சீதைகளைக் காதலியுங்கள் !

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ஜோதிர்லதா கிரிஜா


காலை எட்டு மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன் வேலை நிமித்தமாக நண்பன் ஒருவனைச் சந்திப்பதாக இருந்தது நினைவுக்கு வந்தவனாக மிகவும் சலிப்புற்றுப் போனான். அந்த நண்பன் தனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தரிடம் அவர் கம்பெனிகளில் ஒன்றில் அவனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி யிருந்தான். அதற்கு முதல் நாள் கவலைகளுடன் அவன் தூக்கமும் விழிப்புமாகப் போராடியவாறே படுக்கையில் புரண்டு கொண்டு இருந்துவிட்டதால், வழக்கத்துக்கு மாறாக எட்டு மணி வரையில் உறங்கிப் போய்விட்டான். நேற்று வரையிலும் கவலையற்ற காளையாகத்தான் அவன் திரிந்து வந்திருக்கிறான். தனது கட்டுப்பாடற்ற போக்கு, நடத்தை ஆகியவற்றின் விளைவுகளைப் பற்ற்ிக் கவலைப்படாதவனாகவே அவன் இருந்து வந்திருக்கிறான். மூன்றாம் முயற்சியில் ஒரு பி.ஏ. பட்டம் வாங்கியதன் பின்னர், சில காலம் சோம்பித் திரிந்துவிட்டு அண்மைக் காலமாக அவன் தனக்கென்று ஒரு வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறான். ஆனால், மனுச்செய்த இடங்களில் எல்லாம் அவனுக்குத் தோல்வியே கிட்டிற்று. வேலை ஒன்றைத் தேடிக்கொண்டாக வேண்டிய தேவை அவனுக்கு இல்லைதான். இப்போது கூட அவன் வேலை தேடத் தயாராக இல்லை, ஆனால், அவனுடைய அப்பா சில நாள்களுக்கு முன்னர் அவனை யழைத்துச் சுருக்கென்று சில சொற்களைச் சொல்லி அவனைப் புண்படுத்திவிட்டார். அவனுடைய அப்பா பணக்காரர்தான். ஆயினும், அவன் சோம்பித் திரிந்துகொண்டிருந்தது அவருக்குச் சம்மதமாக இல்லை. அவன் கைச் செலவுக்காக மாதாமாதம் இருநூறு ரூபாய் கொடுத்துவந்த அவர், ஒரு பிரும்மச்சாரிப் பையனுக்கு அவ்வளவு செலவு ஏன் என்று கேட்கத்தொடங்கி யிருந்தார். தன் செலவுகளை அவன் குறைத்துக்கொள்ள வேண்டியது பற்றி அவனிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, தொகையை நூறாய்க் குறைத்தும் விட்டார். இது அவனை மிகவும் புண்படுத்திவிட்டது. மனத்துள் அவன் அவரைத் திட்டித் தீர்த்தான். அவனுடைய பழைய நண்பர்கள் – அவனுடன் படித்தவர்கள் – அவனைப் பார்த்த போதெல்லாம் அவன் என்னவேலையில் இருந்தான் என்று கேட்டுத் துளைத்தது வேலை தேடும் முயற்சியில் அவன் ஈடுபட்டமைக்கு மற்றுமொரு காரணமாகும்.

குறிப்பிட்ட நேரம் தவறிவிட்ட போதிலும், நண்பனைப் பார்க்கவே அவன் விரும்பினான். ஒரு நெடிய கொட்டாவியை உதிர்த்துவிட்டுக் கட்டிலிலிருந்து குதித்த அவன் வழக்கம் போல் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டான். கண்கள் இடுங்கி யிருந்தன. அவற்றுக்குக் கீழே கறுப்புப் பள்ளங்கள் தென்பட்டன. கலைந்து பம்மிக் கிடந்த தலைமுடியை விரல்களாால் கோதியவண்னம். தன் தலையில் ஆங்காங்கு தென்பட்ட நரையைக் கண்டு அவன் கலக்கமுற்றான். வேறு எவனையோ முதன் முதலாகப் பார்ப்பது போல் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை ஆராய்ந்தான். அவன் அசிங்கமாக இல்லைதான். ஆனால் அழகனாகவும் இல்லை. அவன் கண்கள் மிகவும் சிறியவை. அவனது முகத்தின் பரப்புக்கு மூக்கு மிகவும் பெரியதாக இருந்தது. இடைவிடாத புகை பிடித்தலின் விளைவாக அவன் உதடுகள் கருமையாகவும் ஆகிவிட்டன. அவனுக்குச் சுருட்டை முடி இல்லை. ஆயினும் அடர்த்தியாக ஒரு தொப்பிமாதிரி அவனுக்கு முடி நிறையவே இருந்தது.

சதைப் பிடிப்பு இல்லாத அவன் கன்னங்கள் அவனை மேலும் அசிங்கப்படுத்தின. ஆறடி உயரம் இருந்த அவன் தொலைவில் இருந்து பார்த்தால் மட்டுமே சகித்துக்கொள்ளக் கூடியவனாக இருந்தான். இதனால் கமலா – அவளை மணந்துகொள்ளத் தனது விருப்பத்தை அவளிடம் வாய்விட்டுச் சொன்னபோது – அவனை மிகுந்த வருத்தத்துடன் மறுதலித்துவிட்டாள். அவன் ஒரு பெருமூச்சுடன் கண்ணாடியிலிருந்து தன் முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டான். பற்குச்சியும் கையுமாக அவன் மிக விரைவுடன் பல்துலக்கப் போனான்.

பல் விளக்கியவாறு அவன் கமலாவின் பதிலை நினைத்துப் பார்க்கலுற்றான். ‘ரவி! நான் உங்களை ஒரு நன்பராகத்தான் நினைத்து வந்திருக்கிறேன். இப்படி ஓர் எண்னத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. அறிந்தோ அறியாமலோ அப்படி ஒரு நம்பிக்கையை உங்களிடம் நான் ஏற்படுத்தி யிருந்தால், அதற்காக என்னை மன்னித்து விடுங்கள், ரவி! நட்பு வேறு, காதல் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.’ – இது அவனது முதல் காதல் முறிவு அன்று. சென்ற ஆண்டிலும் இதே போன்ற ஓர் அதிர்ச்சிக்கு அவன் ஆளாக நேர்ந்தது. ஆனால், அது சற்று மாறுபட்டது. அவன் முதற் காதலி அவனை மணந்து கொள்ள விரும்பித்தான் இருந்தாள். ஆயினும், அவளது அழகைப் பார்த்து மோகித்துப் போன ஒரு பணக்கார இளைஞன் அவளுடைய தங்கையின் திருமணச் செலவுக்காக சில ஆயிரங்களை அவன் குடும்பத்தினருக்குத் தரவும், அவள் திருமணச் செலவையும் கூடத் தானே ஏற்கவும் முன் வந்தமையால், வறுமையில் உழன்று தத்தளித்துக் கொண்டிருந்த தன் தகப்பனாருக்காக அவள் கண்ணீரும் கம்பலையுமாக அவனைத் ‘தியாகம்’ செய்துவிட்டாள். . .

அதற்கும் முன்னதாக அவன் இளமையின் வெறியில் சிவப்பு விளக்குப் பகுதிக்குச் சென்று வந்திருக்கிறான். அவன் கையில் காசு நிறைய இருந்த போதெல்லாம் அவன் அது மாதிரி இடங்களுக்குப் போவது வழக்கம். எனினும் அவன் திருமணம் செய்துகொண்டுவிட விழைந்தான். அவனுடைய நண்பர்கள் எல்லாரும் குடியும் குடித்தனமுமாக இருந்ததோடு அவனைப் பார்த்த போதெல்லாம் அவனது திருமணம் பற்றி விசாரித்ததும் அதற்குக் காரணம்.

உதிரம் குழம்பிய எச்சிலைத் தொட்டியில் துப்பிவிட்டு அவன் வாயைக் கொப்பளித்தவாறு தன் அத்தை மகள் மீனாவைப் பற்றிச் சிந்திக்கலானான். அவனுடைய அத்தைக்குத் தன் ஒரே மகளை அவன் தலையில் கட்டுவதில் ஒரே குறி. அவன் அப்பாவுக்கும் அதே எண்ணந்தான். ஆனால், ரவிக்கு அதில் துளியும் நாட்டமில்லை. மீனா ஒரு நாட்டுப் புறத்துப் பெண். கவர்ச்சியூட்டும் ஆடை அணிகலன்கள் பற்றி அவள் ஏதும் அறியாள். சோப்புப் போட்டு முகம் கழுவிக் கொஞ்சமாகப் பவுடர் பூசிப் பொட்டு இட்டுக்கொள்ளும் எளிய அலங்காரத்தை மட்டுமே அறிந்தவள். இஸ்திரி செய்யப்படாத துணிகளையே அவள் எப்போதும் அணிந்தாள் – வெளியே செல்லும்போது கூட. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அவன் தந்தை அத்தையின் கிராமத்துக்கு அவனை அனுப்பிவைத்த போதுதான் பருவ மங்கையாக வளர்ந்திருந்த மீனாவை அவன் பார்த்தான். வளர்ச்சி யடைந்திருந்த மீனாவிடம் விளைந்திருந்த மாறுதல்கள் குறிப்பிடத்தக்கவையாக இருப்பினும், அவளை மணந்து கொள்ளூவது பற்றி அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவள் அதிகம் படிக்கவில்லை. மூன்றாம் படிவத்தோடு நிறுத்தி விட்டிருந்தாள். அவளிடம் அவன் கண்ட இன்னொரு குறை அவள் மிகவும் வெட்கப்படுபவளாக இருந்தாள் என்பது. அவளது அண்மையை அவன் அறவே வெறுத்தான். அவனுக்குக் காப்பி எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்குமாறு அவள் அத்தை மிகவும் தொணதொணத்ததன் பிறகே அவள் நாணிக் கோணிக்கொண்டு அவன் அறைக்கு வருவாள். இதெல்லாம் அவனுக்கு வேடிக்கையான நாடகம் போல் இருந்தது. அவன் திரும்பி வந்ததன் பிறகு மீனாவை மணப்பது பற்றி அவன் தந்தை அவனைக் கேட்டபோது, அதில் தனக்குத் துளியும் ஒப்புதல் இல்லை என்பதை அவன் திட்டவட்டமாய்த் தெரிவித்துவிட்டான். வெகுண்ட அவர் அதற்கான காரணம் கேட்ட போது தனக்குப் பிடிக்கவில்லை என்னும் இரண்டே சொற்களில் அவன் தன் பேச்சை முடித்துக்கொண்டான். அவள் தனக்கு ஏற்றவள் அல்லள் என்பதையும் தெரிவித்தான். மேலும் சினமுற்ற அவன் தந்தை அவன் ஒன்றும் பேரழகனல்லன் என்பதை இளக்காரமாக அவனுக்கு நினைவுபடுத்திய போது, மீனா ஒரு கட்டுப்பெட்டி என்றும், தனக்குப் பிடிக்கவில்லை என்றும் அவன் எரிச்சலுடன் வெடித்தான். அப்போதைக்கு அவர்களது உரையாடல் முடிவு பெற்றது.

அதற்கு அடுத்த வருடம் அவனை “வசியம்” பண்ணும் நோக்கத்துடன் அவன் அத்தை மீனாவை யழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டாள். மீனாவைச் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகுமாறு அவன் தந்தை அவனைக் கட்டாயப் படுத்தினார். அவன் பதில் சொல்ல வாய் திறக்கும் முன்னரே, மீனா நாணிக் கோணி நடந்து வந்து தான் ஒன்றும் அவனுடன் சினிமாவுக் கெல்லாம் போக முடியாது என்று அறிவித்துவிட்டுச் சமையலறைக்குள் ஓடி மறைந்தாள். அவள் முகத்தில் அப்போது படர்ந்த சிவப்பு அவனுக்கு எரிச்சலைத்தான் தந்தது. இருப்பினும், அவளை உடனழைத்துச் செல்லும் அருவருப்பினின்று தான் காப்பாற்றப் பட்டதில் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சிதான். அதே நாளில் மாலையில் ஸ்கூட்டரில் தன் தோழி மல்லிகாவை ஏற்றிகொண்டு அவன் சினிமாவுக்குப் போகும் வழியில், தன் அத்தையையும் மீனாவையும் – பூக்கூடையுடன் அவர்கள் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த போது – சந்தித்துச் சற்று அசடு தட்டித் திகைத்துப் போனாலும், மீனா அந்த நிலையில் தன்னைப் பார்த்ததும் நல்லதுதான் என்று அவனுக்குப் பட்டது. அப்போது மீனாவின் கண்களில் தெரிந்த வருத்தம் அவனுள் சிரிப்பைத்தான் விளைவித்தது. அவன் அத்தையின் முகமோ பேயறைந்தாற்போல் ஆயிற்று. அதுவும் அவனுள் ஒரு நிம்மதியைத் தோற்றுவித்தது. மீனா தன்னைச் சிறிதும் கவராத உண்மை அவர்களுக்குத் தெரியட்டுமே என்கிற இறுமாப்பே அவனுள் எழுந்தது.

வீட்டுக்கு வந்ததும், மீனாவின் கண்கள் சிவந்தும் இடுங்கியும் காணப்பட்டதைக் கவனித்து அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்., ‘முட்டாள் பெண்!’ என்று தனக்குள் முணகிக்கொள்ளவும் செய்தான், ஸ்கூட்டரில் அவனுடன் காணப்பட்ட பெண்ணை அவன் மணந்துகொள்ள இருந்தானா என்பது பற்றி அவன் அத்தை அவனைப் பார்த்ததுமே பளிச்சென்று கேட்டுவிட்டாள். அவன் அட்டகாசமாய்ச் சிரித்துவிட்டு, அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை என்றும் அவள் தனக்கு ஒரு தோழி மட்டுமே என்று பதில் கூறினான்.

மறு நாள் அத்தையும் மீனாவும் கிளம்பிச் சென்றார்கள். ஆனால் ஊரிலிருந்து அவன் அத்தை அவன் அப்பாவுக்குக் கடிதம் எழுதி யிருந்தாள். மீனாவை ரவி மணந்து கொள்ளுவானா மாட்டானா என்பது பற்றித் தான் திட்டவட்டமான பதிலை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதாக அவள் அதில் தெரிவித்திருந்தாள். ரவி அப்போதைக்குத் திருமணத்தில் நாட்டங் கொண்டிருக்கவில்லை என்றும், எனினும் மீனாவை மணக்கக் காலப் போக்கில் அவன் சம்மதித்தே தீர வெண்டும் என்றும் அவர் நம்பிக்கை யூட்டும் வகையில் தம் தங்கைக்குப் பதில் எழுதிப் போட்டார்.

மீனாவின் ஞாபகங்கள் தனக்குள் விளைவித்த குமட்டலை அவன் தொட்டியில் காறித் துப்பியதன் வாயிலாகத் தணித்துக் கொண்டதன் பிறகு வாயைத் துடைத்துக்கொண்டு அடுக்களைக்குப் போனான். மள மளவென்று சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அவன் தன் நண்பனைப் பார்க்கப்புறப்பட்டான். ஆனால், அந் நண்பனுக்குத் தெரிந்த பெரிய புள்ளி தற்போது வேலை காலி யில்லை என்று கையை விரித்துவிட்டதால், அவன் கனத்த இதயத்துடனும் சோர்வுடனும் வீடு திரும்பினான். வருங்காலத்தில் அவனுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுப்பது பற்றியும் தாம் எவ்வித வாக்குறுதியும் தர இயலாது என்று அவர் கையை விரித்துவிட்டதே அவனைப் பெரிதும் வருத்தமுறச் செய்துவிட்டது.

படுக்கையில் சலிப்புடன் விழுந்த அவன் அந்த வாரத்துக் கல்கி வார இதழைப் புரட்டலானான். அவன் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவனல்லன். அவன் பத்திரிகைகளில் கதை – கட்டுரை படிப்பது கிடையாது. துணுக்குகளை மட்டும் படித்துவிட்டு அவன் அவற்றைத் தூக்கிப் போட்டுவிடுவது வழக்கம். அது கூட அவன் கையில் தற்செயலாய்ச் சிக்குகிற பத்திரிகைகளிலிருந்துதான். ஆனால், கவிஞர் கண்ணதாசன் கல்கியில் கடைசிப் பக்கம் எழுதத் தொடங்கியதிலிருந்து அவன் கல்கியைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கியிருந்தான். கண்ணதாசனின் எழுத்துகளில் அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு. அவர் எழுதுவது நேராக இதயத்துள் புகுவதாக அவனுக்குப் பல தடவைகளில் தோன்றியதுண்டு.

அந்த வாரத்தில் கண்ணதாசன் காதல் பற்றி எழுதி யிருந்தார். அவன் ஆவலுடன் கல்கியின் கடைசிப் பக்கத்தைப் படிக்கலானான். படிக்கப் படிக்க அவன் அதில் தன்னை மறந்து ஆழ்ந்தும் போனான். சொற்கள் அந்த அளவுக்குச் சக்தி படைத்தவை என்கிற உண்மையை அன்று எதனாலோ அவன் மிகவும் அதிகமாக உணர்ந்தான்.

கண்ணதாசன் அதில் சொல்லியிருந்தார்:

“எங்கேயோ எவளோ ஒருத்தியைச் சந்திக்கின்ற இளைஞன் அவளைப் பற்றி எந்த விவரத்தையும் கேளாமல் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். அந்தக் காதலின் மூலம் மலை உச்சிக்குப் போனாலும் போகிறான்; படு பாதாளத்தில் விழுந்தாலும் விழுகிறான். . . . பழங்காலப் பண்பாடுகள், சம்பிரதாயங்களில் காதல் ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது. திருமணம் ஒரு புனிதமான சடங்காகக் கருதப் பட்டது. காதல் என்பது கல்யாணம் முடியும் வரை. கல்யாணத்துக்குப் பிறகு அது வெறும் காதல் இல்லை. புனித வழிபாடு. பெண்ணிடம் தாய்மை நிரம்பிக் கிடந்தது.. . . இன்றோ. . . உடல் இச்சையே காதல் என்றாகிவிட்டது. மேலை நாட்டு நாகரிகத்தில் திருமணம் என்பது ஒரு குத்தகைதான். அதற்கொரு புனிதத்தன்மை உருவாக்கப்படவில்லை. முப்பது ஆண்டுக் காலத்துக்கு முன்பு வரை மற்றவர்கள் முன்னிலையில் கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது கூட இல்லை. கைகோத்துக்கொண்டு கடற்கரைக்குப் போகும் காதல் நாகரிகம் வெகு விரைவில் காதலைக் கசப்பாக்கி விடுகிறது. நாம் மீண்டும் பழங்காலத்துக்குத் திரும்பியாக வேண்டும். . . ராமனுக்குச் சீதை வாய்த்தது போல் தனக்கும் வாய்க்க வேண்டும் என்று விரும்பும் இளைஞனே எதிர்காலத்தை நிம்மதியாக்கிக் கொள்ளுகிறான். காதலும் இல்லறமும் எவ்வளவு உயர்ந்த தத்துவங்கள்! ஆனால் நாகரிகம் அதைப் போலியாக்கிவிட்டது.வெறும் சதைப் பசியாக்கிவிட்டது. ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட ஆசைக்கும் இன்று பாதி மனிதர்களுக்கு ஏற்படும் காதலுக்கும் பேதமில்லாமல் போய்விட்டது. . . வாழ்க்கையில் பாலுணர்வும் ஒரு பகுதியே தவிர, அதுவே வாழ்க்கையாகிவிடாது. . . குடும்பத்தைப் பிரிந்து, தாய் தந்தையரை வெறுத்து ஒருத்தியின் பின்னால் ஓடுவது நிரந்தர நிம்மதியைத் தராது. . . பலரது வாழ்க்கையைப் பார்த்திருக்கிறேன். தவறான தேர்வுகளினால் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்டவர்கள் அவர்கள். தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது என்பது என்னுடைய கருத்து. . .கண்களில் தெரிவதெல்லாம் நல்ல காட்சியாகிவிடாது. . . இளைஞர்களே! உங்கள் விருப்பம் போல் கிருதாவை நீளமாக வளர்த்துக் கொள்ளுங்கள்; ஜடாமுடியை வளர்த்துக் கொள்ளுங்கள்; ரவிக்கைத் துணியில் சட்டை தைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இயற்கையான அழகுக்கும், ஃபோம் ரப்பருக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளூங்கள். நீங்கள் காதலித்தே கல்யாணம் செய்வது என்று முடிவு கட்டுவதானால், கம்பனின் ராமகாதையைப் படித்துவிட்டு ஒரு சீதையைக் காதலியுங்கள். “

கவிஞர் கண்ணதாசனின் மேற்கண்ட எழுத்துகள் ரவியின் மனத்தில் அவனுக்கே புரியாத மாற்றத்தை விளைவித்தன. அவனையும் அறியாமல் மீனாவைப் பற்றிய நினைப்பு அவனுள் எழுந்தது. சட்டென்று விளைந்த ஓர் உந்துதலில் மீனாவை மணந்துகொண்டு விடுவது என்கிற திடார் முடிவுக்கு அவன் வந்துவிட்டான். கண்ணதாசனின் சொற்களுக்கு இருந்த மகிமை அவனை வியப்புறச் செய்தது. தன் மனப் போக்கைப் பற்றிய திகைப்பும் அதைத் தொடர்ந்து அவனுள் எழுந்தது. . . ‘நான் விரும்புகிற தற்கால நாகரிக நடையுடை பாவனைகள் அவளிடம் இராமற் போகலாம். ஆனால், அவள் ஒரு நல்ல பெண். நான் மீனாவை மணந்ததன் பிறகு என் கனவுகளுக்கு ஏற்ப நான் அவளை மாற்றிவிடுவேன். கண்ணதாசன் கூறுகிற சீதையின் இலக்கணங்கள் வழுவாத பெண்களில் மீனாவும் நிச்சயமாக ஒருத்தி! இப்போதே உட்கார்ந்து அவளுக்குக் கடிதம் எழுதுகிறேன். . .’

சென்ற ஆண்டு அவள் அன்புடன் தனக்கு அனுப்பி யிருந்த தீபாவளி வாழ்த்துக்கு ஒரு நன்றி கூடத் தெரிவிக்காமல் அவளை அலட்சியப் படுத்தியது சட்டென்று நினைவுக்கு வந்து அவனைத் துன்புறுத்தியது. மீனாவோடு தொடர்புள்ள மற்றொரு நிகழ்ச்சியும் அவனுக்கு ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு அவள் தன் வீட்டில் தங்கியிருந்த போது அவன் குடித்து மயங்கி யிருந்ததைத் தற்செயலாகத் தெரிந்துகொள்ள நேர்ந்துவிட்ட மீனா அந்தப் பழக்கத்தை விட்டு விடுமாறு தன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட நேரத்த்ில், மற்றபடி வெட்கமும், கலகலவென்று தன்னுடன் பழகும் நாகரிகமும் அற்ற அவள் அப்படிக் கேட்டுக்கொண்ட திடார்த் துணிச்சலை அவன் இப்போது நினைவு கூர்ந்தான். அவளது காதல் அவனுக்கு மேலும் நன்றாகப் புரிந்தது. அவளது திடார்த் துணிச்சல் அவனைத் திகப்படையச் செய்தாலும், அவள் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு சும்மா யிருக்க வேண்டும் என்று தான் கடுமையாக அவளுக்குப் பதில் சொன்னதும் நினைவுக்கு வந்து அவனை இப்போதைய மனநிலையில் சொல்லி மாளாத கழிவிரக்கத்துக்கு ஆட்படுத்தியது. தன்னுடைய சீதா அவளே என்று முடிவு கட்டியவாறு அவன் எழுந்தான். அவளைப் பார்க்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. உடனே உட்கார்ந்து அவளுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான். . .

அன்புள்ள மீனா,

என்னிடமிருந்து வரும் இக் கடிதத்தைக் கண்டு உனக்கு வியப்பாக இருக்கும். 26.10.75 தேதியிட்ட கல்கியில் கவிஞர் கண்ணதாசன் காதலைப் பற்றி எழுதி யிருந்ததை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். அவர் எழுதி யிருந்த அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் என்னிடம் வியக்கத்தக்க மாறுதல்களைத் தோற்றுவித்துவிட்டன. என்னுடைய சீதை நீயேதான் என்கிற முடிவுக்கு அதைப் படித்ததுமே நான் வந்துவிட்டேன். உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்ள நான் மிகவும் விரும்புகிறேன். உன்னிடமிருந்து பதில் வந்ததும் நான் அப்பாவிடம் பேசி நம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வேன்.

இப்படிக்கு,

உன் அன்புள்ள

ரவி.

. . . மீனாவிடமிருந்து மறு தபாலில் பதில் வந்துவிட்டது.. . . மிகுந்த பரபரப்புடன் அவன் அதைப் பிரித்தான்.

அன்புள்ள ரவி அவர்களுக்கு.

கடைசியில் சீதை மாதிரி ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க நீங்கள் முடிவு செய்துள்ளது பற்றி மிக்க மகிழ்ச்சி. என்னை ஒரு சீதை என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் பெருமை யளிக்கும் ஒன்றாகும். ஒரு பெண் ஓர் ஆணிடமிருந்து பெறக்கூடிய மிகப் பெரிய மரியாதை அது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் – மன்னித்துக் கொள்ளுங்கள், ரவி. நான் ஒரு ராமனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நானும் கவிஞரின் அந்தக் கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன். மேல் நாட்டு நகரிகம்- பெண்களிடையே பரவி வரும் இந்நாளிலும் கூட, அவர்களில் பெரும்பாலோர் தங்கள் அடிப்படைத் தன்மைகள இழக்காமலே – மேலெழுந்தவாரியான நாகரிகத்துக்கு மட்டுமே அடிமைகளாாகி – அதாவது சீதைகளாகவே இருக்கிறார்கள். கல்வியறிவற்ற ஆயிரக்கணக்கான பெண்களில் பெரும்பாலோரோ கிட்டத்தட்ட அந்தக் காலத்துச் சீதைகளாகவே இருக்கிறார்கள். இதனால் ஆண்களுக்கு மிக எளிதில் சீதைகள் கிடைப்பார்கள். ஆனால், பெண்களுக்கு இராமர்கள் கிடைப்பார்களா ? கவிஞரை இது பற்றிக் கேட்டுக் கரசாரமாய்க் கடிதம் எழுத எண்ணி யிருந்த நேரத்தில் உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் காதலுக்கு நன்றி. என்னை மன்னிக்குமாறு மற்றொரு முறை கேட்டுக்கொள்ளுகிறேன்.

இங்கனம்.

அன்புள்ள மீனா. . .

(தினமணி கதிர், 26.12.1975)

—-

jothigirija@vsnl.net

ஜோதிர்லதா கிரிஜா

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா