சிக்குவும் மழையும்….

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

தமிழ் வாசகி


‘சிக்கு ‘, ‘சிக்கு ‘ எஜமானியம்மாவின் குரல் கேட்டு ஓடினாள் சிக்கு. ‘சிக்கு ‘ என்ற பெயர் பெற்றவர்கள் வைத்த பெயர் அல்ல. இந்த வீட்டிற்கு முதன்முதலாக வேலைக்கு வந்த பொழுது சிக்கு பிடித்த தலையோடு அழுக்காய் அவ்வளவு பெரிய வீட்டை மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது தலைமுடியே அவளுக்கு காரணப் பெயராயிற்று. இது சரி பண்ண முடியாத சிக்கு என்பதை ஒரு வாரத்திற்குள் அறிந்த எஜமானி சிக்குவின் தலைமுடியை மொட்டை அடித்து விட்டாள். ஆனால் பெயர் மட்டும் நிரந்தரமாகி விட்டது. சிக்கு துறுதுறு என்றிருப்பாள். அந்த வீட்டு நாய்க்கு கிடைக்கும் கவனிப்பு கூட சிக்குவுக்கு கிடையாது. கவனிப்பு இல்லாத்து மட்டுமல்ல, சிக்குவுக்கு அடி உதை, ஏச்சு பேச்சுக்கள் தாராளமாக கிடைக்கும். அவளுடைய வருத்தம் எல்லாம் கண நேரம் தான், எல்லாவற்றையும் மறந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவாள்.

பக்கத்துவீட்டு அனு, சன்னல் வழியாக மழையை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருந்தாள். தாரைதாரையாக மேலிருந்து வந்து பூச்சிதறல்களாக கீழே விழுந்து நீரோடையாக ஓடும் அழகு பார்க்கப்பார்க்க பரவசமாக இருந்தது.வீட்டு முகப்பில் இருந்து மழை நீர் விழும் இடங்களில் எல்லாம் பாத்திரங்களை வைத்து விட்டு, மழை ஜலதரங்கம் வாசிப்பதைக்கண்டு குதூகலிப்பாள். இந்த ரசிப்புக்கு சுருதி சேர்ப்பது போல அம்மாவும் சூடான பக்கோடாவும் காப்பியும் தருவாள். நிற்காமல் மழை பொழிந்தது, ரசிப்பும் நிற்காமல் தொடர்ந்தது.

16 வயது பெண்ணான பிறகும் சிக்குவுக்கு அடி, உதை,திட்டு எதுவும் குறையவில்லை. ஆனாலும் அவள் எஜமான விசுவாசியாகவே இருந்தாள். சிட்டுக்குருவி போல பறந்து பறந்து வேலை செய்வாள். எஜமானியம்மாவும் அய்யாவும் பேசிக்கொண்டிருந்தத்து எதேச்சையாக சிக்குவின் காதில் விழுந்தது. ‘சனியன் அவள் ஜாடையில் பிறந்து தொலைத்திருக்கிறது, அவன் ஜாடையில் பிறந்திருந்தாலாவது இதன்மீது எனக்கு இவ்வளவு ஆத்திரம் வந்திருக்காது ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தாள் எஜமானி. முழுவதையும் கேட்ட பிறகு சிக்குவுக்கு விஷயம் நன்றாகப் புரிந்தது. சிக்கு அவர்களது சொந்த பேத்தி. அவர்களது மகன் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டு சென்றவன், கைக்குழந்தையோடு மனைவியை தவிக்க விட்டு ஒரு விபத்தில்ல போய்ச் சேர்ந்து விட்டான். கைக்குழந்தையோடு இருந்த சிக்குவின் அம்மா அந்த அதிர்ச்சியிலேயே ரொம்ப சீக்கிரத்தில் கணவன் போன இடத்திற்கே சென்று சேர்ந்து விட்டாள். அனாதையான அந்த சின்னப் பெண்ணை அடையாளம் கண்டு தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து, தங்களது மகனின் மனதை மாற்றிய பெண்ணை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு இந்த சிறு பெண்ணைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் ‘ யாரோ ‘ வாக இருந்த போது சிக்குவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. தன் சொந்த தாத்தா, பாட்டி வீட்டிலேயே நாம் வேலைக்காரியாக அதுவும் அடி உதை ஏச்சு பேச்சுக்களுடன் மனிதாபிமானமில்லாமல் நடத்தப்பட்டதை நினைத்து நினைத்து மனம் பொறுமினாள். வெகுண்டு எழுந்தாள். இந்த சமயத்தில் எஜமானி ‘ சிக்கு சனியனே, இரண்டு டா சூடாக எடுத்து வா ‘ என்று அதிகாரக் குரல் கொடுத்தாள்.

சிக்கு இயந்திரம் போல நடந்து சென்று சூடாக மணக்க மணக்க ஏலக்காய் டா தயாரித்தாள். அதில் கலப்பதற்கு தோட்டத்தில் பூச்சிகளுக்கு அடிக்க வைத்திருந்த மருந்தைக் கையில் எடுத்தாள்.

மழையை ரசித்துக்கொண்டிருந்த அனுவின் விழிகள் பயத்தால் விரிந்தன. திடாரென்று தண்ணீர் எங்கிருந்தோ வந்து சரசரவென்று வீடெல்லாம் புகுந்து எல்லா இடங்களையும் ஆக்ரமிக்கத் தொடங்கியது.

பூ மாதிரி இருந்த சிக்குவும் மழையும் அழிக்கும் பாதையில் இறங்கி விட்டார்கள். அவரகள் இருவரையும் தடுத்து நிறுத்த வேண்டும்!!!…. எப்பாடுபட்டாவது….!!எந்தவழியிலாவது….!!!

tamilvaasaghi@gmail.com

Series Navigation

author

தமிழ் வாசகி

தமிழ் வாசகி

Similar Posts