சிந்தனையில் மாற்றம் வேண்டும்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியாரோயல் மெல்பேன்வைத்தியசாலையில் இருந்து இந்து ஆலயம் ஒன்றிற்கு அங்கு கடமையாற்றும் தாதி ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

இந்த வைத்தியசாலையில் இந்துமதத்தை சேர்ந்த முதியவர் இறக்கும்தறுவாயில் இருக்கிறார். இவர் இறப்பதற்கு முன்பாக தேவாரம் ஒன்றை கேட்கவேண்டுமாம். இவரது உறவினர்கள் எவருக்கும் தேவாரம் தெரியாது. இந்த விடயத்தில் உங்களால் ஏதாவது உதவி செய்யமுடியுமா?

இந்த வாசகங்கள் ஆங்கிலத்தில் கருணை கடமையுணர்வு என்பவற்றில் தோய்து எடுத்த வார்த்தைகளாக தொலைபேசியூடாக வந்தன.

ஆலய நிர்வாகத்தின் பதில்

‘மன்னிக்கவும். இப்படியான விடயங்களில் நாங்கள் ஈடுபடுவதில்லை”.

அந்த மருத்துவ தாதியினதும், இறக்கும் தறுவாயில் இருக்கும் முதியவரினதும் மனநிலையை எண்ணிப்பார்ப்போம். சில நிமிட நேரங்கள் மட்டும்.

இதே தொலைபேசி அழைப்பு கிறிஸ்தவ, முஸ்லீம் அல்லது யூத வணக்கத்தலத்துக்கு சென்றிருந்தால் எப்படி இருக்கும்?

அவுஸ்திரேலிய வாழ் இந்துக்களால் புரிந்துகொள்ளமுடியும். நிச்சயமாக மற்றைய மதத்தை சேர்ந்த மதகுரு அந்த முதியவரின் கட்டிலுக்கருகில் சென்று ஆறுதல்வார்த்தைகளும் இறைவனது நாமத்தையும் கூறிஇருப்பார்.

இந்த முதியவரை அவர் ;சார்ந்த இந்து சமயம் விட்டுவிட்டது. அதுவும் கைகொடுக்கவேண்டிய நேரத்தில். மனிதன் இறைவனை, சமயத்தை நாடிநிற்பதே தனது கடைசிகாலத்தில் நல்ல இறப்புவேண்டியும் இறந்தபின்னும் நல்லுலகத்தை அடைவதற்குமாகும்.

மெல்பேனில் இரண்டு ஆலயங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டு பொலிவாக தோற்றமளிக்கிறது. இரண்டு ஆலயத்திலும் திறமையான நிர்வாகிகள் உள்ளனர். முக்கியமாக சிவா-விஷ்ணு ஆலயத்திற்கு மில்லியன் டாலருக்குமேல் வருமானம் வருகிறது.

இப்படியான மனிதாபிமான விடயத்தில் ஈடுபடலாம்தானே.

எனக்கு தெரிந்தவரை, இந்து சமயத்தை பாரதி பாடசாலையில் நண்பர் நித்தியானந்தன் குழந்தைகளுக்கு கற்பிக்கிறார். இந்தப்பள்ளியில் படித்த எனது மகளும் இந்து சமய கட்டுரை எழுத சிவா-விஷ்ணு கோயிலுக்கு ஒருமுறை போய்வந்தபின்பு தொடர்ச்சியாக மெல்பேண் சிவா-விஷ்ணு கோயிலுக்கு தாயுடன் போய்வருகிறாள். அவளுக்கு இந்து சமய அறிவு உள்ளதா என்பது தெரியாது.

சிறுவயதில் புரிந்தோ புரியாமலோ சரியோ, தவறோ நாம் செய்யும் விடயங்கள் காலம் காலமாக மனத்தில் தங்கிவிடும். பிற்காலத்தில் ஒருசிலர் மட்டுமே புத்திஜீவியாக சில விடயங்களை நிராகரிப்பார்கள்.

இந்து சமயத்தையும் இறை நம்பிக்கையும் இளம் சந்ததியினரிடம்கொண்டுசெல்வதில் எமது ஆலய நிர்வாகத்தின் பங்கு என்ன? என்று கேட்டால் எனக்கு விடைதெரியாது.

பாரதிபள்ளியின் வெற்றிக்கு எனது மகள் உதாரணம் என்பேன்.

மேற்கூறிய விடயங்களை கூறி கோயில் நிர்வாகத்தை நான் குறைகூறவில்லை. எனது விமர்சனம் இந்து சமய அமைப்பை நோக்கியது.

இந்து சமயம் என நான் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையல்ல. இந்திய உபகண்டத்தில் இந்துவெளிக்கு தெற்கான திசையில் மக்களின் பண்பாட்டு விழுமியம் ஆன்மீகம் கலந்த ஒரு கலவையை குறிப்பிடுகிறேன்.

இந்த மார்க்கத்தின் தவறுகளால்தான் இரண்டு பெரிய நாடுகள் (பாகிஸ்தான், வங்காளதேசம்) உருவாகியது. அடுத்து மொத்த மக்களில் கால்பகுதியினரை சாதிப்பாகுபாட்டின்மூலம் காலம் காலமாக கொடுமைப்படுத்துவதும்; நடக்கிறது.

இதுகானும் மனிதகுலம் கண்ட கொடுமைகளான நிறபேதம், தொழிலாளர் கொடுமை மற்றும் யுத்தகொடுமைகளிலும் பார்க்க இந்த சாதிக்கொடுமை கொடூரமானது.

ஏன் தெரியுமா?

மற்ற கொடுமைகள் எப்போதாவது முடிவுக்குவரும் என நம்பலாம். அவை கருத்தியலில் வன்மைகொண்டவை அல்ல.

இந்து சமயம் நாலுவருணங்களால் ஆனது. அதன்கீழ் பல பிரிவுகள் உண்டு. ஒரு வருணத்தில் இருந்து மற்றைய வருணத்தில் மணம் செய்தால் அந்த தம்பதிகள் அந்தரத்தில் புறந்தள்ளப்படுகிறார்கள். ஆனால் வேறு சமயத்தில் கலப்பு மணம் செய்தால் அந்த சமயத்தால் உள்வாங்கிக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்து சமயத்தில் எத்தனையோ உன்னதமான விடயங்கள் உண்டு. மற்ற சமயத்தில் காணப்படாத விடயங்கள் விரவிக்கிடக்கிறது. காலம் காலமாக கருத்தியல் புரட்சிகள் ஏற்பட்டது. அதன்விளைவுகள் புத்த, ஜைன மதங்கள். இதைவிட ஞானிகளாகிய ஆதிசங்கரர் ராமானுஜர் வள்ளலார் போன்ற சீர்திருத்தவாதிகள் அக்காலத்தில் தங்கள் உயிர்களை பணயம்வைத்து பாடுபட்டார்கள். ராமானுஜர் சோழமன்னர்களால் நாடுகடத்தப்பட்டவர்.

நாங்கள் புலம் பெயர்ந்த இடங்களுக்கு இந்து கோயில்களை கட்டினால் மட்டுமே போதுமா? நில உடமை சமூக அமைப்புக்கு முன்தோன்றிய இந்து கருத்தியல் அமைப்பை இக்காலத்திலும் ஒரே மாதிரிகொண்டு செல்வோமா?

சமயம், கலாச்சாரம் என்பவற்றை தீர்மானிக்கும் பொருளாதார உற்பத்தி உறவுகள் மாறிவிடும்போது எல்லாவற்றிலும் மாற்றங்கள் தேவைப்படும். மாற்றத்தை புரிந்து முக்கியமாக மேற்கு நாடுகளில் செயல்படாவிடில் பணம்போட்டு கட்டிய ஆலயங்கள் நினைவு சின்னங்களாக மட்டுமே இருக்கும்நிலை வரலாம்.


uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்