சிவா ! ராமா ! – 2060

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


2060 ஜனவரி 3ந் தேதி சிவா ! ராமா ! என்று தி.நகர் சிவா விஷ்ணு கோவிலில் வாசலில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்தேன் . . .

சென்னை பற்றி 2006 ல் புலம்பினாலும் 2060 ல் புலம்பினாலும் ஒன்று தானே ?.

சென்னையில் வயோதிகர்கள் கூட்டம் 2060ல் அதிகமாகிப் போனது. முக்கால்வாசிப் பேர் வெளிநாட்டில் பல வருடக் காலங்கள் வசித்து, சாகும் போது ‘சிவா, ராமா ‘ என்றபடி கோவில்களில் வெட்டி அரட்டை அடிக்க தமிழகத்தில் களம் புகுந்து மீண்டும் விட்டுப் போனத் தன் பால்ய காலங்களை வாழ ஆரம்பித்தனர். ஆங்கில உச்சரிப்போடு “ஐ கேம் ஹியர் டு பிரே பீஸ்புல்லி” என்று வாயைக் குழைத்து ஆங்கிலம் உச்சரிக்க, வேடிக்கையோடு மற்றவர்கள் பார்த்து ஒரு மாதிரியான “லோக்கல் பீட்டர்” விட்டு “அர்ச்சனை ஐநூறு” என்று ஏமாற்றிப் பணம் பறித்தனர். கடவுளுக்கு “பீட்டரில்” தான் அர்ச்சனை. I salute Shiva. I salute Rama. Long live the God. என்று . . ..

தமிழில் தான் அர்ச்சனை பண்ண வேண்டுமென்று ஒரு கூட்டம் போர்க் கொடித் தூக்கி “தமிங்கலத்தில்” (தமிழ் + ஆங்கிலத்தில்) போஸ்டர் ஒட்டியிருந்தது. கந்தர் சஷ்டி கவசத்தில் “துதிப்போர்ர்கு வல்வினைப்போம் . . .” தெரியுமா என்றேன் . வேறு கிரகத்துப் பிறவியாக என்னைப் பாவித்தனர். “oh ! my Jeez ஸ “ என்று ஸ்டைலாக உச்சரித்தேன். புரிந்து கொண்ட பாவனையில் தலையாட்டினர்.

காலையில் ஜி.என்.செட்டி ரோட்டில் காலை வைக்க முடியவில்லை. நரகலால் இல்லை. அவ்வளவு வாகனங்கள். நடேசன் பூங்கா மற்றும் மாறாமல் இருந்தது. அதனருகே பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இருந்தமையால் நடந்த “பெரிசு” களான எங்களை அனவைரும் அல்பமாகப் பார்த்தனர். முதல் நாள் குடித்து விட்டு அடுத்த நாள் தொந்தியைக் கரைப்பது 2060 இலும் நடந்தது. நடந்தவுடன் சாப்பிடச் சுட சுட இட்லி, தோசை விற்றுக் கொண்டிருந்தன. ஒரு தோசை $8 மற்றும் ஒரு காபி $2. டிப்ஸ் 15% வைத்துவிட்டு மீண்டும் கலோரிகளைக் களைய நடக்க ஆரம்பித்தேன். முருகன் இட்லி கடைக்குப் பக்கத்தில் கணேசன் கறிக் கடையும், சிவாஸ் விஸ்கி கடையும், விஷ்ணுவின் சைனீஸ் காண்டானும் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரம் செய்தன. பல மியூசிக் சபாக்களும் போட்டி போட்ட வண்ணம் கும்பலோடு அலை மோதிக் கொண்டிருந்தது.

ஆண்களும் பெண்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டிகளில் ஆபிஸுக்கும், கல்லூரிகளுக்கும் போய் கொண்டிருந்தனர். பல்லவன் பஸ் ஹை டெக்காகி கீழேயும் மேலேயும் வீடியோ படம் காட்டி 200 பேர் நிற்கத் தக்கவாறு மாரியிருந்தது. கண்டக்டர்கள் இல்லாமல் சீட்டு டிக்கெட் ஆட்டாமாடிக் பன்ச் மெஷினுக்கு மாறியிருந்தது. டிரைவர் பொத்தானை அமுக்கினால் தான் கதவு திறக்கும். ஃபுட் போர்டு டிராவல் (படிக்கட்டு பயணம்) 2030லேயே தடை செய்யப்பட்டுவிட்டது. முதல்வரின் பேரன் அப்படி பயணம் செய்து இறந்து போகவே, அதைத் தடை செய்ய சட்டம் ஒரு மனதாக இயற்றப்பட்டது.

“சாவு கிராக்கி ! இப்போது “சாவ்கிராக்” ஆக மாறியிருந்தது.

அக்கம் பக்கம் இருக்கும் தெருக்களில் பிள்ளையார் கோவில்களில் கூட்டமும், அதன் வாசலிலே பக்தி வீடியோக்களும் அதிகம் இருந்தன (நிசமா “பக்தி” படம் தான் சார் !). சன் டிவியில் வந்த 2006 ல் வந்த வேப்பிலைக்காரி, 2010 ல் வந்த விபூதிக்காரன், மற்றும் 2025 ல் வந்த நாமவந்தான், 2050 ல் வந்த பாற்கடல் கொண்டான், 2060 ல் வந்த “முக்கண் திறந்தால் ஹ” போன்ற பக்தி சீரியல்களினால் நாட்டில் புது பக்தி மோகம் இருந்தது.

சிவா விஷ்ணு கோவிலின் பக்கம் என்ன கூட்டம், என்ன கூட்டம் ஹ. 2006 ல் சென்னை வந்த போது டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களும், சைக்கிள்களும், ஆட்டோக்களுமாய் நிறைந்திருந்த உஸ்மான் ரோட்டில் வெறும் பாதசாரிகள் மட்டுமே போய்க்கொண்டிருந்தனர். தற்போது பாட்டரியில் இயங்கும் ஆட்டோ ரிக்சாக்கள் அதிகமாக இருக்க, புகையில்லாத இடத்தில் கூட மண்புழுதியை இறைத்த படி மக்கள் நெருக்கமாகப் போய் வந்த வண்ணமிருந்தனர். சிக்னல்களில் கவுண்ட் டவுன் “அ, ஆ, இ, ஈ . . .” என்று மக்களைத் தமிழ் படிக்க வைத்தது சுவாரசியமாக இருந்தது.

அருகே சென்று என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தால் 90% ஆங்கிலத்திலும், 5% ஹிந்தியிலும் மற்ற மொழிகளிலும் மீதம் 5% தமிழிலும் கதைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஆங்கிலம் தமிழ் போன்று பேசியது வேடிக்கையாக இருந்தது.

“மச்சி! இப்ப அப்ப சாப்பிட்டேன், நல்லா, இல்ல போன்ற சொற்ப தமிழ் வார்த்தைகள் ஆங்கிலத்தோடு இரண்டறக் கலந்து விட்டிருந்தன. தமிழ் எழுத்து கூட ஆங்கிலம் போன்றுச் சுருங்கிக் காணப்பட்டது. தமிழ் படங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே வெளியாயின. “Time for Another Love ஹ” (“ மற்றுமொரு காதக்கு நேரம் ஹ” சுத்தமானப் புதியத் தமிழ்படம் ) Tamil Newyears’s day அன்று release செய்யப்படும் ! என்ற போஸ்டர் இருந்தது. மெகா சீரியல் போய் “நேர் தொலைக்காட்சி” உண்மை நிகழ்ச்சிகளை அப்படியே தொகுது அளித்தது. பக்கத்து வீட்டு மல்லிகா யாரிடமோ பேசுவதைத் தப்பாக எடுத்துக் கொண்டு கணவனுடன் சண்டை போடுவதை அனைவரும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் கண்டு “அப்படி செய்யலாமா ஹ வேண்டாமா ஹ” என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

பத்து கிராம் Gold வாங்கினால் 5 கிராம் Gold Free என்று சரவணா ஸ்டோர்ஸில் போர்டு தொங்கியது.

தீபாவளி அடுத்த நாளென்பதால் அடுக்கு மாளிகைக் கடைகளில் கலராக கலராக வியட்நாமிலிருந்த இறக்குமதி செய்யப்பட்டத் துணிகளும், நெய்ரோபியிலிருந்து வரும் மளிகைச் சாமான்களும் நிறைந்து காணப்பட்டது. சீனப் பட்டாசுகள் பாண்டி பஜாரில் கொட்டிக் கிடந்தன. கேரளா சலூன் கடையில் பெண்கள் கேரளாவில் மாதிரி உடை அணிந்து கொண்டு அனைவருக்கும் முடி வெட்ட கூட்டம் அலை மோதியது.

இத்தாலியிலிருந்து பட்டுப் புடவைகள் வாங்க நிறைய வணிகர்கள் வந்திருந்தார்கள். சில்க் கடைகள் ஐரோப்பிய மொழிகளான பிரென்சு, ஜெர்மன், இத்தாலி மொழிகளில் போர்டுகள் வைத்திருந்தனர். ஜார்டன் நாட்டு சில்க்கைப் பற்றி சிலாகித்த பெண்கள் மற்றவரிடம் “பிரெஞ்சு பட்டு எடுக்கவில்லையா ஹ. ஜெர்மன் தான் கிடைத்ததா ஹ ” என்று இளக்காரமாய் கிண்டலாகப் பார்த்தனர்.

ஆர்.எம்.கே.வி. பனகல் பார்க்கை அடைத்துக் கொண்டு பல்வேறு மாடி கட்டடங்களை எழுப்பியிருந்தது. குமரன் சில்க்ஸிலிருந்து சிவா விஷ்ணு கோவிலருகே திநகர் பஸ் ஸ்டாண்ட் வரை அனைவரும் நின்றால் தானாகவே நகரும் ஓடும் தளம் போடப் பட்டிருந்தது. அதனருகே துப்புவதற்கு ஆங்காங்கே குழி வெட்டியிருந்தார்கள். பாண்டி பஜாரிலிருந்து மேற்கு மாம்பலம் போவதற்கு மேல் வழிப் பாலம் போடப் பட்டிருந்தது. அதன் கீழே நூற்றுக் கணக்கான பூ கடைகள் இருந்தது. அருகே இருந்த கலியாண மண்டபங்கள் எச்சில் பேப்பர் பிளேட்டுக்களை வாறி சாப்பாட்டுடன் மாபெரும் குப்பைத் தொட்டியில் கொட்டியவண்ணமிருந்தன.

லலிதா ஜுவல்லரியில் குடிக்கத் தண்ணீர் $5 ஒரு டம்ளர் என்று எழுதியிருந்தது. 2050 ல் உலகம் அனைத்தும் ஒரே கரன்சிக்கு மாறி விட்டிருந்தது. ஜி.என்.செட்டி தெருவில் ஆயிரம் கார்களை நிறுத்த பல் மாடிக் கட்டடங்கள் பல இருந்தன. அங்கு கார்களை நிறுத்தி விட்டு கோல்ஃப் கார்ட்டுக்களிம் மூலம் “நல்லி” கடைக்குச் செல்ல வேண்டும். பிறகு தானியங்கி ஓடு தளத்தில் ஏறி அனைத்துக் கடைகளையும் மாம்பலம் மின்சார ரயில் வண்டி நிலையம் வரை நின்ற், மெதுவாக ஊர்ந்து செல்லலாம். அனைவரும் கையில் புது குத்து ஆட்டக்காரரின் மியூசிக் வீடியோவை கண்டு ரசித்த வண்ணம் சென்றனர். சிலர் அதைப் போன்றே வானவில் எஃப் எம்சூரியன் எஃப் எம், சந்திரன் எஃப் எம்களையும், பல்வேறு சாட்டிலைட் சானல்களையும் கேட்டு ரசித்த வண்ணம் வளைய வந்தனர்.

கலாச்சாரக் குழுவினர் பெண்கள் கண்ட கண்ட ஆடைகள் போடுவதற்குத் தடைவிதித்தமையால் அனைவரும் புடவைக் கட்டிக் கொண்டு வந்தனர். பெண்கள் முழுக்கை தைத்த சட்டையையும், ஆண்கள் அனைவரும் பேண்ட் , சட்டை மற்றும் “2059” பேட்டா செருப்பினை ஒன்றையும் போட்ட வண்ணம் பவனி வந்தனர். வியர்வை தாங்காமல் சட்டைக் காலரை இழுத்து விட்ட சில வாண்டுகளைப் பார்த்து பெண்கள் கூச்சலிட்டு போலீஸாருடன் முறையீடு செய்தனர்.

2059 Dec 26 அன்று சுனாமி வந்ததில் கடல் சோழா ஷெரட்டான் அருகே வந்தமையால் தி.நகர் ரியல் எஸ்டேட் விலைத் தாறுமாறுமாக ஏறிக் கிடந்தது. கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரச் சாலைகள் கடலில் மூழ்கவே வேளச்சேரி சாலையில் போக்குவரத்து மிக அதிகமாகிப் போனது. வட சென்னை 2058ல் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதி அழிந்து போனது. அப்போது கூடத் தென் சென்னையில் சினிமா தியேட்டர்களில் நள்ளிரவுக் காட்சிகளில் கூட்டம் அலை மோதியது. வடக்குத் தேய தெற்கு வாழ்ந்தது.

கோவில்களில் பெருமாளுக்கும், சிவனுக்கும் ஏஸி ரூம்கள் இருக்க பட்டர்களுக்கும், குருக்களுக்கும் ஏக வியர்வை. காரணம் உள்ளே ஏற்றி வைத்த கற்பூரம் மற்றும் ஊதுவத்தி. கோவில் தூண்கள் எல்லாம் குங்குமம் ஏறிச் சிவப்பாக இருந்தது. கிருஷ்ணா ஸ்விட்ஸ் அருகே ராதா ஸ்வீட்ஸ் பெரும் கடை ஒன்று வைத்திருந்தது. ஜிலேபி கவுண்டருக்கு ஏகக் கூட்டமாக இருந்தது. அப்பாக்கள் இன்னும் மல்லிகைப்பூ மற்றும் ஜிலேபி வாங்கிப் அம்மாக்களைத் தாஜா செய்தனர்.

ராமகிருஷ்ணா பள்ளிக் கூடம் இன்னும் கொஞ்சம் பாழடைத்திருந்தது. பழமை எங்கள் பாரம்பரியம் என்று போர்டு வைத்திருந்தது. வெங்கட் நாராயணா தெருவில் திருப்பதி கோவில் ஒன்று பல்வேறு தளங்களில் குமரன், நல்லி சில்க்ஸ் போன்று வளர்ந்து ஏ.ஸி. யுடன் புடவைக் கடை போன்று பெருமாளுடன் ஜொலித்தது. இலவசமாக லட்டு, மற்றும் அல்வா பக்தர்களுக்குக் கொடுத்தனர். நுழைவுக் கட்டணம் $10 ஆக இருந்தது. பெருமாளுடன் கருடன், சக்கரத்தாழ்வார், அனுமார் யாவருக்கும் தனியே ஏ.ஸி. வசதி செய்யப்பட்டு தனியறைகள் சர்வ அலங்காரத்துடன் காணப்பட்டது.

புகையினால் நிறைய டிராபிக் கான்ஸ்டபிள்கள் 2045ல் செத்ததால், கோர்ட்டு மூலமாக மனிதர்கள் தி.நகரில் போலீஸாக நிறுத்துவதற்குத் தடை இருந்தது. ஆர்.எம்.கே.வி, சரவணா ஸ்டோர்ஸ் அன்பளிப்பில் ஜப்பானிலிருந்து தருவித்த ரோபோக்கள் மக்களை கைகாட்டி வழிகாட்டின. பாலு ஜுவல்லரியின் அன்பளிப்பில் ரோபோக்கள் தலையில் இருந்த சிகப்பு, பச்சை விளக்குகள் வண்டிகளுக்கு வழிகாட்டின. சைக்கிள்கள் அதிகம், புகையில்லாத கோல்ஃப் கார்ட்டுக்கள் – ஆட்டோ போன்று மாற்றப்பட்டிருந்தன. சிலர் குதிரைகளைப் பழக்கி மீண்டும் சாலைகளில் ஓட்டிக் கொண்டிருந்தனர்.

அனைத்து இடங்களிலும் மரங்கள் அடர்த்தியாக வீட்டு மொட்டை மாடிகளில் பூந்தொட்டிகளில் மட்டும் இருந்தது. வீடுகளனைத்தும் வணிகத் தளங்களாக மாறி விட்டிருந்தன. எங்கள் சித்தப்பா இருந்த வீட்டில் தற்போது பழைய 2006 குமுதம், ஆனந்த விகடன் கிடைக்கும் பேப்பர் கடை இருந்தது. எங்கள் மாமா இருந்த வீட்டில் ஆப்பிள் கம்பெனியின் ஐ2050-வீடியோ பிளேயர் மாடல் கிடைக்கும் எலக்ட்ரானிக் கம்பெனியிருந்தது. லிஃப்கோ கம்பெனியினர் சோனியின் கையடக்க எலக்ட்ரானிக் புத்தகங்களை விற்பனைச் செய்து கொண்டிருந்தனர். ஒரு விளம்பரத்தில் அனைத்து தமிழ், சமஸ்கிருத, ஆங்கிலத் தோத்திரங்கள் மாலைகள் , சுலோகங்கள் அடங்கிய சோனி புத்தகத் மின் தட்டு $1.99 க்கு இங்கு கிடைக்கும் என்று போட்டிருந்தது.

மாம்பலம் ரயில் நிலையம் அருகில் பிளாட்பாரக் கடைகள் அனைத்தும் அந்தரத்தில் மிதக்கும் டேபிள்கள் மீது கடை விரித்திருந்தன. போலீஸ் தொல்லை இருந்தால் சட்டென்று சுலபத்தில் மடித்து கக்கத்தில் வைத்து ஓடிவிடலாம். ரங்கநாதன் தெருவில் (ரங்கநாதன் மருவியாச்சு !) பின்புறம் பர்மா பஜாரில், வியட்நாம், கம்போடியா, அமெரிக்கா துணிகள் இரைந்து கிடந்தன. சிங்கப்பூர் சரக்கு இன்னும் அதிக டாலரில் விலை போய்க்கொண்டிருந்தது. போலீஸை “மாம்ஸ்” என்று செல்லமாக அழைக்கும் பழக்கம் மாறவில்லை.

ஹும் எங்க காலத்தில் .என்று ஆரம்பித்தால் ”கமான் பெர்சு ! ஓவரா திங்க் பணாதே “ என்று கமெண்ட் விழுந்தன. அனைத்து அரசியல்வாதிகளின் பேரர்கள் மற்றும் பேத்திகள் தேர்தல்களில் நிற்பதாய் செய்திகள் வந்தன. “சன்” தொலைக்காட்சி செய்திகள் செல்போனில் டிவியின் “சின்ன சின்ன” திரையில் வந்தது. பெண் குழந்தைகள் சாரதா பள்ளியைவிட்டு திரலாக வெளியே வந்தனர். யூனிபார்ம் கூட 2006 கலரிலேயே இருந்தது. பள்ளிப் பிள்ளைகள் பலரும் கையில் சோனியின் மின்புத்தகங்களை ஜாமெட்ரி பாக்ஸ் மாதிரி வைத்திருந்தனர். 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்கள் அரசாங்கம் இலவசமாக உள்ளேற்றி அனைவருக்கும் தந்திருந்தது.

இன்று சத்யம், சாந்தம், சுபம், செளந்தர்யம், சமாதம், சமணம் காம்ப்லெக்ஸில் “Aliens – 10” என்ற ஆங்கிலப் படம் என்றும் போஸ்டர் ஒட்டியிருந்தது. கோடம்பாக்கத்து பிரிட்ஜ் இரண்டு மடங்கு பெரிதாக்கப்பட்டு டிராபிக் ஜாம் வடபழனியிலிருந்து, உஸ்மான் ரோடு வரை விழி பிதுங்கியது. நடிகர் விஜய்யின் மகன் அஜய் நடித்த படம் தேவி பாரடைசில் ஓடிக் கொண்டிருந்தது. படம் பெயர் “புல்லட்வாதி”. ஜோடி ரிஷா ! குத்து ஆட்டம் எல்லாம் உண்டு.

சரவணா பவன் தன் 250 வது கிளையை மேற்கு மாம்பலம் உமாபதி தெருவில் ஆரம்பிப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். MULLIGATANNAI SOUP and IDLI ! என்றப் பெயர் பலகைத் தாங்கிய பிரமாண்டமான ஹோட்டலைப் பார்த்தேன். இரவானதும் கையேந்தி பவன் கடைகள் ஹை டெக்காக மாறி இருந்தன. கையில் கிளவுஸ் போட்டுக் கொண்டு சுத்தமானத் தட்டுகளில் சுடச் சுட இட்லிகள் பறிமாறப்பட்டன. “மச்சி சூப்பர்டா ! என்று இன்றும் கேட்க முடிகிறது.

கடைகளில் நடையேறிக் களைத்து, கையேந்தி பவனில் சாப்பிட்டுவிட்டு இரவு ஹபிபுல்லா ரோட்டில் உள்ள வீட்டின் 20வது மாடியில் ஆக்சிஜன் முகமூடியைப் போட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். நாளைக்கு காலையில் 3 மணிக்கு மெட்ரோ வாட்டர் வரும். வந்தவுடன் “பார் கோடு வளையத்தைக் காண்பித்து” மெட்ரோ லாரியிலிருந்து பக்கெட் வாளித் தண்ணீர் வாங்கணும். வீட்டு ரோபோவிற்கு சொல்லிவிட்டு 2.45 மணிக்கு காலையில் என்னை எழுப்பச் சொன்னேன்.

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா