சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

வரதன்


இயற்கை தனது சீற்றத்தை எப்போதும் அதிரடியாக நடத்துவதில்லை. பல வேளைகளில் தப்பிப்பதற்கு வாய்ப்பைத் தாராளமாகத் தருகிறது.

சுமத்ரா பகுதியில் உருவாகிய அழுத்தம், சுனமா-வாக இந்திய-இலங்கையத் தாக்குவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது.

அது, தக்க விதத்தில் மக்களை எச்சரிக்கைச் செய்து அவர்களை கடற்கரை தள்ளி பாதுகாப்பான தூரம் செல்ல வைப்பதற்கு போதுமான கால அவசாகம் இருந்திருக்கிறது.

ஆனால், ஏன் அது நடக்கவில்லை…. ?

அரசியல் நடத்துவது தான் அரசாங்கம் நடத்துவது என்ற இந்திய அரசியல்வாதிகளின் மனநிலையே முழுக்காரணம்.

உலகளாவிய அளவில் வேலை பார்த்த அனுபவம், இன்று இணைய வசதிகளால் அதிகமாக தங்கள் அறிவை வளர்த்துக் கொண்ட படித்த மக்களின் அறிவு என்ற எதையுமே பயன்படுத்தாமல் பொறுப்பற்ற ஒரு அரசாளும் முறையே தான் இதற்கு காரணம்.

இந்தக் கட்சி தான் என்றில்லை, எல்லா கட்சிகளிலும் இந்த மனநிலை தான்.

சரி, அழிவு தான் வந்தது. அதன் பின் நடந்த விஷயங்கள்…. ?

கிரிக்கெட் ஸ்கோர், வடிவேலு காமெடி, புதுசு கண்ணா புதுசு இவற்றிக்கிடையே , ஆயிரம் ஆயிரம் சவங்கள்…. நெஞ்சம் பிழியும் கதற்ல்கள் ஏதோ துக்கடா காட்சி மாதிரி.

ஊரே அழிந்து போய் கிடக்கும் வேளியில், அது பற்றிய கருத்துப் பறிமாற்றம், அது சார்ந்த துறை விற்பனர்களின் கருத்துக்கள், யோசனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான துயர் துடைக்கும் பாலமாக விளங்க வேண்டிய ஊடகம் பொறுப்பற்றுப் போய்…. கும்மாங்குத்துக் காட்சிகளுக்கு நடுவே…. இக்காட்சிகள் காட்டியபடி….

—-

இழப்பின் உச்சத்தில் இயலாமையின் உச்சத்தில் இலக்கில்ல்லா பயணம் செய்யும் கால்கள்…. அவர்கள் வேறு இடம் போக, எந்த பயண வசதியும் கிடையாது. உதவியும் கிடையாது. மந்திரி பின்னால் பயணிக்கும் ஆயிரம் கார்கள் இவர்கள் பற்றி கவலைப் படமால், சுடுகாடு நோக்கி….

பிணம் தின்னும் சாத்தான்களாய்…

—-

என்ன செய்கிறது அரசாங்கங்கள்…. ?

பேரழிவில் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய மத்திய அரசு, இரு தமிழகம் சார்ந்த மந்திரிகளை ‘பார்வையிட ‘ அனுப்புகிறது.

போர்க்கால நடவடிக்கை என்பது என்னாச்சு…. ?

ஒரு முக்கிய பிரமுகர் ( அவர்களுக்கு முக்கியம் ) சாவிற்கு பறந்து வரும் ஜனாதிபதி பிணக்குவியலான சாமான்யன்கள் பற்றி ஒரு அறிக்கை விட்டு கவிதை எழுதப் போகிறார்…!

தனுஷ்கோடி அனுபவத்தில் அவருக்குத் தெரியும் அழிவு எப்படியிருக்கும் என்று.

ஆனால், அவரும்….

அதுமட்டுமல்ல,

பிரதம மந்திரி, நிழல் உலக ஆட்சியாளர் யாரும் இது பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

வந்தார்கள், பார்த்தார்கள் சென்றார்கள் எனும் கதைதான் எல்லா அரசியல்வாதிகள் விஷயத்திலும்.

ஆயிரம் ஆயிரம் மக்கள் உண்மையாகச் சாகக் கிடக்க, தனது மருத்துவமனை வருகை தொட்டு வந்த வதந்திக்கு பேட்டித் தரும் தலைவர்.

தரையில் பிணமான மனிதர் கூட்டம், அழிவின் உச்சத்தின் சோகமாகிக் கதறும் மக்கள் காண வானத்தில் பறக்கும் தலைவர்கள்….

என்னதான் எண்ணங்கள் இந்த ஆளும் வர்க்கமிடை…. ?

ஒரு வேளை அவர்களைப் பொறுத்தவரை, வீணாப் போன வாக்குகள் பற்றி கவலைப்பட்டு என்ன பயன் என்ற எண்ணமா… ?

இல்லை இந்த சூழல் தமக்கு அரசியல் விளையாட ஒரு களம் என நினைத்தனரா… ?

ராணுவமும், சி.ஆர்.பி.எப் ஆகியவை என்னவாயிற்று… ?

ஏதோ, பன்னிகளை குழி வெட்டி புதைப்பது போல், கொத்துக் கொத்தாக புதைக்கப்படும் கோர காட்சி கண்டு அவர்கள் மனம் பதறவில்லை

அரசியல்வாதிகளுக்கு சாமன்யன் மேல் எத்தகைய எகத்தாளம் இருந்திருக்க வேண்டும்…. ? இந்த நெஞ்சழுத்தம் ஏன் வருகிறது அவர்களுக்க்கு… ?

ஊரில் பிழைத்த சக மனிதர்களும், தொண்டார்வ இயக்கங்களும் தான் பம்பரமாக சுழன்று உதவிகளில் ஈடுபடுகிறார்கள்.

கலிபோர்னியாவில் பூகம்பம் உக்கிரதாண்டவம் ஆடிய போது 24மனி நேரத்திற்குள், அந்த நாட்டின் ஜனாதிபதி நேரிடையாக வந்து இறங்குகிறார். பூகம்ப ஆபத்து தொடர்ந்த போது பாதுகாப்பு எச்சரிக்கை மீறி, தரையில் நடந்து திட்டங்கள் தீட்டி மக்களோடு கலந்து நானிருப்பது உன் பிரச்சனையிலிருந்து உன்னை வெளிக்கொணர தோள் கொடுக்க. அது என் கடமை என உணர்த்துகிறார்.

ஆனால், இந்தியாவில்…. ?

புரியாத மொழியின் மேல் தார் பூசியதற்கு ராணுவத்தை தமிழகம் மேல் ஏவிய மத்திய அரசு, இந்த கோர தாண்டவத்திற்கு ஆண்மையற்று கிடக்கிறது.

ஏன்…. ?

தேசிய பேரழிவிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழக அரசோ, தற்போதும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் , மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி பணியாற்றக் காணோம்.

என்னதான் நினைப்போ இவர்கள் அனைவருக்கும்.

இதோ, மக்களுக்காக மக்களால் மக்களே நடத்துவது தான் ஜனநாயக ஆட்சிமுறை என்பதை நிரூபிப்பது போல். சக மக்கள் தான் உதவுகிறார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் தமிழகத்தில் எதிர் கட்சிகள் செய்யும் கேவலமான அரசியல்.

மத்திய சுகாதாரத் துறையை கையில் வைத்திருப்பவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இந்த பேரழிவில் பிண அரசியல் செய்கிறார்கள்.

மாநில அரசின் செயல்பாட்டுக்குறையை தங்களின் மத்திய அரசின் பலம் கொண்டு சரி செய்யாமல் ஜெயலலிதாவை கவிழ்த்த ஒரு வாய்ப்பாகத் தான் இதை கொண்டுள்ளார்கள்.

பிணத்தின் மேல் தாங்கள் பரிவட்டம் காண துடிக்கும் இவர்கள் பிணம் தின்னும் கழுகுகள் ….

அரசியல்வதிகள் கடமை மறந்தால் மக்கள் யாசகம் கேட்பது நிறுத்தி, தங்கள் உரிமைகள் பெற உரத்த குரலில் கேட்க ஆரம்பித்தால் தான் விடிவு வரும்.

மற்றபடி,

குஜராத், கும்பகோணம் போய் இதோ கடலோர பகுதிகள் அனைத்தும் சொல்லும் பாடம்::::

‘வரும் முன்னர் காவாதான்…. ‘ எனும் குறள்படி வாழாவிட்டால் இச்சோகம் நாளையும் வேறொரு அழிவில் தொடரத்தான் செய்யும்.

—- வரதன் —-

பி.கு: உதவ சில எண்ணங்கள்:

— நிர்கத்தியற்றுப் போன சிறுவர்/சிறுமியர்களை அடையாளம் கண்டு தொண்டார்வ அமைப்புடன் இணைந்து அவர்களின் படிப்பிற்கான தத்து எடுக்கலாம்.

— நிராதவான பெண்களின் மறுவாழ்விற்கு வழிகாட்ட நிதி உதவி செய்யலாம்.

தனி தொண்டுள்ளங்கள், கட்டுமான உதவிகளுக்கு பண உதவி செய்வதை விட அந்த உதவி அரசாங்கங்கள் தர போராட வேண்டும். இல்லையெனில் தனி மனிதர்கள் நிர்கதியற்றுப் போய் விடுவார்கள்.

varathan_rv@yahoo.com

Series Navigation