சீட் பெல்ட்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன்


‘சீட் பெல்ட் ‘ மாட்ட மாட்டார்களா ? என்று அந்தக் கால் டாக்சியின் டிரைவரைப் பார்த்துக்கேட்டேன். நம்ம ஊருக்குத் தேவையில்லை என்றார். 30 கிமீ என்று உச்ச வேகம் போட்டிருந்த சாலையில் 50 என்ற வேகத்தில் போய்க்கொண்டிருந்தானர். பயமில்லையா என்றேன். பழகிப் போச்சு என்றார். எங்கள் வண்டியும் முன்னே சீறிப் பாய்ந்து கொண்டிருந்த பேருந்தும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருந்தன. எங்கள் டிரைவர் இடம், வலமாக வண்டியை ஓட்டித் தம் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார்.

‘நீங்கள் ஏன் சீட்டு பெல்ட் போடலை ? ‘ என்று என் அக்காவின் வீட்டுக்காரரைக் கேட்டேன். அவர் ஒரு விஞ்ஞானி. அவர் திறமையாக உருவாக ஒரு 30 வருடங்கள் ஆகியிருந்தன. தேவையில்லை என்றார். திகைப்பாக இருந்தது. இந்த வண்டி மோதினால், பெல்ட் போடாத இவர்கள் எப்படித் தூக்கி எறியப்படுவார்கள் என்பதைக் கற்பனை பண்ணிப் பார்த்தேன். கருவாகி, உருவாகி, டாச்சர்களின் கடுமையான உழைப்பில், அரசாங்கத்தின் செலவில் இலவசக் கல்வி பெற்று உயர்ந்த மனிதர்கள் இப்படி அலட்சியமாக செத்தால், நாட்டிற்கு அடையும் நஷ்டத்தை எண்ணிப் பார்த்தேன். அந்த டிரைவர் மாதிரி கிடைக்க அந்த கால் டாக்சி கம்பெனிக்கு நாள் ஆகலாம். ஒரு வண்டி அவர்களுக்கு 1-2 மாதம் ஓடாமல் போகலாம். அதனால் வாடிக்கயாளர்களுக்குத் தாமதம் ஆகலாம். இந்த டிரைவர் இன்னும் இரு வருடத்தில் அரசாங்கப் பேருந்து ஓட்டலாம். ஏன் மற்றொரு கால் டாக்சி நிறுவனத்திற்குச் சொந்தக் காரராகலாம்.

என் எண்ண ஓட்டம் புரிந்த மாதிரி டிரைவர், ‘ நான் போனா இன்னொருத்தன் ‘ என்றார். மக்கள் தொகை அதிகமாக இருக்கவே மக்களுக்கு நாம போனா என்ன குடிமுழுகுமா என்ற எண்ணங்கள் அதிகமாகவே சென்னையில் இருக்கின்றது போலும். ஆனா, அந்த டிரைவரின் மனைவி மக்கள் படும் பாட்டை நினைத்தேன். அவன் மனைவி தன் மகனையோ, மகளையோ நன்குப் படிக்க, விளையாடத் திட்டம் போட்டிருக்கலாம். இந்த டிரைவரின் அலட்சியத்தால், இவன் ‘காலி ‘ யானால், அவன் மகன்/மகள் தன் கனவுகளை விட்டு அன்றாடப் பிழைப்பிற்கு வழி தேடலாம். யாருக்கு நஷ்டம் ?. நம் நாட்டிற்குத் தான்.

என் நண்பன் ஒரு திறமையான கப்பல் சரக்குகளை ஏற்றி இறக்கும் நெழிவு, சுழிவுத் தெரிந்த மார்க்கெட்டிங் ஆபிசர். அலட்சியத்தில் பெல்ட் போடாமல் காரின் பின்பக்கம் பயணித்த போது நடந்த விபத்தில் தூக்கி எறியப்பட்டு, முதுகு முறிந்துப் பரிதாபமாகச் செத்தான். அதன் வினை, அவன் இளம் மனைவி கனவுகள் கலைந்து, மகன்களை வளர்க்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். எங்கேயோப் போகவேண்டிய அவர்கள் திசைமாறிப் பயணிப்பார்கள்.

இவர்களை விடுங்கள். அந்தப் படித்த மேதாவி – விஞ்ஞானி ? ஐ. ஐ.டி.யில் படிக்க அரசாங்கம் எவ்வளவு செலவு செய்து இருக்கும் ? அவரை நம்பி கல்லூரியில் எவ்வளவு மாணவர்கள், ? திறமையான அவர் போனால் திரும்ப அதே மாதிரி ஆள் கிடைக்க அரசாங்கம் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் ?. அவருக்கு அளித்த கல்வி, மற்றவர்கள் அவருக்காக உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். அவருடைய புத்திக் கூர்மையைக் கண்டு எவ்வளவு ஆசிரியர்கள் மேலும், மேலும் உழைத்துச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் ?. அவரால் உருவாக்கப் படவிருக்கும் மாணவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் ?.

5 மைல் வேகத்தில் ஒரு கம்பத்தில் மோதினால் கூட அப்பளமாகப் போகும் கார்கள் இந்தியாவில் இப்போது அதிகம். காரில் ஒரு சின்ன பெல்ட் தான் தேவை. அதைத் தோள்பட்டை வழியாக வாரி இடுப்பின் அருகே மாட்டிக்கொள்ள வேண்டும். எனக்கு மற்றவர்கள் கேலியாகப் பார்த்தால் கவலையில்லை. முதல் முதலாகக் கைலிக் கட்டும் போது அப்படித்தான் பார்த்தார்கள். என் செளகரியம் எனக்கு. நிறைய புது கார்களில் இந்த வசதியிருக்கு. வசதியிருந்தும் பெல்ட் என்னமோ அலங்காரத்திற்கு தான் இருக்கின்றது. இந்தக் காரில் பெல்ட் இருந்தது. எடுத்து மாட்டினேன். நான் போனால், இந்தச் சமூகத்திற்கு, என் குடும்பத்திற்கு, என் நாட்டிற்கு ஏற்படும் இழப்பு கொஞ்சம் இல்லை. நாளைக்கு என் பத்தாவது வகுப்புத் தமிழ் தேர்வு வேறு இருக்கிறது. அதிசயமாகத் தமிழ் படிக்கும் மற்றொரு மாணவன் இல்லாமல் போவான்.

சரக்கென்று வண்டி நின்றது. டிரைவர் நெஞ்சு ஸ்டாரிங் கை மோதியது. தடவிக்கொண்டே ‘பழகிடுச்சு ‘ என்று அசடு வழிந்தான். பின்னாலிருந்த விஞ்ஞானி ‘நங் ‘ கென்று வண்டியின் கதவில் தலை மோதிக்கொண்டார். அவர் கையிலிருந்தக் குழந்தைக் கீழே விழுந்தது. ‘பார்த்து ஓட்டக் கூடாது ? ‘ என்று டிரைவரைத் திட்டினார். பெல்ட் என் சீட்டில் நைந்து போனது. ‘பார்த்தீர்களா ? இதுக்குத் தான் போடறது வேஸ்ட் என்றேன் ‘ டிரைவர் கிண்டலாகப் பார்த்தான். ஆனால் எனக்கு ஒரு அடியிமில்லை.

‘ஆனால் அண்ணே, அடிபடாமல் நான் தப்பித்தேன். கிழிஞ்ச பெல்ட் தானே, கார் கம்பெனியில் கம்ப்ளையின் பண்ணினா சரியாப் போச்சு! இப்ப உங்க வலி தேவலையா ? ‘ என்று அவன் வலியை உணர்த்தினேன். தலை குனிந்தான். ‘பெல்ட் போடாம இருக்க பைன் போட்டாதான் போடுவீங்க இல்லை ?. அடி வயிற்றில் பணத்தில் கை வைத்தால் தான், இந்த வலிவராமல் பெல்ட் போடுவீங்க போலிருக்கு ! சரி உங்க நல்லதில், நாட்டுக்கும் நல்லது தான். நீங்க போனால் இன்னொருவன் வந்து உங்க மாதிரி டிரைவராகும் தகுதியில் வருவதற்கு நாள் ஆகும். நீங்கள் முக்யம் வாய்ந்த ஒரு தனி மனிதர். ஞாபகம் இருக்கட்டும். ‘

காரில் இருந்து இறங்கி பெல்ட் இல்லாத ஆட்டோவில் என் அக்கா வீட்டுக்காரருடன் எனது பயணத்தைத் தொடர்ந்தேன் !

‘டேய்! நம்ம ஆட்டோவில் பெல்ட் எங்கடா இருக்கு, உன் இடுப்பில தான் இப்ப இருக்கு, இங்கு வந்து அடாவடி பண்ணாதே, எங்க ஊரு இப்படி தான்! ‘ என்று ஊரில் பழி போட்டார் என் மாமா.

‘ஊரில்லை மாமா! நீங்க தான்! ஏன் பஜாஜ் ஆட்டோவிற்கு இந்த மாடலுக்கு சீட் பெல்ட் இல்லை, இதில் பயணம் செய்தால் என் உயிர் போய்விடுமென்று கேஸ் போட்டால், இப்ப ஊர்மேல் பழியைப் போடவேண்டாம் பாருங்க ! ‘.

‘ஆட்டோவில் சரிபண்ண வேண்டிய விஷயங்கள் நூறு இருக்கும். அதைச் செய்தால், அது ஆட்டோ இல்லை. சொகுசு கார் ! ‘.

‘சரி மாமா! இப்படி கம்பியைப் பிடித்துக்கொள்கிறேன் ! என் கை தான் பெல்ட். எலெக்ட்ரிக் டிரையினில் என் விரல்கள் தான் பெல்ட். விளிம்பைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்கிறேன்! நான் போனால் மற்றொருத்தன் ‘

‘அதுக்குள் இப்படி வெதும்பாதே ! நாட்டுக்கு, உன் வீட்டுக்கு நீ தேவை, ஒரு டூ வீலர் வாங்கித் தரேன் ! ‘

‘ஆமா அதுக்கு பெல்ட் ? ? ? ? …. ‘ என்றேன். முறைத்தார்.

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன்

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன்