சென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

லதா ராமகிருஷ்ணன்


புத்தகக் கண்காட்சி, புத்தகச் சந்தை, புத்தகத் திருவிழா – எப்படியும் சொல்லலாம்(ஆ)… வருடாந்திர புத்தகக் கண்காட்சி இந்த வருட ஆரம்பத்தில் சென்னையில் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரேயுள்ள பெரிய வளாகத்தில் நடந்தேறியது. கடந்த வருடங்களை விட சில தினங்கள் அதிகமாக நீண்ட இந்த புத்தகக் கண்காட்சி குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. சிலர் காயிதே கல்லூரி வளாகத்தில் நடைபெற்றபோது தான் புத்தகக் கண்காட்சி அதிகம் களைகட்டியிருந்தது என்று கூறினார்கள். சிலர், இப்போதைய இடம் தான் அதிகம் உகந்தது என்றார்கள்.

போன வருடம் போல் அல்லாமல் இந்த வருடம் தரைவிரிப்பு பரப்பப்பட்டிருந்ததால் புழுதியிலிருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள முடிந்தது. என்றாலும், ஆயிரக்கணக்கான மக்கள் தினம் வந்து போகும் ஒரு இடத்தில் இந்த தரைவிரிப்புகள் உரிய முறையில் தினசரி சரிசெய்யப்பட வேண்டியது அவசியம். அப்படிச் செய்தார்களா தெரியவில்லை. ஏனெனில், நிறைய இடங்களில் தரைவிரிப்பின் நுனி கிழிந்தும், துருத்திக் கொண்டும் கால்களைத் தடுக்கியது. காப்பி, தேனீர் போன்றவை அரங்கினுள்ளே கிடைக்க வழி செய்யப்படாதது இன்னொரு குறை.

எப்பொழுதும் போலவே கழிப்பறை வசதிகள் மிக அவலமாக இருந்தன என்று பலரும் கூறினார்கள். இதன் காரணமாகவே அரங்கினுள் பல்வேறு ஸ்டால்களில் இருந்த பெண்கள் மணிக்கணக்காக சிறுநீர் கழிப்பதை ஒத்திப்போட்டதன் விளைவாக வயிறு தொடர்பான உபாதைகளுக்கு ஆளாக நேர்ந்ததாகவும் கருத்து பெறப்பட்டது.

புத்தகக் கண்காட்சிக்கென்று சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டனவா தெரியவில்லை. கண்காட்சித் திடலில் வெளியே இருந்த அரங்கில் பெரும்பாலும் வழக்கமான அமர்வுகள், பட்டிமன்றங்கள்,சொற்பொழிவுகளே நடந்தேறின. நவீன இலக்கியம் சம்பந்தமான அமர்வுகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. போன வருடம் இரண்டே வாயில்கள் இருந்ததால் கூட்டநெரிசல் பெருமளவு ஏற்பட்டது. குறிப்பாக, விடுமுறை நாட்களிலும், மாலைநேரங்களிலும் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் பலரால் நிறைய கடைகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த வருடம் ஏறத்தாழ எல்லா நாட்களிலும் நான் ‘விருட்சம்’ புத்தகக் கடையில் இருந்ததால் இந்த நெரிசலைக் கண்கூடாகக் காண நேர்ந்தது. அந்த நிலையை சரி செய்ய இந்த முறை நான்கு ஐந்து வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தது ஒருவிதத்தில் பயனுள்ளதாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் யாரும் எந்த வழியாகவும் உள்ளே நுழைந்து எந்த வழியாகவும் வெளியேறிவிடலாம் என்ற நிலைமையையும் ஏற்படுத்தியதன் விளைவாக கண்காட்சிக்கு வருகை தந்தோர் எல்லாக் கடைகளையும் பார்க்காமல் போய் விடுவதும் நிகழ்ந்தது. தவிர, பெரிய பதிப்பகங்களுக்குத் தரப்பட்டிருந்த அரங்குகளில் இரண்டு பக்கங்களிலும் வாசல்கள் இருந்த காரணத்தால் பலர் ஒரு வரிசையில் பாதியை மட்டும் பார்த்து விட்டு மேற்படி அரங்குகளின் மறுபக்கத் திறப்புகள் வழியாக அடுத்த வரிசையின் பாதியில், இடையேயுள்ள கடைகளை நழுவ விட்டவர்களாய், வெளிப்படுவதும் நேர்ந்தது.

நிறைய எழுத்தாளர்கள், குறிப்பாக நவீன இலக்கியப் படைப்பாளிகள் நண்பர்களைப் பார்க்கவும், புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கும், புத்தகங்களை வாங்கவுமாய் கண்காட்சிக்கு தொடர்ந்து வருகை தந்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் விருட்சம் வெளியீட்டின் அரங்கு இடம்பெற்றிருந்தது. உண்மையான சிறுபத்திரிகைத் தன்மைகளோடு இருபதாண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நவீன விருட்சம் ஆசிரியரும், கதாசிரியரும், கவிஞருமான அழகியசிங்கர் என்னுடைய வேண்டுகோளை ஏற்று கவிஞர் கோ.கண்ணனின் (பார்வையற்றவர்) இரண்டாவது கவிதைத் தொகுப்பை – மழைக்குடை நாட்கள்(முதல் தொகுப்பு ‘ஓசைகளின் நிறமாலை’)- மனமுவந்து இந்த புத்தகக் கண்காட்சியில் விருட்சம் வெளியீடாக வெளியிட்டார். விருட்சம் அரங்கிற்குப் பக்கத்தில் ஒரு காலியிடம் இருந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அங்கே பொங்கல் நாளன்று கோ.கண்ணனின் கவிதைதொகுப்பு கவிஞர் இன்குலாப், கவிஞர் தமிழன்பன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. கண்னனின் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் வாசித்துக் காண்பிக்கப்பட்டன.பார்வையற்ர ஆணவர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இந்த நிகழ்வில் ஆர்வமாகப் பங்கேற்றனர். விருட்சம் வெளியீடாக விருட்சம் கவிதைகள் -2 கவிஞர் தேவதேவன், பரிக்ஷா ஞானி ஆகியோரால் வெளியிடப்பட்டது. வெளீயீட்டு நிகழ்வில் கவிஞர் மோகனரங்கன், ரா. ஸ்ரீனிவாசன், யூமா வாசுகி, ரவி சுப்ரமணியன், எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர்.

தவிர, விருட்சம் கவிதைகள் முதல் தொகுதியிலிருந்து ஏறத்தாழ 40 கவிதைகளை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்ததையும் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார் விருட்சம் ஆசிரியர். இதன் வெளியீட்டு நிகழிவில் கவிஞர் வைதீஸ்வரன், எழுத்தாளர் கந்தசாமி முதலியோர் கலந்து கொண்டார்கள். தவிர, கடந்த வருடம் மறைந்த சக-கவிஞர் ‘சதாரா’ மாலதியின் ( சதாரா என்பது மாலதி வேலை பார்த்து வந்த ஊரின் பெயர் என்றாலும் சதாரா மாலதி என்பது அவருடைய புனைப்பெயர் என்ற அளவில் அவரை ‘பெங்களூர் மாலதி’ என்று விருப்பம் போல் ஊரின் பேர்களை இணைத்துக் குறிப்பிடுவது அவருடைய அடையாளம் அழிப்பதான, ஆட்சேபத்திற்குரிய செயல்) இருபது கவிதைகளூம், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் (என்னால் மொழிபெயர்க்கப்பட்டவை) Remembrance என்ற சிறுநூலும் வெளியாகியுள்ளது. இரண்டிலும் தவிர்க்க முடியாமல் சில அச்சுப்பிழைகளும் இடம்பெற்றுள்ளன.(ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில்அச்சுப்பிழை நேர்ந்தால் அது மொழிபெயர்ப்பாளரின் மொழிசார் தேர்ச்சிக் குறைபாடாக உடனடியாகப் பகுக்கப்பட்டு விடுகிறது.). கடைசி இரண்டு நாட்கள் விருட்சம் அரங்கின் அருகிலிருந்த காலியிடத்தில் கவிதை வாசிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார் அழகியசிங்கர். அவர்வர் கவிதைகளையோ, பிடித்தமான பிறவேறு கவிஞர்களின் கவிதைகளையோ படிக்கலாம் என்றிருந்த இந்த நிகழ்வில் யூமா வாசுகி, சுகிர்தராணி, யாழன் ஆதி, அரங்க மல்லிகா, சொர்ணபாரதி, ரா.ஸ்ரீனிவாசன், அழகியசிங்கர்ராசு, நான், தமிழ்மணவாளன் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

புதுப்புனல் பதிப்பகம் தனது இலக்கிய இதழான பன்முகத்தை நிறுத்தி விட்டாலும் தொடர்ந்து புத்தக் வெளியீட்டில் முனைப்பாய் இயங்கி வருகிறது. இந்த வருடம் முதன்முறையாக புதுப்புனல் அரங்கும் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. புதுப்புனல்பதிப்பக உரிமையாளர் திரு.ரவிச்சந்திரனிடம் நான் கவிஞர் மு.ரமேஷின் (இவரும் பார்வையற்றவர்) மூன்றாவது கவிதைதொகுப்பை வெளியிடும்படி கேட்டுக் கொண்ட போது அவரும் உடனடியாக முன்வந்து இந்தக் கண்காட்சியிலேயே மு.ரமேஷின் கவிதைத் தொகுப்பை கொண்டு வந்து விட்டார். கவிஞர் தந்த தலைப்பு “மழையில் கரையும் இரவின் வாசனை”. நான் தான் அச்சுப்பிழை திருத்தியது. ஆனால், எந்தக் கண்களிலும் அகப்படாத அளவில், மழையில் கரையும் என்பது மழையில் நனையும் என்பதாக அச்சாகியிருந்தது. மு.ரமேஷிடம் மனமார மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அவரும் பெருந்தன்மையோடு என்னை மன்னித்து விட்டது ஆறுதலாயிருந்தது. மு.ரமேஷின் கவிதைதொகுப்பை எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் வெளியிட்டார். கவிஞர்கள் தமிழ் மணவாளன், எழிலரசு சொர்ணபாரதி , கவின்கவி, உதயகண்ணன், ஷங்கரநாராயணன் முதலியோர் நிகழ்வில் கலந்து கொண்டு ரமேஷின் கவிதைகள் குறித்த தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

புதுப்புனல் சார்பில் வேறுசில குறிப்பிடத்தக்க புத்தகங்களும் வெளியாகியுள்ளன. புத்தகக் கண்காட்சி நடந்த இரண்டு வாரங்களிலும் நாள் தவறாமல் புதுப்புனல் அரங்கில் காலை முதல் நாள் முடியும் வரை மலர்ந்த முகத்தோடு அமர்ந்து விற்பனையைக் கவனித்து வந்த திருமதி சாந்தி ரவிச்சந்திரனின் ஆர்வமும், தோழமையும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. சென்னை திருவல்லிக்கேணியில் ‘ரத்னா க·பே’க்கு எதிர்சாரியில் அமைந்திருக்கும் புதுப்புனல் புத்தகக் கடையையும் இவர் தான் சிறப்பாக நிர்வகித்து வருகிறார். நவீன இலக்கியப் படைப்புக்கள் அத்தனையும் இங்கே கிடைக்கிறது.

தோழர். பா.உதயக்கண்ணனின் அரங்கமும் எப்பொழுதும் நண்பர்களும், இலக்கிய ஆர்வலர்களுமாக நிறைந்திருந்தது. கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் வெளியான கவிதைகளில் ஏறத்தாழ அறுபது கவிதைகள், மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளடங்கிய தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளார் இவர் என்பது குறிப்பிடத்த்க்கது

நான் சார்ந்திருக்கும் ‘பார்வையற்றோர் நன்நல அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLINDன் வெளியீடுகளை மனமுவந்து தங்களுடைய புத்தக அரங்குகளில் விற்பனைக்கு வைக்க அனுமதித்து உதவிய விருட்சம் ஆசிரியர், புதுப்புனல் பதிப்பகத்தார், அன்னை ராஜேஷ்வரி பதிப்பகத்தார், புதுகைத் தென்றல் பதிப்பகத்தார் போன்றோர்க்கு, சந்தியா பதிப்பகத்தார் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்


ramakrishnanlatha@yahoo.com

புகைப்படங்கள்/ புத்தக கண்காட்சி தொடர்பான எனது கட்டுரைக்காக அனுப்பித் தரப்படுபவை – லதா ராமகிருஷ்ணன்

0 கவிஞர் கோ.கண்ணனின் கவிதைத் தொகுப்பினுடைய முகப்பு வடிவம் ( விருட்சம் வெளியீடு)

0 கவிஞர் மு.ரமேஷினுடைய கவிதை தொகுப்பின் முகப்பு அட்டை (புதுப்புனல் வெளியீடு)

0 சதாரா மாலதியின் 20 கவிதைகளும், அவற்றின் ஆங்கில
மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ள நூல் REMEMBRANCEன் முகப்பு அட்டையும், பின் அட்டையும்

0விருட்சம் கவிதைகள் – முதல் தொகுதியிலிருந்துஏறத்தாழ 40 கவிதைகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள NEO-TAMIL POEMS FROM NAVINA VIRUTCHAM என்ற தலைப்பில் வெளியாகியுள்ள தொகுப்பு.


0 கவிஞர் கோ.கண்ணனுடைய நூலை கவிஞர் இன்குலாபும் கவிஞர் தமிழன்பனும் வெளியிடுகிறார்கள்.

0 கவிதை வாசிப்பு நிகழ்வில் விருட்சம் ஆசிரியரும், கவிஞருமாகிய அழகியசிங்கர் தனது கவிதையொன்றை வாசித்துக் காட்டுகிறார்.

0 எழுத்தாளரும், கவிஞரும், அன்னை ராஜேஸ்வரி பதிப்பக உரிமையாளருமான திரு உதயக்கண்ணன் தனது புத்தக அரங்கின் முகப்பில்

0 புதுப்புனல் பதிப்பக உரிமையாளர் ரவிச்சந்திரனும், அவருடைய மனைவி சாந்தியும் புத்தக அரங்கில்

0 எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் கவிஞர் மு.ரமேஷின் கவிதைத்தொகுப்பை வெளியிடுகிறார்.

விருட்சம் கவிதைகள் -2 கவிஞர் தேவதேவன், பரிக்ஷா ஞானி ஆகியோரால் வெளியிடப்பட்டது

Series Navigation