சினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

கே.பாலமுருகன்


“it is as near to you as your life
But you can never wholly know it”
-rabindranath tagore

என்கிற வரியுடன் யஸ்மின் அமாட் அவர்களின் செபெட் என்கிற மலேசிய திரைப்படம் முடிவடைகிறது. இந்த இறுதி வரியின் நுட்பத்திலிருந்து அந்த வரியின் ஆழத்திலிருந்து இந்தத் திரைப்படத்தின் விமர்சனத்தைத் தொடங்குகிறேன்.

காலம் கடந்த யஸ்மின் அமாட் என்கிற மலேசிய இயக்குனரின் பரந்த அறிவும் பரவலான மொழிப்பெயர்ப்பு இலக்கியம் குறித்த பரிச்சயமும், அவரது அபாரமான அரசியல் பார்வையும், சமூக இன விமர்சனங்களும் அவரின் சினிமா ஆளுமையின் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்டவை என எனது அவரைப் பற்றிய முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவரது சினிமாவில் அவரது உலக இலக்கியத்தின் வாசிப்பின் தாக்கமும், உலக சினிமா நுணுக்கங்களின் வெளிப்பாடுகளும் மிக அழகாக கதையோடு சார்ந்து கதையின் அழகியலை அதன் தனித்துவங்களுடன் சந்திக்கும் புள்ளியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடியவை.

செபெட் என்கிற திரைப்படம் எஸ்.பி.எம் என்ற மலேசிய இடைநிலைப்பள்ளிக்களுக்கான தேர்வை எழுதி முடித்த ஒரு மலாய்க்காரப் பெண்ணுக்கும், சந்தையில் திருட்டு வீசிடி விற்கும் ஒரு சீன இளைஞனுக்கும் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு மீண்டும் யஸ்மின் அமாட் அவர்களின் புரட்சிக்கரமான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறது. சந்தையில் ஆங்கில படம் வாங்க வரும் ஓர்கிட் என்ற மலாய்க்காரப் பெண்ணுக்கும் ஜேசன் என்ற அந்த வீசிடி விற்பனை செய்யும் சீன வாலிபனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, அவர்களின் தொடர் சந்திப்பு காதலாக மாறுகிறது.

மழை நாட்களில், தலையில் சிவப்பு நெகிழியைப் போர்த்திக் கொண்டு பேருந்து நிறுத்தக் கூடாரத்தில் அமர்ந்துகொண்டு சாலையை வெறித்துக் கொண்டிருக்கும் காட்சி, கடையின் உள்ளே இருவரும் நெருக்கமாக மங்கிய மஞ்சள் ஒளியில் அமர்ந்திருக்கும் காட்சியைக் கடைக்கு வெளியிலிருந்து கண்ணாடியின் ஊடாகக் காட்டப்படும் காட்சி, ஒரு புகைப்பட எடுக்கும் கடைக்குச் செல்லும் இருவரும், விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சியைப் புகைப்படத்திற்குரிய பிரேமின் எளிமையிலிருந்து காட்டப்பட்டிருக்கும் காட்சிகளும் யஸ்மின் அமாட்டின் சினிமா தரத்திற்கான சான்று.


இருவரின் வீட்டிலும் இவர்களின் காதலைப் பற்றி தெரிய வரும்போது, ஏற்படும் விளைவுகள்தான் நமது மரபார்ந்த எல்லைகளுட்பட்ட அனுபவங்களை உடைக்கிறது. யஸ்மின் அமாட் அவர்கள் வழக்கமாக பாரம்பரிய இன அரசியலை உடைப்பதில் வல்லமைப் பெற்றவர். அவரின் திரைப்படங்களினூடாக மிகத் தீவிரமாக ஆனால் கலை சார்ந்த அழகியலுடன் சொல்லப்படுவது மலேசிய இனங்களுக்கு மத்தியில் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார, மொழி, பண்பாட்டு அரசியல் சுவர்களை உடைக்கும் ஆயுதமான அன்பு, நேர்மையான உறவு, இனத்தை அறியாத காதல், பெரும்பான்மை உணர்வுகளை உடைக்கும் எளிமை ஆகும்.

ஓர்கிட் அம்மா அவள் ஒரு சீன வாலிபனுடன் காதல் வயப்பட்டிருப்பதை எந்தவித அலட்டலும் இல்லாமல் இயல்பாக தன் கணவருடன் பகிர்ந்து கொள்ளும் காட்சியும், ஜேசன் காணாமல் போய்விட்டதாகத் தகவல் கிடைக்கும் சமயத்தில் அவளை அழைத்துக் கொண்டு வீதி வீதியாகக் காரில் அலையும் அவரது மலாய்க்கார தந்தை இடம்பெறும் காட்சியும், இதுதான் யஸ்மின் அமாட் கற்பனை செய்திருந்த மலேசியாவின், குறிப்பிட்ட இன அடையாளத்தைத் தீவிரப்படுத்தாத சுதந்திர மனித நேயமும் காதலும் ஆகும்.


இருவரின் காதலிலும் திடீர் பிரிவு ஏற்படுகிறது. ஏற்கனவே ஜேசன் ஒரு சீனப் பெண்ணுடன் காதல் வயப்பட்டு அவள் கற்பமாக இருப்பதை ஓர்கிட் அறிகிறாள். ஜேசனும் அந்தச் சீனப் பெண்ணின் அண்ணனால் மிரட்டப்படடு, அந்தப் பிரச்சனை சலசலப்பில் முடிகிறது. ஜேசன் ஓர்கிட்டுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில், மேக்கி என்ற அந்தச் சீனப் பெண்ணுக்கும் எனக்கும் ஏற்பட்டது ஒரு விபத்து மட்டுமே, அவள் இப்பொழுது யாருமற்ற நிலையில் இருப்பதால், அவளுக்குக் குழந்தை பிறக்கும்வரை அவளுடன் இருந்துவிட்டு, பிறகு உன்னிடமே வந்து சேர்வதாக எழுதிருப்பான். (ஜேசன் சீனக் கவிதைகளை எழுதக்கூடிய ஆற்றலும் பெற்றவன்). அதைப் படித்துவிட்டு அவனை வெறுப்பதோடு மறக்கவும் முயற்ச்சிக்கிறாள் ஓர்கிட்.

இதற்கிடையில் ஓர்கிட் எஸ்.பி.எம் தேர்வில் 5 “ஏ” பெற்று, வெளிநாடு சென்று படிக்க அரசாங்கத்தின் கல்வி கடனுதவியும் பெறுகிறாள். இந்தத் தகவலை ஓர்கிட்டின் அம்மாவும் அவரது வீட்டு வேலைக்காரியும் ஒரே நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசுவதைப் போல படமாக்கியிருப்பார்கள். அந்த உரையாடல் பின்வருமாறு:

ஓர்கிட் அம்மா: ஓர்கிட்டுக்கு 5 ஆ கிடைச்சும், “scholarship” (கடனுதவி)
கிடைச்சிருச்சி
Orkid dapat 5 A pun dapat scholarship. .
வேலைக்காரி: அல்ஹாம்டுலில்லா. ஜேசனுக்கு 7 ஆ கிடைத்தது முன்பு
Alhamdulillah. . Jason dapat 7 A dulu. . .

(இந்த உரையாடலுக்குப் பின்னாலுள்ள அர்த்தத்தை நான் விளக்கமளிக்க வேண்டியதில்லை – படத்தில் சீன வாலிபனான ஜேசன் சந்தையில் ஒரு திருட்டு வீசிடி விற்கும் அளவிற்கே வளர்ந்திருக்கிறான்)- இது யஸ்மின் அமாட்டின் துணிச்சலான விமர்சனத்தைக் கொண்டிருக்கும் மிக எளிமையான உரையாடல்.

ஓர்கிட் வெளிநாட்டிற்குப் புறப்படும் முன் அவளுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்புகிறான் ஜேசன். ஆனால் கடைசிவரை அவள் அதைப் படிக்க முயற்சிக்கவே இல்லை. கடைசிநாள் வீட்டிலிருந்து புறப்படும் முன் அந்தக் கடிதத்தையும் அவளுடன் எடுத்துக் கொண்டு போகிறாள். காரில் அவளுக்கும் அவளின் அம்மாவிற்கும் நடக்கும் உரையாடல் மிக அற்புதமானவை. இன நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும் அரசியல்த்தனமான பிரச்சாரங்களைவிட இந்த எளிமையான உரையாடல் வெற்றிக்கரமானது என்றே சொல்லலாம்.

அவள் வெளிநாடு செல்வதை அறிந்த ஜேசன் மோட்டாரில் வேகமாக அவளை நோக்கி விரைகிறான். ஓர்கிட் அவன் முன்பு எழுதிய கடிதத்தைக் காருக்குள்ளிருந்து வாசிக்கத் துவங்குகிறாள்.

அன்புள்ள ஓர்கிட்,

கடவுள் என்னுடைய பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்துவிட்டார். மேக்கி குழந்தையைப் பெற்றுக் கொள்வதில்லை என தீர்மானித்துவிட்டாள். அவளுக்கு இந்தக் குழந்தை அவளின் எதிர்க்காலத்தைப் பறித்துவிடும் என்ற அச்சம் வந்துவிட்டதாம். அதைப் பற்றி இனி நான் பேசமாட்டேன் ஓர்கிட், நம்மைப் பற்றிதான் பேசப் போகிறேன். மண்டரின் மொழியில் உனக்கொரு கவிதை எழுதினேன் ஓர்க்கிட். என் உணர்வுகளை உனக்குப் புரிய வைக்கவே அதை எழுதினேன். எப்படி எழுதினேன் என்பது முக்கியமல்ல, ஆனால் பலநாள்களாக உனக்காக நான் சிரமப்பட்டு எழுதியவை.

“முதலில் எனது இரவுகள்
பதற்றமானவையாக இருந்தன
உன் முகம் பார்க்கும்போதெல்லாம்
நான் விடுதலையடைந்தேன் ஓர்கிட்.
உன் குரல் எனக்கானவை.
இந்தக் கவிதை கடவுளுக்கு நான் எழுதும்
கடிதம் போன்றவை.
ஒருநாள் கடவுளிடமிருந்து
பதில் வந்தது.
ஓர்கிட் உனக்காகத் தரப்பட்டவள்
என்று.
கடவுளிடருந்து நான் பெற்ற
கவிதை நீ ஓர்கிட்”
-ஜேசன்

அம்மாவின் கைத்தொலைப்பேசியின் மூலம் ஜேசனை உடனே தொடர்புக் கொள்கிறாள் ஓர்கிட். அவனிடமிருந்து பதில் இல்லை. இன்னொரு காட்சியில் ஜேசன் சாலையில் இரத்தம் சொட்ட தலையில் அடிப்பட்டு வீழ்ந்து கிடக்கிறான். 10 அடி தூரத்தில் அவனுடைய கைத்தொலைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஒலியின்போதும், ஜேசனும் ஓர்க்கிட்டும் காதலித்த சமயங்களில் அவர்கள் ஒன்றாக இருந்த காட்சிகள் திரையில் ஒரு காவியத்தின் இசையுடன் விரிகின்றன. ஓர்க்கிட்டின் அழைப்பிற்குப் பதிலளிக்கவே இயலாத தூரத்திற்குச் சென்றுவிட்ட ஜேசனின் கைத்தொலைப்பேசியிலிருந்து திடீரென்று ஒரு குரல் ஒலிக்கிறது. ஓர்க்கிட் ஆர்வத்துடன் காருக்குள்ளிருந்து பேசுகிறாள்.

“ஜேசன். . இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு உன்கிட்ட ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன். . நான் உன்னெ ரொம்பெ நேசிக்கிறேன் ஜேசன். . நான் அங்குப் போனோனே உனக்குப் போன் பண்றேன் ஜேசன். . ஓகே சயாங். . ஐ மிஸ் யூ. .”

என்கிற கடைசி உரையாடலுடன் படம் நிறைவடைகிறது. சாலையில் இறந்துகிடந்த ஜேசனின் கைத்தொலைப்பேசியிலிருந்து அவளுக்குப் பதிலளித்தது யாராக இருக்கும் என்ற மர்மத்தை ஆராய மனமில்லாமல், அது கடவுளிடமிருந்து வந்த ஒரு கவிதையாக. . அந்தப் படத்திலிருந்து நீங்க முயல்கிறேன்.

குறிப்பு: யஸ்மின் அமாட் அவர்களின் மரணம், மலேசிய கலை உலகத்திற்கு ஏற்பட்ட பயங்கர இழப்பும் அதே சமயத்தில் இனி இம்மாதிரியான துணிச்சலான சினிமா எடுக்கப்படுமா என்கிற அச்சமும் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. யஸ்மின் அமாட் அவர்களின் சினிமா கலை நுட்பமும், மலேசியாவில் இருக்கக்கூடிய மற்ற இனத்தின் கலாச்சார புரிதலும் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் இன்றும் தமிழில் தமிழுலகத்தில் யஸ்மின் அமாட் பரவலாக அறியப்படவில்லை. அவரின் எத்தனை படங்கள் தமிழர்களால் பார்க்கப்பட்டது என்றும் எத்தனை தமிழ் விமர்சனங்கள் அவரது கலை ஆளுமை குறித்து எழுதப்பட்டது என்றும் கூட தெரியவில்லை.

மலேசிய தமிழ் சினிமா இன்னமும் தட்டையான குண்டர் கும்பல் கருவையும் பேய்க் கதைகளையும் தமிழ் சினிமாவின் தாக்கத்தின் பெயரில் வரண்ட தொழில்நுடபத்தின் வாயிலாக எடுக்கப்பட்டு வருகையில், அபாரமான அரசியல் சமூக விமர்சனங்களை தனது குரலாக மலேசியாவின் ஒரே அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் வகையிலும், மற்ற இனத்திற்கும் குரல் எழுப்பக்கூடிய நேர்மையான கலை பார்வையை முன் வைத்த யஸ்மின் அமாட் கொண்டாடப்பட வேண்டியவர், உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை.

நமது பிரதமரின் “ஒரே மலேசியா” என்கிற கொள்கையை கலை ஊடகம் வாயிலாக மக்களுக்குக் காட்ட வேண்டுமென்றால், யஸ்மின் அமாட் அவர்களின் ஒட்டு மொத்த சினிமாக்களையும் தாராளமாகப் பரிந்துரை செய்யலாம்.

குறிப்பு: succesfull of sepet movie:
1. official selection “ Barcelona Asian Fil festival 2005”
2. Winner best Asean features film 2004 (9th Malaysian awards)
3. selection for Festival womens film’s 2005- France
4. in competition “ San Fancisco international film festival” 2005

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்