தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு (22.01.1926 – 01.04.2007)

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

மு.இளங்கோவன்


தமிழ்நூற்கடல் என அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்ட பண்டித, வித்துவான் தி.வே. கோபாலையர் அவர்கள் உடல்நலம் குறைவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறுநீரகம் செயலற்றதாலும், நெஞ்சடைப்பாலும் உயிர் மீளமுடியாமல் 2007 ஏப்ரல் முதல் நாளன்று இயற்கை எய்தினார். திருச்சிராப்பள்ளி திருவரங்கத்தில் உள்ள அவர் தம் மகளார் இல்லத்தில் அனைவரின் இறுதி வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்த உடல், நல்லோர்களின் வணக்கத்திற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் பணி புரிந்த புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தினரும், தமிழறிஞர்களும், சமயத்துறை சார்ந்த அறிஞர் பெருமக்களும் கையற்றுக் கலங்கித் தம் இறுதி வணக்கத்தைச் செய்த வண்ணம் உள்ளனர். தி.வே. கோபாலையரின் நினைவைப் போற்றும் வண்ணம் பல்வேறு நினைவுக் கூட்டங்கள் பல ஊர்களில் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
புதுவை பிரெஞ்சு நிறுவனத்தின் ஆசியவியல் பள்ளியில் 04-04-2007 அறிவன் (புதன்) மாலை 4.00 மணிக்கு ஆசியவியல் பள்ளியின் தமிழ்ப்பிரிவுத் தலைவர் இவா வில்டன் முன்னிலையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் விசயவேணுகோபால் தி.வே. கோபாலையரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். பின்பு கோபாலையருடன் பணிபுரிந்த, பழகிய அன்பர்கள் தி.வே. கோபாலையரின் படத்திற்கு மலர் வணக்கம் செய்து நினைவுரை ஆற்றினர். திரு. வரததேசிகன் கோபாலையரின் பெருமைகளை எடுத்துச் சொன்னார். கோபாலையர் படிக்கத் தொடங்கினால் வேறு எதனையும் நினைவில் கொள்ள மாட்டார் எனவும் தான் படித்ததை, கற்றதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கொண்டவர் எனவும் கூறினார். மேலும் தமிழில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்கும் தலைமைப் புலவராகக் கோபாலையர் விளங்கியதையும் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எடுத்துரைக்கும் ஆற்றலையும் நினைவு கூர்ந்தார்.
தி.வே. கோபாலையரின் நூல்களை (இலக்கணக் களஞ்சியங்களை) செம்பதிப்பாக வெளிக்கொணர்ந்த தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகன் அவர்கள் தமக்குக் கோபாலையருடன் அமைந்த தொடர்புகளை நினைவு கூர்ந்தார். பாவலர் செவ்வேள், பாவலர் மணி சித்தன், பேராசிரியர் அ. அறிவுநம்பி, பேராசிரியர் ஆரோக்கியநாதன், முனைவர் இரா. திருமுருகனார் முதலானவர்கள் கோபாலையரின் பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தினர். புதுச்சேரியில் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும், புதுவை நகரத் தமிழறிஞர்களும், தி.வே. கோபாலையருடன் பணிபுரிந்தவர்களும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
தி.வே. கோபாலையர் வாழ்க்கைக் குறிப்பு
தி.வே. கோபாலையர் 22.01.1926இல் பிறந்தவர் பெற்றோர் வேங்கடராமஐயர், இலக்குமி அம்மாள். தம்பியர் நால்வர். தங்கையர் இருவர். கோபாலையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. பள்ளியிறுதி வகுப்பினை கோபாலையர் 1940இல் நிறைவு செய்தார். 1945இல் தமிழ் வித்துவான் தேர்வில் தேறி முதல் தகுதியாக ஆயிரம் உரூபா பரிசு பெற்றார். 1951இல் பி.ஓ.எல். பட்டம் பெற்று இலாசரசு பதக்கம் பெற்றவர். 1953இல் பண்டிதம் தேறி முதல் தகுதியாக 100 உருபா பரிசு பெற்றவர்.
பி.ஓ.எல். (ஆனர்சு) 1958இல் முதல் தகுதி பெற்று அரங்கையா செட்டியார் பரிசைப் பெற்றவர்.
தி.வே. கோபாலையர் அவர்கள் 15 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் (சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் கோபாலையரிடம் உயர்நிலைப்பள்ளியில் கற்றவர்)
15 ஆண்டுகள் தமிழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரிந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இவர் பணிபுரிந்த போது மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர் (பேராசிரியர் தா.ம. வெள்ளை வாரணம், முனைவர் கு. சுந்தரமூர்த்தி உள்ளிட்டவர்கள்). 1979 முதல் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு கலை நிறுவனத்தில் தம் ஆய்வுப்பணியைத் தொடங்கி இறுதிக் காலம் வரை மிகச்சிறப்பாகச் செய்தவர். அவர்தம் பணி காலத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் பலர் வந்து இவரிடம் தமிழ் கற்றனர். அவ்வாறு கற்ற மாணவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை வேறு மொழிகளுக்கு மொழி பெயர்த்த போது தி.வே. கோபாலையர் பெரிதும் உதவியவர்.
தி.வே. கோபாலையர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்ததுடன் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். பல ஊர்களில் தமிழ் நூல்களைச் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அறிமுகம் செய்தவர். பல இதழ்களில், மலர்களில் ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தவர். பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தம் ஆழ்ந்த புலமையையும் நினைவாற்றலையும் வெளிப்படுத்திக் கற்றவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியவர். தி.வே. கோபாலையரின் நினைவாற்றல் உலகம் அறிந்த ஒன்றாகும். இவர்தம் மனத்தில் தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் என அனைத்தும் எந்த நேரமும் எடுத்துப் பயன்படுத்தும் வண்ணம் பதிந்து இருந்தன. மூல நூல்கள் மட்டுமன்றி உரைகளையும் மனப்பாடமாகச் சொல்லும் இயல்புடையவர். தாம் கற்ற நூல்களின் ஆசிரியர்களையும் உரையாசிரியர்களையும் மிக உயர்வாகப் போற்றி மதிக்கும் இயல்புடையவர். தி.வே.கோபாலையர் எளிமையான தோற்றம் கொண்டவர். அடக்கமாக வாழ்வு வாழ்ந்தவர். இறுதிக் காலம் வரை இவர்தம் படிப்புத் தொடர்ந்தவண்ணம் இருந்தது. தி.வே. கோபாலையரின் எழுத்து, பேச்சு, ஆய்வு இவை யாவும் தமிழின் வளர்ச்சி நோக்கி அமைந்தது. தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், பிரெஞ்சு மொழிகளை நன்கு அறிந்தவர். இவர் மிகச்சிறந்த பதிப்பாளர் என்பது போல உரைவரையும் ஆற்றலையும் பெற்றிருந்தார். தமிழக அரசும் புதுவை அரசும் இந்திய அரசும் தி.வே. கோபாலையரை நினைவு கூரத்தக்க வண்ணம் நினைவுச்சின்னங்களை ஏற்படுத்த வேண்டும். இவர்தம் நினைவாற்றலைக் கண்டு மாந்தக் கணினி எனவும் இவர்தம் அறிவுச் செழுமையைக் கண்டு “அறிவுக் குறுந்தகடு’ எனவும் அறிஞர்கள் போற்றுவர்.
கோபாலையரின் மிகச்சிறந்த நூல்கள் சில :
1. இலக்கண விளக்கம் : எழுத்ததிகாரம் 1970
2. இலக்கண விளக்கம் : சொல்லதிகாரம் 1971
இலக்கண விளக்கம் : பொருளதிகாரம்
3, 4 அகத்திணையியல் – 2 தொகுதி 1972
5. புறத்திணையியல் 1972
6. அணியியல் 1973
7. செய்யுளியல் 1974
8. பாட்டியல் 1974
9. இலக்கணக் கொத்து உரை 1973
10. பிரயோக விவேக உரை 1973
11. திருஞானசம்பந்தர் தேவாரம்
சொற்பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1984
12. திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் சொற் பிரிப்பு,
நிறுத்தக் குறிகளுடன் செம்பதிப்பு 1985
13. தேவார ஆய்வுத் துணை – தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் 1991
14. வீரசோழிய உரை – விரிவான விளக்கங்களுடன் 2005
15. தமிழ் இலக்கணத்தின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐம் பகுப்புக்களிலுள்ள இலக்கண மரபுச் சொற்களுக்குத் தொல்காப்பியம் முதல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விருத்தப்பாவியல் இறுதியான வழக்கத்தில் உள்ள இலக்கண நூல்களையும் அவற்றின் உரைகள் பலவற்றையும் உட்கொண்டு விரிவான மேற்கோள் எடுத்துக்காட்டுக்களுடன் தொகுக்கப்பட்ட தமிழ் இலக்கண மரபுச் சொல் அகர வரிசை 2006
16. திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் – 2006
17. மாறன் அலங்காரம் – பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் 2006
18. மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் – புதிதாக எழுதப்பட்ட விளக்கங்களுடன் 2006
19. இலைமறை கனிகள் – இலக்கணக் கட்டுரைகள் – தெளி தமிழில் வெளிவந்தவை 2006
எழுதிய சிறு நூல்கள் – அச்சேறியவை :
1. தொல்காப்பியச் சேனாவரையம் – வினா விடை விளக்கம்
2. கம்பராமாயணத்தில் முனிவர்கள் – 1994
3. கம்பராமாயணத்தில் தம்பிமார்கள் – 2 தொகுதி 1995, 1996
4. கம்பராமாயத்தில் தலைமைப் பாத்திரங்கள் – 1998
5. சீவக சிந்தாமணி – காப்பிய நலன் – 1999
கம்ப ராமாயணப் படலச் சுருக்கம்
6. பால காண்டம் – 1999
7. அயோத்தியா காண்டம் – 1999
8. சுந்தர காண்டம் – 1999
9. உயுத்த காண்டம் – 2000
10. சீவக சிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் – 2002
மொழிபெயர்ப்பு நூல்களுக்குத் துணை நின்றமை
1. எசு.ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆங்கில நூலின் சோழர் காலப் கலைப்பணி – தமிழ் ஆக்கம்.
2. ஆலன் டேனியலுவின் “மணிமேகலை’ ஆங்கில மொழிபெயர்ப்பு
3. சேனாவரையத்தின் பிரெஞ்சு மொழி ஆக்கம்.
நடத்திய சித்தாந்த வகுப்புக்கள் :
1. உண்மை விளக்கம்
2. திருவருட் பயன்.
ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் :
1. பெரிய புராணம்
2. கம்ப ராமாயணம்
3. சீவக சிந்தாமணி
திங்கள்தோறும் சதயத் திருநாளில் திருவாமூரில் திருமுறை விளக்கவுரை.
தி.வே.கோபாலையர் பெற்ற பட்டங்கள் :
1. தருமையாதீனத் திருமடம் “”செந்தமிழ்க் கலாநிதி” – 1994
2. திருப்பனந்தாள் காசித் திருமடம் “”சைவ நன்மணி” – 1997
3. திண்டிவனம் கேள்விச் செல்வர் மன்றம் “”அறிஞர் திலகம்” – 1978
4. மயிலாடுதுறை தெய்வத் தமிழ் மன்றம் “”சிந்தாமணிக் களஞ்சியம்” – 1996
5. புதுச்சேரித் தமிழ்ச் சங்கம் – “”நூற்கடல்” – 1982
6. புதுச்சேரி அரசு – “”கலைமாமணி” – 2002
7. சென்னை – வடமொழிச் சங்கம் “”சாகித்திய வல்லப” – 2002
8. பொங்கு தமிழ் விருது – 2003
9. தமிழக அரசு – திரு.வி.க. விருது – 2005
10. சடையப்ப வள்ளல் விருது – 2006
11. கபிலர் விருது – 2006


muelangovan@yahoo.co.in

Series Navigation