சினத் தாண்டவம்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

அழகர்சாமி சக்திவேல்


கைகேயி கோபம் கணவனே நாசம்

கெளரவரின் கோபம் மாபாரத நாசம்

இஇராவணணின் கோபம் இலங்காபுரி நாசம்

இட்லரின் கோபம் இவ்உலகே நாசம்

மாபாவ ஆணவம் மனச்செருக்கு கொண்டோர்க்கு

தலைக்கனம் தந்துபின் தாழ்வுறச் செய்திடும்

கோபாதி தேவன் நானாடும் தாண்டவமே

தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்

விரும்பாத மனிதரின் வார்த்தைகள் எல்லாம்

வேண்டுமென் றுரைத்ததாய் வீண்அர்த்தம் செய்வாய்

கரும்பான பேச்சிலும் கசப்பையே கண்டுஅவர்

அவமானம் செய்வதாய் அர்த்தங்கள் கொள்வாய்

என்னஅவர் சொன்னாலும் தன்னையே குறிப்பதாய்

எண்ணிநீ நோவாய் என்புருகத் தேய்வாய்

உன்னுடல் மாய்வதால் உவகையில் நானாடும்

தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்

உற்றார் பகைஓங்கும் உயர்நட்பு விலகும்

உன்மகவு உனைக்கண்டு பயந்தருகில் வாரா

மற்றவரும் துச்சமாய் மதிக்கும் நிலையாகும்

மனைவிக்குக் கூட நீ மாபாரம் ஆவாய்

எல்லாம் தெரிந்ததென இறுமாப்பில் நீ வாழ்கையில்

வல்லவன் இஇன்னொருவன் வளர்ந்தாலே வரும் சினம்

வெல்லவும் இயலாது நீவாட நானாடும்

தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்

இரத்தம் கொதிக்கும்மிக இதயம் துடிக்கும்

இரவிலே தூக்கம்போய் எதிர்ச்சக்தி மங்கும்

நரம்பெலாம் புடைக்கும் நார்த்தசைகள் இறுகும்

ஆண்மையும் குறையாகி அடிமைத்தனம் ஓங்கும்

வார்த்தை தடுமாறும் உரத்திடும் பேச்சு

வெளுத்திடும் முகம்மிக்க விரிந்திடும் விழிகள்உடன்

சோர்ந்திடும் உன்னுடல் பார்த்ததும் நானாடும்

தத்தகிட தகதகிட தகதகிட தித்தோம்

அழகர்சாமி சக்திவேல்

Series Navigation