தானம் ஸ்தானம் சமஸ்தானம்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

பொழுது படுதா இறக்கியிருக்கிறது. மலர்க்குவியல்போல வீதியில் தள்ளித் தள்ளி ஒளித்திவலைகள். தெருவிளக்குகள் குனிந்து ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. போவோர் வருவோர் ஒளிக்குளியல் கண்டு தாண்டிப் போவர். அவளுக்கு உறக்கம் வரவில்லை. அது நல்லதாயிற்று. முற்றிலும் இயற்கையின் ஆட்சி நடக்கின்ற, ஸ்ரீ அன்னையின் சமஸ்தானம் அது. மகா மெளனம். நடுவே வீதிவிளக்கொளியை அன்னையின் துாய சமாதி எனச் சொல்லலாமா ? மனப்புரவி உள்ளே புரண்டு ஆனந்தக் களி கொள்கிறது.

உலகம் அழகானதுதான். ஆனால்… சட்டென்று அதன் முகம் மாறிவிடுகிறது. ஒரு தத்தளிப்பு – மூச்சிறைப்பு திடாரென அவளைச் சுற்றி வளைக்கிறது. மூச்சு விடவே கூடவும் திணறிப் போகிறது. தலைக் கிறுகிறுப்பு. மயக்கம். வலிக் குடைவில் படுக்கையில் திண்டாடித் தவிக்கிறாள். நேரெதிரே ஸ்ரீ அன்னையின் புன்னகைப்படம். அவள் தன்னைப்போல அன்னையைப் பிரார்த்தனை செய்கிறாள். தாயே தயைசெய். கொடுக்கைத் துாக்கி என்னைக் கொத்த வரும் இந்த வேதனை வேளையில் இருந்து என்னை மீட்டு வீணையாய் என்னை மீட்டு.

இறுக்கிய கயிறு தளர்ந்தாற் போல ஆசுவாசம் கண்டபின் சிறிது நீர் அருந்த… இதோ இந்த இன்பமயமான கோளம் மீண்டும் கைப்பந்தாய் விளையாடக் கிடைக்கிறது. எவ்வளவு மாறிவிட்டேன் இந்நாட்களில்… பதின்பருவத்துப் பொலிவுகள் விலகி உடலே துவண்ட நாராகி விட்டது. பூவாய் இருந்தவள் நாராய்ப் போனாள். நிழலும் பூமியில் விழாத சிற்றுடம்பு. காலம் அவளைச் சுட்ட தங்கமாய் சம்மட்டியில் தட்டி நீட்டியிருக்கிறது.

இந்த இளம் வயதிலேயே சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டன. ரத்தம் சுத்தமாகாமல் இருவாரத்தில் ஒருமுறை என்ற அளவிலாவது போய் சுத்திகரித்து வர வேண்டியிருக்கிறது. உள்ளே சுற்றிவருகிற ரத்தத்தில் மாசு கலந்து ஆளை உள்ளேயே இருட்டி விடுகிறது. மாளாத சோர்வு. காற்றுக்கு மூச்சு திகைக்கிறது.

‘டயாலிசிஸ் ‘ முடித்து வந்த முதல் சில நாட்கள்…. உலகின் செளந்தர்யங்கள் அறியக் கிடைக்கின்றன. பாடங்களை வெகு உற்சாகமும் கவனமும் காட்டிப் படிக்க வாய்க்கிறது. ஸ்ரீ அன்னையின் புன்னகை வசீகரத்தை உணர முடிந்த நற்பொழுதுகள். ஆசி கண்ட கணங்கள். அன்னையின் பாதமலர் அவள். அவள் பெயரே அதுதான்- பாதமலர்.

வெகு காலம் குழந்தையே இல்லாமல், ஸ்ரீ அன்னை வளாகத்தில் கால் வைத்த கணம் உள்ளே சிலிர்ப்பு கண்டது அம்மாவுக்கு. புதுவைக்கு அப்பாவும் அம்மாவும் சென்றது தற்செயல் நிகழ்வுதான். மணக்குள விநாயகர் கோவில் எனச் சுற்றுலாக் குழுவுடன் இறங்கி வேடிக்கை கண்ட மனம். ஓய்வு நாட்களில் புதிய ஊர், புதிய மனிதர்கள் என வேடிக்கை பார்க்க வேட்கை கொண்டவள் அவள் தாய். சிறிய மனக்குறை அவளுக்கு… குழந்தை இல்லை. அப்பாவும் அம்மாவுமாய் இந்த வெளியுலாவலை விரும்பினார்கள். மணக்குள விநாயகரின் வண்ணக் கோவில். அவர்கள் சுற்றி வந்தார்கள். அப்போது உணராத அந்த சூட்சும உசுப்பல், அட ஆச்சரியம் அதுதான்… அன்னையின் சமாதிமுன் நிகழ்ந்ததே…

மலர்ப்படுகை. மகா திவ்ய மெளனம். மங்கள சோபனம். ஸ்ரீ அன்னை பூமி அது. மலரைச் சுற்றிவரும் தேனீக் கூட்டமாய் பக்த வளையம். அமைதிக்கு இத்தனை இதம், ஒத்தடத் தன்மை உண்டா ? கன்றுக்குட்டி உள்ளே செல்லமாய் முட்டுகிறது…. அடடா ஏன் விழி அழுகை பெருக்க வேண்டும். மேகப் பொட்டலம் உடைந்தது. மழை. தானே தன்னையே வேடிக்கை கண்ட விநோத கணம். மனசில் இருந்து குரல். விரல் நீட்டி எதையோ எட்டிப் பற்றிக் கொள்ள, பிடித்து தன்னோடு இணைத்துக் கொள்ள முயல்கிறது. பிரார்த்தனை செய்கிறதும் தன்னியல்பாய் வர வேணும் போலிருக்கிறது. விக்கலுடன் ஒரு மன்றாடல்… அதுவரை வந்த உலாவலின் உற்சாகத்தின் சுவடு கூட இல்லை இப்போது. /ஸ்ரீ அன்னையே, எனக்குக் குழந்தை வேண்டும்./ திடுக்கென தானே புறப்பட்ட துக்க விக்கல். கோரிக்கை.

ஆச்சரியங்களுக்கு அன்னை வளாகத்தில் பஞ்சமே இல்லை. பாதமலர் கருவானாள். உருவானாள் உள்ளே. அன்னையைப் பற்றிப் பேச்சு வந்தாலே அம்மா எப்படி உள்ளுருக்கலாய் உணர்கிறாள். அன்னையின் சந்நிதி… சக்திபீடம் அது. அது ஓர் ஆழ்ந்த நம்பிக்கை. அல்லாது அது தன்முகம் வெளிக்காட்டுவது இல்லை. மனசில் ஆழப் பதிவு கண்டபின் நித்ய ஸ்வரூபமாய் அன்னையை நீ உணர்வுடன் கலந்து அனுபவிக்க வாய்க்கிறது. வேண்டிய பொழுதில் அவள் உன் மனத் தடாகத்தில் நிலவென மிதப்பதை உணரக் கூடும் நீ. உலகின் கசடுகள் கசப்புகள் பின்தள்ளப் பட்டு மனம் உற்சாகத் துள்ளல் காணும் – டயாலிசிஸ் செய்தாப் போல!

ஸ்ரீ அன்னையின் திருவுருவப்படம். சதா புன்னகைக்கிற புதுப்பூப் பொலிவு. அந்தப் பார்வையின் இதமே தனி அல்லவா ? அதிகாலைப் பனிக்குளிரின் தென்றல் வருடல் தரும் பார்வைக் கனிவு. ஞானதேவதை இத்தனை எளிமையாய் இருக்க முடியுமா என்கிற மாளாத திகைப்பு எப்போதுமே இவளுக்கு உண்டு. ஸ்ரீ அரவிந்தர் கற்றுத் தந்த எளிமை. கருத்துக்களை விவாதக் களத்துக்குப் போல பகவான் எத்தனை இயல்பு நவிற்சியாய் அள்ளியள்ளித் தருகிறார். ஆங்கில வசீகரம்… பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கு நோபல் பரிசு வழங்குவதாகக் கூடப் பேசப்பட்டதை பாதமலர் அறிவாள். அவளுக்கு ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைச் சூட்சுமம் பிரம்மாண்டமாய் இருக்கிறது. திகட்டுகிற தித்திப்பு அது – என் வீச்சு இவ்வளவுதானா, என தனக்குள் சிறு ஏமாற்றம் கண்ட கணங்கள். சின்னப்பெண் தானே நான். காலம் இருக்கிறது. ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் துணை தருவர். நான் எட்டித் தொட முயல்வேன்…

இந்நாட்களில் உடல் நலம் சீராக இல்லாமல் சிரமம் அதிகமாகி யிருக்கிறது. திரும்பத் திரும்ப உடலை ‘டயாலிசிஸ் ‘ செய்வது இயற்கைக்கு முரணானது. விரைவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப் படுவது நல்லது. அம்மா அழுகிறாள். அப்பா இல்லை, அவர் இறந்து வருடங்கள் ஆகின்றன. சிறு சேமிப்பும், இந்த வீடும்… என அவரது கடமைகளைச் செலுத்தி விட்டாப் போல அப்பா இறந்து போனார். பாதமலர் இரக்கத்துடன் அம்மாவைப் பார்க்கிறாள். மெல்ல அவள் தலையை வருடித் தந்தாள். மனசில் சிறு வேடிக்கை – என் நோவுக்கு இவள் அழுகிறாள்… இவள் நோவுக்குத் திகைக்கிறாப் போல இவளை நான் சமாதானப் படுத்துகிறேன். ‘ ‘உலகம் அழகானது அம்மா. அதை அழுது வீணடித்தல் தகாது. நீதானே எனக்குச் சொல்லித் தந்தாய் ? ‘ ‘ அம்மா கண்ணைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள். சிறிது வெட்கத்துடன் தலையாட்டி அங்கீகரித்தாள்.

– வெளியே நிதி உதவி கிடைக்கிறதா பார்க்கலாம். சிறுநீரகம் யாராவது தர மனமுவந்தால் அதையும் பார்க்க வேண்டும்… நல்லது நடக்கும் என நம்புவோம். மருத்துவர் எழுந்து கொண்டு பாதமலரைக் கைகுலுக்கினார் – நல்வாழ்த்துக்கள் பெண்ணே.

ஸ்ரீ அன்னை இருக்கிறாள் நம்மோடு – என்றாள் பாதமலர்.

– புதுவை ஒருமுறை போய்வரலாம், என்றாள் அம்மா.

மனமுருக அழுதுபெருக அம்மா பிரார்த்தனை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவோ இவள் மனசு நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கிறது. உயிர்ப்பிச்சை கொடு, என்கிறாப்போலவோ, இதை எனக்குச் செய்து தா என்கிற வேண்டுகோளோ அன்னையிடம் கேட்க மனசே இல்லை. ஆனால் உள்ளே அடடா, அந்த நிலா வெளிச்சம். மகா சந்நிதானம் அது. திவ்ய மங்கள மெளனம். மனக்குதிரை மண்டியிட்டு அமருமா என்ன ? குதிரைக் கொட்டடி அது. லாயம். எத்தனை ஜீவன்கள். ஆனால் காற்றும் சிணுங்க மனங்கொள்ளாத அமைதி. மனசை உட்பக்கம் திருப்பி உற்று நோக்கச் சொல்கிற மெளனம். தெளிவு. பிரச்னைகளை உருச்சுருக்கி விளையாட்டு சாமானை சோதிக்கும் குழந்தை போல தன்னார்வமும் நம்பிக்கையுமான அவதானத்தை உட்கொணரும் சந்நிதி. அபூர்வமாக உன்னை நீ அங்கீகரிக்கிறாய் அங்கே. தெளிந்த நீராய் உட்கிடக்கையான ஆழத்தில், சிறிது துாரத்தில் போல உன் பிரச்னைகளை நீ அலசிப் பார்க்கிறாய்.

கண்ணைத் துடைத்தபடி பிரார்த்தனை முடித்துக்கொண்டு அம்மா அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள்.

பிரச்னைகள் நெருக்கும்போது, அட ஆமாம் வாழ்க்கையின் கவிதைகள் கிடைக்கின்றன. இதுநாள்வரை அவை மறைந்து கிடந்தன். ஒளிந்து கொண்டிருந்தன அவை. அதிகாலை விழிப்பு வந்த நாள் தொலைதுாரத்தில் இருந்து கேட்ட ஒற்றைக் குயில் கூவல். நேற்றுவரை அதை அவள் கேட்டிருந்தாள் இல்லை. சற்று நேரங் கழித்து வேறு மரத்தில் இருந்து அதற்கொரு பதில் கூவல்!… எனக்கு அதுபோல்ி கூவ குரல் இல்லையே!… அவளுக்குச் சிரிப்பு வந்தது.

உலகம் அழகானதுதான். சுய பிரச்னைகளையிட்டு அதை மதிப்பிடுவதும், அதன் பிரம்மாண்டத்தை உணரத் தவறுவதும் நியாயமாகாது.

/2/

செய்தித்தாள் சுவாரஸ்யமாயில்லை. வார்த்தைகள் கொண்டு அவை செய்திகளை சுவாரஸ்யமாக்க முயல்கின்றன. போலிக் கவர்ச்சி. பொய்யும் புரட்டும் என்கிறாப் போல, செய்தித்தாள்கள் செய்தியைப் புரட்டிச் சொல்கின்றன. வாசிக்கிறவர்களும் வெறுமே அவற்றைப் புரட்டுகிறார்கள்!

தொலைக்காட்சியோ செய்தித்தாளோ, பாதமலர் செய்திகளை மேய்கிற அளவில் அறிந்து கொள்ளவே பயன்படுகின்றன. பாடங்கள் சற்று அலுப்பூட்டுகையில் மாற்று என அவற்றை அவள் நாடுகிறாள். காலையில் இருந்து மாலைவரை தொலைக்காட்சியில் இளைஞர்களும் பெண்களும் உற்சாகமாய்த் துள்ளிக் கொண்டே யிருந்தார்கள். அத்தனை உற்சாகப் பட அவர்களில் விஷயமும் இல்லை. இந்த வேகத்தில் உடலை வேலை வாங்கினால் சுளுக்கிக் கொள்ளாதா ?

திடாரென ஒரு முகம் தொாலைக்காட்சியில்ி வந்தது. தீவிரவாதி ஒருவன் தப்பித்து மாறுவேடத்தில் ஊருக்குள் உலாவுவதாகவும், நிகழ்ச்சியில் இடைச்செய்தியாக அறிவித்தார்கள். அழகாகத்தான் இருந்தான் அவன். பேர்கூட அழகானதுதான் – சித்திரன். இலங்கைக்காரனோ தெரியாது… அவர்கள்தான் அழகழகான பெயர்களாய் வைக்கிறார்கள். வேட்டை வியூகத்தில் இருந்து வெளியேறி விட்டிருக்கிறான். தனிப்படை அவனைத் தேடி வருகிறது. விரிந்திருக்கிறது வலை. அவனை உயிரோடோ பிணமாகவோ பிடித்துத் தருகிறவர்களுக்கு பெரும் பணம் அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆ அவனை இன்று நான் பார்க்கப் போகிறேன், என திடாரென்று நினைத்துக் கொண்டாள் பாதமலர்.

நகரின் சுவாரஸ்யப் பேச்சாய் அவன் இருந்தான். சித்திரன். அவன் நல்லவன் என்றும் கேடுகாலி என்றும் தினுசான பேச்சுக்கள் கட்சிகட்டின. மாறு வேஷத்தில் நடமாடுகிறான். வேற்று நாட்டவன், ஆயினும் தப்பித்து இங்கே நடமாடுகிறான். அபாயமானவன். பல பெரும்-அரசியல் கொலைகளின் பின்னணிக்காரன்…

உறக்கம் வராத இரவுகளில் மனம் இறக்கை கட்டிக் கொள்கிறது. சமூக விரோதிகள் என முத்திரை குத்தப்பட்ட தீவிரவாதிகள் ஒரு காலமாற்றத்தில் தியாகிகளாகப் போற்றப்படுவதையும் பாதமலர் அறிவாள். பார்வையின் கோணங்கள் எதிர்த்திசைக்கு அந்தஸ்து தருகையில் அற்புதங்களும் ஆச்சரியங்களும் சம்பவிக்கின்றன.

தலையுசரத்தில் ஸ்ரீ அன்னை படம். புன்னகை செய்கிறாப் போல. நான் ஒண்ணும் சிறு பெண்ணல்ல. விவேகமானவள். தைரியசாலி… எனப் புன்னகைக்கிறாள் பாதமலர். பத்தாம் வகுப்புப் பெண் நான். உலகம் புரியாதவள் அல்ல… திடாரென அவள் அன்னையைப் பார்த்து ஒரு வேடிக்கை போல இப்படி வேண்டினாள் – நான் சித்திரனைப் பார்க்க வாய்க்குமா அன்னையே.

ஆயுததாரி. உலகம் அவனுக்கு பயப்படுகிறது. தற்கொலைப்படையாளி. மாறுவேஷத்தில் நடமாடுகிறான். உணவுக்கும் தண்ணீருக்குமாகவாவது எங்காவது அவன் ஒதுங்கித்தானே ஆக வேணும் ?

ஊரில் கதைகள் திரிய ஆரம்பித்தன. எதோ வீட்டில் தனிப்பெண்ணிடம் சாப்பாடு கேட்டு சாப்பிட்டுப் போனதாகவும், பத்தாயிரம் ரூபாய் அவளுக்கு நன்றியாகத் தந்ததாகவும், அதை அவள் போலிசில் ஒப்படைத்ததாகவும்…

நில் – என்றாள் அவள். பாதமலர்.

ஆச்சரியம். இந்நேரம் நீ விழித்திருக்கிறாய் – என்றான் சித்திரன்.

ஸ்ரீ அன்னை வளாகத்தில் ஆச்சரியங்கள் நிகழ்வது சாதாரணமே…

அன்னையா ? – கசியும் சிறு ஒளியில் அன்னை படத்தை அவன் பார்க்கிறான். யார் இவர்கள் ?

பாதமலர் புன்னகைத்தாள்.

சரி, அதிருக்கட்டும்… இரவு. பயமற்று விழித்திருக்கிறாய். நான் உன் வீட்டுக்கதவைப் பெயர்த்து நுழைந்தவன். எனினும் திகைக்காமல், என்னை எதிர்கொள்கிறாய். நான் யார் அறிவாயா ?

ம். நீ சித்திரன்தானே ?

ஆ, என அவன் வாயைப் பிளந்தான்.

தொலைக்காட்சியில் உன்னைப் பார்த்தேன்.

போலிசில் என்னைப் பற்றிய தகவல் தருவது நல்லதல்ல உனக்கு…. பார், என சித்திரன் சட்டையைத் துாக்கி தன் இடுப்பைக் காட்டினான். வெடி குண்டுகள். விநாடியில் இதை இயக்கி, நான் மரணமடைந்து விடுவேன். மட்டுமல்ல, என்னைச் சுற்றி பத்தடிக்கு கடுமையான பாதிப்பு இருக்கும். நீ பலியாவாய். அழகான பெண் நீ… வீணாய் இறந்து போகப் போகிறாய்.

சாக எனக்கு பயமில்லை. நீ தேடப்படுகிறாய். உன்னைக் கண்ட மாத்திரத்தில் நான் போலிசிடம் ஒப்படைக்க வேண்டும்… நீ வருவதை நான் அறிந்து கொண்டேன். தகவல் கொடுக்கப் பட்டுவிட்டது… என்பதைத் தெரிந்து கொள்.

பாதமலர் – இவ்வளவு துணிச்சல்காரியா நீ ?

அவள் அதிசயித்தாள். என் பெயர்… நீ எப்படி என்னை அறிவாய் ?

தொலைக்காட்சியில் நீ என்னை அறிந்து கொண்டாய். நான் உன்னை செய்தித்தாளில், விளம்பரத்தில் அறிந்தேன்…

ஓ, என்றாள். நான் சொன்னேனே, அன்னை வளாகத்தில் ஆச்சரியங்கள் சகஜம்.

வெளியே திபுதிபுவென போலிஸ்படை குவிகிறதை அவர்கள் உணர முடிந்தது.

ஐம் சாரி சித்திரன், என்கிறாள் பாதமலர்.

நான் பாட்டரியை இயக்கினால், ஒரே கணம்! நாம் இருவருமே உடல்சிதறிப் போவோம்.

நல்லது. நீ இயக்கலாம்… என்றாள் புன்னகையுடன். இனி தப்பித்தல் இயலாது உன்னால்.

அவன் அவளைப் பார்த்தான். எதோ யோசிக்கிறான்… தன்ி தோள்ப்பட்டைத் தொங்கலில் இருந்து சிறு குப்பியை எடுத்தான் அவன். அவளிடம் காட்டினான்…

உன் துணிச்சலை மதிக்கிறேன் பெண்ணே. சட்டென அந்த சயனைடை வாயில் ஊற்றிக் கொண்டான்.

பெண்ணே பிழைத்துப் போ. ஆமாம், உன்னைப் பிழைக்க வைக்கிறது என்னால் ஆகும் போலிருக்கிறது…. என் சிறுநீரகம் உனக்குப் பொருந்தினால் நல்லது… என்றான் புன்னகையுடன். அன்றியும் என் தலையின் விலை உனக்குக் கிடைக்கும்…. மேலும்…. என்றவன், மேலும் பேச முடியாமல் அப்படியே சரிந்தான். பெரும் அமளியாய்க் கிடந்தது வெளியே. போலிஸ்காரர்கள் திகிலும் பரபரப்பும் ஆயுத கவனமுமாய்… மெகா போனில் சித்திரனை வெளியே வந்து சரணடைந்து விடும்படி எச்சரிக்கை விடுத்தார்கள்.

தயக்கமில்லாமல் உள்ளே வாருங்கள். அவர்… சித்திரன்… இறந்து விட்டார்… பேச முடியவில்லை அவளால். அழுகை முந்திக் கொண்டது.

—-

storysankar@rediffmail.co

Series Navigation