தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


“தேசியம்,தேச இறைமையோடு தொடர்புடையது.இது திடமான முடிந்த முடிவுகளோடு இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும்.இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம் முற்போக்காகவும்,பிற்போக்காகவும் இருக்கிறது.தேசிய இறைமையின்றிப் பரந்துபட்ட மக்கள் வாழ்வையும,; அவர்களது பண்பாட்டுக் கருவ+லங்களையும் காப்பாற்ற முடியாது.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அதன் பொருண்மிய வாழ்வுக்கும் ஒரு சவாலாகும்.இதைப் புரட்சிகர அரசியலால் மட்டுமே எட்ட முடியும்.இது மட்டுமே தேசியத்தை முற்போக்காகக் கட்டமைக்கும்.மற்றெல்லாச் சூத்திரங்களும் மக்களைக் காவு கொள்ளும் குறுந் தேசிய வெறியாக மாறியே தீரும்!”

திரு.இராம.கி அவர்கள்தம் கட்டுரை ஒருபக்க உண்மையைப் பேசுகிறது.தாய் மொழிக் கல்வியின் அவசியமும்.அதுசார்ந்து கற்றலும் மிக மிக அவசியமானதுதாம்.ஒரு குழந்தையின் நினைவிலி மனதானது தாய்மொழியின் கற்கை நெறிகளுக்கமைய தீரத்துடன் கிரகிக்கும் ஆற்றலைப் பெறுவதை நாம் அறிவதற்கு எந்த வெளியுலகப் பண்டிதர்களையும் தேடி அலையத் தேவையில்லை.இதையறிவதற்கு நமது முன்னோர்களின் செழுமைமிக்கப் படைப்புகளையும்,இன்றைய நமது படைப்புகளையும் சீர்தூக்கி அணுகும்போதே இன்றெமது ஆற்றல்களை நாம் எங்ஙனம் இழந்துள்ளோமெனப் பார்க்க முடியும்.

கல்வி என்றைக்கும் அதிகாரத்தின் பாதுகாப்பு அங்கமாக இருந்து வருகிறது.அது இந்தப் புவிப்பரப்பின் எந்தப் பகுதியிலும் இதே நோக்கோடுதாம் இயங்கி வருகிறது.பண்டையக் காலமானாலுஞ் சரி அல்லது இன்றைய நவீனக் காலமானாலுஞ் சரி அதன் உள்ளடக்க நோக்கத்தில் எந்த மாற்றமும் கிடையாது.

இன்றையக் கல்வியானது சமூகத்தில் மனிதர்களின் நோக்கு நிலையிலிருந்து தீர்மானிப்பதாக எவரும் கற்பனையே செய்ய முடியாது.கல்வியென்பது இந்தவுலகத்தின் பொருளாதாரத்தின் தேவைகளுக்கேற்ப தகவமைத்து வழங்கப்படுகிற அன்றைய- இன்றைய நிலையானது மிகவும் கயமைத்தனமானது.இது மானுட வளர்ச்சிப் போக்குக்கமையத் தீர்மனிப்பதற்கேற்றவாறு தீர்மானிக்காது பொருளாதார உறவுகளுக்கேற்றபடி தீர்மானிக்கப்பட்டு,அதன் இருப்புக்கேற்ற கல்வியாகப் பரிமாறப்படுகிறது.இது மனித சமுதாயத்தின் அனைத்துப் பரப்புக்கும் வழங்கப்பட்டு மக்கள் சமுதாயத்தை அறிவுடைய நிலைக்கு உயர்த்துவதில்லை.இந்தக் கல்வியைத் தகவமைத்துக் கட்டிக்காப்பது எந்த நலன் என்பதைப் பார்க்காது நாம் அதன் சமூகவிரோதப் பரப்பை அறியமுடியாது.இன்றைய இந்த வர்த்தகச் சமுதாயமானது மிகவும் பின்தங்கிய சமூகப் பாத்திரத்தை வகிக்கிறது.இது இயற்கை விஞ்ஞானத்துக்குக் கொடுக்கும் பாரிய முன்னுரிமையைச் சமூகஞ் சார்ந்த-மக்கள் நலன் சார்ந்த சமூக விஞ்ஞானத்துக்கு வழங்குவதில்லை.மாறாக மன்னர்களின்,போர் குற்றவாளிகளின் வீர தீரக் கடந்தகாலக் கண்றாவிகளைச் சமூக விஞ்ஞானமாகக் காட்டிக் கதைவிடும் தரணத்தில் மக்கள் நலன் சார்ந்து புகட்டும் கல்வி இல்லாது போகிறது.

இந்தச் சந்தர்ப்பமானது மிகவும் திட்டமிட்ட அரசியல் பொருளியல் நலன்களின் தீர்மானகரமான திட்டமிடல்களோடு பின்னிப் பிணைந்து தோற்றுவிக்கப்படுகிறது.இத்தகைய தரணத்தில் நாம் எமது கல்விக் கொள்கை,அதன்மீது ஆதிக்கஞ் செய்யும் நலன்கள் என்பது பற்றிய சரியான மதிப்பீட்டை முன்வைத்தே கல்வி குறித்த மாயைகளை உடைத்தெறிந்து புதியவற்றை மக்கள் சமுதாயத்தின் நலன் நோக்கில் பேச முடியும்.

உலகத்தின் எந்தப் பாகத்திலும் கல்வியானது தனித்துவமான ஒரு செயற்பாடாக எதன்பொருட்டும் கட்டுப்படுத்தப்படாது, முற்றிலும் மக்கள் நலன்சார்ந்து இயங்கவில்லை.வருங்காலத்தில் “தாம் வந்தடையும்” நிலைமைகளைக் குறிவைத்தே கல்வி வழங்கப்படுகிறது.இன்றைய வர்த்தகத்தின் அதீதத் தேவைகளை நிறைவு செய்வதற்கான கல்வியை மட்டும் வழங்க முற்படும் சமூக வளர்ப்பு முறைகள் அந்தச் சமுதாயத்தின் ஆணிவேரான பொருளாதாரத்தின்மீது எந்தப் பங்கமும் வராத திட்டமிடல்களோடு இந்த உலகை எதிர்கொள்ள முனைகிறது.

இது எவரால்-ஏன் ,எதன்பொருட்டு இங்ஙனம் ஊக்குவிக்கப் படுகிறது?

இந்தக் கேள்விக்குச் சுருங்கக் கூறின்:இது முதலாளியக் கல்வி.அந்த வகையில் முதலாளியத்தின் நலன்களைப் பேணும் வர்க்க நலனே அதைத் தீர்மானிக்கிறது,தகவமைக்கிறது,கட்டிக்காக்கிறது.ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான கல்விக் கொள்கைகள் இருப்பினும்,அதன் உள்ளடக்கத்திலும்,எதிர்பார்ப்பிலும் மாற்றமில்லை.எனவே இதைத் தீர்மானிப்பவர்கள் முதலாளிகள்!-ஆளும் வர்க்கம்.

இங்கே ஒழுங்கமைந்தவொரு வர்த்தகம் தேசம் கடந்து நடைபெறுகிறது.அது கடந்த காலத்தைப் போன்று தேசிய எல்லைகளுக்குள் தமது நலன்களை,இலாபங்களைக் கனவு காணுவதில்லை.இன்றைய வர்த்தகத்தில் கல்வியின் பாங்கு மிகவும் முக்கியமானது.இது தேசம் கடந்த வர்த்தகத்தின் மிகையான தேவைகளைப் ப+ர்த்தி செய்வதற்கேற்றவாறு தீர்மானிகப்பட்டு- மக்கள் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்களுக்காவே திட்டமிடப்பட்டு, அவர்களை முதன்மைப்படுத்தி படைக்கப்படுகிறது.இந்தக் கல்வி எல்லோருக்குமான தனிச் சிறப்பான சட்ட திட்டங்களை வெறும் சட்டவாதத்துக்குள் மட்டுமே நிலைநிறுத்தி வைத்திருக்கிறது.நடைமுறையில் அது மிகவும் ஒடுக்குமுறையானது.அது உழைப்பவர்களுக்கு எட்டாக் கனியாகப்பட்டு மேட்டுக் குடிகளின் தனிச் சொத்துடமையாகக் காப்பாற்றப்படுகிறது.வளர்ச்சியடைந்த மக்கள் சமுதாயத்தின் இன்றைய நவீனத்துக்குப் பின்பான காலக்கட்டமானது புவிப்பரப்பில் பின்தங்கிய மக்கள் சமுதாயத்தை வெறும் பொருள்சார்ந்த உறவுகளோடு மட்டுமே இனம் காணுகிறது.இந்த இனம் காணலில் நம்மை அவர்களது ஜந்திரத்தின் ஒரு உறுப்பாகவும,; எந்த நேரத்திலும் இந்த உறுப்பைக் கழட்டி வீசமுடியுமெனும் மனப் பாங்கோடுதாம் சகல கல்விக் கொள்கைகளும் நமது சமுதாயத்தை வந்தடைகிறது.நமக்காக முன் மொழியப்படும் இன்றைய கல்விக் கற்கை நெறிகளைத் தீர்மானிப்பவர்களே சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும்தாம்.

இவர்களிடமிருந்து உள்வாங்கப்படும் நமது தேசத்தின் கல்விக் கொள்கைகள் மக்கள் சமுதாயத்தின் நலன் நோக்கில் எந்தச் சந்தர்ப்பத்திலும் திட்டமிடப்படமாட்டாது.இது அராஜகமானவொரு சமூக விரோதப் போக்காகும்.இந்தச் சமூக விரோதிகளின் மடியில் கிடந்துகொண்டு அதை(கல்விக் கொள்கை-மக்களுக்கும் கல்விக்குமுள்ள எதிர்பார்ப்பை) மாற்றிவிடத் துடிக்கும் நமது கல்வியாளர்களால் எப்போதும் ஆரோக்கியமான கல்வியை மக்கள் நலனின்பொருட்டுத் திடமாக வலியுறுத்த முடியாது.

பாடசாலைகள்,பேராடும் பல்கலைக்கழகங்கள் யாவும் இந்தவுலகத்தின் அதிகார வர்க்கத்தின்-ஆளும் வர்க்த்தின் கருத்தியல் தளமாகும்.அது தான் சார்ந்து இயங்கும் சமூகப் பாத்திரத்தை முதன்மைப்படுத்தியே அனைத்து வழங்களையும் குவிக்கிறது.இங்கே நடைபெறும் பேரதிர்ச்சியான சமூக அழிப்பு வெறும் போராக நடைபெறுவதில்லை.அது மாறாக மக்கள் மனங்களைக் காயடிப்பதாக வீரியத்தோடு கருத்தியல் யுத்தமாக நடை பெறுகிறது.

உலகத்தின் இன்றைய அதீத வர்த்தகத் தொடர் விருப்புறுதியானது ஒழுங்கமைந்தவொரு கலாச்சாரத் திணிப்பை வற்புறுத்துகிறது.இது நுகர்வுச் சந்தையின் அதீத விருப்புக்கும், வாங்கும் திறனுக்கும் ஏற்றவாறு கல்வியைத் தீர்மானிக்கிறது.இந்த நோக்கோடு மாறிவரும் வர்த்தகச் சூழலானது ஒரு மக்கள் கூட்டத்தை எந்த முரண்பாடுகளுமற்றவொரு பாரிய பண்பாட்டொருமை(நுகர்வுக் கலாச்சாரம்)யோடுகூடிய திசைவழி நோக்கி உந்தித் தள்ளுகிறது.அதற்கேற்றவாறு ஒரு மொழி வழிப்பட்ட கல்வியையும்,அதுசார்ந்த அகப் புறப் பண்பாட்டுருவாக்கத்தையும் குறிப்பட்ட முறைமைகளுக்கமைய உருவாக்கிவிட்டுள்ளது.

எல்லோருக்கும் கல்வியை-வளர்ச்சியை பகிர்ந்துகொள்ள முடியாதவொரு மனித ஆற்றலானது வெறும் பொருள் சார்ந்தவுலகோடு தன்னைக் காட்டிப்போடும் இன்றைய நிலையில், எந்த இனமும் தமது பாரம்பரிய மொழியையோ அல்லது பண்பாட்டு விழுமியங்களையோ அல்லது ஒரு நாடு தனது தேசிய அலகுகளையோ காப்பாற்றிவிட முடியாது, திணறுகிற இன்றைய அவமானமிக்க உலக அரசியலில் நாம் இதை இனம் கண்டு போராடுவதற்கேற்ற மாற்றீடாக எதை முன்னிறுத்துகிறோம்?

வெறும் மேம்போக்கான மனவிருப்பு கல்விக் கொள்கைகளை மாற்றிட முடியாது.இங்கே திடமான தேச,பொருளாதார,மக்கள் நோக்கு நிலைகள் புரட்சிகரமான முறையில் உருவாக வேண்டும்.அது முற்றிலும் மனித சமுதாயத்தின்-குறிப்பிட்ட இனங்களின் பாரம்பரிய மொழி,பண்பாட்டு வாழ்வோடு பின்னிப்பிணைந்ததாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு மக்கள் இனங்களும் தமது நலன்களை வெறும் பொருளாதார நலன்களுக்கமையத் திட்டமிடாது முழுமொத்த மக்களுக்குமான நலன்களைத் திடமாக மதித்துச் செயற்படுவதற்கேற்ற போராட்டமும் அதிகார மாற்றமும் அவசியமானது.அநுகூலமானவொரு சூழல் இல்லாதபோது அதைத்தேடிச் சூழ்நிலைகளை உருவாக்கும் போராட்ட யுத்திகள் இன்றிக் கல்வியையோ அல்லது மற்றெந்த உரிமைகளையோ மக்கள் நலன் சார்ந்த நோக்கில் நம்மால் படைக்க முடியாது.

தாய்மொழிக் கல்வியின் இன்றைய குழப்பகரமான பாத்திரம் தடீரெனத் தோற்றம் பெற்றதில்லை.இது திட்டமிட்ட அரசியலின் விளைவு.இதை நாம் பற்பல சந்தர்பங்களின் இனம்கண்டபோதும் “மேட்டுக்குடி மனதான நமது கல்விப் பெருந்தகைக் காரூண்யம்” இதை எதிர்பதற்கு வக்கற்று,வசதியுள்ளவனுக்குக் கல்வியென வாய் கிழியக் கத்துகிறது.இங்கே எந்தத் தனிநபர் முன்னெடுப்பும் இதைத் தோற்கடிக்க முடியாது.நாம் மக்கள் நலனின் அடிப்படையில் திரட்சியுற்றுத் திடமானவொரு போராட்ட இலக்கை முன்வைத்துப் போராடாமல் வெறும் திராவிடப் பாரம்பரியத்தின் போராட்ட அணுகுமுறையால் தமிழையோ அல்லது அது சார்ந்த வாழ்வையோ காத்துவிட முடியாது.அல்லது “இப்படிப் போய்விட்டார்களே மக்கள்!”என்று ஆதங்கப்பட்டு மக்கள் மீது குறை காண்பதால் ஆவது ஒரு மண்ணுமில்லை.

மக்கள் எப்போதும் தமது வயிற்றுப்பாட்டுக்கே முன்னுரிமை வழங்குவார்கள்.இதை எந்தப் பேய் சாத்தியப்படுத்தினாலும் அந்தப் பக்கம் மக்கள் போவார்கள்.இதை எம்.ஜீ.ஆர். அரசியல் வெற்றியில் நாம் மிகுதியாக இனம் காணலாம்.ஏன் இன்றைய கருணாநிதி அவர்களின் வெற்றியிலும் “அரிசி அரசியலே”வெற்றி பெற்றது என்பதை அவரது பழுத்த சாணக்கியத்திலும்,அவர் ஆற்றும் திடீர்ச் செயற்பாடுகளிலும் நாம் மாசறுவின்றியுணரமுடியும்.

தொடர்ந்து எல்லையில்லாது இயங்கும் நிதி மூலதனத்தில், தேசங்களின் இறைமையே இல்லாது போனபின் அந்தந்தத் தேசங்களின் தேசிய அலகுகள்(தேசயிறமை,பண்பாடு,வாழ்வியல் மதிப்பீடுகள்,மொழி,ஆத்மீகக் கட்டுமானங்கள்,கல்வியெனும் இன்னபிற…) மட்டும் எங்ஙனம் உயிர் வாழ முடியும்?

தமிழ் இனி மெல்லச் சாகும்!-அது சார்ந்த எந்த வாழ்வியல் மதிப்பீடும் நீண்ட ஆயுளோடு நிலைத்திருக்க முடியாது.

“மம்மி,டாடி”க் குஞ்சுகளும்”தாயே-ஐயா”பிச்சைக் குஞ்சுகளும் ஒத்த கயிற்றால் கட்டுண்டு கிடப்பது இந்த சர்வதேசிய வர்த்தக மொழியான ஆங்கிலத்தில்தாம்.இதுதாம் வர்த்தகச் சமுதாயத்தின் இன்றைய விய+கத்துக்குக் கிடைத்த பாரிய வெற்றி.இது திடீர் வெற்றியல்ல.அமெரிக்காவின் திட்டமிட்ட வர்த்தகக் கலாச்சாரப் போராட்டத்தின் நெடுநாளைய முன்னெடுப்பின் வெற்றியாகும்.கொலிவ+ட்டின் திடமான காய் நகர்த்தல் இந்த வெற்றியைக் கனிய வைத்தது,இது முதலாளியத்தில் மிக முன்னேறிய கருத்தியல் தளங்களில் ஒன்றாகும்.

நாம் வாழும் சமுதாய நிலைமைகளை விளங்குவது மட்டுமல்ல அதை மாற்றியமைக்கும் திட்டத்தை வலியுறுத்திக் கொண்டேதாம் இத்தகைய நிலைமைகளை நாம் பேசமுடியும்.எமது எதிர்கால இருப்பே இந்த வகைப் போராட்டவுணர்வோடுதாம் சாத்தியமாகும்.இங்கே மொழியையும் அது சார்ந்த பண்பாட்டையும் புரட்சிகரமான அணுகுமுறைகளோடு பொருத்தும்போது மட்டும்தாம் நாம் காத்துவிட முடியும்.இதற்காக நாம் பற்பல நடைமுறைகளைத் திட்டமிட வேண்டும்.இதை ஈழத்தில் நாம் மெலிதாக இனம் காணமுடியும்(புலிகளின் வரலாற்றுத் திரிப்புகளை நாம் பேசவில்லை).எனினும் அந்த மண்ணில்கூட ஆளும் வர்க்கம் புரட்சிகரத் தன்மையற்று, வர்த்தகச் சமுதாயத்தை முறியடிப்பதில் நோக்கற்று, அதனோடு சமரசஞ் செய்து அதனோடு ஐக்கியமாகும் நிலையில்… இத்தகைய சிறிய முற்போக்கான நடைமுறைகள்கூட இறுதியில் தோல்வியைத் தழுவும்.தமிழ் வழி வாழ்வு மெல்லப் பொருட்காட்சிச் சாலைக்குப் போய்க் கொண்டு இருக்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.07.2006

Series Navigation