சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

ஜெயமோகன்


சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ரா.வின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.

தொலைபேசி : 91-44-24993448. email : uyirmmai@yahoo.co.in

பக். 216 விலை ரூ.100.

நவம்பர் 27ஆம் தேதி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் வெளியிடப்படவிருக்கும் இந்நூலிலிருந்து சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை விவரிக்கும் பகுதி இங்கே தரப்படுகிறது.

20-10-2005 காலையில் சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நாள். அதற்கு முந்தைய நாளே அவரது உடல் அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டது. அவரது இறப்புச் செய்தி கேட்ட சனிக்கிழமை முதல் தொடர்ந்து இரவும் பகலும் தூக்கம் இன்றி அவரது நினைவுகளை மீட்டியபடி, அவற்றை எழுதியபடி இருந்தேன். செவ்வாய் விடியற்காலையில் நான்குமணிக்கு முதல் பகுதியை எழுதி முடித்தேன். அச்சில் ஏறத்தாழ 70 பக்கம் வரும். அது கடுமையான உழைப்பும் கூட. ஆழமான களைப்பும் தனிமையுணர்வும் ஏற்பட்டது. அருண்மொழியும் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்ப மனமின்றி கதவைத் திறந்து ?ீரோவை உள்ளே அழைத்தேன். இந்த லாப்ரடார் இன நாய்கள் இயற்கையின் அற்புதமான படைப்பு. மனிதனின் மனநிலைகளை இத்தனை நுட்பமாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய, உணர்வுரீதியாக இத்தனை ஆழமாக நம்முடன் இணையக்கூடிய இன்னொரு உயிர் இப்பூமியில் இல்லை. கரடி போன்ற கரிய உடலும் ஒளிரும் மனிதக் கண்களுமாக அது உள்ளே வந்து வாலாட்டி நக்கி தன் பிரியத்தை வெளிக்காட்டிய பிறகு என் காலடியில் என்னையே நோக்கியபடி படுத்துக்கொண்டது. காலையில் கவிஞர்கள் எம். யுவன், தண்டபாணி இருவரும் வருவதாகச் சொல்லியிருந்தனர். என் நண்பர் அன்புவை நான் வரும்படிக் கோரியிருந்தேன். அவரது அருகாமை தேவைப்பட்டது. ஐந்து மணிக்குப் படுத்துக்கொண்டேன். நாய் அருகிலேயே தூங்காமல் அமர்ந்துகொண்டது. அரைமணிநேரம் தூங்கியிருப்பேன், உடனே விழிப்பு. நினைவுகளின் ஓட்டம். உயிருள்ள பிம்பங்கள். ‘உங்களோட உணர்ச்சிகரம்ங்கிறது ஒருவகையான நரம்புச்சிக்கல். அது உங்களுக்கு ஒரு எழுத்தாளனா பெரிய பலம். மனிதனா பெரிய சுமை ‘ சுந்தர ராமசாமி சொல்வார். உண்மைதான். எழுத்தில் இதே உணர்ச்சிகரம் வெளிப்படும்போது அது மிக மிக இன்பமூட்டுவதாக உள்ளது. சனிக்கிழமை முதல் தொடர்ந்து தூங்காமல் இருக்கிறேன். என் பெரிய நாவல்களை எழுதியபோது அப்படி தவித்திருக்கிறேன். அவையெல்லாம் இனிய துன்பங்கள். இது அப்படியல்ல. தூங்குவதற்காக மாத்திரை சாப்பிட்டேன். உடனே வாந்தி வந்து வெளியே போய்விட்டது. விழித்து எழுந்து அமர்ந்திருந்தேன். ஐந்து மணிக்கு ?ீரோ சிறுநீர் கழிக்க வெளியே போக விரும்பி முனகியது. வெளியே விட்டேன். ஐந்தரை மணிக்கு அருண்மொழி வாசலைத் திறந்தாள். அவள் வாசலைக் கூட்டும் ஒலியும் நாய்களின் குரைப்பும் கேட்டன. ஆறுமணிக்கு யுவனும் அன்புவும் வந்தனர். இடைவெளியே இல்லாமல் சுந்தர ராமசாமி குறித்த நினைவுகளாகப் பேசிக்கொண்டிருந்தோம். 12 மணிக்குத் தண்டபாணி வந்தார். மாலை சுந்தர ராமசாமியின் உடலைத் திருவனந்தபுரத்தில் விமானநிலையத்தில் இருந்து பெறுவதற்காகக் கண்ணனும் பிறரும் செல்லும்போது தண்டபாணியும் யுவனும் கூடவே சென்றார்கள். அன்பு என்னுடன் இருந்தார். அன்று மாலை பெங்களூரிலிருந்து சத்தியமூர்த்தி வந்தார். அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். அன்றிரவாவது தூங்கிவிடவேண்டும் என்று பட்டது. இல்லையேல் மறுநாள் நான் நிலைதடுமாறிவிடக்கூடும், அது அவசியமில்லாத காட்சிப்படுத்தலாகப் புரிந்துகொள்ளவும்படும். ஆனால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் நடந்து சுகுமாரன் முதலியோர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குச் சென்றோம். சுந்தர ராமசாமியின் உடலைக் கொண்டுவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் யுவனும் அங்கேயே தங்கியிருந்தான். அங்கே சென்றதும் முன்னைவிட பலமடங்கு விழிப்பாகிவிட்டேன். சுந்தர ராமசாமி குறித்தே பேசிக்கொண்டிருந்தேன். விடிகாலையில் யுவன் தங்குவதற்காக நான் வீடு திரும்பினேன். குளித்துவிட்டு மனுஷ்யபுத்திரன் வந்து தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். அவர் தயாராக இருந்தார். நாஞ்சில்நாடனுக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் நாகர்கோயிலில் அறை போட்டிருந்தேன். அவர்கள் முன்னரே சென்றுவிட்டிருந்தனர்.

சுந்தர ராமசாமியின் இறுதி அடங்கல் அது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்தது என்றே எண்ணுகிறேன். தமிழில் எந்த நாளிதழும் அவர் இறப்பை உரிய மரியாதையுடன் வெளியிட வில்லை, காலச்சுவடு அளித்த செய்தியை அப்படியே மூன்றாம் பக்கத்தில் தபால்தலை அளவு படத்துடன் வெளியிட்டிருந்தனர். தினமணியில் அவரது இறப்புச்செய்தி அளவுக்கே ஒரு கிழவியின் இறப்புச்செய்தியும் முக்கியத்துவமளித்து வெளியிடப்பட்டிருந்தது, அந்த அம்மாளின் மகன் தினமணி செய்தியாளராம். மலையாள நாளிதழ்கள் விரிவான படங்களுடன் முக்கியச்செய்தியாக வெளியிட்டன. மாத்ருபூமி துணைத்தலையங்கம் எழுதியிருப்பதை வாசித்தேன். கேரள தொலைக்காட்சிகளும் விரிவான செய்தி அறிக்கைகளையும் இரங்கல்செய்திகளையும் வெளியிட்டிருந்தன. அவரது இறுதி அஞ்சலிக்கு மூத்த எழுத்தாளர்களாக வந்திருந்தவர்கள் சக்கரியா, புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்றவர்களே. தமிழில் தோப்பில் முகமதுமீரான் போன்றோர் வந்திருந்தனர். இளம் எழுத்தாளர்களில் மிகச்சிலர் தவிர ஏறத்தாழ அனைவருமே வந்திருந்த னர். எழுதவந்த நாள்முதல் சுந்தர ராமசாமியின் கருத்துக்களோடு சமர்புரிந்தவர்களே அவர்களில் அதிகமானோர். இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், இடது சாரி தீவிர எழுத்தாளர்கள் தலித்தியர் என எவருமே விதிவிலக்கல்ல. பாண்டிச்சேரியில் இருந்து பிரேம் ரமேஷ் வந்திருந்தனர். கோணங்கியை பத்துவருடம் கழித்து நேரில் பார்த்தேன். கட்டிப்பிடித்து ‘இப்டியாடா நாம சந்திக்கிறது! ‘ என்றார். பல தொலைதூர ஊர்களில் இருந்து இளம் எழுத்தாளர்கள் வேனில் வந்திருந்தனர். நான் எழுதவந்த 20 வருடங்களில் நேரில் சந்திக்க வாய்க்காத பலரை அன்றுதான் கண்டு அறிமுகம் செய்து கொண்டேன். பிரேம், இரா. வேங்கடாசலபதி, என்.டி. ராஜ்குமார் போல பலர் இயல்பாக அழுதது எனக்குக் கடும்துயரத்தை அளித்தது. என்னால் சிறிதும் அழ இயலவில்லை. சுந்தர ராமசாமியின் உடலைப் பார்க்கவும் இயலவில்லை. சென்று பார்க்கும்படி எம். யுவன் சொல்லியபடியே இருந்தார். அது அவர் இறந்துவிட்டதை நம் ஆழ்மனம் நம்பவைக்கும், அது உள்ளூர நம்மை ஆறுதல்படுத்தும் என்றார். ஆனால் அதுவும் என்னால் முடியவில்லை.

அவரது உடலைக் கொண்டு செல்கையில் கால்களை மட்டும் காலுறையுடன் பார்த்தேன். எந்தவித மதச்சடங்குகளும் இல்லாமல் அவர் எரியூட்டப்பட்டார். அந்த ஊர்வலத்தில் அதிகபட்சம் உறவினர் என இருபதுபேர் இருக்கலாம். அவரை சாதாரணமாக அறிந்தவர்கள், ஊழியர்கள் இருபதுபேர். மிகப்பெரிய கூட்டம் இளம் எழுத்தாளர் களும் வாசகர்களும் அடங்கியது. அவரது உடலைத் தூக்கியவர்கள், சிதையில் வைத்தவர்கள் எழுத்தாளர்கள். என் அறிதலில் இப்படி எல்லா முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்களும் எப்போதும் ஒன்றாகக் கூடியதில்லை. இதுவே சுந்தர ராமசாமி இறக்கவேண்டிய முறை. அவருக்கு அளிக்கப்படச் சாத்தியமான அதிகபட்ச அஞ்சலியும் இதுவே. இந்த இறப்பில் இடதுசாரிக் கட்சிகள் நடந்துகொண்ட முறையும் எனக்கு நிறைவளித்தது. அனேகமாக எங்கள் மாவட்டத்து இடதுசாரித்தலைவர்கள் ஊழியர்கள் அனைவருமே வந்திருந்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் கலை இலக்கியப் பெருமன்றமும் தனித் தனிக் கிளைகளாகவே வந்து அஞ்சலி செலுத்தினர். அவர் உடல்மீது கம்யூனிஸ்டுக்கட்சி அன்றி வேறு எந்தக் கட்சியின் மலர்வளையமும் வைக்கப்படவில்லை. அதற்கான தகுதிகொண்ட வேறுகட்சி ஏதும் நம்மிடையே இன்று இல்லை. வாழ்நாளெல்லாம் கட்சியுடன் சுந்தர ராமசாமி பூசலிட்டே வந்தார். கட்சிக்கு அவர் மீது மனத்தாங்கலும் இருந்தது. கம்யூனிஸ்டுக் கட்சிகளின் இளம் உறுப்பினர்களுக்கு சுந்தர ராமசாமியும் கி. ராஜநாராயணனும், ஜெயகாந்தனும் அவர்கள் தூக்கி வெளியே போட்டாலும் போகாத அளவுக்கு அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் என்பது தெரியுமா என்றும் தெரியவில்லை. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று கட்சி அவரைப் புரிந்துகொண்டது சிறப்பானதே. பொதுவாக நம் முற்போக்காளர்கள் இறக்கும்போது அவரது குடும்பமும் சுற்றமும் இறந்தவரின் விருப்பத்துக்கு மாறாக மதச்சடங்குகள் செய்வதற்காக கட்டாயப்படுத்துவதும், பிரச்சினைகளுக்கு அஞ்சி வாரிசுகள் அதற்கு உடன்படுவதும் நடந்துவருகிறது. கட்டாயங்களை மீறி அவரது விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றிய கண்ணன் அவரது கடமையைச் சிறப்பாகவே நிறைவேற்றியிருக்கிறார். வாழ்நாளெல்லாம் ஸ்டைலாக வாழ்ந்த சுந்தர ராமசாமி சாதாரண பிராமண வழக்கப்படி தரையில் கிடத்தப்பட்டு வாய்க்கரிசி போடப்பட்டு அவமானப்படுத்தப் படவில்லை என்பது அவரது வாசகர்களின் நன்றிக்குரியது. ஆம், சுந்தர ராமசாமி எப்படி இறக்கவேண்டுமோ அப்படி இறந்தார்.

ஜெயமோகன்

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>