சேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


2

சிங்கள ஊரான மத்துகமவில் கடை வைத்திருக்கிற அப்பா அந்தவருடம் தேர்தல் சமயம்பார்த்து கடையைச் சித்தப்பாக்களிடம் ஒப்படைத்து விட்டு என்னையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வநதார். வளமையை விட இந்த தடவை அவர் நெடு நாட்களாகத்ரூரில் தங்கி இருந்தார். தமிழருக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் மத்துகம கடையை கைவிட்டு விட்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வந்துவிடும்படி சித்தப்பாக்களிடம் அப்பா வலியுறுத்திக் கூறியிருந்தார். களுத்துறை புகையிரத நிலையத்துக்குச் செல்வதற்க்காக காரில் ஏறும்போது ‘பணம் போனால் பணம் வரும். உயிர் போனால் போனதுதான். ‘ என சித்தப்பாக்களைப் பார்த்துக் கூறியபடி கண்களைத்

துடைத்துக் கொண்டது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

அப்பாவின் கருத்துப்படி ஜினதாச மாமா மாதிரி புதுப் பணக்காரர்களான சிங்கள வர்த்தகர்களும் ஆங்கிலத்தில் ஏ, பீ, சீ, டி கூடத் தெரியாமால் ஆசிரியரான பெடியளும் இளம் பிக்குகளும்தான் அந்தநாட்களில் தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படியும் தேர்தலில் பண்டாரநாயக்க கட்சியை வெற்றி பெற வைத்துவிடுவார்கள் என்று அப்பா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பண்டார நாயக்க வென்றால் சிங்களப் பகுதிகளில் தமிழருக்கு எதிரான இனக் கலவரம் வரலாம் என்கிற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. வேலை இல்லாத நேரங்களில் எமது கடைவாசலிலே

பீடி புகைத்தபடி குந்தியிருக்கிற முனியாண்டி மாமாவும் தேர்தல் முடிய கலவரம் வரப்போகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். மூடை தூக்கும் தொழிளாளியான முனியாண்டி மாமா இந்திய தமிழர். மத்துகமவில் சண்டியன் முனியாண்டி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு நிறைய சிங்கள நண்பர்கள் இருந்தார்கள்.

‘சிங்கள்வன் அடிச்சா நீங்கள் யாழ்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் ஓடுவீங்க, நாங்கள் எங்க முதலாளி ஓடிறது. ரப்பர் காட்டுக்கிளநிண்டு சண்டை பிடிச்சுச் சாகவேண்டியதுதான். ‘ என்று முனியாண்டி மாமா சொல்வார். எதற்க்கும் அஞ்சாத சண்டியரான அவரே அப்படிச் சொல்வது எனக்கு அச்சத்தை ஊட்டியது.

‘ஏன் நீங்களும் யாழ்ப்பாணம் வரவேண்டியதுதானே ‘ என்று சித்தப்பாக்கள் சொல்வார்கள்.

‘அங்க வந்தா நீங்களும் எங்களை தோட்டக் காட்டான் பறையன் என்று தள்ளித்தான் வைப்பீங்க. வகுத்து வலியை நம்பினாலும் வடக்கத்தயானை நம்பேலாது என்பீங்க. தேத்தண்ணிக் கடைக்குப் போனாலும் வெளியில் நிண்டு கறள் பிடிச்ச மூக்குப்பேணியிலதான் தேத்தண்ணி குடிக்கவேணும். ‘ என்பார்.

‘அதெல்லாம் அந்தக்காலம் முனியாண்டி ‘ என்று சித்தப்பாக்கள் சொல்வார்கள்.

‘ஐயோ வேண்டாமப்பா யாழ்ப்பாணம் ‘ என பெரிய கும்பிடு போடுவான் முனியாண்டி.

இத்தகைய சூழலில்தான் மத்துகமவில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னையும் அழைத்துக் கொண்டு அப்பா நெடுந்தீவுக்கு வந்தார். அப்பாவின் நண்பர்களும் வாடிக்கையாளர்களுமான பல சிங்களவர்கள் கடைக்கு வந்து ‘நாங்க இருக்கிரதுதானே ‘ என்று அப்பாவுக்குத் தைரியம் சொன்னார்கள். அப்பா அவர்கள் நல்ல சிங்களவர்கள் என்றார். அவங்க ஒன்றும் ஜினதாச மாதிரிப் புதுசா பணத்தைக் கண்ட சிங்களவரல்ல அவங்க பரம்பரைப் பணக்காரர், கிராமத்துச் சனங்கள் என்று அப்பா சொன்னார். இந்த புதுப் பணக்காரர்கள் என்கிற வார்த்தையை முன்னமே கேட்டிருக்கிறேன். ஊரில் ஒருமுறை கிழவி ஒருத்தி எதற்கோ கோபப் பட்டு அப்பாவை ‘புதுப் பணக்காரன் ‘ என்று திட்டினாள். அது பற்றி அம்மாவிடம் கேட்டேன். அப்பாவும் சித்தப்பாக்களும் பரம்பரைப் பணக்காரர்கள் அல்லவென்றும் முதலில் அவர்கள் ஒரு இந்தியச் செட்டியாரின் கடையில் கூலிவேலை செய்ததாகவும் தன்னைக் கலியாணம் கட்டின பிறகுதான் அப்பாவுக்கும் சித்தப்பாக்களுக்கும் பணம் எல்லாம் வந்தது என்றும் அம்மா விளக்கம் சொன்னார்.

அதன்பின் நான் மத்துகமவுக்குத் திரும்பிப் போவதை வீட்டில் யாருமே விரும்பவில்லை. எனது கனவுகளின் நகரமாக இருந்த மத்துகம, தூரத்தில் மாலை வெய்யிலில் பொன்னாக ஒளிரும் அரசமரங்களின் பின்னணியில் அடிவானில் எழுதப் பட்ட கவிதைகள் போன்ற விகாரைகளோடும் குன்றுகளிடையில் எப்போதும் இனிய சிங்களக் கிராமியப் பாடல்களும் அல்லி தாமரைப் பூக்களின் கமழ்வுமாக நீழும் மரகத நெல் வயல்களோடும் பால் வடியும் ரப்பர் மரங்களின்கீழ் தங்கள் மாழாத சோகங்களை எல்லாம் புதைத்துவிட்டு பால் வாளிகளின் சுமை மறக்க இந்தியாவில் இருந்து சீதனமாகக் கொண்டு வந்த இனிய பாடல்களை ரீங்காரம் செய்யும் அழகிய பெண்களோடும் எனது அடி மனதுள் புதையுண்டுபோனது. வகுப்புத் தோழர்களையும் தோழியர்களையும் ஒரே நாளில் இழந்துபோனேன். வண்டு விழிகள் துரு துருக்கும் சின்னப் பெண்ணாண ஜெயமங்களத்தையும் ‘எண்ட வாப்ப மிட்டாய் வித்தும் எனக்கெண்டால் மிட்டாய் சாப்பிடக் கிடைக்காது ‘ என ஏங்கும் ஏழை மிட்டாய் வியாபாரியின் மகனான முகைதீனையும் கொய்யாயோ, ரம்புட்டானோ, ஜம்புவோ, மங்குஸ்தானோ மலைக் காட்டுக்குள் எது பழுத்தாலும் அது பறிக்க என்னைத் தப்பாமல் அழைத்துச் செல்லும் ஜினதாச மாமாவின் மகனான ஜெயசூரியாவையும் மகன் டாகடராக வேண்டுமென்று கனவுகாணும் பெற்றோருக்கு ஒயாமல் அஞ்சியபடியே எங்களுடனும் திரியும் யாழ்ப்பானத்து அதிகாரி ஒருவரின் மகனான சீவரத்தினத்தையும் பிரிந்தது நெடுநாட்களாக என்னைக் கலவரப் படுத்தியது. அழகிய மலை மகளான ஜெயமங்களம் எனது சின்ன இதயத்துக்குள் இனம் புரியாத கனவுகளை விதைத்தவள். அவளது அப்பா ரப்பர் தோட்டமொன்றில் கணக்குப் பிள்ளையாக இருந்தார். திடாரென சில நாட்கள் அவள் வகுப்புகளுக்கு வரவில்லை. பள்ளிக்கூடம் மாறி விட்டாளோ என நான் கவலைப் பட்டுக்கொன்டிருந்தேன். அந்தச் சின்ன வயதிலேயே அவள் பூப்பெய்திவிட்டாள். ‘ஜெய மங்களம் கொஞ்ச நாளைக்கு வகுப்புகளுக்கு வரமாட்டாள். பெட்டை வெடிச்சிட்டுது ‘ என ஆசிரியர்கள் கிசு கிசுத்ததை நாம் கேட்டோம். பூப்பெய்துவதைப் பற்றி முழுமையாகத் தெரியா விட்டாலும் அந்தச் செய்தி எனது சின்ன மனசுக்குள் இளமையெனும் கஞ்சா விதைகளாய் முழைத்துக் கிறங்க வைத்தது. ஊருக்கு வந்த பின்னும் அவளை மறக்க முடிய வில்லை. ஒரு தேவதையாக லாம் ரீச்சர் விஞான பாடம் நடத்த வகுப்புகுள் காலடி எடுத்து வைக்கும் வரை ஜெயமங்களத்தின் நினைவு என்னை வாட்டி எடுத்தது. சின்ன்ப் பையகள் பெண்கள் என்றால் ஏதோ அரைகுறை மனிதன் என்றுதான் பெரியவர்கள் எல்லோரும் நினைத்தார்கள். நாம் சிறு பராயத்து முழு மனிதர்கள், மனுசிகள் என்பதையும் எமக்கு மனசும் உணற்ச்சிகளின் ஊற்ரான உடலும் இருக்கிறது என்பதை அப்பாவோ அம்மாவோ அல்லது அவர்களை ஒத்த பெரிய மனிதர்களோ ஒருபோதும் புரிந்து கொண்டதில்லை. அம்மாகூட அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அவர்கள் எல்லோரும் ஒன்றில் மறதி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களாகவோ அல்லது தமது இளமை நாட்களின் உண்மைகள் பலவற்றை மறைக்கிற பொய்யர்களாகவோ இருந்தார்கள்.

மத்துகமவால் புறப்பட்டபோதே என்னை நெடுந்தீவில் படிக்க வைக்க அப்பா தீர்மானித்து விட்டார். அம்மா அதற்குச் சம்மதிக்கவில்லை. நெடுந்தீவில் ஆங்கிலமும் விஞ்ஞான படங்களும் கற்பிக்க ஆசிரியர் இல்லை என அவள் கூறினாள். நான் யாழ்ப்பாணத்தில் படித்து ஒரு எம்.ஏ படதாரியாகவேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம். ‘ பெரியவன் யாழ்பாணத்தில போடிங்கில் இருந்து படிக்கட்டும் ‘ என அம்மா ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்தாள். ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே ‘ என்கிற, எங்கள் வீட்டில் குடும்பச் சண்டையை மூட்டுவதற்க்காகவே பாரதியாரல் திட்டமிட்டு எழுதப் பட்ட அந்தக் கவிதையை அந்த நாட்களில் மீண்டும் அப்பா அச்சுறுத்தும் தொனியில் உச்சாடனம் செய்யதமை தங்கையும் என்னையும் அச்சுறுத்தியது.

எனக்கு அப்போதெல்லாம் தாய்நாடு என்பது பக்கத்தில் அப்பா இருந்தால் நெடுந்தீவாகவும், அம்மா இருந்தால் உடுவிலாகவும், தமிழரசுக் கட்சிக்காரர்கள் இருந்தால் ஈழத் தமிழ்நாடாகவும் பள்ளியில் பாடங்கள் நடக்கும்போது இலங்கைத் தீவாகவும் பல்வேறு பட்டுக் கொண்டிருந்தது.

எனக்கு வீட்டை விட்டு தனிய யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை என்கிறதை அப்பா அறிந்து வைத்திருந்தார். பிரச்சினைகளின்போது மிரட்டுவதற்க்கும் அடிப்பதற்கும் தவிர வேறு எதற்குமே என்னை அழைத்திருக்காத அப்பா முதன் முதலாக என்னை அழைத்துக் கருத்துக் கேட்டார். அப்பா திருந்திவிட்டார் என எனக்குப் பெருமையாக இருந்தது.

‘உனக்கு அப்பா, அம்மா, தங்கச்சியோட வீட்டில இருந்து படிக்க விருப்பமா ? இல்ல யாழ்பாணம்போய் தட்டத் தனிய போடிங்கில இருந்து படிக்க விருப்பமா ? ‘ என்று அப்பா கேட்டார்.

அந்த விடுமுறைக் காலம் முடிந்ததும் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளியில் என்னை ஏழாம் வகுப்பில் சேர்த்தார்கள். மூன்று மைல் தூரம் தள்ளியிருந்த அந்தப் பள்ளிக்குப் போவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அப்பா எனக்குப் புது பைசிக்கிள் வாங்கிவந்தார். எனக்கோ தலை கால் புரியாத மகிழ்ச்சி. அப்பா உண்மையாகவே திருந்திவிட்டார் என நம்பத் தொடங்கினேன். அப்பா கண்ணாடிப் பிறேம் போட்ட மூன்று படங்கள் வாங்கிவந்தார். அவை சுவாமிப் படங்கள் என நினைத்தேன். ஆனால் அவை சுவாமிப் படங்களல்ல. படத்தில் ஒல்லியாக நடு உச்சி வகுத்திருந்தவர் தமிழரசுத் தலைவர் செல்வநாயகம் என்பதைப் பார்த்த உடனேயே கண்டு பிடித்துவிட்டேன். அவர் ஒருமுறை எங்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறார். மீசையும் சிரிப்புமாக இருந்த குண்டு மனிதர் அண்ணாத்துரை என்பதும் தெரிந்தது. மத்துகமவில் கிருபாகரன் அண்ணா அவரது படம் போட்ட புத்தகங்களை எனக்குக் காட்டி யிருக்கிறார். இந்தியாவில் பிஏ படித்துவிட்டு வந்த சின்னத்தம்பி மாஸ்டார் வீட்டிலும் அன்னாதுரையின் படம் இருந்தது. எனக்கு தொப்பிக் காரரை மட்டும் தெரியவில்லை தயங்கித் தயங்கி அப்பாவிடம் கேட்டேன். ‘நேதாஜி ‘ என்று சொன்னார். ‘அவர் பெயரைக் கேட்டாலே வெள்ளைக்காரக்கு வயிற்றைக் கலக்கும் ‘ எனவும் சொன்னார். ‘நீ பெரியவனாக வந்தபிறகு உன்ர பெயரைக் கேட்டு எங்களை அடிக்கிற சிங்களவன் நடுங்க வேண்டும் ‘

அந்த வருடம் ஊருக்கு வந்ததுமே அப்பா வீட்டில் அவசரம் அவசரமாகக் கக்கூஸ் கட்டினார். கேட்டால் தேர்தல் வருகிறதாகச் சொன்னார்கள். அப்போது தேர்தலுக்கும் கக்கூசுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கர கரவென அடித்தொண்டையால் கூட்டங்களில் பேசிய தலைவர்கள் தலைவிகள் எல்லாம் குதிரை வண்டியில் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டார்கள். ஊரில் எல்லோரும் அப்பாவை அண்ணன் என்றோ தம்பி என்றோ மாமன் மச்சான் என்றோ முறை சொல்லித்தான் கூப்பிடுவார்கள். அல்லது ஐயா என்பார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் தேர்தல் கூட்டங்களில் பேச வந்தவர்களும் தலைவர்களும் மத்துகம நகரத்துச் சிங்களவர்களைப் போல முதலாளி முதலாளி என்று அப்பாவுடன் பேசியதும் மூத்திரம் பெய்வதற்குக்கூட அவர்கள் புதிதாகக் கட்டிய கக்கூசுக்குப் போய் வந்ததும் விநோதமாக இருந்தது.

சிவப்பு மஞ்சள் பச்சை அடுக்கிய மூவர்ணக் கொடிகளை ஏந்தியபடி ‘அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம், தூக்குமேடை பஞ்சுமெத்தை, துப்பாக்கிக் குண்டு விழையாட்டுப் பந்து. ‘ என்று கோசம் போட்டபடி ஊர்த் தெருக்களிலெல்லாம் போன ஊர்வலங்களை அந்த தேர்தல் முழுவதும் வேடிக்கை பார்த்தோம். ஊர்வலங்களின் முன்பாக சிலர் குதிரைகளில் போனார்கள். எல்லாம் நெடுந்தீவுக் குதிரைகள். எங்கள் வீட்டில் தமிழரசுக் கட்சிக் கொடிகள் இறைந்து கிடந்தது. பல மாலைப் பொழுதுகளில் விழையாடுவதற்குப் பதிலாக வகுப்புத் தோழர்களும் வேறு சின்னப் பையன்களுமாகச் சேர்ந்துக் கொண்டு மைதானத்தைச் சுற்றி சுற்றி ஊர்வலம் போனோம். ஊர்வலத்துக்கான மூவர்ணக் கொடிகளை வீட்டில் இருந்து கச்சிதமாகத் திருடிக் கொண்டு வருவது எனது பொறுப்பாக இருந்தது. ஊர்வலம் முடிய பெரியவர்கள் செய்வது போல நாமும் பொதுக் கூட்டம் வைத்தோம். மேடையில் பூவரசம் தடியை நாட்டி அதனையே ஒலிவாங்கியாகப் பாவித்து நாங்களும் முழங்கினோம். திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கூட்டத்தில் பேச வருகிற மசூர் மெளலானாவையும் இளஞ்செளியனையும் தவிர வேறு முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் அதுவரை எனது பள்ளித் தோழர்கள் பார்த்ததும் கிடையாது. முஸ்லிம்கள் மிட்டாய் விற்கிற ஏழை வியாபாரிகள் என்றும் மலையகத் தமிழர்கள் பீடி குடிப்பார்கள் என்றும் நான் அவர்களுக்குச் சொல்வேன். தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் பேசப் படுகிற

வசனங்கள் எங்களில் பலருக்கும் தலை கீழ்ப் பாடம். தமிழரசுக் கட்சி மேடைப் பேச்சாளர்களைப் போலவே அடித் தொண்டையால் ‘உயிர் போனாலும் தமிழர்களின் தலை நகரான திருகோணமலையையும், மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பையும் சிங்களக் குடியேற்ற வாசிகளிடம் பறிகொடுக்க மாட்டோம். ‘ என்றும் ‘முஸ்லிம்களும் நாங்களும் இணைபிரியாத சகோதரங்கள், சிங்களவர் எங்களைப் பிரித்தாள விடமாட்டோம் ‘ என்றும் ‘மலையகத்தில் வாழும் இந்தியத் தமிழர்களின் குடி உரிமைகளைப் பறிக்காதே ‘ என்றும் தவறாமல் முழக்கமிடுவோம்.

ஒருமுறை வீடு வந்திருந்த தமிழ்த் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இனிமேல் தமிழர்கள் சிங்கள ஊர்களில் வியாபாரமோ தொழில்களோ செய்ய இயலாது என்று அப்பா அவர்களிடம் சொன்னார். நெடுந்தீவிலும் மன்னாரிலும் கடை திறக்கப் போவதாக அப்பா சொன்னது எனக்கு இரசிக்கவில்லை. நெடுந்தீவில் கடை வைத்தால் அப்பா ஊரோடு இருந்து விடுவார் என்று அச்சமாக இருந்தது. ஆனால் அப்பா மன்னார்க் கடையில் இருப்பார் நெடுந்தீவுக் கடையில் சின்னச் சித்தப்பாதான் இருப்பார் என்று அம்மா சொன்னாள்.

(தொடரும்)

Series Navigation