இரா.முருகன்
‘எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ‘
பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத் திரும்பப் பாடியபடி திரெளபதி அம்மன் கோயில் பொட்டலுக்கு டயர் வண்டியோடு அவன் போய்ச் சேர்ந்தபோது உச்சி வெய்யில் மணடையைப் பிளந்து கொண்டிருந்தது.
வண்டி என்றால் அதொன்ணும் வண்டி இல்லை. வெறும் பழைய டயர். அப்பா சைக்கிளுக்கு டயர் மாற்றியபோது சைக்கிள் ரிப்பேர் கோவிந்தராஜு கடைக்குக் கூடப் போய்ப் பழைய டயரைப் பத்திரமாக வாங்கி வந்திருந்தான் பாலன். அதை ஒரு உடைந்த மர ஸ்கேலால் தட்டி, அது ஓடப் பின்னாலேயே தானும் ஓடுவதே அவனுடைய டயர் வண்டி.
அப்பா முழுக்க வழுக்கையாகிப் போன பழைய டயரை எடுத்து விட்டு அவர் சைக்கிளில் மாட்டிக் கொண்டதும் இன்னொரு பழைய டயர் தான். அது முத்துக்கருப்பன் வக்கீல் சைக்கிளில் இருந்து கழற்றிய முக்கால் வழுக்கை டயர்.
பாலனின் அப்பா வக்கீல் குமாஸ்தா. அவர் ஓட்டுகிற சைக்கிள், பாலனுக்கு வருசம் பிறந்ததும் வாங்கித் தரும் பாடப்புத்தகம், வீட்டில் சத்தத்துக்கு நடுவே அவ்வப்போது ஜலதோஷக் குரலில் ஆகாசவாணி செய்திகள் வாசிக்கும் வால்வ் ரேடியோ, ராத்திரி சாப்பிட்டு விட்டு அவர் அக்கடா என்று கட்டையைச் சாய்க்கும் சாய்வு நாற்காலி எல்லாமே செக்கண்ட் ஹேண்ட் தான்.
சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அவர் வெற்றிலை போட, தெருமுனையில் செம்மை நாயுடு கடையில் கடன் சொல்லிக் குறைந்தது பத்து நிமிசமாவது நின்று வெற்றிலை வாங்கிவருவது பாலன் தான். சில நாள் அபூர்வமாக அழுக்கான ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து சும்மாத் தருவார் நாயுடு. அந்த ராத்திரிகளில் அவர் ஜரிகை வேட்டி கட்டி கெட்ட வாடையடிக்கும் புனுகோ ஜவ்வாதோ மேலே பூசியிருப்பார்.
செம்மை நாயுடு கடை வழியாகத் தான் டயர் வண்டியை ஸ்பீடாக விரட்டிக் கொண்டு பாலன் வந்தான். ‘ரே தொங்கா.. எனக்குப் போஸ்ட் ஆபீஸில் இன்லண்ட் லெட்டர் வாங்கிட்டு வரியாடா ? ‘ என்று நாயுடு கையைக் காட்டி நிறுத்தியதை லட்சியமே செய்யவில்லை அவன். ராத்திரி இன்னும் பத்து நிமிசம் கூட நிற்க வைக்கப் போகிறார். போகட்டும். இப்போது திரெளபதி அம்மன் கோவில் பொட்டலில் தலை போகிற வேலை இருக்கிறது.
காலையிலிருந்தே வீட்டில் நிலைமை சரியில்லை. அரைப் பரீட்சை லீவு விட்ட நேரத்தில் கூட நிம்மதியாக விளையாட முடியாமல் வீட்டில் அழுகை. சத்தம். அம்மா வயிற்றிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுதாள். பாடை சமாச்சாரம் தான்.
விஷயம் வேறொன்றுமில்லை. காரைக்குடியிலிருந்து வந்த யாரிடமோ நாச்சம்மை அக்கா கடிதாசு கொடுத்து விட்டிருந்தாள். அவளை வீட்டு வேலைக்காக அங்கே ஒரு வீட்டில் சேர்த்து விட்டிருந்தார் அப்பா. எட்டுப் பிள்ளைகளில் நாச்சம்மை பாலனுக்கு நேர் மூத்தவள். பனிரெண்டு வயதில் வீட்டு வேலை செய்யும் குட்டியாக அவள் காரைக்குடிக்குப் போவதற்காக பாலனின் அப்பாவுக்கு மூவாயிரம் ரூபாய் தந்தார்கள். அதை வைத்துத் தான் இரண்டாம் அக்கா பூச்சூடலுக்குச் செலவழித்தது.
போன வருஷம் பொங்கலுக்கு ரெண்டே நாள் வந்து விட்டு திரும்ப அவதி அவதியாகத் திரும்பிய நாச்சம்மை மொட்டை போட்டிருந்தாள். அதாவது போட்டு விட்டிருந்தார்கள். பாலன் அவளைப் பார்த்ததும் சிரிக்க ஆரம்பித்து, அவள் அழவே சும்மா இருந்தான்.
‘தலையிலே பேன் பொடுகு வராம சின்னப் பிள்ளைங்களுக்கு மொட்டை போடறது சகஜம் தானே ‘ அப்பா சொன்னார்.
‘ஆமாமா..எண்ணைச் செலவும் கிடையாதில்லே ‘ என்றாள் அம்மா நாச்சம்மையைப் பார்த்துக் கண்கலங்கியபடி.
நாச்சம்மை கொடுத்து விட்ட கடிதத்தில் ‘எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ‘ என்று எழுதியிருந்தது தான் வீட்டில் இன்று அம்மா குரல் எடுத்து அழக் காரணம். எல்லாப் பாவாடையும் கிழிந்து விட்டிருந்தது அவளுக்கு. அடுத்த பொங்கலுக்கு வீட்டம்மா புது செட் வாங்கித் தருவதற்குள் நாச்சம்மை வீட்டில் வைத்து விட்டுப் போயிருந்த அரக்குக் கலர் பாவாடையை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்த கடிதம் அது. ஏழாம் கிளாஸ் பாதி படிக்கையில் நிப்பாட்டி வீட்டு வேலைக்கு அனுப்பப் பட்டதாலோ, அவசரமாக எழுதியதாலோ பாவாடையில் ஒரு எழுத்து இல்லாமல் போனது.
‘கூழோ கஞ்சியோ குடிச்சுக்கிட்டுப் புள்ள இங்கயே கிடக்கட்டும்..கூட்டி வந்துடுங்க..அச்சானியமா எழுதியிருக்கா பாவிமக.. மனசு கேக்கலியே ‘ என்று அம்மா பிலாக்கணம் வைக்க, அப்பா, ‘இன்னும் ரெண்டாயிரத்து முன்னூறு நிலுவை இருக்கே ‘ என்றபடி சைக்கிளை மிதித்தார்.
அம்மா சோறாக்காமல் அடுக்களையிலேயே சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அப்புறம் நினைவு வந்தவளாக கொஞ்சம் மோர்க்களி கிண்டினாள். மோரும், புழு எடுத்துப் போட்ட அரிசி மாவும், கம்பு மாவும், கொஞ்சம் உப்பும் தவிர ஏதுமில்லாத அது தான் அவளுக்கும் பாலனுக்கும் மத்தியான சாப்பாடு. அப்பா பெரும்பாலும் வக்கீலாபீஸுக்கு வரும் கட்சிக்காரர்களை நயந்தும் பயந்தும் மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு விடுவார்.
துரெளபதை அம்மன் கோயில் சந்து வெறிச்சோடிக் கிடந்தது. மூங்கில் பிளாச்சுக்கள் பாதி பிரித்து பாதி பிரிக்காமல் நடுவே சைக்கிள் டயர் திரும்பத் திரும்பப் பதிந்த தடத்தோடு வெய்யிலில் காயப் போட்டிருந்த பொட்டலில் கூம்பு ஒலிபெருக்கிகளைப் பிரித்து எடுத்துப் போயிருந்தார்கள்.
‘கல்லல் பெரியமுத்து விடாமல் பத்து நாள் சைக்கிள் சுற்றுகிறார். வடநாட்டில் காங்கிரஸ் பொருட்காட்சியில் ஒரு வாரம் சைக்கிளில் இருந்து இறங்காமல் சுற்றி, நேரு கையால் தங்கப் பதக்கம் வாங்கியவர். வாருங்கள்..வந்து பாருங்கள்..உங்கள் மேலான ஆதரவைத் தாருங்கள் ‘ என்று நேற்று வரை அந்த ஒலி பெருக்கி அலறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவை சொல்லி முடித்ததும் ‘வாராய் என் தோழி வாராயோ..மணப் பந்தல் காண வாராயோ ‘ என்று பாசமலர் பாட்டு வைப்பார்கள். ஒரு பத்து நாளாக ராவாகப் பகலாக அய்யர் குரலில் ‘மாங்கல்யம் தந்தன்னா ‘ என்றும் எல் ஆர் ஈஸ்வரி சிநேகிதப் பெண்களோடு சிரிப்பதும் தொடர்ந்து கேட்டு விட்டு இன்று அதொண்ணும் இல்லாமல் பொட்டல் கல்யாணம் முடிந்த வீட்டைப் போல களையில்லாமல் இருந்தது.
ஆனாலும் இங்கே இன்னும் சுவாரசியம் மிச்சம் இருக்கிறது. நாளைக்குக் காலை பத்து மணிக்கு அது உச்சத்துக்கு வரும்.
‘சைக்கிள் பெரியமுத்து பத்து நாள் சைக்கிள் சுற்றியதும் அவரைப் பொட்டலில் ஆழக் குழி தோண்டி அடுத்த நாள் முழுக்கப் புதைக்கப் போகிறோம். ஒரு முழு நாள். ஆமாம்..இருபத்து நாலு மணி நேரம். வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு மாஜி பஞ்சாயத்து போர்ட் பிரசிடெண்ட் நல்லையா தலைமையில் குழி திறக்கப்பட்டு சைக்கிள்காரர் வெளியே வருவார். அவருக்குப் பணமுடிப்பும், வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும் ‘ மச்சக்காளை..பாட்டைப் போடு .. வாராய் என் தோழி..
கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த அறிவிப்பு. பாலன் மைதானத்துக்கு நடுவே பிடுங்கி நடப்பட்ட நாலைந்து செடியும் துருத்திக் கொண்டிருந்த மூங்கில் குழாயுமாக இருந்த மணல் மேட்டைப் பார்த்தான். உள்ளே தான் சைக்கிள் காரர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
பொட்டலுக்கு வெளியே தலை கிரீடத்தில் களிமண் உதிர்ந்து போய் இரும்புக் கம்பி துருத்திக் கொண்டிருக்க உட்கார்ந்திருந்த பெரிய முனீஸ்வரன் சிலை. சாதாரணமாக இந்தப் பக்கம் வரும்போது முனியின் உருட்டி விழித்த கண்களையும் கையில் ஏந்திப் பிடித்த சூலாயுதத்தையும் பிடிவாதமாகப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டே ஓடித்தான் பாலனுக்குப் பழக்கம். இந்தப் பத்து நாள் திரும்பத் திரும்ப சைக்கிள் காரனைப் பார்க்க வந்து முனியின் பக்கமும் பின்னாலும் நேர் முன்னாலும் எத்தனையோ தடவை நின்று நின்று அந்தப் பயம் முழுக்கப் போயிருந்தது.
மண்ணுக்கடியில் ஒரு மனுஷன். பக்கத்தில் யாரும் இல்லை என்பது தான் கொஞ்சம் பயமாக இருந்தது. முனி பார்த்துக் கொண்டிருப்பது ஆசுவாசமாக இருந்தது. பத்து நாள் தோழன்.
டயரை உருட்டாமல் கையில் தூக்கிக் கொண்டு சிலைப் பக்கம் போனான் பாலன். என்னமோ தோன்ற அதைப் பக்கத்தில் வைத்து விட்டு இரண்டு கையையும் குவித்துக் கும்பிட்டான்.
‘பாவம் … ரொம்பக் களச்சுப் போயிட்டான் ‘
முனிதான். பாலனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னது அது.
‘யாரு பாவம் ? ‘ பாலன் புரியாமல் கேட்டான்.
‘சைக்கிள்காரன் தான்.. பத்து நாள் சைக்கிளை விட்டு ஒறங்காம சுத்திட்டு இப்ப மண்ணுக்கடியிலே படுத்துக் கிடக்கான்.. ‘ முனி பரிதாபம் குரலில் தெரியக் கிசுகிசுத்தது.
‘ராத்திரி யாரும் பாக்காத போது கீழே எறங்கிக் கொஞ்சம் படுத்துப்பான்னு எங்க அப்பா சொன்னாரே ‘ பாலன் சந்தேகத்தோடு கேட்டான்.
‘சீச்சீ பாவம்.. நான் தான் நடுராத்திரியிலே கூட முழிச்சுப் பார்த்துட்டு இருக்கேனே.. சும்மாச் சொல்லக்கூடாது..ஒரு தடவை கூட இறங்கலே ‘ முனி தீர்மானமாகச் சொன்னது.
‘அந்தாளு சைக்கிள் எங்கே ? ‘
‘அதை சைக்கிள் கம்பெனிக்காரங்க கொண்டு போயிட்டாங்களே..உனக்குத் தெரியாதா ? ‘ முனி சிரித்தது. ‘செம்மண் புழுதியிலே சுத்திச் சுத்தி வந்து டயரே முழு வழுக்கையாயிடுச்சு ‘ ஒரு தகவலுக்காகச் சொல்லி வைத்தது.
‘அதைக் கேட்டா சைக்கிள் கடையிலே கொடுப்பானா ? ‘
‘என்னத்துக்காம் ? சைக்கிள் சுத்திட்டு மண்ணுக்குக் கீழே படுத்துத் தூங்கறானே.. அவனுக்கும் உன்னிய மாதிரி ஒரு மகன் இருக்கான்.. அவனுக்கு வேணும் அதுன்னு முந்தாநாள் ராத்திரி அவன் சொல்லிட்டு இருந்தான் ‘ முனி தலையில் நீட்டிக் கொண்டிருந்த இரும்புக் குச்சியை வருடிக் கொண்டே சொன்னது.
‘அந்தாளு மக காரைக்குடியிலே வீட்டு வேலைக்குப் போகுதா ?
‘இன்னும் இல்லே.. பள்ளிக்கூடத்துலே தான் படிக்குது .. அவங்க ஊர்லே என் தம்பி இருக்கானில்லே .. அவனுக்காகப் போன வாரம் தான் அந்தப் பொம்பளைப் பிள்ளைக்கு மொட்டை போட்டது.. ‘ முனி சிரித்தது.
‘அந்த அக்கா பாவாடைன்னு சரியா எழுதுமா ? ‘
‘இப்பதிக்குக் கட்டிக்க அந்தக் குட்டிக்கு ரெண்டு பாவாடை இருக்கு .. எழுத வேணாம் ..அதை உடுத்திக்கிட்டாப் போதும்.. ‘
‘எங்க அக்காவுக்கு மட்டும் ஏன் கட்டிக்கக் கூடத் துணி தர மாட்டேங்கிறாங்க ? ‘
‘நான் அந்தப் பக்கம் ராத்திரியிலே எப்பவாச்சும் மாடி மச்சுலே எல்லாம் குதிச்சு ஓடுவேன் ..அப்பக் கேட்டுப் பார்க்கறேன் ‘ முனி கரிசனமாகச் சொன்னது. யாரைக் கேட்கும் என்று பாலனுக்குத் தெரியவில்லை.
‘இந்த ஆள் எழுந்திருச்சுடுவாரா ? ‘ பாலன் மண்மேட்டைப் பார்த்தபடி விசாரிக்க முனி என்னமோ முனகியது. பத்து நாள் விழித்திருந்து சைக்கிள்காரனோடு கூடத் துணை இருந்ததில் அதற்கும் தூக்கமும் அசதியுமாக இருக்கும் என்று பாலனுக்குத் தோன்றியது.
அவன் மண்மேட்டுக்குப் பக்கத்தில் மெதுவாகப் போனான்.
‘உங்க மகளை வீட்டு வேலைக்கு அனுப்பாதீங்க ‘ என்றான்.
‘இப்பப் பணம் வந்திடும்.. அடுத்த மாசம் எப்படியோ.. போவுது..நாளைக்கு அவசியம் வந்துடு.. உங்க அப்பாரையும் ஒத்த ரூபாயாவது எடுத்துட்டு வரச் சொல்லு ‘
குழிக்குள் இருந்து சைக்கிள்காரன் குரல் மெதுவாக வந்தது.
பாலன் தலையை ஆட்டினான். டயர் வண்டியை உருட்டிக் கொண்டு போகும்போது அக்காவையும் சீக்கிரம் அனுப்பி வைக்கும்படி முனியிடம் சொன்னான்.
அது தூங்க ஆரம்பித்திருந்தது.
- ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து
- போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003
- உணவு அருந்தும் நாகரிகம்
- பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )
- பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]
- அறிவியல் துளிகள்-21
- வேதம்
- தேடுதல்
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு
- மீளத்துடிக்கும் மனம்
- விந்தைதான்
- வழி மாறிய தென்றல்
- அவசியம் ஒரு அஸ்திவாரம்.
- நினைவுகள்
- சுகம்
- பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா
- ர்ர்.. கீச்..கீச்…
- புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.
- Tamil children song cassettes
- Polynation is Pollination: Theatre and Arts from the Margins
- மானசரோவர் டாட்காம்
- கடிதங்கள்
- அலைவரிசை
- கு ை க ர யி ல்
- சைக்கிள்-
- சைக்கிள் முனி
- ரசிகன்
- மாடன் மோட்சம்