சுருதி பேதம்

This entry is part [part not set] of 7 in the series 20001119_Issue

ரகுநாதன்


‘ வருஷம் மாதம் தேதி — எதுவும் எனக்கு ஞாபகமில்லை. எனினும், அந்த நாள் என் நினைவை விட்டுப் போகவில்லை. அநேகமாக, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலமாய்த் தானிருக்கும்.

வைகாசி விசாகமென்று நினைப்பு. நண்பர் சிலரோடு திருச்செந்தூர் சென்றிருந்தேன்.

மாலை மணி எட்டு இருக்கும், வசந்த காலம் தலை காட்டி விட்டாலும், புழுக்கம் குறையவில்லை. எனவே கல் மண்டபத்தின் கதகதப்பில் வேகாமல் கடற்கரை மணல் மேட்டில் ‘காத்துக் குடித்து ‘க் கொண்டிருந்தோம். கடலுக்கு மேலே வாண விளிம்புக்கு ஒரு பனை உயரப் பிரமை தந்து, கிருஷ்ணபஷத்துப் பிரதிமைக் கலைமேலேறியது; பூர்ணிமையின் மவுசை இழந்தபோதிலும் பிரகாசம் குறையவில்லை. உடம்புக்கு ஒத்தடம் கொடுத்தது கடற்கரை உப்புக் காற்று, சரசரக்க பட்டுப் புடவை கட்டி அடிபெயரும் குமரியைப் போல கடலலைகள், உருண்டு வந்தன.

அப்போதுதான் அந்த தேவநாதம் காற்றில் மிதந்து வந்தது. நாதஸ்வரக் கச்சேரியை தூரத்தில் இருளிலிருந்து கேட்பதில்தான் சுகமிருக்கிறது என்பது தான் என் அபிப்பிராயம்.

கல்யாண மண்டபத்தில் கச்சேரி. ஆம், நாதஸ்வர வித்துவான் நாகமுத்துதான் வாசித்துக் கொண்டிருந்தார்….. ‘

—-பரவாயில்லை. இப்படி ஒரு பொய்யான செய்தியோடு இந்தப் பேட்டியை ஆரம்பித்தால் என்ன ? சம்பவம் பொய்யல்ல; நான் திருச்செந்தூர் செல்லவில்லை. அதிலும் நாஸ்திகனான நான் வைகாசி விசாகத்துக் கென்று கட்டுச் சோறு கட்டிக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க எந்தக் காலத்திலும் போனதில்லை. என்றாலும், ஏதோ ஒரு வைகாசி விசாகத்தில் அவர் திருச்செந்தூரில் வாசித்ததாக ஞாபகம். அவ்வளவு போதாதா ? அதை வைத்துக் கொண்டு கயிறு திரிப்பதற்கு ?

டெலிபோன் மணி கணகணத்தது. ரிசீவரை எடுத்தேன்.

‘ஹலோ ‘

ஆசிரியர்தான் வீட்டிலிருந்து பேசினார். அவர் ஆபீசுக்கு வருவதற்குள் ஏதாவது கதையளந்து கம்போசுக்கு இரைபோட எண்ணியிருந்தேன். அதற்குள் அவர் முந்தி விட்டார்.

‘என்ன சார் ? நாகமுத்துவின் பேட்டி என்னவாயிற்று ? இந்த ‘இஸ்யூ ‘வில் எப்படியும் வந்தாக வேண்டும். ‘சீரியலை ‘ விடக்கூடாது பாருங்கோ ‘ —ரிசீவர் இரைந்தது.

‘அதற்கென்ன சார். எழுதினால் போச்சு ‘ எட்டு பக்கம்தானே. வேணுமின்னா மத்தியானமே—- ‘

‘அவசரமில்லை. ‘டி–பாரத்தில் ‘ அதற்கு இடம். நாளை மாலை கொடுத்தால் கூட போதும். வேண்டுமென்றால் உடனே ஒரு டாக்ஸியிலே போய் அவரைக்க் கண்டு வாருங்களேன், படமும் வேண்டும் ‘

‘சரி, சார் ‘

ரிசீவர் யதா ஸ்தானத்தை அடைந்தது. மீண்டும் விட்ட இடத்தில் தொட்டுப் பிடிக்க எண்ணினேன்.

‘நாகமுத்து என்றாலே எனக்குத் தோடி ராகம்தான் ஞாபகம் வருகிறது. தோடி ராகம் பாடுவதில் அவருக்கு இணை அவர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கேட்டுமிருக்கிறேன். எனக்கு இந்த ஈடு இணை என்ற பாகுபாடெல்லாம் தெரியாது. என்றாலும், அதில் ஒரு தனி இன்பம் இருந்தது. காரணம் அவர் சங்கீதம் வெறும் சுரக்கோவை வாய்ப்பாட்டின் கரண வித்தையாயிராது; அனாவசியமான பிர்காக்கள் இராது; சுருதி சுத்தமாக பேசும். சுருங்கச் சொன்னால், அது சிற்றின்பம் மாதிரி அனுபவிக்கலாம் விண்டு சொல்ல முடியாது. அவரது சங்கீதத்தைக் கேட்கும் போது ராகஞானம் மங்கி, நமது இதயத்தில் ஒரு இனிய கீதம் கதைகள் பேசும்; நொந்துபோன உள்ளத்துக்கு பன்னீர்க் கவரி வீசும்; நோயில் படுத்திருக்கும் போது மனைவியின் கரஸ்பரிசம் தரும் சுகத்தை, அந்த சங்கீதம் இதயத்துக்குக் கொடுக்கும்.

அன்றும் அவர் தோடிதான் வாசித்தார். தோடி ராகத்தில் சஞ்சார கதியின் நுட்பங்களெல்லாம் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. கம்பன் வருணிக்கும் ராவணனின் கொலுவிருக்கையைப் போல் என்னை அடி பணியச் செய்து என் உள்ளத்தில் குடி கொண்டது காம்பீர்யமான இந்தத் தோடிதான். அன்று நாகமுத்துவின் வாசிப்பே அலாதி. அன்று தைவதத்தில் அழுத்தம் கொடுத்து, கூசிக்கூசி நீரைத்தொடும் நாணலைப்போல், பஞ்சமத்தை ஏகதேச வர்ஜியமாய்த் தொட்டு நிமிர்ந்து, லாகு கொண்டு வாசித்தது இன்றும் என் நெஞ்சில் பேசிக் கொண்டிருக்கிறது. நாதஸ்வர உலகில்…. ‘

—-அதற்குள் எனக்குச் சந்தேகம் வந்து விட்டது. நாதஸ்வரமா ? நாகஸ்வரமா ? நாகஸ்வரம்தான் சரியென்று ஞாபகம்; ஆனால் வழக்கில் நாதஸ்வரம்தான் பிரயோகம் அவசரத்துக்கு லெக்ஸிகனை திருப்பித் தெளிவு பெறலாமென்றால், அந்த அவசரத்தில் அந்த ‘நாவன்னா ‘ வால்யூம் அகப்படுகிறதா ? எரிச்சலாய் வந்தது. ‘சரி. ‘கானா ‘வுக்கும் ‘தானா ‘வுக்கும் அவ்வளவாக வித்தியாசமில்லை. கம்பாசிட்டர் தலைமீது அட்சதையைப் போட்டு விட்டு எழுதுவோம்; வந்தது வரட்டும் ‘ என்று ஒரு தைரியம்.

மேற்கொண்டு என்ன எழுத ? ஒன்றும் ஓடவில்லை. நாகமுத்துவைப் பற்றி ஏதாவது ஞாபகம் வந்தாலல்லவா எழுதுவதற்கு ? மாதாமாதம் யாரையாவது பேட்டி கண்டு தாரகை மண்டலத்தை ‘ரொப்ப ‘ முனைந்தால், இந்தக் கதிதான். இந்த அழகில் ‘அடுத்த இதழில் ‘ ‘ என்று வேறு விளம்பரப் படுத்தி விட்டேன். இந்தப் பேட்டி நிருபன் பாடே இப்படித்தான். சமயத்தில் பூர்வாசிரமம் தெரியாத, கவைக் குதவாத ‘எக்ஸ்ட்ரா ‘க் களைக் கூடப் பேட்டி கண்டு இல்லாததும் பொல்லாததும் எழுத வேண்டும். அவள் தொட்டிலில் கிடந்து காலுதைத்த காலத்தில், அவள் பாலுக்காக அபிநயம் பிடிப்பது போலிருந்தது என்றும் கதை விட வேண்டும். அல்லது சிறு வயதிலேயே ‘மாமா வாருங்கள் வாருங்கள் கை தாருங்கள் ‘ என்ற டாக்கிப் பாட்டை அப்படியே ஒரு தடவை கேட்டுவிட்டு மறு தடவை பாடினாள் என்று கயிறு திரித்து, ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும் ‘ தத்துவத்தை எழுத வேண்டும். நல்ல பிழைப்பு ‘ அப்ப்டியென்றால், நாதஸ்வர நாகமுத்துவும் சிறுவயதில் பூவரசு இலையில் பீப்பி வாசிக்கும் பொழுதே சுர ஞானம் பெற்று விட்டார் என்று சரடு விடலாமா ?…..

சேச்சே ‘ இதைவிட அவரையே நேரில் ஒருமுறை கண்டு விட்டு உண்மையை எழுதினால் என்ன ?

பேனாவை மூடி வைத்தேன்.

2

ஸ்ரீமான் நாகமுத்துவின் வீட்டுக்குள் நான் நுழையும்போது மணி ஆறு இருக்கும்.

மார்கழி மாசமானதால், பனிப்படலம் அதற்குள் இறங்கித் தேங்க ஆரம்பித்து விட்டது. அந்தி மயக்கத்தின் சோபையைப் பூசி மெழுகி, புது அழகு தந்தப் பனிப்புகை, சல்லாத்துணியிட்டு முகத்தைச் சம்பிரதாயத்துக்காக மூடும் புதுமணப் பெண்போல் குளுமை அளித்தது….

எனக்கு இந்த செளந்தர்ய விசாரத்துக்கெல்லாம் சமயம் ஏது ? நாளை மதியம் நாகமுத்து பேட்டியை அச்சேற்றியாக வேண்டுமே ‘

வீட்டு முன் கூடத்தில் அமர்ந்திருந்தார் நாகமுத்து. பக்கத்திலே வெற்றிலைச் செல்லம்; வெள்ளிக் கூஜா. வாயில் லட்சுமிகரமாக நிறைந்துநிற்கும் புகையிலை மதுசாரம்; அதன் காரணமாக முகத்தில் பனித்துளிபோல வியர்வை.

நான் நமஸ்கரித்தேன்.

‘வாங்கோ, வாங்கோ. வராமல் இருந்துட்டியளோன்னு நினைச்சேன். இப்படி உட்காருங்கள் ‘ என்று வரவேற்றார் அவர். நான் உட்கார்ந்தேன்.

‘ஏ, வடிவேலு. ரெண்டு காப்பி கொண்டா. ‘

‘காப்பியா ? இப்பத்தான் சாப்பிட்டேன். ‘

‘பத்திரிக்கைகாரர்களுக்கு காப்பி சாப்பிட நேரம் காலம் வேறயா வச்சிருக்கீங்க. சும்மா சாப்பிடுங்க. ‘

காப்பி வந்தது.

‘காப்பி ரொம்ப நன்றாயிருக்கு. ‘

‘இந்தப் பயல் கைராசியே தனி, சார். பயல் மனசு வச்சி போட்டான்னா காப்பி பிரமாதமாயிருக்கும். கிண்ணென்று இரண்டு கட்டை சுருதி தாராளமாய் பிடிக்கும் ‘ என்று சங்கீத பாஷையிலேயே பேசினார் அவர்.

இதுதான் சமயமென்று நான்வந்த காரியத்தை நினைவூட்டினேன். ‘ஆமாமா, காப்பியைப் பத்திப் பேசினாக்கூட, உங்களுக்கு சங்கீத ஞாபகம்தான் வருகிறது. உங்களைப் போன்ற மேதைகளால்தான் நமது கர்நாடக சங்கீதம் உயிர் பெற வேண்டும் ‘ என்று ஆரம்பித்தேன்.

‘கர்நாடக சங்கீதமா ? அதை எங்கே சார் உருப்படியாப் பாடறான் ? சங்கீத வித்வானெல்லாம் தில்லானா பாட்டும் தெம்மாங்கு பாட்டும் பாடினாவா உருப்படும் ? அருமையா தோடி வாசிச்சாக்கூட இந்த ரசிகர்களுக்குப் பிடிக்காது. அதைவிட, ஒரு ஹிந்துஸ்தான் ட்யூன் போட்டுட்டா, அவனுக்குத்தான் சார் பேரு ‘ இப்படியிருந்தா எங்கே உருப்படறது ? ‘ என்று அவர் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

சங்கீத விமர்சனத்திலிருந்து பேச்சை அவரது வாழ்க்கைக் குறிப்புகளுக்கு மாற்றும் வித்தையை, நான் பேட்டி நிருபனுக்குரிய செக்குமாட்டுத்தனக் குயுத்தியால் திருப்பி விட்டேன், அவரது பிறந்த ஊர், பிறந்த நாள், குழந்தைப் பருவம், சங்கீத சிட்சை முதலிய பல விவரங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்.

‘எனக்கு ஏதாவது ஞானம் இருக்கிறதென்றால், அது எங்க தகப்பனார் வேல்சாமி நாதசுரக்காரருடைய பிச்சை தான் சார். அவர்கள் வாசிப்பை தாங்கள் கேட்டிருக்கிறீர்களோ, என்னவோ ? ‘ என்று ஆரம்பித்தார்.

‘கேட்டதில்லை. கேள்விபட்டிருக்கிறேன். ‘ என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு கேள்விகளை ஆரம்பித்தேன்.

‘உங்களுக்கு கல்யாணமாயிருக்கிறதல்லவா ? ‘

‘கல்யாணமா ? ஒன்றுக்கு மூன்று மனைவிகள்; ஒருத்தி மாஜி மனைவி ‘ ‘ என்று நிர்விசாரமாய்ச் சொன்னார், நாகமுத்து.

நான் ஒரு கணம் யோசித்தேன்: ‘மாஜி மனைவியா ? ‘

‘ஆமாம். இருவர்தான் என்னோடு வாழ்கிறார்கள். முதல் மனைவி இப்போது இல்லை. ‘

‘தவறி விட்டார்களா ? ‘

‘மீண்டும் யோசித்தேன்.

‘இல்லையில்லை. வந்து…. ‘ என்று இழுத்துப் பேசினார் நாகமுத்து.

எனக்கு அதை அழுத்திக் கேட்க மனமில்லை. அடுத்தவனுடைய அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்வதில் மனிதனுக்குள்ள ஆர்வம் அதிகம்தான். ஆனால், அந்த ஆர்வத்தின் விளைவாக ரசாபாசமான எதையாவது கேட்க நேர்ந்தால்— ? எனவே நான் அடுத்த கேள்விக்கு தாவினேன்.

‘சரி. குழந்தைகள் எத்தனை ? ‘

‘முப்பத்திரண்டு ‘ ‘

முப்பத்தி இரண்டா ? நான் திகைத்தேன். ஆசாமிக்கு சந்தான பாக்யத்துக்குக் குறைவே இல்லை போலிருக்கிறது. இப்படிச் செயலுள்ளவர்களுக்கு எத்தனை பிறந்தால் என்ன ? என் போன்ற பத்திரிகாசிரியர்களுக்குப் பிறந்தால் தானே சஙகடம் ‘….

ஒரு கணம் நின்று ‘முப்பத்திரண்டா ? ‘ என்றேன்.

நாகமுத்து சிரிக்க முடியாமல் சிரித்தார். ‘ஆமாம் சார். மேளகர்த்தா ராகம் முப்பத்திரண்டும் எனக்குக் குழந்தைகள்தான். தோடிதான் எனக்குச் சீமந்த புத்திரன் ‘ ‘ என்று மெதுவாகச் சொன்னார்.

‘அப்படியென்றால், உங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லையா ? ‘ குரலில் நிருபனின் நிர்விசாரத்தை விழுங்கி, தணிந்த முறையில் கேட்டேன்.

‘அந்த பாக்யம்தான் எனக்கில்லை. நம்பிக்கையும் இல்லை. ‘ நாகமுத்துவின் குரல் தொண்டையில் அடைத்துச் செருகியது.

‘ஷேத்திராடனம் பண்ணினாலென்ன ? ‘

‘என்னைப் போன்ற நாதஸ்வர வித்வான் போகாத ஷேத்திரங்களா ? அது வேற கதை, சார். ‘

கதையா ? என்போன்ற கதாசிரியனுக்கு வேறு என்ன வேண்டும். ஊரானுடைய சோகக் குரலை யெல்லாம் எந்த விதமான மனமாற்றமுமில்லாமல் மனசில் வாங்கி, காசு பறிப்பது தானே எங்கள் கலை ‘ அந்தக் கதையைக் கேட்க ஆசை கொண்டேன்.

‘என்ன கதை ? ‘

‘கதையா ? என் வாழ்வையே பாழாக்கிய சம்பவத்தை கதையென்றா சொல்வது ? ‘ அவர் முகத்தில் வெற்றிலைச் சுகத்தால் ஏற்பட்டிருந்த லட்சுமிகர மெல்லாம் களையோடிப் போயிற்று. ‘நீங்கள் மட்டும் கேட்கத் தயாராயிருந்தால் சொல்கிறேன். ஆனால், இதையெல்லாம் பத்திரிக்கையில் எழுதிவிடக் கூடாது. இது என் வாழ்வின் ரகசியம் மட்டுமல்ல; ஒரு தலை முறையின் ரகசியம் ‘ ‘ என்று ஆரம்பித்தார். அவருடைய உணர்ச்சி நிலையைப் பார்த்தால் அந்தச் சமயம் அவர் தன் ‘கதை ‘யை யாரிடமாவது சொல்லி ஆற்ற விரும்பியவர் போலக் காணப்பட்டார்.

‘இஷ்டப் பட்டால் சொல்லுங்கள். நான் அதை வெளியிடுவதில்லை ‘ என்று உறுதி கூறினேன்.

நாகமுத்து எழுந்து சென்று வெற்றிலையைத் துப்பி விட்டு, வந்து உட்கார்ந்தார். ஒரு கணம் முகத்தைப் பார்த்தார்: அதன் பின்னர் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து ஒரு வெற்றிலையை அர்த்தமற்று நகத்தால் கிள்ளிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

‘அப்போது எனக்கு இருபது வயசிருக்கும். தகப்பனார் அதற்கு முன்பே காலமாய் விட்டார்கள். எனக்கு அவர்கள் புண்ணியத்தால் சங்கீத ஞானம் கொஞ்சம் இருந்தது. கோயில் சேவுகத்துக்கும், கல்யாணங்களுக்கும் வாசிக்கப் போவேன். அப்போதுதான் அந்த இன்பகரமான சம்பவம் நடந்தது ‘ என்று சொல்லி நிறுத்தினார்.

‘இன்பகரமா ‘ ‘

‘ஆமாம். இன்பத்துக்குப் பின்னர்தான் துன்பம் வருகிறது. அல்லது இன்பத்தின் இறுதியேதுன்பம் தானா ? எனக்கு இந்த ஞானமெல்லாம் தெரியாது, சார். அதெல்லாம் உங்கள் காரியம். எனக்கெதற்கு ? ‘

‘சரி விஷயத்தைச் சொல்லுங்கள். ‘ ஆர்வத்துக்கு அணை கட்ட முடியாமல் துடித்துப் போய்க் கேட்டேன். ‘

‘சொல்கிறேன். ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்யாணம். என்னை அழைத்திருந்தார்கள். நானும் கொதையோடு சென்றிருந்தேன். கல்யாண நாளன்று மாலையில் நலங்கு நடந்தது. நலங்குக்கு யாரோ ஒரு பெண் பாட வருவதாகச் சொன்னார்கள். நன்றாகப் பாடுவாள் என்றும் கேள்விப் பட்டேன். நலங்கில் என்னையும் வாசிக்க வேண்டும்மென்றார்கள். சரி என்றேன்.

‘சாப்பாட்டுக்கு மேல் நலங்கு. அந்தப் பெண் வந்து சேர்ந்தாள். அவளுக்கும் என் வயதுதான் இருக்கும். நல்ல அழகி. பார்த்தவுடனேயே அவள் மீது எனக்கு ஏனோ ஒரு பாசம் தோன்றியது. விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அதுதானோ என்னவோ ? வந்து உட்கார்ந்தவுடனேயே அவளைப் பார்த்தேன். அவள் அழகு என்னை மயக்கியது என்று சொல்ல முடியாது. வெற்றிலைக் காவியேறிய அவளது உதடுகள் அவளது எலுமிச்சம் பழம் போன்ற தங்க மயமான முகத்தில் கோமேதகம் போல ஒளி வீசிற்று. அரகஜா சாந்தின் கருமையை, கண்ணின் கருமணிகள் தூக்கி விழுங்கின. எனக்கு உங்களைப்போல் எல்லாம் வர்ணிக்கத் தெரியாது. என்றாலும் அந்தக் களை என்னை வசீகரித்தது. ‘

‘என்னையும் ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் பாட ஆரம்பித்தாள். இனிய சாரீரம். போன ஜென்மத்தில் அவள் எந்த ஸ்வாமிக்கு தேனாபிஷேகம் பண்ணினாளோ, தெரியாது. கணீரென்ற நாதம் அவள் கண்டத்திலிருந்து பிறந்து வந்தது. முதல் இரண்டு பாட்டுக்கும் நானும் அவள் போக்குப்படியே வாசித்தேன். அவளும் லேசாகச் சிர்த்துக் கொண்டே கல்யாணியில் ஒரு பாட்டுப் பாட ஆரம்பித்தாள். காகலி நிஷாதத்தில் அநாயாசமான கார்வை கொடுத்துப் பாடினாள். அவளுடைய வித்வத்தை என்னால் அப்போதுதான் உணர முடிந்தது. உடனே வேண்டுமென்று அவளிடம் குறும்பு பண்ணி அவள் அபிமானத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். என்ன செய்வது ? வேண்டுமென்றால், அவள் பாடும் ஒரு ராகத்தைக் கெட்டிக்காரத்தனமாகச் சுருதி பேதம் செய்து வேறு ராகம் போல மாற்றினால் என்ன என்று யோசித்தேன். சுருதி பேதம் சங்கீதத்துக்கு அழக்ல்ல என்று தந்தை சொல்லியிருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணோடு விளையாட வேண்டும் என்று விரும்பும் என் மனசுக்கு அதெல்லாம் தெரியவா செய்தது ? ‘

மீண்டும் ஒரு கணம் நாகமுத்து நிறுத்தினார், நான் யோசித்தேன்: ‘கதாநாயகி வந்து விட்டாள், இனி கதை தான் வர வேண்டும். ‘

நாகமுத்து வெற்றிலைக் காம்பை வாயில் கிள்ளிப் போட்டுக் கொண்டு பேச முனைந்தார். அதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. அவரது சமையற்காரன் கூடத்து விளக்கின் ஸ்விட்சைப் போட வந்தான். மீண்டும் பேச்சைத் தொடங்குவதற்கிருந்த நாகமுத்து ‘ வடிவேலு, விளக்கைப் பிறகு போடலாம் ‘ என்று சொன்னார். அவன் போனான். நாங்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிந்தது. ஆனால், முக உணர்ச்சிகளைக் காண முடியவில்லை.

‘கேளுங்கள் சார். என்ன சொன்னேன் ? அவள் பாடினாளா ? அடுத்தபடியாக, அவள் தோடி ராகத்தில் ஒரு பாட்டுப் பாட ஆரம்பித்தாள். தோடி என்றால் எனக்குக் கேட்கவேண்டுமா ? சரி. இதுதான் சந்தர்ப்பம் என்று தீர்மானித்துக் கொண்டேன். கோயிற்புரி அழகிய நம்பி அண்ணாவி கவனம் செய்த பதம் அது. ஆலாபனையில் அதிக நேரம் செலவழியாது, சீக்கிரத்தில் பதம்பாட வந்துவிட்டாள். அவள் ஞானத்தையும் சும்மா சொல்ல முடியாது. ஆதி தாளத்தில் பாட்டுப் பாடினாள்.

‘எங்கே இருந்தாலும் இங்கே அழைத்து வா ‘

என்ற பதம் தான் அது. பல்லவியை இரண்டு தடவை பாடிவிட்டு, என்னைப் பார்த்தாள்.

‘நானும் நாதஸ்வரத்தை ஏந்தினேன். மனசிலே ஒரே உற்சாகம். பல்லவிக்குரிய ‘தநிசா நி தமகம பதநீத பம கக ‘ என்ற சுரத்தை வாசிக்கும்போது சாதாரண காந்தாரத்தில் அழுத்தம் கொடுத்து, உலாவி வந்தேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் பாடினாள். எனக்கு அப்போதுதான் அவளோடு குறும்பாடவேண்டும் என்று மனசில் ஆசை பிய்த்துக் பிடுங்கியது. இரண்டாம் தடவை அவள் பாடிவிட்டதும், நான் வேண்டுமென்றே தாளத்தின் நடையை மாற்றிப் பாட்டை வாசித்தேன். அவளைத் திகைக்க வைக்க வேண்டும் மென்பதற்காக, சதுச்ர நடையிலுள்ள தாளத்திற்கு சங்கீர்ண நடை கொடுத்து அதிலும் கால் இடத்தில் எடுத்தேன்.

‘சபை முழுவதுமே என் பக்கம் திரும்பியது. நான் செய்வது சரியா தப்பா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. அவள் பாட நான் வாசிப்பது நின்றுபோய் இப்போது நான் வாசிக்க அவள் பாடுவது எப்படி இருக்கும் என்பதைக் கவனிக்கத்தான் அவர்கள் திரும்பினர். ஆனால், என் உள்ளத்திலுள்ளதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா ? நான் வாசித்து முடித்தேன். அவள் இப்போது சிரிக்கவில்லை. குனிந்து கொண்டே பாட்டை எடுக்க ஆரம்பித்தாள். ஆனால், தாளமிடக் கை வளையவில்லை. மறுகணம் சபையில் அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.

‘எனக்கு என்னவோ போலிருந்தது. நான் செய்தது தப்பு என்றுகூடப் பட்டது. என்ன பண்ணுவது ? பாவம், அவள் பாடுவதே புதிதாயிருக்கலாம். சபையில் குறும்புத்தனம் பண்ணி அவள் பிழைப்பில் மண்ணெறிந்து விட்டோமோ என்று சந்தேகம். சில நிமிஷத்தில் அவள் ஒன்றுமே பேசாமல் எழுந்து சென்று விட்டாள். நானும் மத்தியமாவதியை வாசித்து நலங்கை முடித்தேன். சபையிலிருந்த பெரிய மனுஷர்கள் எல்லாம் என்னைப் பாராட்டினார்கள். ஆனால், என் மனசில் உறுத்தும் அந்த ரகசியத்தை அவர்கள் அறிவார்களா ? ‘

நாகமுத்து ஒரு கணம் பெருமூச்சுவிட்டார். நானும் பேசவில்லை. இருட்டில் அவர் வெற்றிலைப் பெட்டியை மூடும் சப்தம் மட்டும் கேட்டது. மீண்டும் அவர் குரல் கேட்டது.

‘அன்று ஜாகைக்குச் சென்றதும் உட்கார்ந்து யோசித்தேன். அந்தப் பெண்ணைச் சந்தித்து சமாதானப் படுத்த வேண்டுமென்று மனம் துடித்தது. காரணம் தெரியாத ஒரு ஆசை; அந்த ஆசையின் அலைக்கழிப்பினால், என்னைச் சமாதானப்படுத்த அவளைச் சந்தித்தாகவேண்டும் என்ற பரிதாப உணர்ச்சி என் மனசில் ஏற்பட்டது. அந்தச் சமயம் பார்த்து தவுல்கார மகாலிங்கம் வந்து சேர்ந்தார். ‘

‘நானாகப் பேச்சை ஆரம்பித்தேன். ‘என்ன அண்ணாவி ‘ உருப்படி எப்படி ? ‘ என்று தொடங்கினேன்.

‘ ‘கேட்பானேன். அபூர்வமான உருப்படி. தம்பியும் சரியாய்த்தான் ஒரு பிடி பிடிச்சீங்க. நான் எல்லாம் விசாரிச்சிட்டேன். ‘அந்தப் பொண்ணு தாசி வடிவாம்பாளின் மகளாம்; மேலத் தெருவிலேதான் குடியாம் ‘ ‘ என்று ஆரம்பித்தார்.

‘நான் அதைக் கேட்கலை ‘ என்றேன்.

‘எல்லாம் எனக்குத் தெரியும், தம்பி. இன்னிக்கி ராத்திரி போய்வர எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு.

இத்தனை நாள் தம்பியோட பழகியும், உங்க கண்ணை எனக்கா புரிஞ்சிக்க முடியாது ? ‘ என்று அழுத்திச் சொன்னார் அண்ணாவி.

‘அதற்கு மேலும் பிகு பண்ணி காரியத்தைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை, மெளனமாயிருந்தேன். அண்ணாவியும் சிரித்துக் கொண்டே போய்விட்டார். எனக்கு அந்தப் பொழுதிலிருந்தே மனசு குதுகுதுக்க ஆரம்பித்து விட்டது.

‘அந்தி மயங்கிய பின்னர் நானும் அண்ணாவியுமாக அங்கு சென்றோம். வீட்டு முன்கூடத்தில் யாருமில்லை. சிறு மண்ணெண்ணெய் விளக்குமட்டும் எரிந்துகொண்டிருந்தது. சுவரில் படங்கள் தொங்கின. என்ன படங்கள் என்று தெளிவாய்த் தெரியவில்லை. யாராவது வரட்டும் என்று நின்றோம்.

‘உள்ளே இரண்டு பெண் குரல்கள் பேசிக்கொள்வது கேட்டது.

‘அவர் அப்படித் தாள நடையை மாற்றி வாசிப்பார் என்று எனக்கு எப்படித் தெரியும் அம்மா ‘ ‘ என்றது எனக்குப் பழகிய குரல்.

‘ ‘வேல்சாமி நாதசுரக்காரரின் பிள்ளைதானடி ‘ அவனுக்கு அப்படி யென்ன அதுக்குள்ளே ஞானம் வந்துடுத்து ? அவன் அப்பா மாதிரி வேறெ ‘ இருந்தாலும், அவர் புள்ளெதானே ‘ நீ மட்டும் சளைச்சவளா ? ‘ என்றது மறுகுரல். அது வடிவாம்பாளின் குரலாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன். ‘

‘என்ன இருந்தாலும், அவர் கெட்டிக்காரர். சங்கீதம் என்றால்….. ‘ என்று ஆரம்பித்தாள் அந்தப்பெண்.

‘அதற்குள் மகாலிங்க அண்ணாவி ஒரு ‘செருமு ‘ செருமி எங்கள் வருகையைத் தெரிவித்தார். இருவரும் வெளி வந்தனர். அந்தப் பெண்ணும் அவள் தாயும்தான் வந்தார்கள்.

‘வாங்க வாங்க ‘ என்று வரவேற்றாள் வடிவாம்பாள்.

‘நாங்கள் உட்கார்ந்தோம். அந்தப் பெண் ஒன்றும் பேசாமல் சேலை முனையைத் திருகித் திருகி விட்டுக் கொண்டிருந்தாள்.

‘நான்தான் பேச ஆரம்பித்தேன். ‘இன்று நான் மிகவும் அசம்பாவிதமாக நடந்து கொண்டேன். உங்கள் பாட்டுக்கு நான் வாசிப்பது என்ற ஒழுங்கை மீறியது என் குற்றம்தான். ரொம்ப வருத்தமாயிருக்கிறது ‘ ‘ என்றேன்.

‘அதற்குள் அந்தப் பெண் கேவிக் கேவி அழுது விட்டாள். பிறகு மனசை இழுத்துப் பிடித்துக் கொண்டு, ‘நீங்க ரொம்பப் பெரியவுக. என் பாட்டுக்கு நீங்க வாசிக்க வந்ததே தப்பு. என் பாட்டு எங்கே, உங்கள் ஞானம் எங்கே ? என்னை மன்னிச்சிடுங்கோ ‘ என்று குழைந்து பேசி, என் காலிலேயே விழுந்து விட்டாள். ‘

‘எனக்கு எதுவும் ஓடவில்லை. அதற்குள் வடிவாம்பாள், தன் மகளைப் பார்த்து, ‘செல்லம், இதற்கெல்லாம் அழுவாளோ ? தம்பி யாரு, நீ யாரு ? எழுந்திரம்மா ‘ என்றாள் ‘.

‘அண்ணாவி மகாலிங்கம் சமயம் பார்த்து ‘தம்பி, அப்ப நான் இப்படி வெளியிலே கொஞ்சம் போயிட்டு வாரேன் ‘ என்று வெற்றிலை பாக்கு எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார் ‘.

‘அதிகம் சொல்வானேன். வடிவாம்பாளும், செல்லமும் வருந்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் நான் கொஞ்ச நாள் செல்லத்துக்கு சங்கீதப் பயிற்சி அளிப்பதாக ஒப்புக்கொண்டேன். செல்லத்துக்கும் எனக்கும் பழக்கம் நெருக்கமடைந்தது. வடிவாம்பாளும் அதற்கு இடம் கொடுத்தாள். ஒரு நல்ல தினத்தில் செல்லத்தை என் அபிமான ஸ்திரியாகவே ஸ்வீகரித்துக் கொண்டேன்.

‘எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் சுகமாக நடந்து வந்தது, சுமார் ஒரு வருஷ காலம் அப்படியே வாழ்ந்து வந்தோம். கணவனும் மனைவியுமாகவே வாழ்ந்து வந்தோம். இடையில் அவளுக்கு ஒரு தடவை கர்ப்பம் தரித்து மூன்று மாதத்தில் அது அழிந்தும் போயிற்று. ‘

நாகமுத்து மீண்டும் கதையை நிறுத்தினார். எனக்கோ கதை இன்னும் ஆரம்பமாகவில்லை என்றே தோன்றியது. ஒருவேளை இனித்தான் கதை அழுத்தம் பெறுகிறதோ என்று ஒரு சந்தேகம்.

நாகமுத்து மீண்டும் ஆரம்பித்தார்.

‘இனிமேல்தான் சார், அந்தப் பாழாய்ப் போன துன்பம் வந்தது. வடிவாம்பாளுக்கு அப்போது உடம்புக்கு மிகவும் முடியாமல் படுக்கையில் கிடந்தாள் வைத்தியர்களும் கை விட்டு விட்டனர். மரணப் படுக்கைதான். அப்போது எங்கள் இருவரையும் அழைத்து தம்பி, செல்லம் ‘ கேளுங்கள். தம்பி உன் தந்தை வேல்சாமி நாதசுரக்காரரும் உன்னைப் போலத்தான். அவரும் என்னைத் தன் அபிமான ஸ்திரீயாகத்தான் வைத்திருந்தார். என்னைப் கோபுரத்தில் ஏற்றி வைத்து கும்பிடப் போவதாகவெல்லாம் புகழ்ந்தார். அதிகம் வளர்ப்பானேன். உன் தாயார்கூட அவரிடம் அவ்வளவு விசுவாசமாயிருந்திருக்க முடியாது. நான் தாசியானாலும் அவருக்கு அவ்வளவு பக்தி சிரத்தையோடு பணிவிடை செய்தேன். ஆனால் அவரோ மறந்து விட்டார். ஒரு மாத காலத்தில் வருகிறேன் என்று சொல்லிப் போனவர் அப்படியே போய் விட்டார். அந்த வஞ்சனையின் புண் என் நெஞ்சில் இன்று தான் ஆறவேண்டும். நீ அவர் மகன்; செல்லம் என் மகள். அதனால் தான் அவர் செய்த வஞ்சகத்துக்கு உன்னைப் பழி வாங்கினேன். நீ செல்லத்தை விரும்பியதும், இது தான் சமயமென்று திட்டமிட்டேன். நீ கட்டிய மனைவி போல, செல்லத்திடம் நடந்து கொள்கிறாயே செல்லம் யார் தெரியுமா ? உன் தங்கை ‘ ‘ என்று சொல்லிவிட்டு மறுகணம் கண்ணை மூடி விட்டாள்.

‘ ‘செல்லம் என் தங்கையா ? தங்கையையா நான் கல்யாணம் செய்தேன் ‘ ஒரே தகப்பனுக்குப் பிறந்த குழந்தைகளா தம்பதிகளாக நடந்து கொள்வது ? ‘ இப்படி யெல்லாம் என் சிந்தனை தட்டுத் தடுமாறியது. அன்று முதல் என் மனம் நிம்மதியை இழந்தது. ‘

‘நானும் செல்லமும் ஒன்றாகத்தான் இருந்தோம். ஆனால், ‘செல்லத்தை என்றாவது நெருங்கும் போது நான் கணவனாகவே நடந்துகொள்ள முடியவில்லை. மனசிலே ஏற்பட்ட கறை என் ஆண்மையையே சூறையாடிவிட்டது. பிறகு புத்திர பாக்யம் எங்கே ? ‘ என்று சொல்லி மீண்டும் கதையை நிறுத்தினார் நாகமுத்து. ‘

நானும் சூள் கொட்டிவிட்டு யோசித்தேன். இதுவும் ஒரு விகாரமா ? தங்கையென்று தெரிந்ததனால் ஏற்பட்ட மன விகாரம் உடம்பையும் பாதிக்குமா ? ஒடாபஸ் விகாரத்தைப்பற்றிப் படித்திருக்கிறேன். அவன் தாயையே தாரமாக்கியவன். தாயிடம் தனக்கு ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தான் என்று கதை. அருணகிரிநாதன் தமக்கையைச் சேர முனைந்தான் என்றும் படித்திருக்கிறேன். சம்பந்தம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. தாயைப் பெண்டாள வந்த ராஜகுமாரன் கதையிலும் அவன் அவளைப் பெண்டாள விடாமல் கன்றுக்குட்டி தடுத்து விட்டது, அப்படியானால் இந்த விகாரத்தை எப்படிப் புரிந்து கொள்வது ? நான் ஒருகணம் தயங்கிவிட்டு வாயைத் திறந்தேன்.

‘அப்புறம் ? அதன் பின்னர் தாங்கள் வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள் அல்லவா ? ‘ என்று ஆரம்பித்தேன்.

‘பண்ணி என்ன சார் செய்ய ? ‘ என்றார் நாகமுத்து இருட்டில் அவர் அழுகிறாரோ என்று சந்தேகம். குரலில் அத்தனை பரிதாபம் தொனித்தது. ‘செல்லம் என் தங்கை. ஆனால், இப்போதோ மனைவி என்ற ஸ்தானத்தில் எனக்கு யார் வந்தாலும் என் தங்கைகளாகவே தோன்றுகின்றனர். பிறகு நான் எப்படி கணவனாக நடப்பது ? வடிவாம்பாள் என்னை வஞ்சித்து விட்டாள் ‘ என் ஆண்மையை ஒரே ஒரு சொல்லால் வஞ்சித்து விட்டாள் ‘ ‘ என்று கத்தினார் நாகமுத்து.

நான் அவரது சோகத்தை மெளனத்தின் மூலம் பகிர்ந்து கொண்டேன்.

நாகமுத்து மீண்டும் பேசினார்: ‘சார், அந்தக் கல்யாண நலங்கில், நான் சுருதி பேதம் செய்து செல்வத்தை சபையில் அவமானப்படுத்தினேன். வடிவாம்பாள் கிழவியோ என் வாழ்க்கையையே சுருதி பேதம் செய்துவிட்டாள் ‘ சங்கீதத்தில் சுருதிபேதம் செய்தாலும். மீண்டும் பழைய நடையைப் பிடித்து விடலாம்; வாழ்க்கையிலே, இதயத்திலே சுருதி பேதம் செய்தால் மீண்டும் அதைச் சரிப்படுத்த முடியுமா ? ‘ என்று கதையை முடித்தார்.

எனக்கு நாகமுத்துவின் கதை பெரிய புதிராக இருந்தது. அவரது சோகக் குரலுக்குப் பின் நான் எதுவும் பேச விரும்பவில்லை. சூழ்நிலையை மாற்றுவதற்காக, எழுந்திருந்து விளக்கைப் போட்டேன்; மெளனமாக வெற்றிலையைக் காம்பு கிள்ளிப் போட்டு ஒதுக்கிக் கொண்டேன்.

பிறகு, மெதுவாக ‘நேரமாகிறது. நான் வருகிறேன் ‘ என்று சொல்லி எழுந்தேன்.

‘வடிவேலு, டிரைவரை கூப்பிட்டு ஐயாவைக் கொண்டு விட்டுவிட்டு வரச்சொல்லு ‘ என்றார் நாகமுத்து,

எங்களுக்குள் வேறு பேச்சு நிகழவில்லை.

3

மறுநாள் நாகமுத்துவின் பேட்டியை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த பேட்டி விவரம் பின் வருமாறு முடிந்திருந்தது.

‘நாகமுத்துவுக்கு குழந்தைகள் உண்டு: நாடகப்பிரியா, கோகிலப் பிரியா, நாம நாராயணி, பாவ்ப்பிரியா, லதாங்கி, சரசாங்கி, கல்யாணி…..

இவர்களில் அவருக்கு சீமந்தப் புத்திர பாக்கியமாக விளங்குவது தோடிதான். ‘

Series Navigation