தந்தையும் தாயுமான அதிபர்.

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

குரு அரவிந்தன்


அதிபர் என்றும் நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுகின்ற திரு. பொ. கனகசபாபதி அவர்கள் 2010 செப்ரம்பர் 4ம் திகதி 75வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றார். ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்து போல, எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம். வாழும் காலத்திலேயே சாதனையாளர்களைப் பாராட்டவேண்டும், பணமும் பொருளும் முக்கியமல்ல, ஒருவரைப் பாராட்டும் போதுதான், அந்தப் பாராட்டுகள்தான் அவரை மேலும் மேலும் சாதனைகள் படைக்கத் தூண்டுகின்றன என்பதால் இக்கட்டுரையை எழுதுகின்றேன்.

திரு. பொ. கனகசபாபதி அவர்கள் ஆசிரியராகவும் பின்நாளில் அதிபராகவும் இருந்த தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவரது எழுபத்தைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதும் மிகவும் சிறப்பானதாகும். எல்லோரும்தான் பிறக்கிறார்கள், ஆனால் புகழ் பெற்றவர், எல்லோராலும் மதிக்கப்பட்டவர் என்று சொல்லும்போது, இந்த மண்ணிலே எதை விட்டுச் செல்கிறார்கள் என்பதில்தான் அவர்களின் புகழ் தங்கியிருக்கிறது. வெறும் ஜடமாக வாழாமல், பிறந்த மண்ணுக்கு, புகுந்த மண்ணுக்கு, இனத்திற்கு, மொழிக்கு என்னசெய்தார் என்பதில் இருந்துதான் ஒவ்வொருவருடைய புகழும் இந்த மண்ணில் பேசப்படுகிறது. நாங்கள் எல்லோரையும் நினைவு கூருகிறோமா, இல்லையே! தான், தன்னுடைய குடும்பம், மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை என்று சுயநலத்தோடு வாழ்ந்து மடிந்தவர்கள்தான் இந்த உலகில் அதிகம். அப்படிச் சுயநலத்தோடு வாழ்ந்து மடிந்தவர்களை யாருமே நினைவு கூருவதில்லை. பெற்ற பிள்ளைகள்கூட அவர்களை மறந்துவிடுகிறார்கள். வாழும் காலத்தில்கூட யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. இவர்களை எல்லாம் பின்தள்ளிவிட்டு அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் சென்ற இடமெல்லாம் தடம் பதித்தார், அதனால் தான் இன்று கற்றறிந்தோரால் புகழ்ந்து பேசப்படுகின்றார். ‘மனித இயல்பின் ஆழமான தத்துவமே, பாராட்டைப் பெறுவதுதன் மூலம் மகிழ்ச்சி அடைவதுதான்’ என்று தத்துவ ஆசிரியர் வில்லியம் ஜேம்ஸ் ஓரிடத்தில் குறிப்பிடுவது மட்டுமல்ல, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான மனோபாவத்தை அது ஏற்படுத்துகின்றது என்பதையும் அவர் வலியுறுத்துகின்றார்.

அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் பிறந்த மண்ணான சண்டிலிப்பாய், திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து புகுந்த மண்ணான காங்கேசன்துறை இரண்டுமே அவருக்குப் புகழ் சேர்த்தபோது, அவராலும் அந்த மண் பெருமையடைந்தது. தன்னிறைவான தான்பிறந்த ஒரு கிராமம் என்பதால் சண்டிலிப்பாயை அவர் பெரிதும் விரும்பினார். அன்பு மனைவி கௌரியின் (டாளி) ஊர் என்பதால் காங்கேசந்துறையை அவர் மதித்தார். அதிபரைப் பற்றி யாராவது குறிப்பிட்டால் அவர் எங்க ஊர்தானே என்று சொல்வதில் பலரும் பெருமைப்பட்டார்கள். அப்படிச் சொல்ல முடியாதவர்கள் எங்க பள்ளிக்கூடம் தானே என்றாவது சொல்லிக் கொண்டார்கள். அது கூடச் சொல்ல முடியாதவர்கள் அவரிடம் ரியூசன் எடுத்தேன் என்றாவது குறிப்பிடுவார்கள். ஏதோ ஒரு விதத்தில் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல, அதிபரைப்பற்றிக் குறிப்பிடும் போது அவரை நன்றாகவே தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் அவர்களும் பெருமைப்பட்டார்கள். நெருங்கிப் பழகியவர்கள் அவரைக் கனெக்ஸ் என்று உரிமையோடு அழைத்தார்கள். இவர் தனது ஆரம்ப கல்வியைச் சண்டிலிப்பாயிலும், பின் கந்தரோடையில் உள்ள ஸ்கந்தவரோதயாவிலும் கற்றார். பட்டப்படிப்பை இந்தியாவிலே தொடர்ந்தார். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் நீண்டகாலம் ஆசிரயராகவும் பின் அதிபராகவும் கடமையாற்றினார். இடையே புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதிபர் பதவியைத் துறந்து, குடும்பத்தோடு நைஜீரியாவிற்குச் சென்றார். சிறிது காலம் அங்கே கற்பித்தலில் ஈடுபட்டுவிட்டு, கனடாவிற்குத் திரும்பினார். கேடில் விழுச்செல்வம் என்று புகழப்படுகின்ற கல்விச் செல்வம் ஒன்றைத்தான் நாங்கள் இந்த உலகில் எங்கு சென்றாலும் தடையின்றி எடுத்துச் செல்ல முடியம் என்பதால் அவரிடம் இருந்த கல்விச் செல்வம் சென்ற இடமெல்லாம் புகழ் பரப்பி அவரைப் பெருமை அடைய வைத்தது.

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி என்பதுபோல இவரது மகிழ்ச்சியான வாழ்க்கையில் பிரிவு என்ற துன்ப நிகழ்வுகளும் தொடர்ந்து இடம் பெற்றன. ஆம், வந்தோரை வரவேற்று வாழவைக்கும் கனடாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து துயரங்கள் இவரைப் பிடித்துக் கொண்டன. அருமை மனைவியான அமிர்தகௌரிநாயகியைக் (டாளி – 05-10-1988) காலனிடம் பறிகொடுத்த இவரின் துயரம் ஆறுமுன்பாகவே அருமை மகனான மணிமாறனையும் (நணா) பறிகொடுத்தார். அதிலிருந்து தெளியுமுன்பாக அன்புத் தாயாரையும் பறிகொடுத்தார். அடுத்தடுத்து நடந்த இந்த மரணங்கள், பாசம் மிக்க அந்தக் குடும்பத்தையே உறைய வைத்து விட்டது. இந்தக் குடும்பத்திற்கு இதென்ன சாபக்கேடு என்று எல்லோரும் அவரது துயரத்தில் பங்கு கொண்டார்கள். ஊரிலே இவரை டாளியின் கணவர் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஏனென்றால் இவரது மனைவி அன்பும் பண்பும் நிறைந்தவர் மட்டுமல்ல, விருந்N.தாம்பலும் நிறைந்தவர். வாரஇறுதி நாட்களில் கல்லூரி மாணவர்களின் சயிக்கிள்கள்தான் அவரது வீட்டு மதில் கரையில் நிரையாக நிற்கும். பாடம் சம்பந்தமாக மட்டுமல்ல, அரசியல், சினிமா, விளையாட்டுத்துறை, பூந்தோட்டம் என்று எல்லாத் துறையும் அங்கே அலசி ஆராயப்படும். இன்சொல்லால் மட்டுமல்ல, இவரது விருந்தோம்பல் காரணமாக நைஜீரியாவில் வாழ்ந்த காலத்தில் இவர்களது வீட்டைச் ‘சத்திரம்’ என்றுதான் அழைப்பார்களாம். ‘ஆத்மா அழிவற்றது, ஆதலால் எந்த உயிர் பற்றியும் கவலைப்படாதே’ என்ற கீதை வாக்கியத்தை உணர்ந்து, காலம்தான் துயர்துடைக்கும் என்பதால், காலன் தந்த துயர் மறக்க அவர் இந்த மண்ணில் பொதுத் தொண்டுகளில் ஈடுபடலானார். தனிமை மிகவும் பயங்கரமானது, அது மனிதரை மெல்ல மெல்லக் கொன்று விடும் என்பதை அவர் அறிந்து வைத்திருந்ததால்தான் தனது நேரத்தைப் பூந்தோட்டத்திலும், காய்கறித் தோட்டத்திலும் செலவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கையில் சோகத்தைச் சந்தித்தாலும், அதையே நினைத்து மனமுடைந்து போகாமல், நேரம் கிடைத்த போதெல்லாம் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டார். எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் தகப்பனாகவும், தாயாகவும் இருந்து பிள்ளைகளை வளர்த்தார். மனைவி உயிரோடு இருந்திருந்தால் தனது பிள்ளைகளின் வாழ்வு மேலும் சிறந்திருக்கும் என்று அடிக்கடி குறிப்பிடுவார். அவரிடம் இருக்கும் அறிவுப் பொக்கிசத்தை எப்படி வெளியே எடுப்பது, அதனால் எப்படிப் பயன் பெறுவது என்று தெரியாத சிலர், தங்களுக்கு மேடை கிடைக்வில்லையே என்ற ஆதங்கத்தில், இந்த வயதிலும் தடிபிடித்துக் கொண்டு இவரேன் இப்படி அலைகிறார் என்று முணுமுணுத்ததைக் கூட நான் கேட்டிருக்கிறேன். கையில் இருக்கும் வெண்ணெய், நிஜத்தைவிட்டு நிழலைத் தேடும் இவர்களைப் போன்றவர்களுக்கு கண்ணுக்குத் தெரிவதில்லை என்று நினைத்துக் கொள்வேன். சென்ற இடமெல்லாம் எத்தனையோ வைத்திய கலாநிதிகள் இவரது கையைப் பற்றிக் கொண்டு ‘சேர், உங்களால்தான் இன்று நான் நல்லாயிருக்கிறேன்’ என்று மனதாரச் சொல்லும் போதெல்லாம் நானும் அவரை நினைத்துப் பெருமைப் பட்டிருக்கிறேன். லண்டன் மாநகரத்தில் மட்டும், இவரிடம் கல்வி கற்று வைத்திய கலாநிதிகளாக வெளிவந்த நூற்றுக்கு மேற்பட்ட டாக்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் ஒரு ஒன்றுகூடலின்போது அவர்களை அங்கே சந்திக்க வேண்டி வந்ததால் கணக்கெடுக்க வேண்டி வந்தது. இவரிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் வைத்திய கலாநிதிகளாக மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் குறிப்பாகத் தமிழ் இலக்கியத்துறையிலும் இன்று புகழ் பெற்றவரகளாகப் பலர் திகழ்கிறார்கள்.

எமது அடுத்த தலைமுறையினர் தாய் மொழியாம் தமிழ் மெழியை இந்த மண்ணில் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் தமிழ் மெழி கற்பதற்கான வசதிகளை பல முறைகளிலும் முன்னின்று ஏற்படுத்திக் கொடுத்தார். இங்கே உள்ள பாடசாலைகளில் தமிழை ஒரு மொழியாகக் கற்பிப்பதற்குப் பாடுபட்டது மட்டுமல்ல, இலக்கியத் துறையிலும் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். ‘அதிபரின் கூரிய பார்வையில்’ என்பது அவரது முதலாவது நூலாகும். தொடர்ந்து ‘பெற்றோர் பிள்ளைகள் உளவியல்’ என்ற நூல் வெளிவந்தது. அதன்பின் மணிமாறன் கதைகள் ஒன்று இரண்டு என்று இரண்டு சிறுவர்களுக்கான நூல்களை அமரரான இரண்டாது மகனின் நினைவாகத் தொகுத்து வெளியிட்டார். ‘மனம் எங்கே போகிறது’ என்ற நூல் தற்போது பிரசுரமாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்து அதிபர்களைப் பற்றி இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட இருக்கின்றார்.

விலங்கியல் ஆசிரியராக இருந்தாலும் பூந்தோட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். காய்கறித் தோட்டமும் பூந்தோட்டமும் இல்லாதவீடு பாழ்வீடே என்று குறிப்பிடுவார். இதற்காகத்தான் கனடாவில்கூட வீட்டைச் சுற்றிக் காணியோடு உள்ள வீட்டைத்தான் வாங்கினார். காங்கேசந்துறை குருவீதியிலும் இவரது வீடு மீன் தொட்டிகளோடு கூடிய பூஞ்சோலைகளுக்கு மத்தியில்தான் அமைந்திருந்தது. விளையாட்டுத்துறையில் கிரிக்கட் விளையாட்டு இவருக்கு அதிகம் பிடித்தமான விளையாட்டாகும். பட்டப்படிப்பை தமிழ் நாட்டில் தொடர்ந்ததால் இசை விழாக்களில் இவருக்கு அதிக ஆர்வமுண்டு. எம். எஸ் சுப்புலட்சுமி, பட்டம்மாள், தண்டாயுத பாணிதேசிகர், பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களின் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்பதுண்டு. பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் பிடிக்கும்.
‘பணியுமாம் என்றும் பெருமை’ என்பதற்கிணங்க நல்ல இதயத்தையும், சிறந்த பண்புகளையும் கொண்ட இவர் நீண்டகாலம் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்