தமிழ் சினிமாவில் சண்டியர்…

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

வரதன்


தமிழ் கலாச்சாரம் தனது பொழுது போக்கு மற்றும் கலாச்சார பதிவுகளுக்காக மூன்று முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது.

அவை, இயல், இசை மற்றும் நாடகம். இவைகளை ஊடகமாகக் கொள்ளலாம்.

இதில் இயலும் இசையும் காலப்போக்கில் நாடகம் எனும் பிரதானத்திற்குள் ஒரு தவிர்க்க முடியாத நிலைக்கு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

விஞ்ஞான வளர்ச்சியில் நாடகத்துறை பத்திரிக்கைத் தொடராகவும், ஒலி பெருக்கி பெட்டியாகவும் அரிதாரம் பூசிக் கொண்டது.

இறுதி வடிவம் எனச் சொல்லும் அளவிற்க்கு, தற்போது திரையுலகில் நாடகம் சங்கமாகி விட்டது.

அதனால் முத்தமிழ் என்பதை இனி, இயல், இசை, திரைப்படம் எனச் சொல்லலாம்.

உலகில் எந்த மொழி அல்லது கலாச்சாரத்திற்கும் இல்லாத அளவிற்கு தமிழ் திரையுலகிற்கு ஒரு குணாதிசியம் உண்டு.

அது, ஒரு இரு படங்களைத் தவிர பிற அனைத்துப் படங்களும், ஒரு கற்பனா வடிவத்தில் இருக்கும். அதில் வரும் மனிதர்களை தமிழ் சினிமாவில் மட்டுமேக் காணலாம். வாழ்க்கையில் பார்க்க முடியாது.

ஆனால் இந்தச் சூழலிலும் பல இயக்குனர்கள் போரடிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, தங்கர்பச்சான், பாலா, சேரன் போன்றார் அவர்களின் சினிமா வியாபார சுழலிலும் ‘சில ‘ நல்ல படங்களைத் தந்துள்ளார்கள்.

இவர்கள், வீடியோக்களில் முழுதுமாக கதைக் கருவையும் கதைக் களனையும் தேடாமல், தமிழ் நாட்டில் சக மனிதர்கள் வாழ்வில் தேடினார்கள்.

இவர்களில் போன தலைமுறையில் முழுதுமாக தங்களின் கதாநாயகப் பாத்திரத்தை பிரதிபலிக்கக் கூடியவராக, கமலஹாசனை அடையாளம் காட்டினார்கள்.

இந்த தலைமுறை இயக்குனர்களில் வரிசையில் கமலஹாசனும் தன்னை இணைத்துக் கொண்டதால், கமலஹாசனையும் ஒரு இயக்குனர் பார்வை கொண்டு நாம் பார்க்கலாம்.

அதுவும் போக, நடிகர்களில் தமிழ் சினிமாவில் நல்ல படமாகவும் அதே சமயம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெறவேண்டிய நிர்பந்தமும் கலந்து படங்கள் தரும் நடிகர் & இயக்குனராக அவர் தெரிகிறார்.

இது சர்க்கஸ் பண்ணுவது போல் இருக்கிறது. அந்தரத்து வித்தையில் கைத்தட்டல் நெஞ்சை மகிழச் செய்தாலும், பாதம் பூமியைத் தொடும் போது வயிறு பிரதானமாகி, பிறர் தானத்தின் வரவு பற்றி தேட வைக்கும். அது கிடைத்தால் தான் நாளைய வித்தை நடக்கப் போகும் நம்பிக்கையுடன் தூக்கம் வரும்.

கமல்ஹாசனின் கவனிக்கப்பட வேண்டிய படங்களில் ஒன்று, ‘தேவர்மகன் ‘ . ஒரு முப்பரிமான வடிவம் கொண்ட படம்.

சிவாஜிகணேசனின் நடிப்பின் ஆழத்திற்கு கிடைத்த இரண்டாவது முதல் மரியாதை.

தமிழ் சினிமாவில் மிகவும் அக்கறைகெட்டத் துறையாக வேலை செய்யப்பட்ட, சிகை மற்றும் மேனி அலங்காரத் துறை இந்தப் படத்தில் தான் நுணுக்கமாக கையாளப்பட்டது.

அடுத்துக் ‘கதைக்களன் ‘ பற்றிப் பார்ப்போம். மதுரை மாவட்டத்தை ஒட்டிய முன்னால் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.

இது வீரத்திற்கு அர்த்தமாக விளக்கிய ஒரு சாதிய மனிதர்கள் கால ஓட்டத்தில் எப்படி வீரம் அவர்களிடம் உருமாறி ‘வன்முறை ‘ மட்டும் மிச்சமாகி வெட்டிக் கொண்டு சாவது வீரமாக நினைத்து ஆராதனைச் செய்யப்பட்டதோ அவர்களின் கூட்டத்திற்கிடை ஒரு குடும்ப பங்காளிக்கிடை நடக்கும் சம்பவம்.

அப்புறம் அவர்களைச் சுற்றி பிற ஜாதிகாரர்கள் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு.

அதிலும் அந்த சாதிக்காரர்கள் தங்களின் வன்முறை குணத்தால் தங்களின் வாழ்வைத் தொலைத்து, நாசாமாகி போகிறார்கள் என்பதைக் காண்பிக்கும் படம்.

இதில் ஜாதி துதிப்பாடப் பட்டதாகத் தெரியவில்லை , சிலர் குற்றம் சொல்லும் அளவிற்கு.

இன்று அதே கமலஹாசன், பண்ணும் ‘சண்டியர் ‘ படம் சர்ச்சைக்குள்ளானது.

சண்டியர் ஒரு சாதியை ஆராதனைச் செய்யும் விஷயம் என்று படபிடிப்பு நின்று போக தற்போது உள் அரங்கில் படப்பிடிப்பு நடப்பதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.

சரி, சண்டியர் எனபது என்னக் குறீயீடு.

மதுரை மாவட்டத்தில், அவுத்து விட்டக் கோவில் காளையைப் போல் வாழும் சிலரின் வாழ்க்கை.

வீட்டிற்கு அடங்க மாட்டார்கள். தெருவில் எந்தப் பிரச்சனையானாலும், உள் டவுசருக்கு மேல் தூக்கிக் கட்டிய கைலி.. வேக வேகமாக நடக்கும் குணம், அப்புறம் பிரச்சனை நடக்கும் இடத்தை நோக்கி வரும் போதே.. ஒரு ஓங்கியா சத்துமுடன்..

கைலியை அவுத்து பின் மீண்டும் உள் டவுசர் தெரிய கட்டிக் கொண்டு, அந்த இடம் வரும் வரை இதையே மீண்டும் மீண்டும் செய்தவாறே விரசாக வருவார்கள்.

தைரியமானவர்கள்.

இவர்களின் தைரியத்தைக் கழித்தால் வருபவர்கள், ‘மெட்ராஸ் பிஸ்தாக்கள் ‘

மதுரைத் தெருக்களில் இன்றும் கொஞ்சம் முறைத்தால், என்ன சண்டியரோ எனக் கேட்பார்கள்.

ஆனால், ஜாதி சங்கம், ஜாதிக் கொடுமை போன்றவற்றில் ஈடுபடுபவர்களின் அடையாளமாக சண்டியன் என்ற சொல் வழக்கில் கிடையாது.

கொஞ்சம் பொறுப்பற்றத்தனம், அதிக ஜாலி, எல்லாருடனும் பழகும் அதே சமயம் முறைத்துக் கொள்ளும் குண இயல்பு உள்ளவர்கள். இந்த சண்டியர்கள்.

சண்டித்தனம் பண்ணுவதை அடங்கா திமிரும் ஜல்லிக்கட்டு காளைக்குச் சொல்லலாம். சண்டியர்களை இன்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பார்க்கலாம்.

இவர்கள் ஒரு ஜாதியின் அடையாளமாகவோ இல்லை ஜாதிக்கொடுமை புரிபவர்களாகவோ இருந்ததில்லை.

ஆனால் இந்தச் சொல்லே இன்று அரசியல்வாதி தலையீட்டில் ஒரு ஜாதிய சொல்லாக தோற்றம் தருகிறது.

நேற்று வரை, மறைந்த தலைவர்களுக்கு ஜாதி அடையாளம் புகுத்தப்பட்டது. காமராஜர் – நாடார்களின் குறியீடாகவும், ராஜாஜி பார்ப்பண அடையாளமாகவும், தான் சாகும் வரை பிள்ளை, ஆதிதிராவிடர், என பிறர் சமூகத்தை தன் அருகே வைத்த முத்துராமலிங்கத் தேவர், தேவர் ஜாதியின் ஒட்டு மொத்த குறீயிடாக மாற்றப்பட்டார். ஆதிக்க சக்தியால் அறிவு மெச்சப்பட்டு படிக்க உதவி செய்யப்பட்ட அம்பேத்கார் தலித்துகளின் குறியீடாகிப் போனர்.

இப்படி சாதித்த தனி மனிதர்கள் சாதி அடையாளத்தில் தொலைந்து போக, இன்று புதிய ஒரு பயமுறுத்தல். தமிழ் வார்தைகளுக்கும் ஜாதியக் குறியீடு.

இதோ, சண்டியரில் தொடங்குகிறது.

இந்தப் பிரச்சனையை எழுப்பும் அரசியல்வாதிக்கு ஒரு கேள்வி..

ஜாதிய வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டியதில் இரண்டாவது கருத்து யாருக்கும் கிடையாது. அப்படி கருத்திருப்பவன் வாழ யோக்கியதை இல்லாதவன்.

ஆனால், ஏன் மொழியின் வார்த்தை வடிவங்களுக்கு எதிர்ப்பு.

உண்மையில் எதிர்க்கப்பட வேண்டிய மொழி வடிவ மாற்றம், ‘ஆதி திராவிடர் ‘ என்ற சொற்றொடரை வழக்கொழித்தது.

ஆதிதிராவிடர் என்பதில் ஒரு சமுகத்தின், அந்த சமுகம் வாழும் மண் மீதான் உரிமையை பிரதிபலிப்பது. ஜீவதார நிலைப்பாட்டின் அடையாளம்.

தமிழ் சமுகம் தன்னை ‘திராவிடக்கலாச்சாரத்தின் மனிதர்கள் என்று சொல்லும் போது, ‘ஆதி திராவிடர் ‘ எனும் சொற்றோடர் அந்த சமூகத்தில் மூத்தோர் யார்.. ? அந்த மண்ணின் சொந்தக்காரர் யார்… ? எனும் உண்மையைச் சொல்லும் பத்திரம்.

1000 வருடங்கள் ஆனாலும், இந்தச் சொற்றோடர் ஒன்று போதும், திராவிட பாரம்பரியத்தின் ஆணிவேர் யார் எனச் சொல்ல…!!

ஆனால், அதைத் தொலைத்து, தலித் என புதுச் சொல்லை ஆதி திராவிடர்களுக்குச் சூட்டி அவர்களின் வரலாற்றுக் குறியீட்டைத்

தொலைத்தீர்கள்.

சார்ந்த சமுகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் அது. அதற்குப் போராடினால் ஒரு அர்த்தம் உண்டு.

மகேஷிற்கும் சுரேஷிற்கும் தமிழ் பெயர் தேடுவது விட்டு, முதலில் தலித் என்பதை ‘ஆதி திராவிடர் ‘ என நாமகரண் மீண்டும் சூட்டி, தமிழ்மண்ணின் மூத்தோர் , முதல் மரியாதைக்குப் பாத்திரமானவர்கள் என்பதை உலகிற்கு ஓங்கி அறிவித்து தோள் கொடுப்போம்.

அதை விடுத்து, இன்று, இல்லாத ஒரு குறியீட்டை சண்டியரையும் ஒரு ஜாதி அடையாளமாக ஆக்கினீர்கள்.

ஏன்.. ? இது.

சரி அந்தப் பெயரைத் தன் படத்திற்கு பயன் படுத்தும் கமலஹாசன் ஜாதிய அடையாளத்தில் நம்பிக்கையுள்ளவரா.. ?

– ஜாதிய அடையாளங்களைத் தொலைத்தவர்.

– பெரியாரை ஆராதிப்பவர்.

– சாமி கும்பிடாத ஒரு நாத்திகவாதி.

– காஞ்சி என்றால் எனக்கு ‘அண்ணா ‘ ஞாபகம் வரும் என்பவர்.

– ‘சண்டியர் ‘ படத்தில் ‘எல்லா ‘ ஜாதிக்காரர்களும் பணியாற்றுகிறார்கள்.

– முக்கியமான யாரும் அந்தப் படத்தில் ‘தேவர் ‘ இல்லை.

இன்னொன்று தன் சிந்தனையைத் தமிழகம் தாண்டி வைப்பவர். நேற்றைய வாழ்க்கையை கனவாய் மறந்து நாளைய வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் எனத் துடிப்புள்ளவர்.

சினிமாவில் ஞானக்கூத்தனையும், தெரு நாடகம் போடுபவர்களையும் கதை ஆலோசனையில் கலந்து கொள்ளச்சொல்பவர்.

இவரை உற்சாகப்படுத்துவது நல்லது. தமிழ் சினிமா ஒரு படி மேல் ஏறும்

அதே சமயம் அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக ஆராதனை செய்தால் யாரும் விடப்போவதில்லை.

ஆனால், கற்பனை கொண்டு இடைஞ்சல் செய்வது எந்த பயனும் தராது.

காத்திருப்போம் சண்டியர் வரும் வரை. பின் உண்மை அறிவோம்.

சமுகத்தின் மேல் அரசியல்வாதிகளின் அக்கறையும் கலைஞனின் உண்மை நிலையும் வெளிச்சமாகும்.

—————

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்