தண்ணீர் தேடும் தமிழகம்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

என் எஸ் நடேசன்


‘ ‘எத்தனை குழந்தைகள் ? ‘ ‘

‘ ‘மூத்தபெண்ணுக்கு பதினாறு. கேரளத்தில் ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்யுது. இஇரண்டாவது வீட்டில் இருக்கிறது. இந்தா, இவன் மூன்றாவது பத்துவயது எனக்கு ஒத்தாசையாக இருக்கிறான்.

கோடைக்கானலில் பத்துவயதுப் பையன், தாயாருக்கு மக்கா சோளம் எரிப்பதற்கு உதவிசெய்து கொண்டு இருந்தான். மக்கா சோளத்தை வாங்கி அதில்; காரப்பொடியை தடவிக் கொண்டே, நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலாக முழுக் குடும்ப விபரத்தையும் அந்தத் தாய் என்னிடம் சொன்னாள்.

அவளுக்கு நாற்பது வயதிருக்கும். வாழ்வின் சுமை பெருங்கடல் அலைபோல, தேவைக்கும் அதிகமாக அந்த பெண்ணின் இளமையை அரித்துவிட்டது தெரிந்தது.

மீண்டும் கேட்டேன்.

‘ ‘ஒருநாளைக்கு எவ்வளவு காசுக்கு வியாபாரம் நடக்கும் ? ‘ ‘

‘ ‘

இருநூறும் கிடைக்கும், இரண்டாயிரமும் கிடைக்கும். கோடைகானலின் சீசனைப் பொறுத்தது சார். ‘ ‘

இந்தியாவெங்கும் அடம் சிமித்தின் பொருளாதாரக் கொள்கை வெற்றிநடை போடுகிறது. இந்தியாவிற்கு தொடர்ச்சியாக, திறந்த பொருளாதார கொள்கையை வலியுறுத்தியவர் இராஜகோலாச்சாரியர் எனும் ராஜாஜி. ஆனால் அக்காலத்தில் நேருவின் சோசலிசத்தின் முன் இராஜாஜியின் தீர்க்கதரிசனமான கொள்கைகள் எவரின் கவனிப்பைப் பெறவில்லை.

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஜவர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு சென்று இருந்தேன். அங்கு மாணவர் சங்கங்கத்தில் மூன்று கட்சிகளுக்கு சார்பான மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அவையாவன CPI (இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி), CPM (இடதுசாரி கம்யூனிஸ்ட்; கட்சி), மூன்றாவது அணி CPML எனப்படும் நச்சலைட் அமைப்புக்கு ஆதரமானவர்கள். இப்போது நிலை தெரியவிலலை. ஆனாலும் இந்திய கம்யூனிட்டுகள் கால்மாக்சையோ லெனினைபற்றியோ தற்போது பேசுவது கிடையாது.

இப்பொழுது இந்தியா ஒரு பாரிய சந்தைபோல் காட்சி அளிக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் அவுஸ்திரேலியாவில் விற்கும் விலையில் மூன்றில் ஒன்றுக்கு கிடைக்கிறது. அதனால் உள்ளூர் சிறு தொழில்கள் எல்லாம் அழிந்துவிட்டது. நுகர்தல் என்ற ராட்சத வக்யூம் கிளீனராக எல்லாவற்றையும் உள்வாங்கி கொள்கிறது.

மேற்குநாடுகளில் தொழிற் புரட்சி ஏற்பட்டபின் உருவாகிய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அளப்பரிய நன்மைகளை செய்தன. இதன்பின் 1980களில் ஏற்பட்ட சுற்று சூழல் இயக்கம் மக்களின் சிந்தனையிலும் அரசாங்கங்களின் சட்டவிதிகளிலும் பாரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.

இந்தியாவில் இவற்றின் தாக்கம் மிகவும் சொற்ப அளவேயாகும். அரசாங்கத்தின் சட்டங்கள் பணத்தால் வளைக்கப்படுவது மட்டும் அல்ல உடைக்கவும் முடியும். தொழிற்சங்கங்கள் பலவீனமாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இனிமேல் யாரும் வேலைநிறுத்தத்தை எண்ணிப்பார்க்கவே முடியாது என்ற நிலை தற்போது இருக்கிறது.

சுற்று சூழல் பற்றிய இயக்கங்கள் அங்காங்கு தலைகாட்டுகின்றன. குறிப்பாக நர்மதா அணைகட்டு விவகாரத்தில் அருந்ததிராயின் முயற்சியால் பலரது கவனத்தை ஈர்த்தது. நாடுதழுவிய ரீதியில் எந்த இயக்கமும் இல்லை.ஐரோப்பியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் சுற்றாடலில் கவனம் எடுப்பவர்கள் பாராளுமன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மனிதர்களால் சந்ததி சந்ததியாக சுரண்டப்படும் இயற்கை வளங்கள் காலவரையறைக்கு உட்பட்டவை. இதில் முக்கியமான நீர்ப்பஞ்சம். பல இந்திய மாநிலங்களை வாட்டி வதைக்கின்றன. சென்னைப்பட்டணமே குடத்தோடு நடமாடுகிறது. போத்தலில் குடிநீர்பருகுவதால், எங்கும் பிளாஸ்ரிக் போத்தல் மயமாகவே உள்ளது. இந்திய ரயில் தண்டவாளங்களை மறைத்தபடி போத்தல்கள் குவியலாக கிடைக்கிறது. ரயிலில் எனக்குப் பக்கத்தில் இருந்தவர் நீரைக் குடித்துவிட்டு வெறும் போத்தலை எறிந்த லாவகத்தைப் பார்த்தபோது, நூறுகோடி மக்களும் இப்படி எறிந்தால் இந்தியாவை பிளாஸ்ரிக்கால் மூடிவிடலாம் எனத் தோன்றியது. பெப்சியும் கொக்கோ கோலாவும் இக்குடிநீர் போத்தல்களை தயாரித்து இந்த விடயத்தில் உதவி செய்கின்றன.

கன்னியா குமரிக்கு போகிறேன் என எழுத்தாளர் ஜெயமோகனிடம் கூறியபோது அவர் என்னை எச்சரித்தார். அவரது வார்த்தையின் அர்த்தத்தை கடற்கரையில் நின்றபோதுதான் முழுதாகப் புரிந்து கொண்டேன். மலத்தின் மணம் என் சுவாசப்பைகளை நிறைத்து திணற வைத்தது. இதில் ஒரு ஆறுதல். திருக்குறளை மனனம் செய்யாததற்கு எனது ஆசிரியர் ‘சொக்கன் ‘ வாங்கிலில் ஏறிநிற்க வைத்தார். பாவம் அந்த திருக்குறளைப் பாடிய குற்றத்திற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவள்ளுவருக்கு கல்லில் ஏற்றித் தண்டனை கொடுத்திருக்கிறார். குறைந்த பட்சம் திருவள்ளுவரின் கையை மூக்கில் வைத்து சிலை செய்திருக்கலாம். சிலை திறப்புக்கு அவுஸ்திரேலிய தமிழ் அன்பர்களும் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டில் மூன்றுவருடம் வாழ்ந்தும் கொடைகானலுக்கு செல்லவில்லை என்ற குறையை தீர்க்க இம்முறை செல்ல நினைத்து பஸ்ஸில் பயணித்தேன். றோட்டுகளில் திருத்த வேலைகள் நடப்பதால் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்தேன். அருகில் இருந்த மனவைியிடம் சொன்னேன் ‘ ‘ நல்லவேளை பிள்ளைகள் வரவில்லை ‘ ‘ ஏற்கனவே உயிலும் எழுதிவைத்துவிட்டேன் என்பது அவளுக்குச் சொல்லாத விடயம்.

கும்பகோணத்தில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் குறுக்கும் நெடுக்குமாக காவேரியின் வாய்கால்கள் ஓடியது. ஈழத்தமிழ் இயக்கமொன்றின் பயிற்சி முகாம் கும்பகோணத்தை ஒட்டிய சிறிய கிராமமான சிவபுரத்தில் இருந்தது, அந்த முகாமை சுற்றிவளைத்து காவேரி ஓடியது. இப்போது தண்ணி ஓடிய அடையாளம்தான் தெரிகிறது. நீர் இறைக்கும் யந்திரத்தால் நிலத்தின் கீழே இருந்த தண்ணி எடுக்கிறார்கள்.

நடந்தாய் வாழி காவேரி தற்போது ஓடியே மறைந்துவிட்டான். தமிழகம் தண்ணிக்காகத் தவிக்கிறது.

—-

Series Navigation