படுகிறாள் என்பதை உணராதவர்கள்- எய்ட்ஸ் நோய் தமிழகத்தில் சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பது ஏன் என்ற பண்பாட்டு விழிப்புணர்வு இல்லாதவர்கள்-

இன்று குஷ்புவின் சொற்களில் தமிழ்ப் பெண்ணின் மானம் மரியாதை கற்பு கன்னித்தன்மை பறிபோய்விட்டதாக பதற்கிறார்கள்..!

கடவுள் பெண்களைப் பிறவியிலேயே விபச்சாரிகளாய்ப் படைத்துவிட்டார்.பெண்கள் எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய இருக்கவிடக்கூடாது. ஆண்களும் மறைவான இடமும் இருளும் இல்லாவிட்டால்தான் பெண்கள் பதிவிரதைகளாக இருக்கமுடியும் என்று அருந்ததியும் திரெளபதியும் சொல்லி தெய்வீகத்தன்மை நிருபீக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமூகத்து பெண்கள் இன்று குஷ்பு சொல்லிய கன்னிமைக்காவலில்தான் களங்கப்பட்டுவிட்டதாக போராட்டம் நடத்துகிறார்கள்!

திண்ணியத்தில் மலம் தின்னவைக்கப்பட்ட அவலத்திற்கு தலைகுனியாத மனிதநெறிக்காவலர்கள் குஷ்புவின் வார்த்தைகளில் தமிழ்ச் சமுதாயம் தலைகுனிந்து நிற்பதாகக் காட்டுவதும் அந்த மேடையில் தலித்துகளின் நம்பிக்கை நட்சத்திரமாக (இன்றும் நினைக்கப்படும்) இருக்கும் தொல்.திருமாவளவன் அவர்கள் நிற்பதும் பிர்ச்சனைகளைத் திசைத்திருப்பத்தான் பயன்படுமே தவிர உண்மையான போராட்டக்களத்தை உருவாக்க என்றுமே பயன்படாது.

பெண்ணின் விடுதலை, பெண்ணின் உரிமைகள், பெண்ணின் காதல், ஒழுக்கம்.. இவை எல்லாம் அரசியலாக்கப்படுவது ஒரு சமூகத்தை அதன் வளர்ச்சியை அழித்துவிடும்.

உண்மையான பிரச்சனைகளைக் கையிலெடுத்துக்கொண்டு போராட வேண்டிய காலக்கட்டத்தில் குஷ்பு குரலுக்கு எதிர்வினையாற்றி அதில் தங்களை மிகப்பெரிய-தமிழ்ச் சமூகத்தின் காவலர்களாக சிலர் காட்ட நினைப்பதும் அதற்கு தமிழகத்தின் பெரும்பான்மையான தமிழ்ப் பெண்கள் அமைப்புகள் துணை நிற்பதும் பெண்ணை அடிமைப்படுத்துமே தவிர பெண்ணின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் எவ்வகையிலும் உதவிடாது.

‘பெண்விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள் ‘

என்று தந்தை பெரியார் சொல்லியது மீண்டும் உண்மையாகிவிடும்.குஷ்பு பிரச்சனையின் விளைவாக மீண்டும் தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள் ? ‘ புரட்டிப்பார்த்தேன்.

நாம் செய்த புண்ணியம்.. தந்தை பெரியார் ஒர் ஆணாகப் பிறந்தார். அதனால்தான் இவ்வளவு துணிச்சலாக அவரால் தீவிரப் பெண்ணியம் பேச முடிந்தது. அவர் மட்டும் பெண்ணாக இருந்து இப்படி எல்லாம் பேசி இருந்தால்..தமிழ்நாடு வெங்காயமாகி இருக்கும்!!.

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation