செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

கவிதாஎன் பௌணமிப்பொழுதுகளை

இரைமீட்கும்

செக்குமாடாய்

திருப்தி கொண்டன

என் விடியாத இரவுகள்.

உன் மடியிலிருந்து

விலக்கி வைத்தாய்�

உன் அருகிருப்பதில்

திருப்தி கண்டேன்..

அருகிருந்து எழுந்து போனாய்

கூரை வேய்ந்த – உன்

அறையைச் சுற்றி வருவதில்

ஆறுதல் அடைந்தேன்.

தேய் நிலவாய்த் தெரிந்த

எனது நிலவை

கூரை மறைத்தது.

அறையில் இருந்து

அகன்று போனாய்

பழக்கபட்ட

செக்குமாடு

இரைமீட்டுக் கொண்டது

அந்தப் பௌர்ணமி நிலவை.

நான் வரைந்த வட்டங்கள்

எனக்குப் பிடித்தே இருந்தது.

அது நேர்தியானதும்

என்று அயலவர் கூறினார்.

சிலர்

பாதுகாப்பென்று பறைசாற்றினர்.

பலர்

செக்குமாட்டுத் தத்துவம்

பேசினர்.

இன்று

அமாவாசை

எங்கும் இருட்டு

எங்கும் கறுப்பு

பௌர்ணமி தொலைந்தது.

ஒளி தேடி உள்ளம் உலர்ந்தது

எனக்கு நிலவும் மறந்து போனது.

புதியாய் சில கதிர்கள்

சுகமான ஊசிகளாய்

கூரை பிரித்து

என் உயிர், மெய்

துளைத்து

என்னை மீட்டுக்கொண்டதுமொழி

நான்கு மொழிகள் எனக்கும்

அதே நான்கு மொழிகள் உனக்கும்

நாக்கின் நுனிவரை தெரியும்.

மொழிகளைக் கற்றுக்கொள்வதில்

நாங்கள் வல்லவர்கள்.

எந்த கேள்வியென்றாலும்

ஊகிக்குமுதல் பதில்தரவும்

சில வேளைகளில் கேட்காத

கேள்விக்கும் காரமாய் பதில் கொடுக்கவும்

வல்லவர்கள்!

உனது மொழி விளங்கவில்லை

என்றபோது

உனது மொழியை பரிகசித்ததாய்

நீ நினைத்தாய்.

உனது மொழிகளுக்கு நான்

வேறு அர்த்தங்களை தீட்டிக்கொண்டேன்.

எனது மொழிக்கு நீ

செவி கொடுப்பதையே மறந்தாய்..

நான் உன்னுடன் மொழிவதையே துறந்தேன்.

ஒருவரது கேள்வியை

மற்றவர் வெல்வதும்.

பதிலற்ற கேள்விகளை

கேட்பதில் சுகம் பெறுவதும்.

கேள்விகளுக்கு பதில் தெரிந்தும்

அலட்டயமாய் ஊமைமொழி பேசுவதும்

வாழ்க்கை பரீட்ச்சையில்

சித்தியெய்திய கர்வம் தர

நாங்கள் மொழி ஆளுமை பெற்றவர்கள்.

என்று எமக்குள் நாமே விளம்பரப்படுத்திக் கொண்டோம்.

இன்னும்

சைகை மொழி

மௌணமொழி

என்று தெரியும்தான்..

காற்றின் மொழி

கவிதை மொழி

இயற்கை மொழி

மட்டுமல்ல

நாம் உணராமல் போனது..

காதல் மொழியும் தான்.

>

கற்றிருந்தால்

புரிந்திருக்குமோ?

எனது மொழி

உனக்கும்.

உனது மொழி

எனக்கும்..

– கவிதா நோர்வே.

kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா

கவிதா