ஜெயகாந்தனும் எனது பாவனைகளும்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

பி. ச. குப்புசாமி


(திரு. பி.ச. குப்புசாமி மீசை முளைக்காத பருவத்திற்கு முன்பே ஜெயகாந்தன் அவர்களை நாடிச் சென்று ஒட்டிக் கொண்ட நண்பர். இவர் வடாற்காடு மாவட்டம் குக்கிராமம் ஒன்றில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் இருக்கும் காடு, மலை தேடி ஜெயகாந்தன் அடிக்கடி சென்று விடுவார். இவர் ஒரு நல்லாசிரியர். நன்றாக எழுதுவார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக் கொண்டவர். இவரது ‘கங்கவரம் ‘ சிறுகதை திரு. விட்டல் ராவ் அவர்களால், இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளுள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டுள்ளது. ஜெயகாந்தனைப் பற்றி நிறையக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயகாந்தனையும் அவர் தம் படைப்புகளையும் நன்கறிந்தவர். இக்கட்டுரை ஜெயகாந்தன் அவர்களின் மணிவிழாவின் போது 1994-ல் எழுதப்பட்டது.)

பாரதி விழாவில் எங்கள் ஊருக்கு பேச வருமாறு அழைக்கச் சென்றபோது 1960 செப்டம்பரில் ஜெயகாந்தன் அவர்களை முதன்முதலில் சந்தித்தோம்.

அப்பொழுது நான் என் பையல் பருவத்தை வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.

எனது சொந்த வீட்டில் கிடைத்த சங்க இலக்கியத் தொட்டில் அறிவையும், தமிழ் மொழி பற்றிய தாலாட்டுணர்ச்சிகளையும் கடந்து பாரதியால் பளீரென்ற புதிய ஓர் உலகத்திற்கு வந்து விட்டிருந்தேன். எனது பேதை மனதில் அப்போதெல்லாம் காலூன்றி எழுந்த பெரிய ஏக்கம், பாரதி வாழ்ந்த காலத்தில் நாம் இல்லாமல் போனோமே; அப்படி ஒரு மூர்த்திகரத்தைத் தரிசிக்காமல் போனோமே என்பது தான். பல நாள் பல பொழுது அந்தப் பருவம் பூராவும் அவ்வாறு ஏங்கியிருக்கிறேன். அந்த ஏக்கம் பரிபூரணமாகத் தணியும் என்று ஏக்கம் பிறந்த காலத்தில் நான் எண்ணியதே இல்லை.

ஆனால், அந்த ஏக்கம் தணிந்தது.

பண்டிதர்களின் நூல்கள் நிறைந்த எங்கள் வீட்டுப் படிப்பறையில் நான் ‘சரஸ்வதி ‘ என்னும் புதிய பத்திரிகையைப் படிக்கலானேன். அது ஆழி என்றால் அதன் அமுத கலசம் அவர். கைக்கு அடக்கமான அந்தச் சிறிய பத்திரிகையில் வெளிவந்த அவர் கதைகள் ஆளை அடித்து நிறுத்தின. எனது பையல் பருவ மனவெளியில் அவற்றின் திடும் பிரவேசம், இப்போதும் கூட நினைவிருக்கிறது.

ஓர் அதீதக் கவர்ச்சியின் திகைப்பு என்னை ஆட்கொண்டது. அந்த மனிதர்பால் ஓர் அச்சமும் பிறந்தது. சகஜமான சமூக ஜீவிகளுக்கு தம்மினும் மேலான மனோதர்மமுடைய ஒருவரிடத்தில் தோன்றும் மரியாதை கலந்த அச்சம் அது. ‘ இந்த மனிதர் கறாரானவர்; தனது பார்வை தீட்சண்யத்தால், எல்லா வேஷங்களையும் கலைத்து வெளிச்சமாக்குபவர்; எல்லாருடைய சமூகப்பிரக்ஞைகளையும் நிறுத்தி விசாரிக்கிறவர். ‘ – என்பனவற்றையெல்லாம், அந்தக் கதைகளைப் படித்து அவரைப் பாராமலேயே அறிந்து கொண்டோம்.

வேறு விதமாகவும் கூறி, எச்சரிக்கை செய்து உலகம் எங்களை அவரிடம் அனுப்பி வைத்தது. சென்னையில் எந்தப் பத்திரிகை அலுவலகத்திலும், யாராவது ஒருவர், அவரை, முன்கோபி, முரடர், கெட்ட வார்த்தை பேசுபவர், என்றெல்லாம் பயங்காட்டினார். எழும்பூர் ஹைரோடில் அவர் குடியிருந்த வீட்டின் வாயிலில் நின்றபோது எங்களுள் லேசாக ஒரு நடுக்கம் இருந்தது உண்மைதான்.

ஆனால், சிறிது நேரத்தில் முற்றிலும் புறம்பான அனுபவம் நேர்ந்தது. ‘யாரது ? ‘ என்று அவர் எழுந்து வந்து எங்களைப் பார்த்த நிமிஷத்திலிருந்து மிகப்பாங்கான விதத்தில் எங்களுள் பதிந்து விட்டார். அந்த அனுபவம் பின்னால் எனக்குப் பல விஷயங்களைப் புரிந்து கொள்வதற்குத் துணைநின்றது. மகான்களைப் பார்த்தவுடன் மயங்கிய மனிதர்களின் மனநிலை எனக்கு நன்கு புரியலாயிற்று.

எங்கள் சந்திப்புக்கு இப்படி ஒரு சித்திரம் போடலாம். பாரதி பிறந்த பூமி என்றும், புதுமைப்பித்தன் பிறந்த பூமி என்றும் ஏதும் பெருமைகள் இல்லாத வடாற்காடு ஜில்லாவிலிருந்து வந்தவர்கள் – சென்னையின் இலக்கியச் சந்தடியில் அடிபட்டுக் காய்ப்பேறிப்போகாதவர்கள் – கண் விழித்த குழந்தை உலகை எவ்வளவு வியப்புவகையோடு பார்க்கிறதோ, அவ்வாறு கலை இலக்கியம் பூராவையும் பார்க்கிற தன்மை உடையவராய் இருந்ததன்றி வேறு சிறந்த அருகதை ஏதும் இல்லாதவர்கள் – பாரதி மாதிரியான ஓர் இலக்கிய புருஷன் காணக்கிடைக்க வில்லையே என்று அருந்தவம் ஆற்றியவர்களான இளைஞர்கள் – மீசை கூட இப்போதுதான் முளைக்கிற கன்னிப்பருவத் தூய்மையினர் – இவர்கள் சரஸ்வதியின் கதைகள் என்கிற அலைவரிசையால் ஏற்கனவே ஆகர்ஷிக்கப்பட்டு, வழியில் இடைபட்ட மனிதரெல்லாம் எச்சரித்துப் பயமுறுத்தியும், ஒரு நல்விதியால் பிறழாது சென்று, தங்கள் கலை இலக்கியத்தாபங்களுக்கேற்ற இலக்கை அடைந்த சித்திரம் – அந்த சந்திப்பு! அந்த க்ஷணம் முதல் வாழ்வில் பல விஷயங்கள் தெளிவடையத் தொடங்கின. அந்தச் சந்திப்பே பின்னால் எங்கள் சகலமார்க்கங்களையயும் வகுத்தளித்தது. வரலாற்றில் கிறிஸ்து பிறந்தது எவ்வளவு முக்கியமாயிற்றோ, அவ்வளவு எங்கள் தனிப்பட்ட வாழ்வில் அந்தச் சந்திப்பு முக்கியமாயிற்று. காலம் என்கிற பெருங்கூற்று அதனால், எங்களால் இரண்டே இரண்டு பெரும் பிளவுகளாகப் பிளக்கப்பட்டது என்று நாங்கள் இன்றளவும் இறும்பூதெய்துகிறோம். எல்லாமே அவரைச் சந்திப்பதற்கு முன்பு, சந்தித்ததற்குப் பின்பு என்று இரண்டாயின.

அப்புறம் நடந்த நெடிய ஆண்டுகள், எங்கள் பாவனையின் பல்வேறு ஆடை அணிகலன்களைப் புனைந்து கொள்கின்றன.

ஏக்கமொன்றிருந்ததாகச் சொன்னேனே, அது இல்லாமல் போயிற்று.

அதாவது பாரதி வாழ்ந்த காலத்தில் உடனிருந்து பார்த்திருந்தால் எங்களுக்கு என்ன மனக்குறை நீங்கியிருக்கும் என்று எண்ணினோமோ அது நீங்கப்பெற்று, இந்தச் சமூக வாழ்வின்சகல குறைபாடுகளுக்கும் மாற்றாக நாங்கள் ஓர் மாபெரும் நிறைவுற்றோம்.

கலி சாடும் திறன் கண்ணெதிர் கண்ட நிறைவு அது!

தமிழுக்கு வசை கழிய வருவார், மறைந்தார் இலர் எனும் மனநிறைவு அது!

இந்தப் பாவனையால் நாங்கள் மாபெரும் செல்வந்தர்கள் ஆனோம். எங்கள் பொக்கிஷம் நிரம்பலாயிற்று. வாழ்வில் ஓர் பீடு பிறந்தது. எங்கள் தனிப்பட்ட வாழ்வின் துன்பங்களுக்கும், குறைபாடுகளுக்கும் அவரது பெருமையும், சிறப்பும் மாற்றீடாய் விளங்கின. சுற்றுகிற சக்கரத்தின் மோனத்தில் மனித விரல் தொட்டதும் பூத்துச்சொரியும் மண்பாண்டம் போல எங்கள் பாவனை மேலும் மேலும் செழுமை பெறலாயிற்று. காலத்தின் சிறந்த நாயகனை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்.

எதையும் பாவித்துக் கொள்ளலாம். அது அவரவர் இஷ்டம்; சுலபம். ஆனால், வெறும் பாவனைகள் நிற்கவல்லன அல்ல. மிகுந்த உணர்ச்சி நய முகத்திரைகள் அணிந்த குடும்ப உறவுகள் என்னும் பாவனையே, வெறும் காசு பண உறவென்னும் நிலைக்குக் கிழித்தெறியப்படுகிற நாட்களில், கிட்டத்தட்ட ஒருவரை அவதார புருஷர் என்று பாவித்துக் கொள்வது தொடர்ந்து சாத்தியப்படுகிறது என்றால், அதிலே ஒரு விஞ்ஞானபூர்வமான உண்மை இருக்கிறது. பாவிக்கப்பட்ட பாத்திரம் அந்தப் பாவனைக்குத் தக்கதாயிருந்தது. மேலும் சரியாகச் சொன்னால், எங்கள் பாவனை ஒரு வஸ்துவின் நிழல்போல் இருந்ததெனில், அவர் அந்த வஸ்துவாகவே இருந்தார். புறவெளியில் அடித்துக் கொண்டிருந்த பொது ஒளியில் நாங்கள் இதை ஊர்ஜிதம் செய்து கொண்டோம். இந்த பாவனை சாத்தியப்பட்ட பெருமைக்கு நாங்கள் அவருக்கு நன்றி கூற வேண்டும். எங்கள் பாவனையின் நிழல்கள் அழகாக விழுவதற்கு – இந்த தேசத்தின், மொழியின், ஜாதியின் கலாச்சார வேலைச் சித்திரங்களுக்கு இடமளிக்கக் கூடிய வகையில் உருவக அழகுகளோடு விழுவதற்கு, அவர் என்னும் அந்த வஸ்து பரிமாணம் கொண்டிருந்தது.

ஒரு காலத்தில் ஒரு பெண்ணின் காலடி மண்ணை நான் பவித்ரமானதாகக் கருதினேன். பின்னொரு காலத்தில், ஒரு ஜன நெரிசலில் அவளது புஜம் என் மீது உராய்ந்துகொண்டு சென்றபோது கூட எனக்குப் பழைய உள்ளக்கிளர்ச்சி உண்டாகவில்லை. நடைமுறை உலகில் பாவனைகளுக்கு உள்ள பேராபத்துக்கு இது உதாரணம்.

இந்த விபத்து சம்பவிக்காமல் எங்கள் பாவனை வளர்ந்து வந்தது மேலும் விசேஷமாகும்.

அது மட்டும் அன்று.

எங்கள் பாவனைகள் மேலும் கொடியோடிப்படரலாயின. நாங்கள் பாரதியை மட்டுமே பார்த்தோம் இல்லை. அவனுக்கு முன்பிருந்த கம்பனையும் கண்டோம். மெள்ள, மெள்ள, கால விலாசங்கள் எல்லாம் மங்கிப்போய், இதிகாசங்களின் அகாலவெளியில் பிரவேசித்து, அந்தப் பாத்திரங்களின் பண்புகளின் உருவங்களையெல்லாம் பார்த்தோம்.

இது ஒன்றும் நட்சத்திரக்காதல் அன்று. அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடி விதைத்துக்கொள்ளும் பட்டப்பகலின் சோம்பேறிக் கனவும் அன்று. நாங்கள் அவரை அறிந்த இந்த முப்பத்து நான்கு ஆண்டுக் காலத்தை உள்ளடக்கிய அவரது நாற்பத்தைந்தாண்டுக் கால எழுத்து, கூட்டம் கூட்டமென்று இத்தமிழ்நாட்டின் வானமெல்லாம் அவர் வரைந்த லட்சியங்கள், உற்ற நிலங்களில் எல்லாம் அவர் இட்ட விதைகள், ஒரு மாபெரும் கலைஞனின் கம்பீரமும் பேரெழில்களும் துலங்க அவர் வாழ்க்கையை நடத்திய விதம் – என்னும் யதார்த்த வேலைகளில் இருந்துதான் அந்த பாவனைகளின் மத்தாப்புச் சிதறல்கள் வெளிப்படுகின்றன.

சமூகம் என்ற காளிங்கனின் சகல தலைகள் மீதும் கால் பதித்து இவர் நட்டம் பயின்றார் என்று எனக்கு பாவனை.

அவர் தலையைச் சுற்றி ஒரு சக்கரம் சுழல்வது போல் கூட எனக்குத் தோன்றும்.

மேடைகளில் நின்று பேசுந்தோறும், பழைய காலத்துச் சதுக்கங்களில் நின்று பேசிய தீர்க்கதரிசிகளை யொத்தார்.

தான் உகந்த லட்சியங்களை எல்லாம் தன் தோளில் தூக்கிப் பாதுகாக்கும், சொல்லால் மல்யுத்தம் செய்யும் பீமசேனனாகச் சித்தாந்தச் சமர்களில் நின்றார்.

சாக்ரடாஸ், கேட்கும் ஆர்வலரான ஜனம் தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்க எங்ஙனம் சஞ்சரித்திருப்பார் என்பதை அவர் சூழலில் நினைத்துக் கொள்வேன்.

அவர் மட்டும் அல்லாமல் அவரது கதை மாந்தர்களும் எனக்குப் பாவனைகளை வழங்கினர்.

ஒரு கிருஷ்ண நாடகச் சூத்திரம் ‘ போர்வை ‘ என்னும் கதையில் பொதிந்துள்ளது.

உலகு அறியாத ஒரு பிராயத்து ஏசுவின் குணங்கள்தான் அவரது ஹென்றியின் குணங்கள்.

இவர் காட்டும் பெண்களின் சுயரூபம் எல்லாம் சக்தியின் சொரூபம்.

‘ முக்காடிட்டவாறு கதவின் பின்னால் மறைந்து நின்று அடக்க ஒடுக்கமாகப் பேசும் குலஸ்திரீ ஆனாலும் சரி, வாயில் தாம்பூலம் தரித்துக் கொண்டு, வெளித்திண்ணையில் உட்கார்ந்து போவோர் வருவோரைப் பார்த்து சிரிக்கும் பரஸ்திரீ ஆனாலும் சரி, நான் பராசக்தியையே காண்கிறேன் ‘ என்னும் பரமஹம்ஸரின் வாக்கியத்திற்குப் பொருத்தமாக அந்தப் பாத்திரங்கள் வந்து நிற்கும். நான் பிறமொழிகள் அறியேன். தமிழில் பெண்களைப் பரமஹம்ஸர் போல் பார்த்த எழுத்தாளர் அவர்தான். ‘ அந்த அக்காவைத் தேடி ‘ கதையில், பெண்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள வேலைப்பளு என்கிற கொடுமைக்கு, அவர் ஒரு லெனின் அளவு மனமிரங்கியிருப்பதைக் காணலாம்.

பெண் விடுதலையின் பேரால் நடக்கும் பல அசட்டுக் கூத்துக்களை அவரால் சகிக்க முடியாதெனினும், பெண்களின் மாபெரும் வக்கீல் என்று நான் அவரை நினைக்கிறேன்.

எங்கள் பாவனைகள் குறித்து, இது ஒரு குருட்டு வழிபாடாகக் கொள்ளப்படும் என்கிற லஜ்ஜையே ஏதும் எங்களுக்கு உண்டாகவில்லை. வழிபடத்தக்கனவற்றை வழிபடவேண்டும் என்பது எமது மரபு. வழிபடத்தக்கனவற்றை வழிபடாவிட்டால், வழிபடத்தகாத சைத்தான்களுக்கு எல்லாம் சலாம் வரிசை வைக்க வேண்டி வரும் என்று நாங்கள் பேசுவோம்.

– அதுவுமன்றி, குருவை வழிபடுவதன்றி வேறு என் செய்வது ?

மறுபடியும் நான் என் பாவனையில் தொற்றிக் கொள்கிறேன்.

அவருக்கும் எங்களுக்கும் உள்ள உறவை பலமுறை நாங்கள் குரு சிஷ்யச் சாயலில் கருதியும் கூறியும் பார்த்தோம். இத்தகைய ஆபத்துகளை அவர் அறியாதவரா என்ன ? நாங்கள் குரு என்று பணிந்தால், ‘ சற்குரு ‘ என்று உடனே அதை யாருக்கோ பார்சல் செய்து விடுவார். குருசிஷ்ய உறவுமுறைகள் இறுதியில் எய்தும் கோளாறுகளிலிருந்து தப்பிப்பதில் அவர் சதா காலமும் ஜாக்கிரதையாயிருந்தார்.

ஆனாலும், இந்தக் காலக்கட்டத்தில் எழுதக் கோல் எடுத்த எங்களுக்கு அவர் குருதான்.

அவரால்தான், வாழ்க்கையைக் கவனிப்பதற்கும் ஒரு படைப்புக்கும் இருக்கிற ஆழ்ந்த சம்பந்தத்தை நாங்கள் அறிந்து கொண்டோம்.

அவரால்தான் ஒரு காட்சியைப் புரிந்து கொள்வதற்கு நாங்கள் கற்பிக்கப்பட்டோம்.

அவரால்தான் இந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் வாரித் தழுவியவாறே புதியதோர் வாழ்வை வார்ப்பது எப்படி என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.

அவரால்தான் ஓர் அடிமையின் போலி மரியாதைப் பண்புகளை அறியாத சோஷலிஸக் குடிமகனின் அடிப்படைப் பண்புகளை அறிந்தோம். இந்தக் கல்வியை இவ்வளவு நுணுக்கமாக அதற்கென இருக்கும் கட்சிகள் கூட அவ்வளவு தாக்கத்துடன் தந்ததில்லை.

வாதிப்பது என்னும் அருங்கலையை அவரால் நாங்கள் அறிந்தோம். ‘ வாதத் தருக்கமெனும் செவி வாய்ந்து அதில் துணிவெனும் தோடணிந்தாள் ‘ என்று சரஸ்வதி தேவியைப் பாரதி விவரித்தபோது, எனக்கு அந்தத் தோடு அவரென்று தோன்றிற்று.

ஜில்லாக்களையும், ஜாதிகளையும், மனுஷச் சண்டைகளையும், புலன்களுக்கு அளிக்க வேண்டிய மேலான நுகர்வுகளையும், வாழ்வின் தர்மம் என்று வர்ணிக்கப்படுவதையும், வார்த்தைப் பிரயோக நுணுக்கங்களையும் – இன்னும் சொல்லப் போனால், திவ்ய க்ஷேத்திரங்களையும், கதைகள் சொல்லும் நதிகளையும், நித்யானுஷ்டான நியமக் கருமங்களின் நேர்த்தியையும் பற்றிக்கூட அவர் எங்களுக்கு நெடுங்காலம் சிறுகச் சிறுகக் கற்பித்ததால் நெஞ்சார நாங்கள் குரு என்று துதிக்கலாம்.

குறைந்தபட்சம், எங்கள் தனிமனித வாழ்க்கை நெறிகளிலும், பொது உலக லட்சியங்களிலும், அவருக்கு இழுக்கு உண்டாக்காதவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். இது குறித்து திருப்தியே. ஆனால், அவரோ, அடிப்படையில் நாம் எல்லாருமே சிக்கியுள்ள கண்ணிகளைப் பற்றிப் பேசுகிறார். எனவே, நமக்குக் கவலையுண்டாகிறது.

கோஷ்டி சேர்த்துக் கொள்பவர்களைப்பற்றி நான் அறிவேன். எல்லாருடனும் நயப்பாங்குடனேயே நடந்து தீருவது அவர்கள் தலைவிதி. சுடரும் சாம்பரும் தெறிக்கும் ஒரு ருத்ரனின் தேஜஸ் கொண்ட இவருக்குச் சேரும் கோஷ்டி, நைச்சியத்தால் பெற்ற வெறும் கலக மானுடப் பூச்சிகளின் கோஷ்டி அன்று. அகண்டகார இலக்கிய போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய், ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிடலாம் என்று, தாம் எடுத்த தேகம் விழுமின் புசிப்பதற்குச் சேர வந்த ஜெகம் அது. சத்தியதரிசனம் காணும் எழுத்து என்பதைச் சரியாகப் புரிந்துகொண்ட சமகால நபர்களை எல்லாம் அவரது கோஷ்டி என்று சரித்திரம் நாளை அடையாளம் காட்டும்.

காலங்கள் தோறும் பிறந்து, ஒவ்வொரு ராகத்தையும் புதிதாகவும் அற்புதமாகவும் இசைத்துக் காட்டுகிற மகத்தான சங்கீதக் கலைஞர்களைப் போல், வல்லவர்களும், தகுந்தவர்களும் எதிர்காலத்தில் வந்து, எனது இந்தப் பாவனைகளுக்குக் காரணமான இவரை மேலும் சிறப்பாக விவரிப்பார்கள். அந்தத் தலைமுறை இவரைப் போல் ஒருவரை மறுபடியும் பார்பபதற்கு ஏங்கும்.

நன்றி: நானும் எனது நண்பர்களும், தொகுத்தவர்: ஜெயகாந்தன் – 1995 – தேன்மழைப் பதிப்பகம், சென்னை – 16

Series Navigation