தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது ?

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

கண்ணன் பழனிச்சாமி,சிங்கப்பூர்.


தமிழ் புத்தாண்டு அன்று தொலைக்காட்சி பட்டிமன்றம் ஒன்றில், பேச்சாளர் ஒருவர் ‘தமிழன் உணர்ச்சிவசப் பட்டே கெட்டுப் போனான். இனியாவது அறிவுப் பூர்வமாக அவன் யோசிக்க வேண்டும் ‘ என்று கூறினார். நூற்றில் ஒரு வார்த்தை. தனி நாடு, திராவிடன், இந்தி மொழி எதிர்ப்பு என தமிழனை உணர்ச்சிப் பூர்வமாக அணுகி, தனது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளால், கவர்ச்சிகரமான அடுக்குமொழி வார்த்தை ஜாலங்களால் ஏறத்தாழ 40 வருடங்களாக தமிழனை உணர்ச்சிவசப்பட வைத்தே அரசியல் செய்யும் கழகத்தின் தலைமைக்கு நெருக்கமான தொலைக்காட்சியில் அவர் அவ்வாறு பேசியது நன்றாக இருந்தது. ‘சட்டப் பிரிவு 356 மாநில உரிமைகளுக்கு எதிரானது. அதை நீக்கினால் கூட தவறு இல்லை என்று தொடர்ந்து கூறி வந்த எங்களுக்கே இப்போது தமிழகத்தில் அதைப் பயன்படுத்தினால் என்ன ? என்று தோன்றுகிறது ‘ என்று நேரடியாகக் கூறுவதை விட்டு விட்டு, ‘சீறி வரும் பாம்பு, பெட்டிப் பாம்பு ‘ , ‘356-ஐ தமிழகத்தில் பயன்படுத்தலாம் என ராமதாஸ் கூறியதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுவோம் ‘ என்றெல்லாம் கருணாநிதி வழக்கம் போல் (ஜாக்கிரதை உணர்வு ? ? ?) பேசுவது சலிப்பையே தருகிறது.

‘ஜெயலலிதா இத்தனை தவறுகள் செய்யும் போது, கருணாநிதியையும் சேர்த்து விமர்சிப்பது ஏன் ? ‘ என்று சில நண்பர்கள் கேட்டார்கள். கண்ணியமாக நடந்த தமிழக அரசியலை, தரக்குறைவான மேடைப் பேச்சுக்கள், விமர்சனங்கள் மூலம் சற்று தடம் மாற்றிய திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே( ? ? ?), எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் செயல்பட விடாதது, தேவையில்லாத கைது நடவடிக்கைகள் போன்ற ஜெ. வின் அரசியல் ரீதியான தவறுகள் ஆகும். பிடித்தால் ‘பெருந்தலைவர் ‘, ‘மூதறிஞர் ‘, இல்லாவிட்டாலோ, மட்டமான பட்டப் பெயர்கள் என்று நீங்கள் ஆரம்பத்தில் செய்த தவறுகளின் உச்ச நிலையைத் தான், உங்கள் அந்திமக் காலத்தில் இன்று ஜெ. செய்கிறார். இதற்கு அடுத்து என்ன ஆகுமோ என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. 1989-91, 1996-2001 ஆட்சி காலங்களில் ஓரளவு நல்ல திட்டங்கள், நேர்மையான ஆட்சிக்கான முயற்சி ஆகியவை செய்ததற்காக திரு. கருணாநிதி அவர்களைப் பாராட்டலாம்.

ஜெ. வைப் பற்றி விமர்சிப்பதை விட பாராட்டுவது சுலபம். ஆம், அவரது நடவடிக்கைகளில் 1, 2-ஐத் தவிர எல்லாமே தவறானதாக அல்லது விமர்சனத்திற்கு உரியவையாக இருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடி, மக்கள் எல்லோரும் சிரமத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள். சரி. கோடிக்கணக்கில் செலவு செய்து, மாவட்ட வாரியாக நீங்கள் செல்லும் பயணம் தேவையா ? புதிய தலைமைச் செயலகம் மிகவும் முக்கியமா ? அப்படியே முக்கியம் என்றாலும், கல்லூரியை இடித்து தான் அதைக் கட்ட வேண்டுமா ? உங்கள் ஆட்சியில் யாருக்கு நன்மையோ இல்லையோ, வாஸ்து நிபுணர்களுக்கும், ஜோதிட சிகாமணிகளுக்கும் நல்ல வருமானம் தான். நேர்மையாக செயல்பட்டார் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத் தலைவருக்கு ‘இட மாற்றப் ‘ பரிசு தந்தீர்கள். அடிக்கடி அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம், பொழுது போக்கிற்கு கருணாநிதியை விமர்சனம் செய்வது, வாஸ்திற்காக சிலை அகற்றம், கட்டிட இடிப்பு என்று நீங்கள் செய்யும் செயல்கள், முகம்மது-பின்-துக்ளக் மன்னனைத் தான் நினைவு படுத்துகிறது.

ஊராட்சி மன்றக் கூட்டங்களில் ஆரம்பித்து, பாராளுமன்றக் கூட்டங்கள் வரை, அடிதடி, கூச்சல், வெளி நடப்பு அரங்கேறும் அவலம் வேதனையாக இருக்கிறது. உங்கள் பகுதிக்கோ, தொகுதிக்கோ உட்பட்ட பொதுமக்களுக்கு பிரச்னைகளே இல்லையா ? நாம் முன்னேறி இருக்கிறோமா ? இது பற்றி எல்லாம் விவாதித்து நல்ல பணிகளைச் செய்யவே நீங்களெல்லாம் கூடுகிறீர்கள். ஆனால், கூட்டங்களுக்கு ஆகும் செலவு தான் விரயமாகிறதே தவிர உருப்படியாய் ஒன்றும் காணோம்.

சமீபத்தில் மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் நீர் வாங்குவது குறித்து சர்ச்சை எழுந்தது. மலேசிய அரசு சில கருத்துகளை வெளியிட்டது. அதற்கு பதிலளித்த சிங்கப்பூர் பிரதமர், ‘இனி மலேசியா கூறும் ஒவ்வொரு கருத்திற்கும், பதில் கூறிக் கொண்டே இருக்க முடியாது. அது, கடுமையான பொருளியல் நெருக்கடி, வேலையின்மை போன்ற முக்கியப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பி விடும். அதை விட நமக்கு முக்கியமான வேறு பல வேலைகள் இருக்கிறது ‘ என்றார். என்ன ஆக்கப் பூர்வமான பேச்சு ? மக்களை திசைதிருப்பி விடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள நம் தலைவர்கள், என்றாவது ஒருநாள் இப்படிச் செய்வார்கள் என்று கனவாவது காணலாமா ?

சரி. கருணாநிதிக்கும், ஜெ.வுக்கும் மாற்றாக காங்கிரஸையோ, பா.ஜ.க. வையோ மக்கள் யோசிக்கக் கூட இரு கட்சியினருமே செய்வதில்லை. சற்று வளர்ந்துள்ள பா.ஜ.க.வில் மாநிலத் தலைவருக்கே மரியாதை இல்லை. கோஷ்டிக் கானம் உச்சத்தில் இருக்கிறது. காங்கிரசிற்கு இளங்கோவன் தலைமை ஏற்றதும், சற்று சுறுசுறுப்பானது போல் இருந்தது. முயற்சி செய்து இணைய வைத்த த.மா.கா. வே இப்போது அவருக்குப் பிரச்னையாக இருக்கிறது. இப்படி நீங்கள் கோஷ்டி அரசியல் செய்து கொண்டே இருந்தால், மக்களுக்கு மட்டுமல்ல, உங்கள் மேலிடத்திற்கே உங்கள் மீது நம்பிக்கை வராது. பிறகு, தேர்தலில் மேலிடம் ஏதாவது ஒரு கழகத்துடன் உறவு வைக்கும். அந்த உறவு உங்கள் பதவிக்கே வேட்டு வைக்கலாம். இன்னும் மக்களுக்கு காங்கிரஸ் மேல் ஒரு சிறிய நம்பிக்கை இருக்கிறது. தொண்டர்களும் தயாராகத் தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் தயாராக வேண்டும். அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை, நேர்மை, ஆர்வம் உள்ள நிறையத் தலைவர்கள் தமிழக காங்கிரஸில் இருக்கிறார்கள். ஆனால், மக்களை அணுகி, அவர்களின் நேரடியான ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கத் தான் நீங்கள் தயாராக இல்லை. ப.சிதம்பரம் போன்ற தலைவர்களையும் இணைய வைத்து, தேர்தலுக்காக மட்டுமன்றி, இப்போதே ஒரு அணி அமைத்து, மக்களுக்குத் தேவையான திட்டங்களுடன் அவர்களை அணுகினால், நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் வரும்.

நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அடிக்கடி ‘நிறைய கனவு காணுங்கள். அதை நிச்சயம் நடைமுறைப் படுத்த முடியும் ‘ என்று கூறுவார். வளமான தமிழகம் குறித்த நம் கனவை நனவாக்கும், நேர்மையான, திறமையான தலைவர்களுக்காக காத்திருப்போம்.

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.

kannan_vnp@yahoo.com

Series Navigation

கண்ணன் பழனிச்சாமி

கண்ணன் பழனிச்சாமி