சினேகிதி

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

பூரணி


1925ஆம் வருடம். அப்போது எனக்கு வயது 12 நிறைந்திருந்தது. அவள் என்னைவிட ஆறு மாதம் பெரியவள். இருவரும் உயிர்த்தோழிகள். எப்போதும் சேர்ந்தே காணப்படுவோம்.

எங்களுக்கு ஓடி ஆடி விளையாடப் பிடிக்காது. சதா ஏதாவது கதைப்புத்தகமோ அல்லது தமிழ்ப் பத்திரிகையோ வைத்துப் படித்துக்கொண்டும், ரசித்து விமர்சித்துக் கொண்டும் இருப்போம். கதைகளில் வரும் கஷ்டங்களையும், சுகங்களையும் எங்களுகே வந்ததுபோல் அழுது, சிரித்து, சந்தோஷப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்போம்.

என் சினேகிதி லலிதா பளிச்சென்று அழகாக இருப்பாள். இரு வீட்டிலும் எங்களுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு சேலத்தில் மாப்பிள்ளை கிடைத்தது. உத்யோகம் வக்கீல் குமாஸ்தா; வயது 23. திருமணம் முடிந்து பெரியவளான பிறகு (ருது) ஒரு வருடம் கழித்து அவள் புருஷன் வீடு சென்றுவிட்டாள். எனக்கும் திருமணம் முடிந்தது. மணவாழ்க்கை நன்றாக அமைந்து புருஷனோடு நிம்மதியான குடும்பம் நடத்தி வந்தேன்.

* * * * * * *

ஒரு நாள் எங்கள் ஊர்க்காரப் பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் மூலம் என் சினேகிதி லலிதா தன் புருஷன் வீட்டில் கஷ்டம் தாங்காமல் தூக்கு மாட்டிக்கொண்டதாகவும், அந்த நேரத்தில் அவள் கணவன் அகஸ்மாத்தாக அங்கு வந்ததால் அந்தச்செயல் நடக்காமல் தடுத்து அவள் பெற்றோருக்குத் தந்தி கொடுத்து வரவழைத்து அவளை அனுப்பி வைத்து விட்டதாகவும், இனி அவள் வாழாவெட்டியாகப் பிறந்த வீட்டில்தான் இருப்பாள் என்றும் தெரிந்து கொண்டேன். இது என் மனதை மிகவும் பாதித்ததால் என் கணவரை நச்சரித்து ஊருக்குக் கூட்டிப்போகச் செய்தேன்.

நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு லலிதா எங்கள் வீட்டிற்கு வந்தாள். இருவரும் பேசிக்கொள்ள தனிஅறை நாடினோம். அவள் என் தோளில் சாய்ந்துகொண்டு வெகுநேரம் அழுதாள். பிறகு சுதாரித்துக்கொண்டு நேர்ததைச் சொன்னாள்.

லலிதாவை புருஷன் வீட்டிற்கு அனுப்பிவைக்கும்போது அவள் தாயார் அவளிடம் தனிமையில் மணவாழ்க்கையில் கணவன் மனைவியின் அந்தரங்க விஷயத்தை லேசாக தெரியப்படுத்தி ( அந்த காலத்தில் இப்போது போல சினிமா,டா.வீ. ஒன்றும் இல்லாததால் இது ரகசிய விஷயமாக இருந்துவந்தது.) “ இதோ பார், இது உன் உடம்புக்கும் மனதுக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்; ஆனாலும் சகித்துத்தான் போகவேண்டும். உன் கணவன் மனம் போல அனுசரித்துப்போகப் பழகிக்கொள். இன்னும் கொஞ்சம் உன் உடம்பு முற்றி குழந்தையும் பெற்றுவிட்டால் உனக்கே இந்த விஷயம் சகஜமாகப் போய்விடும்” என்று சொல்லியனுப்பினாள். லலிதா இந்த வார்த்தைகளால் கலவரப்பட்ட மனதோடு புக்ககம் போய்ச் சேர்ந்தாள்.

லலிதாவின் புக்ககத்தார் வக்கீல் கொடுத்த ஒரு வீட்டில் வசித்து வந்தனர். புருஷன் வீட்டில் விதவை மாமியாரும் 14 வயது மைத்துனனும் இருந்தார்கள். இவர்கள் வீட்டை சுற்றி வேறு வீடுகள் ஏதும் கிடையாது; அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மரங்கள்தான் இருந்தன.வீடு நீண்டசதுரமான ஒரே அறை. அதில் மூங்கில் தட்டியால் மறைத்துப் படுக்கும் அறை இவர்களுக்கெனத் தயார்செய்து இருந்தது.

மைத்துனன் பள்ளி சென்றுவிடுவான். மாமியாரும் கணவரும் வக்கீல் வீடு சென்று விடுவார்கள். மாமியார் இருட்டியபிறகே வீடு திரும்புவார். அவர் வக்கீல் வீட்டில் சமையல் காரியாக இருக்கிறாரோ என்று லலிதாவுக்கு சந்தேகம்.

லலிதாவின் கணவன் அவளை ஒரு மனுஷி என்று எண்ணினதாகத் தெரியவில்லை. தன் இச்சையைத் தீர்க்கும் பொருளாக எண்ணி செயல்பட்டான். அவனது தீராத ஆசையால் அவள் துவண்டு போனாள். பகலிலும் நினைத்தபோதெல்லாம் கூப்பிடு தூரத்திலிருந்த வக்கீல் வீட்டிலிருந்து வந்துவிடுவான். அவளுக்கு உடல் நொறுங்கிப் போனாற்போல் வலிக்கும். மனதில் வெறுப்பும், பீதியும், துயரமும் சேர்ந்து அவளது ஆரோக்யத்தைக் கெடுத்தன. அமைதியாகத் தூங்கவே அவளுக்கு முடியாமல் போனது.

ஒரு நாள் அவளுக்கு ஜுரம் கண்டிருந்தது. வீட்டிலுள்ளோரெல்லாம் சென்றபின் கதவைத்தாழிட்டு விட்டுப் படுத்தவள் அசந்து தூங்கிப்போய்விட்டாள். வழக்கம்போல அவள் புருஷன் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான். அவள் தூக்கத்தினாலும், அசதியாலும் ‘சட்’ டென கதவைத் திறக்காமல் காலதாமதம் செய்துவிட்டாள். அதனால் அவனுக்கு அசாத்யக் கோபம் வந்து அவளை ஓங்கி அறைந்தான். பிறகு வழக்கம்போல அவளை நெருங்க, அவள் தீனமாக,” ஐயோ! இது வேண்டாமே, என்னால் முடியவில்லையே” என்று கெஞ்ச, வெறி கொண்ட அவனோ அவள் வேண்டுகோளை மதியாமல் கீழே அவளைச் சரித்துத் தான் வந்த வேலையைப் பூர்த்தி செய்துகொண்டு திரும்பிப் போய்விட்டான்.

இன்று தன் ஜுரத்தையும் கண்டுகொள்ளாமல் அவன் நடந்துகொண்ட விதம் அவளுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. ‘இந்த ஆளுக்கு நான் என்ன கக்கூஸா ? வேண்டாம் எனக்கு இந்த வாழ்வு’ என்று தீர்மானித்து, கயறு ஒன்றை எடுத்து, விட்டத்தில் கட்டி ஒரு ஸ்டூலில் ஏறித் தூக்கு மாட்டிக்கொண்டபோது அவள் கணவன் ஏனோ திரும்பவும் வீட்டுக்குத் திரும்பியவன், கதவு தாழிடாது இருந்ததால் திறந்துகொண்டு உள்ளேவந்தான். வந்தவன், மனைவியின் செய்கையைக் கண்டு அதிர்ந்து, அவளைத் தூக்கிலிருந்து விடுவித்துக் கீழே இறக்கினான். பின் அந்தக் கயிறு கொண்டே அவ்ள் கை, கால்களைக் கட்டிப் போட்டு விட்டு வக்கீல் வீடு சென்று தாயையும், வக்கீல் மனைவியையும் அழைத்து வந்தான். அவர்களை அவளுக்குக் காவல் வைத்துவிட்டு நேரே தபால் நிலயம் சென்று மாமனாருக்கு உடனே புறப்பட்டு வரும்படி அவசரத்தந்தி அனுப்பினான்.

லலிதாவின் பெற்றோர் அன்று இரவே வந்து சேர்ந்தனர். அவளுடய கணவன் அவர்களிடம் அவளைப் பற்றி பொய்யும் மெய்யுமாக நிறையக் குற்றம் குறைகளை மாமனாரிடம் கூறினான். மேலும் அவன்,” எனக்கு இனியும் இவளை இங்கு வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது. எனவே நீங்கள் அழைத்துப்போய் விடுங்கள்.அவளாகவே என்று விரும்பி இங்கே வருகிறேன் என்று சொல்கிறாளோ அப்பொழுது நானே வந்து கூட்டிச் செல்கிறேன். முதலில் அவளை அழைத்துக்கொண்டு போய்ச் சேருங்கள்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

* * * * *

வருடம் ஒன்றான பிறகும் அவனிடமிருந்து எந்தத்தகவலும் வரவில்லை. பெற்றவர்களுக்கு மகளை நிரந்திரமாகத் தங்களிடம் வைத்துக்கொள்வது சரியல்ல என்று பட்டது.லலிதா தன் உண்மையான கஷ்டத்தை வெளியே சொல்ல விரும்பாமல் ஏதேதோ கற்பனைக் கஷ்டங்களை கூறியதால் பெற்றோருக்கு அவைகள் பெரிதாகத் தெரியவில்லை.

எனவே, தகப்பனாரே சேலம் நோக்கிப் புறப்பட்டார். அங்கு மாப்பிள்ளை வீடு பூட்டியிருந்தது. நேரே வக்கீல் வீடு சென்றார். அங்கே சென்றபிறகுதான் பெண்ணுக்கு உண்டாகியிருந்த உண்மையான பிரச்சினையே தெரிந்தது.

தன் பிள்ளளையின் விபரீத நடத்தையும் அதனால் தன் மறுமகள் நாளுக்குநாள் உடல் துவண்டுபோவதையும் கண்டு சகியாமல் அந்த அம்மாள் வக்கீல் மனைவியிடம் சொல்லி அங்கலாய்த்திருந்ததால் அவர்களுக்கெல்லாம் லலிதாவின் தற்கொலை முயற்சியின் காரணம் தெரிந்து இருந்தது. லலிதாவின் கணவனை வக்கீல் ஏகமாகக் கண்டித்து சத்தம் போட்டார். பயந்து போன அவன் தலை மறைவாக எங்கோ ஓடிப்போய் விட்டான். அவனுடைய தாயாரும் சிறிய மகனுடன் தன் தம்பியின் வீடு சென்றுவிட்டார்.

எல்லாவற்றையும் கேட்ட எனக்கு அவளோடு சேர்ந்து அழுவதைத் தவிற வேறு ஒன்றும் செய்யத் தெரியவில்லை.

நடுவில் ஆறு வருடங்கள் சென்றுவிட்டன.

இந்தமுறை நான் பிறந்தவீடு சென்றபோது லலிதாவிடம் நிறைய மாற்றங்களைக் கண்டேன்.கருநாகம் போன்ற பின்னிய கூந்தலும், ரிப்பனும்,மல்லிகைப்பூவும், கண்களில் மிதமான மை தீற்றலும், சற்று பெரிதான நெற்றிப்பொட்டும், தழையப் புரளும் மடிசார்ப் புடவையுமாக அபார அழகாயிருந்தாள்.

எப்போதும் போலிருவரும் தனியிடம் சென்றோம். “என்ன ? எப்படி இருக்கிறாய் ?” என்றேன்.

“எப்படியிருக்கிறேன் என்று எனக்கு சொல்லவேதெரியவில்லையடி. பிடிப்பே இல்லாமல் அந்தரத்தில் பறப்பது போல உணர்கிறேன். ஆரம்பகாலத்தில் இருந்த அனுதாபம் பெற்றோர்களிடம் இப்போது இல்லை. நான் அவர்களுக்கு ஒரு பாரமாகத் தெரிகிறேன். எனக்கும் பிறந்த வீடு அன்னியப்பட்டுத் தெரிகிறது. மனதில் இனம் புரியாத ஏக்கம். எதிர் வீட்டு ராமனாதன் வீதியில் சைகிள் மணியை அடித்தால் நான் என்னை அறியாமலேயே வீட்டு வாசலில் ஆஜராகிவிடுகிறேன்.அவன் திருட்டுத்தனமாக என்னைப் பார்ப்பதை ரஸிக்கிறேன். இது எதில் கொண்டுபோய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. நல்லவேளையாக பெரியவர்களின் கட்டுக்காவலும் கண்காணிப்பும் இருப்பதால் பிழைத்தேன். இல்லைஎன்றால் என்ன பாபத்துக்கு ஆளாயிருப்பேனோ தெரியவில்லை. திரும்பவும் கட்டியவனிடமே போய்சேர்ந்து விடலாமா என்று இருக்கிறது. சீனு மாமா கோயம்புத்தூர் சென்றிருந்தபோது என் கணவரை சந்தித்தாராம். அவர் ஒரு மில்லில் நல்ல வேலையில் இருப்பதாகச் சொன்னார். விலாசம் கூடக் கொடுத்திருக்கிறார். ஆனால் அப்பாவிடம் ‘கொண்டுபோய் விடுங்கள்’ என்று சொல்லத்தயக்கமாய் இருக்கிறது. வந்து அழைத்துப் போகும்படி அவருக்கு எழுதவும் பயமாக இருக்கிறது.” என்றாள்.

நான் ‘சட்’டென்று எழுந்து சென்று பேனாவும் காகிதமும் எடுத்துவந்தேன். அவள் கையில் கொடுத்தேன். “ தைரியமாக எழுது, நான் வாக்கியங்கள் சொல்லுகிறேன். முடிவு என்னவாகிறது பார்க்கலாம்” என்று ஊக்கமூட்டி எழுதச்செய்து போஸ்ட் செய்ய வைத்தேன்.

இரண்டு மூன்று நாட்களிலேயே பதில் வந்துவிட்டது. லலிதா கடிதத்தை உடைத்து

படிக்காமலேயே எடுத்துக் கொண்டு என்னிடம் ஓடிவந்தாள், முகத்தில் அலாதியான மலர்ச்சியோடு. ஆனால் கடிதத்தைப் படித்ததும் கல்லாய்சமைந்து போனாள்.

அவன்,” நீ எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னிடம் வர விரும்புகிறாய் ? நீயே உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாய். நான் மறு கல்யாணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்கிறேன். நீ எக்கேடும் கெட்டுப்போ” என்று அவள் எழுதியிருந்த கடிதத்தின் பின் பக்கத்திலேயே எழுதியிருந்தான்.

லலிதா சிறிது நேரம் மெளனமாக அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தாள். பிறகு உறுதியாகச் சொன்னாள், “ நான் இந்த மனிதனை சும்மா விடப்போவதில்லை. கோர்ட்டுக்கு இழுத்து ஜீவனாம்சமாவது வாங்காமல் இருக்கமாட்டேன். எது இல்லை என்றாலும் என் சாப்பாடிற்காவது பெற்றோரை சிரமப்படுத்தாது இருக்கலாம் இல்லையா ?”

அதே போல் அவள் வழக்குப்போட்டு கணிசமான தொகையை ஜீவனாம்சமாகப் பெற்றுவிட்டாள் என்றும், அவள் எழுதியிருந்த கடிதத்திலேயே அவன் பதில் எழுதி யிருந்ததால் அவள் பக்கம் தீர்ப்பாயிற்று என்றும் கேள்விப்பட்டேன்.

பிறகும் நான் ஊர் செல்லும் போதெல்லாம் அவளை சந்திக்கத்தான் செய்தேன். ஆனால் அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் எங்கள் நட்புக்குத் திரைபோட்டு விட்டதாய் உணர்ந்தேன்.

****

nagarajan62@hotmail.com

Series Navigation