தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

கோ. ஜோதி ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்


தமிழகம் எதிர்வரும் காலங்களில் சுற்றுச் சூழல் பிரச்சனையில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் வந்த அரசுகள், இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறியதால்தான் இந்த நிலை. தமிழக விவசாயத்திற்கு உயிர்நாடியான, பல நதிகள், மற்ற நீராதாரங்கள் (ஏரி, குளம், குட்டை) போன்றவைகள் தங்கள் சுயத்தன்மைகளை இழந்துள்ளன. காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதிகளில் எழுந்துள்ள நீண்ட கால தாவாக்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகளில் உள்ள மணல் வரம்பு மீறி எடுக்கப்பட்டு, சுற்றுச் சூழல் சம்பந்தமான பல இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆறுகளில் நிலவி வரும் மணல் கொள்ளைக்கான அடிப்படைக் காரணங்கள் :

• 2001ன் மக்கள் தொகை கணக்கின்படி வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தின் நகர்ப்புற மக்கள்தொகை 43.9%ம் கிராமப்புற மக்கள்தொகை 56,1%ம் உள்ளது. இதனால் நகர்ப்புற குடியிருப்புகள் அதிகமாகி வருகின்றன. (1.3.91 கணக்கெடுப்பின்படி சென்னை நகரில் 1071255 வீடுகளும், கோயம்புத்தூரில் 231540 வீடுகளும், மதுரையில் 198975 வீடுகளும் உள்ளன. 2002ம் வருடத்தில் புதிய வீடுகள் அதிகரித்திருக்கக்கூடும்).

• எந்த ஆறுகளிலும் 1 மீட்டர் ஆழத்திற்குட்பட்ட மணலை மட்டும் தான் அள்ள வேண்டும் என்ற அரசின் ஆணை பின்பற்றப்படுவதில்லை.

• கட்டுமானத் தொழிலில் மணல், சிமெண்ட் முதலியவைகளைக் குறைத்து, மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களை கொணர அரசு ஆர்வம் காட்டுவதில்லை.

• மணல் கொள்ளையின் மூலம் பாதிக்கப்படும் ஆறுகளைக் காப்பாற்ற வேண்டிய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகள், பெரும் அரசியல் தலைவர்கள், மணல் கொள்ளையர்களோடு இணைந்து கொண்டு லாபமீட்டி வருகின்றனர்.

• 1993ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட கனிம வளச் சட்டம் 39வது பிரிவின்படி டெண்டர் இல்லாமல் மணல் எடுக்க தனிப்பட்ட நபருக்கு அனுமதி அளிக்க வகை செய்யப்பட்டது. பின்னர் இந்த 39வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மணல் எடுக்க டெண்டர் கோருவதென்றும், டெண்டர் கோராதவர்களும் ஓப்பன் ஏலம் என்ற முறையில் கலந்து கொள்ளலாம் என்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.

• முறையற்ற வழிகளில் மணலை எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க முறையான சட்டங்கள் வகுக்கப்படவில்லை.

• தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு மணல் தேவை அதிகமாகியுள்ளது.

ஆறுகளில் மணல் குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் :

• 9.2.1997ல் காவிரி, அமராவதி முதலிய ஆறுகளை ஆய்வு செய்த நிபுணர்குழு அளவுக்கு மீறிய மணல் அள்ளப்பட்டிருப்பதால் கட்டளைக் கால்வாய் மதகிற்கு (ஜூன், ஜூலை மாதங்களில் வரும் அதிக நீர்வரத்தால்) சேதம் ஏற்படலாம் என்பதைக் கூறியுள்ளது. இதனால் ஆற்றில் கரைகள் அரிக்கப்பட்டு, குளித்தலை நகர எல்லையில் உள்ள ரிஸர்வ் காடுகள் மற்றும் மயானங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது.

• இதே போல் காவிரி ஆற்றின் மணல் அள்ளப்படுவதால், காவிரிக் கரைகளில் உள்ள சுமார் 300 குடலைக் கிணறுகள் என்று சொல்லப்படுகின்ற பாசனக் கிணறுகள் வற்றிவிட்டன.

• காவிரி ஆற்றில் அள்ளப்படும் மணலில் (பல இடங்களில்) ஆற்றின் அடிப்பகுதியில் காணப்படும் பல நுண்ணுயிர்களும், நுண் தாவரங்களும் அழிந்துள்ளன. இதனால் மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

• 9.2.97ல் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் அவர்களின் அறிக்கையின்படி மேல் மாயனூர் பகுதியில் உள்ள பல குடிநீர் கிணறுகளும், விவசாய கிணறுகளும் முற்றிலும் வற்றிவிட்டன.

• கேரள மாநிலத்தில் பம்பா நதியில் வருடந்தோறும் படியும் 33,000 டன் மணலுக்கு மேலாக 1.75 லட்சம் டன் மணல் அள்ளப்பட்டதால், 29.7.1996ல் பம்பா நதியில் உள்ள ரான்னி என்ற இடத்தில் கட்டப்பட்ட பாலம் முற்றிலும் அழிந்தது. இதனால் கேரள மாநிலத்தின் பல இடங்களில் மணல் எடுப்பது தடை செய்யப்பட்டது.

• இதே போல் 1992ல் சென்னை அருகே வடக்கு பெருஞ்சாலையில் உள்ள காரனோடை பாலம் மணல் எடுக்கப்பட்டதால் இடிந்து விழுந்தது.

• பாலாற்றில் நீர் வரத்துக் காலங்களில் பாலாற்றில் இருந்து பிரியும் கால்வாய்கள் அருகில் உள்ள கிராம ஏரிகளில் நீரைக் கொண்டு சேர்க்கும். இதற்கு ஆற்றுக்கால் என்பது பெயர். தற்போது பாலாற்றின் பல பகுதிகளில் 20 அடியிலிருந்து 30 அடி வரை மணல் அள்ளப்படுவதால் இந்த ஆற்றுக்கால் மூலம் நீர் ஏரிகளுக்குச் செல்வது இயலாத ஒன்றாகி விட்டது. இதை கல்பாக்கம் அருகில் உள்ள மேலாலத்தூர் என்ற கிராமத்தில் காணலாம்.

மணல் கொள்ளையில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் :

• காவிரி ஆற்றின் பல பகுதிகளில் மணல் பொக்லைன் என்ற ராட்சத இயந்திரம் மூலம் அள்ளப்படுகிறது. அரசியல் பின்னணி, அதிகாரிகளின் துணை போன்றவைகளோடு இவைகள் நடைபெறுகின்றன. ஆளுங் கட்சிப் பிரமுகர்களும், எதிர்க்கட்சிப் பிரமுகர்களும் கைகோர்த்துக்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இச்செயலுக்குத் துணையாக, அடியாட்களையும், குண்டர்களையும் தங்களோடு வைத்துக்கொள்கின்றனர். இதனால் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பல இடங்களில் சீர்குலைந்து வருகின்றது.

• காவிரி பகுதியில் உள்ள கிணறு, பம்ப் செட்டும் வைத்துள்ள விவசாயிகளை மணல் கொள்ளையிடுவோர், நிலத்திற்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களை துண்டித்து விடுவோம் என மிரட்டுதல்.

• மணல் திருட்டை வன்மையாக கண்டித்து வந்த திருவள்ளுவர் மாவட்ட ஆட்சித் தலைவரை கொல்ல சதி நடந்து, அதில் அவர் தப்பினார். பின்னர் அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.

• இதேபோல் பாலாறு, வேகவதி ஆறுகளில் நடைபெறும் முறையற்ற மணல் எடுத்ததைக் கண்டித்து, குற்றவாளிகளைப் பிடித்த காஞ்சி மாவட்ட வருவாய் அதிகாரி அங்கிருந்து மாற்றி திருச்சி சிவில் & பைனான்ஸ் கார்ப்பரேஜனில் எஸ்.ஆர்.எம்.மாக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்திற்கு மத்திய அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் காரணமாக இருந்தனர். இந்த மாற்றத்தை எதிர்த்து 17.7.2000 அன்று 3000 மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

• தாமிரபரணி ஆற்றில் மணற் கொள்ளையைத் தடுத்து, மடக்கியவர்களுக்கு அபராதம் ரூ.10,000/- விதித்தது. மீண்டும் அதே லாரிகள் மணற் கொள்ளையில் ஈடுபட்டபோது அபராதத் தொகையை ரூ.25,000 உயர்த்திய மாவட்ட வருவாய் அதிகாரி 5.7.2000ல் தர்மபுரிக்கு மாற்றம் நடத்தினர். இதிலும் அரசியல் கட்சியின் தலையீடு இருந்தது.

• கரூர் மாவட்டத்தில் 62 ஏக்கர் பரப்புள்ள இடத்தில் மணல் அள்ளப்பட்டு வந்ததால், விவசாயிகளின் பாசனக் கிணறுகள் வற்றின. மணல் எடுத்த பள்ளங்களில் 10க்கும் மேற்பட்ட மக்கள் விழுந்து பலியாயினர். இதனால் மேல மாயனூர், கட்டளை, மேலக்கட்டளை, ரெங்கநாதபுரம், வளையல்காரன் புதூர், மணவாசி போன்ற பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் இறங்கினர். இந்த மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கையூட்டு தருவதற்கு முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர்.

• காவிரி ஆறு அமராவதி ஆறு முதலிய ஆறுகளில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையைப் பார்வையிட சென்ற சுற்றுச்சூழல், பூமியியல், நிலத்தடி நீர், ஆற்றுப் பாதுகாப்பு மற்றும் தொலை உணர்வுத் துறை முதலியோர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை 9.2.97ல் மணல் அள்ளிக் கொண்டிருப்போரின் ஆட்களால் கடுமையாக மிரட்டப்பட்டு, கேமராக்கள் பறிக்கப்பட்டது. தாக்குதல்களுக்கும் ஆளாகி அந்த நிபுணர்குழு அங்கிருந்து விரைந்தது.

• 4.2.2002ல் நெல்லை மாவட்டத்தில் உள்ள கீழப்பாட்டம் கிராமத்தில் நடந்த 3 கொலைகளும், குடிசைகள் தீ வைப்பும், வீடுகள் இடிக்கப்பட்டதும், தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட போட்டியே காரணம் என்பது மக்கள் கருத்து.

• இந்த மணல் கொள்ளையைத் தடுக்கும் விதத்தில் முனைப்போடு செயலாற்றும் பல மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட, வட்ட வருவாய் துறை அதிகாரிகள் அரசியல் பலத்தால் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இதிலிருந்தே பெரும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மணற் கொள்ளையர்கள் கூட்டாகச் செயல்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

• இச்செயலை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில தனிப்பட்ட அமைப்புகளும், சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள தனி நபர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

• பிப்ரவரி 19.20.2002 அன்று சென்னையில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் நடைபெற்ற பொது விசாரணையில் தமிழகமெங்கும் உள்ள பல தன்னார்வ அமைப்புகள், விவசாய அமைப்புகள், பஞ்சாயத்துத் தலைவர்கள் கலந்து கொண்டு விரிவான ஆவணச் சான்றுகளுடன் நடுவர் குழுவிடம் வழக்கு ரீதியான ஆய்வுகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் பல நிபுணர்களும் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தனர்.

இந்த மணல் கொள்ளையைப் பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தின் சில குறிப்பிட்ட பகுதி மக்களைத் தவிர மற்ற பகுதிகளில் இல்லை. இவ்விழிப்புணர்வை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், வெகுஜன ஊடகங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஏற்படுத்தி வருகின்றனர். அழிவை நோக்கிக் கொண்டு செல்லும் இச்செயலைத் தடுக்க அரசும், இதில் கவனம் செலுத்த வேண்டிய தமிழக பொதுப்பணித்துறை, நிலத்தடி நீர் நிர்வாகத்துறை, சுற்றுச்சூழல் வாரியம் போன்றவைகள் மெளனமாகவே உள்ளன. மணல் ஆறுகளில் சுரண்டப்படுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய முறையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இச்செயலைத் தடுத்து நிறுத்த, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீண்டதொரு போராட்டத்தைத் துவக்க தமிழகம் ஆயத்தமாக வேண்டும்.

***

Series Navigation

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.