டார்ஃபர் – தொடரும் அவலம்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

ஆசாரகீனன்


ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில் வெளிவந்துள்ளன.

இந்த இனப்படுகொலை பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் நிக்கோலஸ் க்ரிஸ்டாஃப் தொடர்ந்து எழுதிவருகிறார். ஏப்ரல் 06, 2005 நியூயார்க் டைம்ஸ் இதழில் போப்பின் மரணம் குறித்து அவர் எழுதியுள்ள தலையங்கக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

அமெரிக்க அதிபர் புஷ்ஷும் உலகின் பிற தலைவர்களும் போப் ஜான் பால் II-க்குப் புகழஞ்சலி செலுத்தினாலும் அவருடைய செய்தியைத் தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர். சூடானின் டார்ஃபர் பகுதியிலுள்ள கிராம மக்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுவதும், அவர்களுடைய அங்கங்கள் சிதைக்கப்படுவதும் தொடரும் அதே நேரத்தில் போப்பின் மரணத்துக்காக நம் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடுவதும், பிரதிநிதிகளின் பெரும் குழுக்களை இறுதி மரியாதை செலுத்த அனுப்புவதும் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியே அல்ல. தீமையை எதிர்த்து நிற்பதே போப்பின் செய்தியே தவிர, மாபெரும் இறுதி-ஊர்வலங்களை நடத்துவது அல்ல.

பலவீனர்களை பலம் மிக்கவர்கள் பாதுகாக்கும், வாழ வைக்கும் பண்பாட்டைக் கட்டியெழுப்பும் கடமையை ஜான் பாலின் சாட்சியம் மேலை நாடுகளுக்கு நினைவு படுத்துவதாக அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்துள்ளார். அப்படியானால், அத்தகைய நினைவு படுத்துதல் இப்போது எங்கே போனது ? சூடான் ராணுவத்தினர் குழந்தைகளை நெருப்பில் வீசும்போது அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளாமல் இருக்க அனுமதிக்கும் ‘வாழ வைக்கும் பண்பாட்டின் ‘ லட்சணம் இதுதானா ?

பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் பிறரின் கணிப்பின்படி, டார்ஃபர் பகுதியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஓர் ‘இனப்படுகொலை ‘ என்று புஷ் சரியாகவே வர்ணித்தாலும், இது பற்றி எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதற்காக அல்லாமல், அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு பதிலான ஒரு மாற்றாகவே இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்கிறார்.

மனித குலத்துக்கு எதிரான மற்றொரு புதிய அராஜகத்தை சூடான் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளது. சூடான் ராணுவத்தினராலும், ஆயுதம் தாங்கிய கும்பல்களாலும் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டதன் காரணமாக கருவுற்றுவிட்ட சிறுமியரையும், பெண்களையும் சூடான் அரசாங்கம் கைது செய்து வருகிறது. கற்பழிப்பின் காரணமாக கருவுற்ற பெண்கள் திருமணமாகாதவராக இருந்தாலோ அல்லது அவர்களுடைய கணவர்கள் கொல்லப்பட்டிருந்தாலோ, தகாத உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தீவிர இஸ்லாமிய சட்டமான ஷரியாவே இதற்கு அடிப்படை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதசார்பற்ற ஜனநாயக நாடுகளான கனடா போன்றவை ஷரியா நீதிமன்றங்களை அனுமதிக்கத் தொடங்கி இருப்பதையும், பல-பண்பாட்டியம் என்ற பெயரில் இடதுசாரிகள் தீவிர இஸ்லாத்தின் அடிப்படையிலான இத்தகைய நீதிமன்றங்களை ஆதரிப்பதையும் நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்வதும் அவசியம்.

தொண்டுப் பணிகளுக்காக நோபல் பரிசு பெற்ற எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) அமைப்பு இது பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் டார்ஃபர் பகுதியைச் சார்ந்த ஒரு 16-வயது பெண் சொல்வதாவது:

‘ஒரு நாள் நான் தனியாக விறகு பொறுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஆயுதம் தாங்கிய மூவர் ஒட்டகங்களில் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். என் கைகளைக் கட்டி, ஒருவர் பின் ஒருவராக என்னைக் கற்பழித்தனர். பின்னர் ஒருவழியாக வீட்டுக்கு வந்து என் குடும்பத்தினரிடம் எனக்கு ஏற்பட்ட கொடுமையைச் சொன்னேன். ‘

‘ஆனால், என் குடும்பத்தினரோ என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டனர். ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு நான் தனியாக வாழ வேண்டியதாயிற்று. திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்தவராவது எனக்கு வாழ்வளிப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் சபிக்கப்பட்டவள் என்றும் கெட்டுப்போனவள் என்றும் சொல்லி அவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்… ‘

‘கற்பழிக்கப்பட்டதன் காரணமாக எட்டு மாத கர்ப்பிணியாக, ஆதரவற்றவளாக நின்ற என்னை காவல் துறையினர் துப்பாக்கி முனையில் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். நடந்ததைச் சொல்லி நான் எவ்வளவோ மன்றாடிய போதும், அவர்கள் அதைக் கேட்காமல், நான் திருமணமாகாதவள் என்பதால் எனக்குப் பிறக்கும் குழந்தை சட்டபூர்வமானது அல்ல என்றும் சொல்லி விட்டனர். ‘

‘என் மார்பிலும் முதுகிலும் சாட்டையால் அடித்ததோடு என்னை சிறையிலும் அடைத்தனர். ‘

மேலும், அந்த அறிக்கை மற்றொரு பதினேழு வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி பற்றியும் குறிப்பிடுகிறது. அந்தப் பெண்ணை கூட்டமாகக் கற்பழித்ததோடு, அவளை குடிசையில் அடைத்து அந்தக் குடிசைக்கு தீயும் வைத்தனர். ஒருவழியாக அந்தப் பெண் பலத்த தீக்காயங்களுடன் தப்பிப் பிழைத்துள்ளார்.

இத்தகைய அவலத்துக்கு உள்ளான பெண்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதையே ஜான் பால் விரும்பினார். ரோமுக்குச் சென்று போப்பின் மறைவுக்கு மாரடித்துக் கொள்ளும் புஷ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் உண்மையில் போப்புக்கு மரியாதை செலுத்த விரும்பினால், உடனடியாக டார்ஃபர் பாதுகாப்புப் படை ஒன்றை உருவாக்க வேண்டும்.

இத்தகைய தாக்குதல்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இது பற்றி நாம் என்ன செய்கிறோம் ? இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, அவர்களுடைய அங்கங்கள் சிதைக்கப்படும் போது, நாம் ஒட்டுப் பிளாஸ்திரிகளை (பேண்ட்-எய்ட்களை) இலவசமாகக் கொடுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை.

மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண முயற்சிகளை அமெரிக்க அதிபர் புஷ் ஆதரித்துள்ளார். எனினும், படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய பாதுகாப்புப் படையை அனுப்புவதே மிக முக்கியமானது என்று நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் செயல் இயக்குனர் கென்னி க்ளக், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 2100 கிலோகலோரிகளை உணவாகத் தாங்கள் தருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பசியால் மடிந்து விடாமல், வயிறு நிறைந்த நிலையில் படுகொலை செய்யப்பட ஏதுவானவர்களாக மாறுவது மட்டுமே இதன் பலனாக இருப்பதாகச் சொல்கிறார்.

ஐ.நா. மற்றும் ஆப்பிரிக்காவின் சார்பில் பாதுகாப்புப் படை ஒன்று டார்ஃபர் பகுதிக்கு அனுப்பப்படுவது அவசியமான உடனடித் தேவை. சூடானில் கிடைக்கப் போகும் எண்ணெய்க்காக சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியா நூற்றுக்கணக்கான மிலியன் டாலர்களை அங்கு முதலீடு செய்வதை உடனடியாக நிறுத்தி வைத்து, டார்ஃபர் பகுதியில் தொடரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த சூடான் அரசை வலியுறுத்த வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாத, அரபு ஏகாதிபத்திய நாடான சூடானிலிருந்து இந்தியாவுக்கு எந்தச் சிக்கலுமின்றி எண்ணெய் கிடைத்துவிடும் என்பது பகல் கனவே. அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்படும் சிக்கல்களையே சமாளிக்கும் திறமையற்ற, மேலும் சமூகப் பிரச்சினைகளைச் சந்திக்கக் கூட திராணியில்லாத இந்திய அரசாங்கம், நாளை சூடான் எண்ணெய் தர மறுத்தால் புறங்கையை நக்குவதை விட வேறு எதையும் உருப்படியாகச் செய்யும் துணிச்சல் இல்லாதது என்பதையும் நாம் கருத்தில் கொண்டு, பல மிலியன் டாலர்களை வீழலுக்கு இறைக்கும் நீராக சூடானில் முதலீடு செய்வதை எதிர்ப்பது அவசியம்.

சமத்துவம், சமாதானம், மேலும் முற்போக்கு என்ற கருத்தாக்கங்களைத் தொடர்ந்து உதிர்த்துக் கொண்டு, உலகில் உள்ள அரசுகளுள் மிக மிருகத்தனமான அடக்குமுறைகளைப் பின்பற்றும், ராணுவ முறைகளால் மக்களை ஆளும், பிற்போக்கு மதசார்புடைய அரசுகளைத் தொடர்ந்து ஆதரிக்கும் ‘மக்கள் ஜனநாயக’ ஆட்சியும், ‘புரட்சி’ அரசுமான சீன அரசின் ஆபாசமான இரட்டை வேடம் உலக மக்களுக்கு வெளித் தெரிந்து பல வருடங்களாகிவிட்டன. இந்திய ‘முற்போக்கு’களுக்கு மட்டும் இது புலப்பட வழியே இல்லை. ஏனெனில் இந்தியாவை எதிர்ப்பதையும் அழிப்பதையும் தம் தலையாய கடமையாகக் கொண்டுள்ள கருத்துக் குருட்டுத்தனத்தை வலிந்து ஏற்ற மூளை திரிந்த கூட்டம் அது. இந்தக் கட்டுரை அவர்களை உத்தேசித்து எழுதப்படவில்லை. உண்மையான ஜனநாயகம், உழைக்கும் மக்கள், உலகெங்கும் நசுக்கப்படும் எளிய மக்கள், மேலும் உரிமைகளற்ற அடிமைகளாக நடத்தப்படும் பெண்கள் ஆகிய பெரும் திரளான மக்கள் கூட்டத்தின் நலன்கள் குறித்து உண்மையான அக்கறையுள்ள தமிழர்களையும் இந்தியர்களையும் மனதில் கொண்டு எழுதப்படுகிறது. இந்திய அரசை நல்வழிப்படுத்துவது நம் கடமை.

மேலதிக விவரங்களுக்குப் பார்க்க:

www.darfurgenocide.org

www.savedarfur.org

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்