சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

வெங்கட் சாமிநாதன்/


ஜெயந்தி சங்கரை எனக்கு கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் தெரியும். இது அவர் குற்றமில்லை. எனது தான். இரண்டு மூன்று வருடங்களாகவே அவர் புத்தகங்கள் சில என்னிடம் இருந்த போதிலும், அவை முழுதையும் விடாமல் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமலேயே போய்க்கொண்டிருந்தது. அவர் புத்தகங்களிலேயே பார்த்ததும் எனனை மிகவும் கவர்ந்தவை இரண்டு. சீனக் கவிதைகளை அறிமுகம் செய்து அவற்றைக் கால வாரியாக தொகுத்துக் கொடுத்திருந்த புத்தகமும் சீனப் பெண்களைப் பற்றி வரலாற்று நோக்கில் எழுதியிருந்த புத்தகமும் தான். ஜெயந்தி சங்கரின் புத்தகம் வருவதற்கு முன்னாலேயே எனக்கு சீன, ஜப்பானிய கவிதைகளில் பெரும் கவர்ச்சி இருந்து வந்துள்ளது. இருப்பினும் அதைப் படிக்க எடுப்பதும், சில பக்கங்கள் படிப்பதும், உடனே இடையில் வேறு அவசர வேலைகளும் நிர்ப்பந்தங்களும் முன்னிற்க, அது பின் தள்ளப்பட்டுவிடும். இன்னுமொரு காரணம், இரண்டு புத்தகங்களுமே பல நூற்றாண்டுகள் விரிந்த வரலாற்றை தம்முள் அடக்கியவை. ஆக், இப்படியே பல முறை நிகழ்ந்துள்ள்து. தொடர்ந்து நிகழ்ந்தும் வருகிறது.. இது ஜெயந்தி சங்கருக்கோ, அவருடைய் எழுத்துக்கோ, சீனக் கவிதை களுக்குமோ நியாயம் செய்யும் காரியமில்லை. இதை ஒப்புக்கொண்டு என் தவறுகளை பொதுவில் இப்படிப் பதிவு செய்வது தான் என்னால் இப்போது ஆகக் கூடிய காரியம். இந்த வார்த்தைகள், ஜெயந்தி சங்கருக்கு மாத்திரம் இல்லை, இன்னம் பலருக்கும் சொல்லப்படும் வார்த்தைகள் தான். ஜெயந்தி சங்கரைத மாத்திரம் தனிமைப் படுத்தி இழைக்கப்படும் அநியாயம் இல்லை அவரோடு பங்கு கொள்ள பலர் இருக்கின்றனர். அதில் பெண்களும் உள்ளனர். பெண்பாவம் பொல்லாது என்பார்களே. அதுவும் பயமுறுத்துகிறது.

கடந்த இருபது வருடங்களாகத் தான் சிங்கப்பூரில் வாழ்பவர். ஜெயந்தி சங்கர். இந்தியாவில் பல வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிப்படிப்பின் காலத்திலிருந்து வாழ்ந்த் பரிச்சயம் கொண்டவர். கல்லூரிப் படிப்பு தமிழ் நாட்டில், திருச்சியில். ஆக, தமிழக வாழ்க்கையோ, தமிழோ எதுவும் அன்னியமில்லை. படிப்பில் கொண்ட தீவிர ஈடுபாடு தானும் எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியதாகச் சொல்கிறார், ஜெயந்தி சங்கர். இதையெல்லாம் நான் சொல்லக் காரணம், இது காறும் அவர் படிப்பைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் மிகவும், தான் என்ற முனைப்பற்ற, தன் இயல்பில் தான் சொல்லிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் வருகிறார் என்பதைச் சொல்லத்தான்.

நியாயமாக, இதுகாறும் வெளிவந்துள்ள எழுத்து முழுதையும் ஒருங்கே வைத்துக்கொண்டு தான் ஒரு முழுமையுடன் அவர் பற்றிச் சொல்லவேண்டும். இருப்பினும் இப்போது என்னைச் சூழ்ந்திருக்கும் பழைய, புதிய சந்த்ர்ப்பங்களினிடையில் அது சாத்தியமில்லை. இப்போது கையிலிருப்பது ‘நாலே கால் டால்ர்’ என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு. தான் அறிந்த வாழ்வையும் அனுபவத்தையுமே எழுதும் இயல்பில், இருபது வருட காலமாக வாழ்ந்து வரும் சிங்கப்பூர் வாழ்வே அவரது எழுத்துக்களில் விரிகிறது. ஒரு பெரிய நகரத்தை மாத்திரமே தன்னுள் கொண்ட ஒரு சின்ன தீவு. அதுவே பல்வேறு இனமக்கள் நெருங்கி வாழும் அடங்கிய சிறு நாடும் ஆகிறது.

அந்தச் சிறு நாடாகிவிட்ட பெரு நகரம் ஆசிய கண்டத்தில் ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும் பூதாகாரமாக வளர்ந்துள்ளது. இந்த பூதாகார வளர்ச்சி அனேகமாக முப்பது நாற்பது வருட காலத்துக்குள் தான் சாத்தியமாகியுள்ளது என்று நினைக்கிறேன். எனக்கு சிங்கப்பூர் என்றாலே எழும் பிம்பங்கள் ஒரு குட்டி ந்யூ யார்க் மாதிரித்தான். அதைப் பயங்கரமாக சிதைத்தது சிங்க்ப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவரான் இளங்கண்ணனின் நாவல்கள். அவரது நாவலில் வரும் ஒரு சித்திரம் சிஙக்ப்ப்பூரில் மாடுகள் வளர்த்துக் கொண்டு பால் வியாபாரம் செய்பவனைப் பற்றியது. எனக்கு பயங்கர அதிர்ச்சி. நான் தில்லி சென்றபோது இரண்டு மாடிக் கட்டிடங்களுக்கிடையே காலியாகவிருக்கும் மனைகளில் காணும் எருமை மாடுகள் கட்டிக்கிடக்கும் தொழுவங்களும் பால்காரர் குடிசைகளும். சிஙக்ப்பூரிலும் ஆங்காங்கே மாட்டுத் தொழுவங்களும் தார்ச்சாலைகளில் எருமைச் சாணிப் பத்தைகளும் கிடக்குமோ, தில்லி கரோல் பாக் போல, மாமபலம் போல?. இரண்டுமே சிங்கப்பூரின் வாழ்வுண்மைகள் தான்.

அதோடு ஒரு நகரத்துக்குள் வாழ்வதால், தமிழ்ர்களைவிட பெரும்பான்மையில் வாழும் சீனர்களுடனும், மலாய் மக்களுடனும் நெருங்கி வாழும் அவர்களுடன் பலவற்றையும் பகிர்ந்து வாழும் வாய்ப்புக்க்களோ, நிர்ப்பந்தங்களோ, கூட வாழ்வுண்மைகள்தான். இன்னமும் ஒரு தலைமுறை காலத் துக்குள்ளோ அல்லது கூடவோ நிகழ்ந்துள்ள பொருளாதார மாற்றங்கள், சட்டத்தின் கெடுபிடிகள் அன்றாடம் சந்திக்கும் நிலையும் கூட வாழ்வுண்மைகள் தான். அதை மனித மனம் எவ்வாறெல்லாம் எதிர்கொள்ளும் என்பது தான் ஒரு எழுத்தாளனுக்கும் நமக்கும் சுவாரஸ்யம் தரும் விஷயங்கள்.

இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாம். தீபாவளி நெருக்கடியில் மாலையில் குழந்தை அர்ச்சனா கேட்ட ‘பாலக் பன்னீர்’ செய்வதற்கு கீரையும் பன்னீரும் வாங்க கடைத்தெருவுக்குப் போன பவித்ரா ஒரு இடத்தில் மீதி சில்லரை வாங்க மறந்துவிடுகிறாள். கடைக்காரர் கூப்பிட்டு, ”மறந்துட்டீங்களே அம்மா!” என்று சில்லரையைக் கொடுக்கிறார். அந்த மறதி இடம் மாறிவிட்டால், விபரீதமாகிப் போகிறது. நிறைய சாமான்களை வாங்கிக்கொண்டு சிரமத்தோடு தூக்கிச் செல்லும்போது, தீபாவளி வாழ்த்துக்கார்டு நான்கு வாங்கியதற்குக் காசு கொடுக்க மறந்து போனது திருட்டுக் குற்றமாக உருவெடுத்து விடுகிறது. “மறந்துட்டீங்களேம்மா” என்று யாரும் சொல்ல வில்லை. ஒரு கண்ணியமான் பவித்ரா ராஜ், ஒரு டிராமா ஸ்க்ரிப்ட் ரைட்டர், கடைநிலை குற்றவாளிகளோடு சிறையில் அறைக்கப்படுகிறாள். ஒரு சாதாரண மறதி, அடுத்த நிமிடமே சரிசெய்யப்படக்கூடிய மறதி, சிறைத் தண்டனைக்குரிய குற்ற மாககும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது சட்டம். அதைச் சாத்தியமாக்குவது சட்டத்தை நிர்வகிக்க வந்த மனிதர்கள். சட்டம் மனிதர்களிடையே தாரதம்மியம் பார்ப்பதில்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். அதன் எதிர்கோடி முனையில், சட்டத்தின் கெடுபிடிகளை மனிதாபிமானத்தோடு பார்ப்பவர், ‘சரி இனிமேல் கவனமாக இருங்கள்” என்று சொல்லும் சாத்தியங்களைக் கொண்ட நம் சமூகத்தில், ரூ 60,000 கோடிகளை திட்டமிட்டு விழுங்கியவனையும், அதன் பங்குதாரர்களையும் ‘கண்டுக்காமல் விட்டு விட’ வழிவகுத்து விடுகிறது. சட்டத்தின், மனித மனத்தின், சமூக குணங்களின் விசித்திரங்கள்.

ஈரம் என்ற கதையும் இம்மாதிரியான விடம்பனங்களைத் தான் முன் வைக்கிறது. சிங்கப்பூர் வாழ்க்கைக்கும் தமிழ்நாட்டின் கிராமம் கருப்பூருக்கும் இடையே எத்தனை தூரம்! என்ன சட்டம், என்ன ஒழுங்கு,” என்று மலைத்து வியந்த கணகள் ஒரு நாள் கடைத்தெருவுக்குப் போய் திரும்பும் வழியில் மழையில் நனைந்து, ‘வீடு திரும்ப, இடையில் ப்ழுதான ‘லிஃப்டில்’ மாட்டிக்கொண்டு தவித்த அந்த நாள், வாழ்க்கையிலேயெ கறை படிந்த நாள் தான். லிப்டிலிருந்து மீள்வோமா என்று பீதியில் உறைந்து கிடந்த்து தான் தெரியும். பிறகு லிப்ட் சரியாக வெளிவந்த போது, “லிப்ட் ஈரமாகிக் கிடப்பதைப் பார்த்து, லிப்டில் தான் மூத்திரம் பெய்துவிட்டதாக, ஒரு சீன சூபர்வைஸர் ச்ந்தேகிக்க, பரிசோதனைக்கு மூத்திர சாம்பிள் கொடுக்கவேண்டி வருகிறது. பரிசோதனை தன்க்கு எதிராக சாட்சிய்ம் சொல்லவே, லிஃப்டில் மூத்திரம் பெயத குற்றம், பின்னர் அதை மறுத்த குற்றம் அதைவிட பெரிய குற்றம். 700 வெள்ளி அபராதம், கட்டத் தவறினால் சிறைவாசம்.. ‘இந்த ஊரைப் போல உண்டா, என்ன சட்டம், என்ன ஒழுங்கு! என்று வியந்த சிங்கப்பூர் இனி வேண்டாம், தமிழ்க கருப்பூர் தான் தன்க்கு லாயக்கு என்று உடனே ஊர் திரும்பிய கதைதான் ‘ஈரம்: இது சிங்கப்பூரை தமிழ் நாட்டு கருப்பூர் கிராமத்தோடு ஒப்பிட்டு கருப்பூரைத் தேர்ந்தெடுக்கும் காரியம் இல்லை. இரண்டிலும் சட்டத்தை தன் இஷடத்துக்கு நிராகரிக்கும் அல்லது வளைத்துக் கொடுமை செய்யும் மனிதர்களைச் சுட்டும் காரியம்.

ஒரு வேலை வாய்ப்பு தரும் பொறுப்பில் இருக்கும் கணவன், வேலையில்லாதிருக்கும் தன் தம்பிக்கு அந்த வாய்ப்பைத் தராது, யாரோ ஒரு சீனனின் குடும்பத்தேவை அதிகம் என்று சொல்லி, அந்த சீனனை வேலைக்கு எடுத்துக்கொண்ட கணவனிட்ம் கொண்ட் கோபம் அதிக நாள் நீடிப்பதில்லை. காரணம், அந்த வேலை வாய்ப்பின் பக்க விளைவு.ன் அந்த சீனனின் மனைவிதான் தன் பெண் அனுவுக்கு டீச்சர். இப்போது அந்த டீச்சர் முன்னைப் போல எரிச்சல் படுவதில்லை. சிரித்த முகமாக இருக்கிறாள். இப்படிக் கதை சொன்னால் அது ஒன்றும் அப்படிப் பிரமாதமாகத் தோன்றாது. இது போன்ற இன்னும் பல கதைகள் சிங்கப்பூரில் தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைத் தருக்கின்றன. வந்து போகும் மனிதர்கள், வாழ்க்கைச் சிக்கல்கள், சீனர்களோடும் மலாய்களோடும் இணைந்த வாழ்க்கை, ஜெயந்தியின் அல்ட்டிக்கொள்ளாத, பந்தா இல்லாத கதை சொல்லும் பாணி எல்லாம் சுவாரஸ்யமானவை

தன்க்கு இயல்பானவற்றை, தன் பரிச்சயத்திலும் அனுபவத்திலும் உள்ளவற்றைத் தான் எழுதுகிறார் என்று சொன்னேன். இங்கு சொல்லாமல் சொல்லப்படுவது, பெண்ணீயம் என்று அடையாளப் படுத்தாமல், அந்த அடையாளத்திற்கான மசாலாக்கள் சேர்க்காமல், வாழ்க்கை பெண்ணின் பார்வையிலேயே இயல்பாக வந்து விழுந்து விடுகிறது என்பது தான். சாதாரண சித்தரிப்பிலேயே, வாழ்க்கையே பெண்ணியம் பேசிவிடுகிறது. சுரமாகக் கிடக்கும் போது கூட, கணவனுக்கு ஒரு ரசமும் சாதமுமாவது பண்ணிப் போட வேண்டியிருக்கிறது. டாகடரிடம் போக வேண்டும். ஆனால் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தான். மகள் கூட உதவ மாட்டாள். அவளுக்கு வேறு களாஸ் இருக்கிறது. போக வேண்டும். இன்னம் ஒரு மணி நேரம் இருக்கிறது. “நீயே போய்க்குவே இல்லையா?” என்ற கேள்வி பதிலோடு தன் கணவனின் கனிவு முடிந்து விடுகிறது. “கறி கூட வேண்டாம். ஒரு ரசம், சாதம் போதும்” அவசரமாக நான் போக வேண்டும். நிறைய் வேலை” ஜூரமாகக் கிடக்கும் மனைவியிடம் காட்டும் பரிவு அத்தோடு முடிகிறது. ஜூரமாகக் கிடக்கும் போது தான் வேலையும் அதிகமாவது போலத் தோன்றுகிறது. கணவனிடம் தன் கஷ்டத்தைச் சொன்னால், “ எனக்கு சுரம் வந்தால் ஒரே வலி. ஒரு வேலை செய்ய் முடிவதில்லை. எழுந்தால் மயக்கமா வருகிறது. அதனால் தான் நான் படுத்துக்கொண்டே இருக்கிறேன். நீயாவது சுரத்தில் கூட எப்படியோ எல்லா வேலையையும் செய்து விடமுடிகிறது, “ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நகரும் கணவன். இப்படி வெகு சாதாரணமாக், தன் சுரமே படுக்கையில் கிடந்து மயக்கத்தைத் தவிர்க்க ஒய்வெடுக்க வேண்டிய சுரம், தன் மனைவியின் சுரம் பொருட்படுத்த வேண்டாத ஒன்று, ஏனெனில் அவளால் எப்படியோ எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது,” என்று தன் மனைவியின் வேதனையை பொருட்படுத்த வேண்டாத அல்ட்சியத்துடன் உதறித் தள்ளுவது தான் ஆண் என்னும் அகங்காரம். சாதாரண அன்றாடம் புழங்கும் வார்த்தைகள் போதும், அன்றாட நிகழ்ச்சிகள் போதும், சாதாரண என்றும் பார்க்கும் ஆண்களும், பெண்களும் குடும்பங்களும் போதும், பெண்ணியம் பேச. வாழ்க்கையின் மனிதர்களின் குணத்தைச் சொல்ல. சமூக மதிப்புகளைச் சொல்ல. விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உடல் மொழி தேவையில்லை பெண்ணியம் பேச. எவ்வளவு அலட்சியத்துடன் வெகு சாதாரணமாக தன் மனைவியின் வேதனையை வெகு அல்ட்சியமாக உதறித் தள்ளும் காட்சியோ மொழியோ தேடி உருவாககவேண்டிய அவசியத்தில் இல்லை..

அடிக்கடி நோய்வாய்ப்படும் ஜமுனா. பல முறை மரணப் படுக்கையிலிருந்து பிழைத்து எழுந்தவள். தன் மகன் விவாக ரத்துப் பெற்ற் தந்தையோடு ஜோஹோரில் வாழும் மகன் அவளை யாரோ ஒரு ஆண்ட்டியாகத் தான் பார்க்கிறான். தன் புது மம்மியோடு ஒட்டிக்கொண்டுவிட்டானாம். தனிக்கட்டையாகி விட்டவளுக்கு ஆதரவு தந்த திலீபனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, மறுபடியும் கருவுற்றால் தன் உயிருக்கு ஆப்த்தாகுமாதலால் குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தக்கூடாது, என்ற நிபந்தனையோடு திலீபனை மணம் செய்து கொள்கிறாள். ஆனால் திலீபனின் மனம் மாறி குழ்ந்தை வேண்டும் என்று வற்புறுத்த அதிக காலம் தேவையாயிருக்க வில்லை. திலீபனுக்கு. அவள் மறுபடியும் கருத்தரித்தால் அவள் உயிரிழப்பாளே என்ற எண்ணமே அவனுக்குத் தோன்றுவதில்லை.

தன் மனைவியையும் குழந்தைகளையும் வீட்டில் விட்டு விட்டு இதோ வந்து விடுகிறேன் என்று கடைக்குப் போவது போலச் சொல்லி வெளியேறி, இன்னொரு பெண்ணைக் கட்டிக்கொண்ட வனுக்கு தன் முதல் மனைவியும் குழந்தைகளும் நினைவுக்கு வருவது, தன் சிறுநீரக நோய்க்கு, சிறுநீரக்ம் தான் கொடுக்க முதல் மனைவியின் மகன் முன்வரும்போது தான். திரும்பி வருகிறான் தன் முதல் மனைவியின் சம்மதம் கேட்க. முதலில் மறுத்தவள், பின் மகனின் சொல்லுக்குப் பணிகிறாள்.

வகுப்பில் மிகவும் திறமை சாலி, என்று பெயர் வாங்கிய பையனை ஐலண்ட் நியூஸ் பேப்பரிலிருந்து பேட்டி எடுக்க பத்திரிகை ஆசிரியர் வருகிறார் என்ற செய்தி குமணனுக்கு மாத்திரமல்ல, அவன் தாய், பள்ளி ஆசிரியர், அவன் நண்பர்கள் எல்லோருக்கும் தலைகால் புரியாத பரவசம். கடைசியில் பத்திரிகையிலிருந்து வந்த சீன நிருபர் குமணனைக் கூப்பிட அவன் தன் கைகூப்பி மரியாதையுடன் வணக்கம் சொல்லும் புகைப்படம், ‘உன்னைக் கைது செய்வேன் தெரியுமா? என்று அவர் மிரட்டுவதாகவும், குமணன் “ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சுவதாகவும் வாசகங்களோடு பத்திரிகையில் பிரசுர்மாகிறது. ஒரு சிறு பையனை மாத்திரமல்ல, அவன் குடும்பத்தை, ப்ள்ளியை எல்லோரையும் நயவஞ்சகமாக ஏமாற்றிய பத்திரிகையின் ஆசிரியர் பின் என்ன மன்னிப்பைப் பிரசுரித்து என்ன்வாகப் போகிறது. சிறுவனின் நெஞ்சைக் கீரிய ரணம் சுலபத்தில் சீக்கிரத்தில் ஆரப்போவதில்லை.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் சிங்கப்பூரின் மாறி வரும் சமூக மதிப்புகளையும், வாழ்க்கையின் சலனங்களையும் பார்க்கிறோம். பல சிங்கப்பூரில் வாழ்வதால் தமிழ்ர் எதிர்கொள்ள வேண்டி வருபவை. பல் தமிழகத்திலும் நடக்க்க்கூடும் என்றாலும் அவற்றின் ரூபமும் தீவிரமும் சிங்கப்பூரின் சமூக மாற்றத்தால் விளைபவை.

ஜெயந்தி சங்கருடனான் நீண்ட பேட்டி ஒன்றை பதிவுகள் என்னும் இணைய இதழில் படித்தேன். அந்த சின்ன இடத்தில் கூட, அவர் தனித்து விடப்பட்டவரோ, அவரை ஏற்றுக்கொள்ளத் தயக்கங்கள் உண்டோ போன்ற சந்தேகங்கள் எழச் செய்தது அந்தப் பேட்டி. நாலே கால் டாலர் சிறு கதைத் தொகுப்பு சிங்கப்பூர் தமிழ் வாக்கையையும் சொல்கிறது. ஜெயந்தி சங்கரையும் நமக்குச் சொல்கிறது.

வெங்கட் சாமிநாதன்/11.5.10

நாலே கால் டால்ர்: ஜெயந்தி சங்கர்: (சிறு கதைகள்) மதி நிலையம், தணிகாசலம் ரோட், தியாகராய நகர், சென்னை-17

Series Navigation