சீதையின் தனிப்புலம்பல்

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

முனைவர் மு. பழனியப்பன்


பெண் சக்தியின் குறியீடு. அவள் உயிரினை பிறப்பிப்பவள். பிறந்த உயிர்களுக்கு நல் உணர்வினை ஊட்டுபவள். அவளிடமிருந்தே நல்ல உலகம் உருவாகிறது. அவளைப் பாராட்டுவதன் மூலம் அறிவதன் மூலம் உலகைப் பாராட்டுகிறோம்; உலகை அறிந்து கொள்கிறோம், மொத்தத்தில் உலகின் உன்னதம் அவள்.
அவள் வாழ்வில் இன்பம், துன்பம் இரண்டும் உண்டு என்றாலும் துன்பமே அவளின் வாழ்வின் பெரும்பங்காகிப் போகிறது. உண்மை வாழ்விலும், இலக்கிய வாழ்விலும் துன்பமே பெண்களுக்குப் பெருந்துணையாக இருந்துள்ளது. பெண்ணின் மகிழ்வான கணங்கள் மிகச் சில மட்டுமே.
கண்ணகியின் இன்பம் எத்தனை நொடிகள் என்று கணக்கிட்டு விடமுடியும். மாதவியின் சோகம் எவ்வளவு நெடியது என்பது தெரிந்ததே. மணிமேகலையின் மனக்கவலை மாற்றல் அரிது. ஒளவையின் தனிமை,ஆட்டனத்தியின் காதல், அமராவதியின் தோல்வி, காரைக்காலம்மையின் வாழ்க்கை, ஆண்டாளின் மாலைப் புறக்கணிப்பு முதலான எதிலும் சோகமே பெண்களுக்குத் துணையாகின்றது.
இந்தச் சோகம் கற்போர் கண்ணில், நெஞ்சில், உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இன்பங்கள் ஏற்படுத்தும் பாதிப்பைவிட துன்பங்கள் ஏற்படுத்திய வடுக்கள் ஆறாதவை. அவை நெஞ்சின் ஓரத்தில் என்றும் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும். எத்தனை முறை அழுதாலும் அதற்கு வடிகால் கிடையாது; கிடைக்காது.
பெண்ணுக்கு மட்டும் தான் இப்படியா என்றால் இந்தக் கேள்விக்கு ஆணுக்கும் இப்படியே என்று சொல்லிச் சமப்படுத்திக் கொள்வதில் தடைஇல்லை. துன்பம் நேர்கையில் யாழெடுத்துப்பாட அவனுக்கு ஒருத்தி இருக்கிறாள். அவள் கற்புக்கரசியாக இருக்கலாம். ஆடல் மகளாக இருக்கலாம்.
ஆனால் பெண்ணுக்குத் துன்பம் நேர்கையில் யாழெடுத்துப்பாட எந்த ஆடவன் முன்வருகிறான். அவன் இன்னமும் அவளின் துன்பத்தில் ருசி பார்க்கிறான். துன்பமே துணையாக, துன்பமே வடிவாக வாழும் அவளின் வாழ்வு விடிவை நோக்கிப் பயணிக்க வேண்டும். அந்த விடியலில் ஆணும் ஒளி பெறவேண்டும்.
சீதை. அவளின் அழகு அதிகம். அதை விட அவளின் அறிவு அதிகம். அவளின் காதல், கற்பு இன்னும் இன்னும் அதிகம். இவை எல்லாவற்றையும் விட அவள் அடைந்த துயரம் இன்னும் அதிகம் என்பதுதான் கம்பனைக் கற்போர் கொண்ட முடிவு.
திருமணம் ஆகிறது. கம்பன் கற்பனையில் அது காதல் திருமணம். தொல்காப்பியர் கருதும் அகத்திணை இலக்கணம் மாறாத திருமணம்.
மணவாழ்க்கையைப் பெற்றோர் கலந்து பழகும் முன்னால் அரச பாரம் தயாராய்த் தேர் கொண்டு வருகிறது. தேரில் ஏற இருந்தவன் தடுத்து நிறுத்தப் பட்டான். காட்டுக்குப் போக ராஜகட்டளை வழிவகுத்தது. போகும் முன்னே மனைவியிடம் சொல்லிச் செல்ல வருகிறான்.
பிரிவின் சுடுமோ பெருங்காடு என்று துன்பத்தின் அளவை சரியான துலாக்கோலால் அளந்து பார்க்கிறாள் சீதை. கணவனை விட்டுப் பிரிந்து இருப்பதைவிட காடு கொடுமையானது அல்ல. முடிவெடுத்தாள். மரவுரி தரித்து மாமியார் காட்டிய வழியில் கானகம் போனாள். தேனிலவுக்குச் செல்ல வேண்டியவள் தனிவழியில் பயமுறுத்தும் காட்டுவழியில் கணவனை மட்டுமே துணையாக்கிப் போனாள்.
மான் வழி வந்த சோதனையின் முடிவில் மீளத்துயரம் அவள் வாழ்வில் நிலைத்தது. அசோக வனத்தின் சோகச் சிறையில் கற்புக்கடம் பூண்ட பொற்புடை தெய்வமாக அவள் ஆனாள்.
அவளின் அழகு அவளுக்கு எதிரியானது. அவளது அறிவு அவளின் நிலையை ஊரார் பழித்துக் கூறுவார்களே என அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. அவளின் உணர்வு இராமனின் உருவநலனில் மெலிந்து போனது.
இந்தத் துயரத் தொடர்கதை அவள் வாழ்வில் ஏன் ஏற்பட வேண்டும். துரும்பாய் நினைத்து இரும்பாய் எதிரில் நிற்கும் இராவணக் கொடியோனை அவள் ஏன் ஏச வேண்டும். துன்பமே அவள் வாழ்வில் பெரும்பங்கு என்று சொன்னால் அது உண்மைதானே.
தனியாய்ப் புலம்புகிறாள். அவளின் புலம்பல் கற்போர் நெஞ்சைக் கரைக்கிறது. கற்போர் நெஞ்சம் கல் அல்ல. அது வெல்லக்கட்டியாய் கம்பன் கவிதையைச் சுவைத்துக் கொண்டே வருகிறது. சீதையின் துயரம் கேட்ட அந்த வெல்லக்கட்டியின் உருவம் அழிந்து அது அழத்தொடக்கிறது. கம்பன் அழுகவிதை படைக்கிறhன்.
உருக்காட்டுப் படலத்தில் கற்போர் தன் உருவம் தொலைத்துத் துன்பக்கடலில் மூழ்குகின்றனர்.
ஒன்று என் உயிர் உண்டு,எனின் உண்டு இடர் யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா
(உருக்காட்டுப்படலம் 497)

சீதை துன்பத்தோடே பேசுகிறாள்; என் உயிர் இருக்கிறது. அது இருக்கும் வரை எனக்கும் துன்பம் உண்டு. அந்த உயிர் எப்பொழுது தொலைகிறதோ அப்போதே அந்தத் துன்பமும் தொலைந்து போகும் என்ற பேச்சில் மிஞ்சுவது ஆறாத்துயரமே.

அவள் இன்னும் பேசுகிறாள்; பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன். . . சிறை இருந்தேனை அப்புனிதன் தீண்டுமோ(498) இது இராமனிடம் அவள் வைக்கும் துயர வேண்டுகோள்.
உன்னினர் பிற என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன் உயிர் காத்து இருங்காலம் வைகினேன்
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார் கொலோ(499)

எதோ ஒன்று விரும்பியது; அதற்காக பல முறை என்னிடம் பேசிப்பார்த்தது; அந்த வார்த்தைகள் என்காதில் இன்னும் கோர்த்துக் கொண்டுள்ளன, எனினும் நான் இறந்து போகாமல் இருக்கிறேனே என்னைக் காட்டிலும் கொடிய அரக்கியர் யாராவது உலகில் உண்டா
நல்பிறப்பு உடைமையும் நாணும் நன்று அரோ
கற்புடை மடந்தையர் கதையில்தான் உளோர்
இல் பிரிந்து உய்ந்தவர் என்னின் யாவரே (500)

என்று அவள் புலம்புகிறhள்.
கணவனற்ற இடத்தில் இருக்கும் என் நாணமும் நல்பிறப்பு உடமையும் நன்றானதாட? கற்புக்கரசிகள் என்று கதைகள் கூறும் நிலையில் உள்ள காவியப் பெண்களுக்குக் கூட என்நிலை வந்திருக்காது. கணவனைப் பிரிந்து, உயிரோடு வாழும் என்நிலை இரங்கத்தக்கது.
இவ்வாறு அவள் புலம்புவதைக் கேட்பதற்குக் கூட எதிரில் ஆளில்லை. உறக்கத்தில் அரக்கியர் கிடக்க தனித்துப் புலம்பும் அவளின் நிலையைக் கேட்க அப்போது ஆளில்லை என்றாலும் அவளின் துன்பம் கம்பனைக் கசக்கி அவன் வழியாய் கற்போரையும் கசக்கி கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. கம்பனும் அவனைக் கற்போரும் இந்தத்துயரத்தைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் சீதை. கலக்கம் கொள்ளாதே.
இராம இலக்குவர் வந்து இராவணனை அழிக்கட்டும். அல்லது இராவணனை அழிக்க முடியாமல் போரில் அழிந்தாலும் அழியட்டும். எவ்வாறாயினும் என்மேல் ஏற்பட்ட பழி நான் இருக்கும் வரை என்னைத் தொடரும். என்னைத் தொடர்ந்த அந்த மாற்ற் இயலாப் பழி அவர்களையும் தொடருமே. பழிக்கும் ஊர் குறித்த அவளின் கவலையை மாற்ற முடியுமா. (505)
பெருந்தவம் மடந்தையர் முன்பு பேதையன்
கருந் தனி முகிலினைப் பிரிந்து கள்வர் ஊர்
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனா ( 506)

என்ற அவளின் வருத்தம் என்றைக்கு மாறும்.
கம்பனின் கவிகள் சீதையின் தீர்க்க இயலா வருத்தத்தை அணுஅளவு கூடக் குறைக்காமல் எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு பாடலும் வீசும் துன்பப் புயலில் சிக்குண்டு தவிப்பவள் சீதை மட்டுமல்ல. கற்போரும் தான்.
விடிவு அனுமன் வடிவில் வந்து கூவியது. போர் உருவானது. வெற்றி மாறி மாறிப் புகுந்து இராவணனின் தோல்வியில் முடிந்தது. வெற்றி பெற்ற இராமன் துன்புற்ற சீதையைச் சீரோடு கண்டான். அவளின் சீரை ரசித்தான் இல்லை. சிறை இருந்த செவ்வியைப் போற்றினான் இல்லை. தீவலம் செய்தவன் தீயைக் காட்டி அவளை சுடச் சொன்னான். சுட்டிடுமோ தீ.
மாற்றான் வீட்டில் கரியும் உணவும் பூவும் பொலிவும் பெற்றா வாழ்ந்தாள் அவள். என்ன கொடுமை இது. உளம் பதைக்கிறது. உயிர் நொந்து, உள்ளம் நொந்து, அறிவுத் திறம் நின்று நம்பிக்கையின் துணையாய் மட்டும் வாழ்ந்தவளுக்குக் கணவன் தந்த பரிசு போற்றுதற்குரியது. மிக அழகானது.
அவள் தீயில் இறங்கினாள். ஆனால் அவள் இறங்குவதற்கு முன்னால் சொல்லிய சொற்களில் இருந்த உறுதி உலகத்தாருக்கு அவள் தூய்மையானவள், இரங்கத்தக்கவள் என்று உணர்த்தின.
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா
என்றாள்

(மீட்சிப்படலம் 3976)
ஏ தீயே நீ உடலை எரிக்கும் வல்லமை பெற்றவன். ஆனால் உன்னால் மனதை எரிக்க இயலாது. இருந்தாலும் அந்த சக்தியை நான் உனக்குத் தருகிறேன். தவற்றை என் மனம் செய்திருந்தால் என் உடலை அழித்து விடு.
கேட்கக் கூடாத சொற்கள், அல்லது சொல்லக் கூடாத சொற்கள் இவற்றின் காரணமாகக் கூட நான் மாசு பெற்றிருக்கலாம். அவற்றை அழிக்கும் வல்லமை உனக்கு இல்லை. அதனையும் உனக்கு நான் தருகிறேன். அவ்வழியில் சிறு மாசு விழுந்திருந்தாலும் என்னை நீ சுடுக
இச்சொற்களைக் கேட்டதும் மனம் எரிகிறது. உடல் வெம்மைப்படுகிறது. காதுகள் சிவக்கின்றன. கண்கள் கண்ணீர் கோக்கின்றன.
என்ன பாவம் செய்தாள் இவள். உரசிப்பார்த்து மாற்று கூற இவள் தங்கமா? எடைபோட்டு பூச்சி, சொத்தை நீக்கி வாங்க இவள் கத்திக்காயா? கணவனையே எண்ணிக் கானகம் வந்தாள். அவனையே எண்ணி மானும் கேட்டாள். இப்போது தீயின் புகுமுன் அவனை வணங்கி நின்றாள். இவ்வளவு தானே அவள் செய்தது. இதற்கா இத்தனை சோதனை.
இன்னும் பல சீதையர் உளம் வாடுகிறார்கள். உடல் நோகிறார்கள். காதுகளை மூடிக்கொள்கிறhர்கள். இவை எங்கும் என்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
இந்தத் துயர தொடர்கதை போதும் என்று சொல்லி முடிக்க அனுமன் விரைவில் வரட்டும். அவன் நெஞ்சத்தேர் இவர்களுக்கு இருக்கை அமைத்துத் தரட்டும்.


muppalam2003@yahoo.co.in
manidalblogspot.com

Series Navigation