சேவல் கூவிய நாட்கள் – 6 – குறுநாவல்

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

வ ஐ ச ஜெயபாலன்


6

அம்மாவைத் துன்புறுத்தி துடுவிலில் இருந்து நெடுந்தீவுக்கு அப்பா இழுத்துவந்த கதையை முன்னரே சொல்லியிருக்கிறேன். நான் இரண்டாம் மூன்றாம் வகுப்புகள் எல்லாம் நெடுந்தீவில்தான் படித்தேன். எங்கும் நீலவானமும் நீலக் கடலுமாகப் பரந்துகிடந்த அந்தத் தீவின் கருகிய புல்வெளிகளும் மண்ணும்கூட எனது கண்களில் நீலக் கோலமாகவே பரந்து விரிந்தது. இன்றும் எனது நினைவுகளில் அவை நீலப் படமாகவே அசைகிறது. அந்த தீவில் என்னை அரவணைத்துப் பொத்திக்கொண்ட நீலக் கடலும் மண்ணும் விண்ணும் காற்றும் எனக்குப் பிடித்துப் போனதில் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை. . அங்கு நடந்த எனது நீல நாட்களின் ஒவ்வொரு கவடும் வாழ்வாகச் செளித்தது. சின்ன வயதுகளில் அந்தத் தீவில் நான் கண்ட பலர் பழமொழியும் கவிதையும் பேசினார்கள். பேச்சுக்கு நடுவே திடார் திடாரென அந்தத் தருணத்தில் விழுந்த முடிச்சுகளை அவிழ்க்கும் பாடல்களையும் எடுத்து விட்டார்கள். சுருக்குக் கயிற்றைத் தலைக்குமேல் சுளற்றிக் கொண்டு மாட்டுகளுக்குப் பின்னே திரிகிறவர்களிடம்கூட ஏட்டிலும் எழுத்திலும் அகப்படாத கிராமத்து மனிதனின் ஞானமும் கலைகளும் சுடர்ந்தது. என்னிடத்தில் அன்புகாட்டிய தீவின் முதியவர்கள் தங்கள் பழமொழிகளாலும் பாடல்களாலும் ‘ஒன்றில் மோதலிலே சா, இன்றேல் காதலிலே சா ‘ என்னும் பணியாமையும் காதலும் கிளரும் தங்கள் வாழ்வின் தத்துவத்தை எனது பிஞ்சு மனசில் பயிர் செய்து விட்டனர்.

நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அம்மாவின் நிர்ப்பந்தத்தால் ஆங்கிலம் படிப்பதற்காக அப்பா என்னை மத்துகமவுக்கு அழைத்துப் போனார். நான்காம் , ஐந்தாம், ஆறாம் வகுப்பெல்லாம் மத்துகமவில்தான் படித்தேன். அப்பாவின் கடையின் ஓரத்தில் விநாசித்தம்பி என்று ஒரு புங்குடுதீவுக் காரர் புத்தகக் கடை வைத்திருந்தார். அவர் அங்கு புத்தகங்களோடு புகையிலை, சுருட்டு, பீடி, சீகரட், சிட்டுக்குருவி லேகியம் எல்லாம் சில்லறை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். கிருபாகரன் என்று அவருக்கு ஒரு மகன். என்னைவிட ஐந்தாறு வயது மூத்தவர். நன்றாகப் பாடுவார், நாடகங்கள் நடிப்பார். எப்பொழுதும் பெரியார், அண்ணா, கருணாநிதி என திராவிடப் புத்தகங்களாகத் தேடி எடுத்துப் படிப்பார். தமிழரசுக் கட்சிப் பத்திரிகையான சுதந்திரனில் அவரது கவிதைகள் வெளிவரும். எனது பெயரில்கூட சுதந்திரன் சிறுவர் பகுதிக்கு கதைகள் எழுதி அனுப்புவார். நாங்கள் இருவரும் பள்ளியில் படித்ததைவிட அந்தப் புத்தகக் கடையில் படித்ததுதான் அதிகம்.

மத்துகம ரப்பர் தோட்டங்கள் நிறைந்த கிராமம் அல்லவா. கிராமங்களில் வாழும் சிங்களவரும் இரப்பர் தோட்டத் தொழிலாளிகளான இந்திய வம்சாவளித் தமிழர்களும்தான் அப்பாவின் கடையில் முக்கியமான வாடிக்கையாளர்கள். சிங்கள பெளத்தர்களின் விசாகப் பெருநாளிலும் சைவத் தமிழர்களின் பொங்கல் தீபாவளி நல்நாட்களிலும் தமிழ் சிங்கள கிறிஸ்துவர்களின் கிறிஸ்மஸ் புதுவருட நாட்களிலும் கடையில் விஜாபாரம் ஜே ஜே என்றிருக்கும். முஸ்லிம்களின் நேன்புத்திரு நாட்களின்போது தொலைவிடங்களில் இருந்தெல்லாம் முஸ்லிம்கள் எங்கள் கடைக்கு வருவார்கள். இதைவிட இன்னொரு முக்கியமான நாளும் இருந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் ஒரு சேரக் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டில் எங்கள் கடை வியாபாரம் மட்டுமல்ல மத்துகம பிரதேசமே களை கட்டும். குயில்களின் இன்னிசையோடு தேன் சிந்த வரும் வசந்தம் யாரையும் பேதப் படுத்தாது .எல்லோர் பாதைகளிலும் முற்றங்களிலும் மலர் சொரிந்தும் எல்லோரது கைகளிலும் காய் கனிகள் தந்தும் வசந்தம் மனிதர்கைளை வாழ்தும். வாழவைக்கும். சிங்களக் கிராம வாசிகள் புத்தாண்டைக் கொண்டாடி அனுபவிக்கும் அழகு வசந்தத்தின் வசந்தமாகும். குழித்து மலர் சூடிப் புத்தாடை கட்டி மத்தளத்தைச் சூழ மொய்த்திருந்து தாளம் தட்டிப் பாட்டிசைக்கும் சிங்களக் கிராமத்து அழகியரின் கலை ஆழுமையில் அந்தநாட்களிலேயே கிறுங்கிப் போயிருக்கிறேன். வானளாவிய பலாமரங்களில் நீண்டு நெடிய ஊஞ்சல் கட்டி எதிரும் புதிருமாக இருவர் ஏறி மாறி மாறி வலித்து ஊஞ்சலாடும்போது சேர்க்கஸ் பார்ப்பதுபோல இருக்கும். ஒரு புத்தண்டில் எனது பள்ளியின் சிங்களப் பிரிவில் படிக்கும் சிற்றிளம் பெண்ணான சுவர்ணலதாவின் தெருவுக்குப் போயிருந்தேன். சுவர்ணலதா தன்னை விடச் சற்று வயதுக்கு மூத்த ஒருத்தியோடு ஊஞ்சல் ஏறி பலமாக ஊஞ்சல் வலித்து, தேவதையாக பலாமர கொம்பர்களுக்கிடையில் பறந்து கால்களால் இலைகளைத் தொட்டு வந்தபோது எனக்கு மனசு துணுக்குற்றது. பக்கத்தில் சிங்களப் பையன்களும் அப்படிப் பேய் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தனர். சுவர்ணலதா அந்தப் பையன்களோடு சேர்ந்து என்னையும் ஆடச் சொன்னாள். அது ஒரு ஆண்பிள்ளை தயங்குவதற்க்கு இடம் தரக்கூடிய தரணமல்லவே. சுவர்ணலதா கேட்டுக் கொண்டதால் ஒரு சிங்களப் பையன் ஊஞ்சலால் இறங்கி எனக்கு இடம் தந்தான். சுயம்வர மண்டபத்தில் வில்லெடுத்த இராமனைப்போல நடந்துபோய் ஊஞ்சலைப் பற்றினேன். முதல் ஊசலே அச்சம் தந்தது. படிப்படியாக வீச்சு பலாமர உச்சத்தை நோக்கி அதிகரித்து. இதன்மேல் எனது ஆண் வீராப்பு துணைவர மறுக்க நடுங்கும் கால்கள் சறுக்கி ஊஞ்சல் கயிறில் தூங்கி நிலத்தில் இழுபட்டு வீழ்ந்தேன். நல்ல வேளையாக உடலில் பட்ட அடி ஒன்றும் பலமில்லை. சுவர்ண லதாதான் முதலில் ஓடி வந்து என்னை அள்ளி எடுத்தாள்.

வசந்த நாட்களில் மலையகத் தமிழர்கள் ரப்பர்த் தோட்ட குடியிருப்புகளின் முன்றலில் பந்தல் கட்டி காமன் கூத்து ஆடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் புத்தாடை அணிகிற நாள் சித்திரை வருடப் பிறப்பாகவே இருக்கும். தேயிலை ரப்பர் மலைகளை விடவும் ஓங்கி உயரும் துயரங்களை எல்லாம் எட்ட உதைத்துத் தள்ளிவிட்டு, மாளாச் சுமைகளை எல்லாம் மீறித் துளிர்த்துப் பூக்கிற நம்பிக்கையை அவர்கள் அந்த வசந்த விழா நாட்களில்தான் கண்டடைகிறார்கள் போலும். இந்திய வம்சாவழித் தமிழர்களான ரப்பர்த் தோட்ட அலுவலர்களதும் கங்காணிகளதும் நகர்ப் புறத்து வர்த்தகர்களதும் பிள்ளைகள் பலர் என்னுடன் படித்ததனர். அதனால்பண்டிகை நாட்களில் அவர்களுடன் ரப்பர்த் தோட்டக் குடியிருப்புகளுக்கும் போய் புதுவருடம் கொண்டாடி வர வாய்க்கும்.

பண்டிகை நாட்களில் வந்து சேருகிற தாழ்க் காசுகளால் கல்லாப் பெட்டி நிறைந்துவிடும். சில்லறைக் காசுகளை நிலத்தில் வரிசையாக அடுக்கியிருக்கும் சவர்க்காரப் பெட்டிகளில்தான் போடுவார்கள். எங்கள் கடைக்கு இவர்களைவிட முக்கியமன வேறு சில வடிக்கையாளர்களும் இருந்தார்கள். இரப்பர் தோட்ட அதிகாரிகளான வெள்ளைக்காரர்களும் அவர்களைப் போலவே உடுத்தி, அவர்களைப் போலவே இஸ் புஸ் என ஆங்கிலம் பேசுகிற சில உயர் வர்க்க இலங்கையர்களும் கடைக்கு வந்தால் நேரே சாய்ப்புச் சாமான் பக்கம்போய் நின்று கொள்வார்கள். வெள்ளையருக்கோ இலங்கை அவர்களது தேயிலை ரப்பர்த் தோட்டமும் களியாட்ட அரங்கும் மட்டுமே. இலங்கை அரசியலில் அவர்களது எதிர்பார்ப் பெல்லாம் இறுக்கமான தொழிற் சட்டங்களும் ஈவு இரக்கமற்ற சட்ட ஒழுங்கு பராமரிப்பும்தான். மற்றப் படி அரசியல் பேசும்போதெல்லாம் கற்பனையில் லண்டனில் உள்ள கைட்பாக் மூலைக்குப் போய் விடுவார்கள். அந்த நாட்களில் எல்லாம் ஆங்கிலம் பேசும் இலங்கைப் பெருங்குடி மக்கள் தமிழர்களா சிங்களவரா என்பதை அவர்களது பெயரையும் திருமணமான பெண்களின் உடைகளையும் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்களது ஏக்கமெல்லாம் வெள்ளையர்கள் உருவாக்கிய பொற் காலத்தை இழந்து போகிறது பற்றியதாகவே இருந்தது. சந்திக்குச் சந்தி மொழிவாரி அரசியல் இழுபறிகளால் இலங்கை மக்கள் அணிபிரிந்து மோதிக்கொண்டிருக்கையில் கடைக்கு வரும் மேட்டுக் குடிகள் பேசுகிற இரண்டுவரி அரசியல் இவ்வளவுதான். சிங்களம் போல தமிழுக்கும் சம அந்தஸ்து வேண்டும் என விவாதிக்கும் அப்பாவிடம் அவர்கள் சிங்களமும் தமிழும் சோறு போடாது என்பார்கள். பரிபாலனம் கறுப்பனுக்குச் சரிவராது அது வெள்ளையனுக்குத்தான் சரி என அடித்துச் சொல்வார்கள். நாடு குட்டிச் சுவராகப் போகிறது என மூக்கால் அழுவார்கள். மொழிச் சண்டை தொழிற் சண்டை என நாட்டைக் குளப்பிவிட்டு கம்யூனிஸ்டுகள் அரசைக் கைப்பற்றி விடுவார்கள் என்பது பற்றி அப்பாவை அவர்கள் அடிக்கடி எச்சரித்தார்கள். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால்ப அவர்கள் உங்கள் கடையைப் பறித்து கூட்டுறவுக் கடையாக்கி விடுவார்கள்,. உங்கள் பிள்ளைகளைக்கூட அரசாங்கம் எடுத்துவிடும். பெண்களை எல்லாம் பொதுச் சொத்தாக்கிவிடுவார்கள் என அவர்கள் அச்சுறுத்தினார்கள்.

இத்தகைய மேட்டுக் குடி வாடிக்கையாளர்களுக்காக டின் உணவுவகைகளோடு கார்லிக்ஸ், ஓவல்டின், சீஸ், அவுஸ்திரேலியாவில் இருந்து பீப்பாக்களில் வருகிற புத்தம் திராட்சைப் பழம், கலிபோர்ணிய அப்பிள். பேனாக்கள், கைக்கடிகாரம், மருந்துப் பொருட்கள், டார்ச் லைட் மற்றும் வானொலிப் பெடிகளுக்கான பட்டறி, (அப்போது ரன்சிஸ்டர் வரவில்லை) அஸ்பிரின், இருமல் சிறப் போன்ற ஆங்கில மருந்துகள், பீங்கான் பாண்டங்கள், முள்ளுக் கரண்டிகள் என காசு மேசையின் பின் பக்கமாக ஒரு தனிச் சாய்ப்புச்

சாமான் பிரிவே கடையில் இருந்தது. சாய்ப்புச் சாமான்கள் வாங்க வருகிறவர்களோடு அப்பா தடக்கி தடக்கி ஆங்கிலம் பேசுவார். அந்த நாட்களில் அப்பா தபால்மூலம் ஆங்கிலம் படிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.

(தொடரும்)

Series Navigation