சாருவின் ஜனனி:

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

கே ஆர் மணி


மும்பாய் சயான் தமிழ் சங்கத்தில் வாசிக்கப்பட்டது.
தூரிகை – மும்பாய் சிற்றதழில் திருத்தி பிரசுரிக்கப்பட்டது.

இலக்கிய உலகின் வரைகோடுகள் :
மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற நம்பிக்கை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தது . இதற்கு பிராய்டு அறிவியல் சட்டைமாற்றிவிட்டார். தாய்மை என்பதே பொய் என்கிற அயன்ராண்டின் தத்துவங்கள் போன்றவை மேலை இலக்கிய வளர்ச்சியாய் படிந்துபோன சமயத்தில் நமது இந்திய இலக்கியம் தனது பாதையை அதன் தத்துவமரபிலிருந்து எடுத்துக்கொண்டது. மனிதன் நல்லதுபோல் தோற்றமளிக்கும்போது அவன் அகத்தோல்கள் உரிக்கப்பட்டு நிர்வாணமாக்குப்படும்போது வெளிப்படுகிற விலங்கின குணமே நிரந்தரம் என்றது மேலை, இல்லை மனிதனின் பிரபஞ்ச ஆனந்தத்தின் ஒரு துளி, கெட்டதையும் உரித்துப்பார் அதற்குள் பல்லிளிக்கும் மானுடம் என்றது இந்திய இலக்கியமும் அதன் அறம் சார்ந்த உணர்வும். Survival for fittest என்றார் டார்வின். நாமோ வாசுதேவ குடும்பகம் என்றோம். Milk the nature என்கிறோம். எல்லாரும் இன்புற்றிருப்பதுவேயல்லாம் வேறென்றும் அறியேன் பராபரமே என்கிறான் தமிழ் சித்தன். பலாச்சுளையின் தோல்கள் போல விலங்கு குணமென்றால் அதனுள்ளிருக்கும் சுவை மனித அறம்தானே. அதுதானே ஆதியந்தம் ; நிர்வாணம் பேஸம் பிசக் ; நித்திய சத்தியம்.
இதுதான் நம்மிலக்கியத்துக்கும் மேலை இலக்கியத்திற்குமான 360 டிகிரி வேறுபாடு. { சிறந்த உதாரணம் : யாருக்காக அழுதான் ? ஜோசப்பு யாருக்காக அழுதான் ? அது மானிட மேன்மை நோக்கிய அழுகையில்லையா ? } சங்ககாலத்திலிருந்து ஒளவை, வால்மீகி, வேதவியாசன், காளிதாசன், கம்பன் மற்றும் , இந்த நூற்றாண்டின் பாரதி, புதுமைபித்தன், ராசம் அய்யர், மெளனி, ந.பிச்சமூர்த்தி, அசோகமித்ரன், சிவராமகராந்தும் – எப்படி எண்ணிலடங்காதோர் கூரை மேல் ஏறி ஏன் கூவிகிறார்கள் ? இந்திய இலக்கியத்தின் அடிநாதமான மானுடத்தின் அறத்தை தவிர.
இப்படி இந்தக்கதையும் ஒர் அறை கூவலோடு எழுத்தில் வந்திருக்கிறது. தாயுள்ளம் மானுடகுலத்தின் மகோன்னதம். அது ஒரு மைல்கல். என்னை வெட்கிக்குனிய வைக்கும் கைத்தடி. உலகப்பொது அற உணர்வின் சக்திமையம். ஜனனி என்ற ஒரு பெண்ணின் கதை நம் நிறைய பார்க்கும் வாய்ப்புள்ள ஒரு பெண்மணியின் கதை.

இது என் விமர்சனமல்ல வாசகனுபவம். ஆயினும் சில ஆபாயக்குறிப்புகள் / Disclaimer கள்

முதலில் ஒரு புத்தகத்தை படித்தவுடன் ஒரு எழுத்தாளன்/விமர்சகன்/வாசகன் என்ற முறையில் நான் பொறாமைப்படுகிறேன்.
சற்று ஆசுவாசத்திற்கு பிறகு என்னை அறியாமல் அதை என் எழுத்தோடு ஒப்பிட்டுபார்க்கிறேன். எழுத்தாளனோடு உரசிப்பார்க்கிறேன்.

தரமான எழுத்துகள் என்னுள் பயத்தையும், பயபக்தியும் (உம்மாச்சி கண்ணை குத்தும் !) ஒருசேர அடிக்கிறது. நான் எழுத்தளனாய்
இதை உருவாக்கமுடியாததுபற்றி வெட்கிகுறுகுவேன். இதெல்லாம் பிறக்கவேண்டுமென விதி என்று என்னைதேற்றிகொள்வேன். அதன் மூலம்
நான் எழுதுவதெல்லாம் எழுத்தா, நமக்கு டயமில்லை எழுதமுடியவில்லை என்று சில ஆறுதல்மருந்தை தடவிக்கொள்வேன். இதற்குள்
என்னுள்ளிருக்கு கடவுள் பாதி விழித்துக்கொள்ளும். மற்ற நல்ல எழுத்தை பாராட்டக்கூடிய வாசக தார்மீக கடமையை எடுத்துக்கொள்ளும்.
பாரட்டவும், விமர்சனமும் செய்யவேண்டி, சுகமான சிரங்கு சொறிதலுக்கும் அதற்கு பின்னான வலிக்கும் தயாராகும் சிறுவனைப்போல
என் அழுக்கையும், அழகையும் கீறிக்கொள்வேன். இந்த அதிசியமும், அபத்தமும், ஒப்பிடுடலும், விமர்சன கலைடாஸ்கோப்பாய் நிறம் மாறுகிறது. இதெல்லாம் முடிந்த பிறகும் சில சமயம் அந்த எழுத்தில் ஏதோ ஒன்று என்னை கவிக்கிறது. கனமாய் என்மீது விழுகிறது. அம்புலிமாமா கதைகள் முதல் சுந்தரராமசாமி கதைகள் வரை என்னை கவிக்கிற விசயங்கள்தான் வேறேயொழிய அந்த அநுபவம் ஒன்றுதான்.
[ உதாரணம் நல்லூர் மனிதர்கள், மும்பாய் சிறுகதைகள் – வங்கிக்கதை ]

சரி, அதிகமாய் ஜல்லியடிக்காமல் நேரே விசயத்திற்கு வருகிறேன். ஒரு வாசகனாய் இந்த கதை ஏன் எனக்கு பிடிக்கலாம் ?
அ) என் ஊர் சம்பந்தப்பட்டது. இதில் என்னையும், நான் பார்த்த, பார்க்க விழைகிற சில
கதாபாத்திரங்களும் இழையாடிக்கொண்டிருக்கிறது.
ஆ) ஜனனியில் நீங்கள் உங்கள் அம்மாவையோ, சகோதரியையோ, மனைவியையோ பார்க்கமுடியும். புதிய இடம்
புகுந்து, மலர்ந்து, கிளைத்து குடும்பத்தை காப்பாற்றி தன் சுயத்தையும் அழிக்காமல் விஸ்வரூபம் எடுக்கும்
இந்தப்பெண்மணிகள் அற உணர்வு, தாய்மை மீதான நம்மின் குற்ற உணர்வு, மரியாதை,பயம், ஆணாதிக்க
எரிச்சல் காரணமாயிருக்கலாம். [ உங்கப்பா போனப்ப என் வயசு 34, என் அம்மா ]
இ) வெ.சா சொல்வதைப்போல எழுத்து என்பது ஒருமனிதனின் தொடர்ச்சி.
எழுத்தும், எழுத்தாளனும் ஏறத்தாழ ஒன்றேதான். அவர்கள் வெவ்வெறானவை என்பது மாயைதான்.
இத்தனை வயதுகடந்தும் இவரின் எழுத்தின் நோக்கமும், தவிப்பும் – எனக்கும் இருக்கவேண்டுமென்கிற
ஆசையோ, இருக்குமா என்கிற கேள்வியோ என்னை இதன் குறை/நிறை தாண்டி இவரைப்பற்றிய பிரியம்
இவரின் எழுத்தின்மீது தாவவைக்கலாம். அதனால் கதை பிடித்தமாய் போகலாம். இவரின் இந்தப்புத்தகத்தை பற்றிய நோக்கம்,
எழுத்தின் மீதான ஆர்வம்.. இதில் ஏதோ ஒன்று என்னை ஈர்க்கலாம்.
ஈ) ஒரு மூத்தசகோதரியின் ரொம்பநாளைக்குப்பிறகான சந்திப்பில் வயிறு நிரம்பசாப்பிட்டுவிட்டு, மொட்டைமாடியில்
வெறும்பாயில் படுத்துக்கொண்டே அவளின் ஊர்கதையில் லயித்துபோயிருக்கீறீர்களா ? கொஞ்சம் வம்பு, கொஞ்சம்
உண்மை, கொஞ்சம் சரடு, கொஞ்சம் திருப்பம், கொஞ்சம் நளினம், கொஞ்சம் அசிங்கம் எல்லாம் சேர்த்து
கதை சொல்வதில் உங்கள் மனதை தொலைத்திருக்கீறீர்களா ? அப்படியானால் இந்தக்கதை உங்களுக்கு
பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

கதை சுருக்கம் & கதாபாத்திரங்கள்:
பாட்டி, சுந்தரசேன், ஜனனி, பானு, சாரு, சாமா, மூர்த்தி
வெங்கடகிருஷ்ணன், கமலம், சுதா, ராமச்சந்திரன்
ஜனனி, பெண் பார்த்தல் கல்யாணம், மும்பாய் வருகை, குழந்தை பெறுதல், வளர்த்தல், கணவனை
இழத்தல், குழந்தை வளர்த்தல், …

இந்த கதை நெம்புகோல் கதையோ, இறவா புகழ்பெற்ற நூற்றாண்டுகதையோ அல்ல. ஒரு பத்திரிக்கையாளரின்
நாவல் வடிவான பதிவு. வடிவத்திலோ, எழுத்திலோ, தளத்திலோ அதீத புதுமை ஒன்றுமில்லை. அதற்காக
எழுத்தாளர் மெனக்கெடவுமில்லை. ஏன் மெனக்கெடவேண்டும் ? எளிமையாய், கொஞ்சம் மசாலாத்தடவி
கொடுத்தால் படிக்கத்தான் ரெடிமேட் மார்க்கெட் இருக்கிறதே. யார் மூளையை குழப்பி படிக்கப்போகிறார்கள்
. கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வெற்றிகள் அடுத்த தலைமுறைக்கு உரமாய் போனதால் வந்த சாபமது.

கமலாம்பாள் சரித்திரத்திற்கு பிறகு அறுபது வரை நாவல் உலகத்தில் பெரிய பரிசோதனைமுயற்சியோ, அடுத்த தளமென்ன என்கிற அரிப்போ, புதியவழி காணும் உந்துதலோ இல்லாமல் அரைத்த மாவை நன்றாக அரைப்போம் என்பதாய் போய்க்கொண்டிருந்தது, ஒரிரூ
சில முயற்சிகள் தவிர என்கிறார்கள் விமர்சகர்கள். 60களின் முடிவில் பெண் எழுத்தாளர்கள் புற்றீசல்போல புறப்பட்டபோது அவர்களுக்கென
பட்டுகம்பளம் கிடைக்கத்தான் செய்தது. லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி போன்றவர்களின் ராஜபாட்டை எழுத்து
கிணற்றில் சில கல்லை எறிந்த்து உண்மைதான். அவர்களால் வெகுவாக பெண் எழுத்தாளர்களின் சந்தையை
வெல்லமுடிந்தது. விதிவிலக்கான அம்பை போன்ற எழுத்தாளர்களைத்தவிர மற்ற பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள்
ஏறத்தாழ ஒன்றாகவே அமைந்த்து என்றால் அது பொய்யாகாது. வெகுசன பெண் எழுத்துகள் என்கிற வட்டத்தில்
வார்க்கப்படுகிற இவர்களது எழுத்துகள் புதியதாய் எந்தபாதையும் அமைத்துவிடவில்லை.

சம்பிரதாய பதிவுகள் :

ஜனனியும் வாக்கா. குளிச்சுண்டுட்டா.. ! மாசக் கடைசில பொண் பாக்க வந்தாலும்
அவ ஆத்தில இருப்பாள்; பாக்கி ஒத்துருக்கும் பாக்கவேண்டாமே

‘ நம்மூரிலே எவ்வளவு ஏழையாயிருந்தாலும், பிள்ளையாத்துக் காராதானே. கூரைப்புடவை
எடுப்பா. ஒரு திருமாங்கல்யத்துக்குக் கொடுப்பா. ‘ திருமண நிரந்தர வசனங்கள்.
‘வருத்தம், சந்தோசம், பயம் எல்லாம் கலந்த கலவையில் இருந்தாள் ‘

“பொண் வாழ பொறந்தாம் வாழும் நாத்தனருக்கு போட்ட சாதமும், நார்த்தங்கய்க்கு போட்ட உப்பும் வீணாப்போகாது ”
சப்பைக்கட்டு பழமொழிகள்.

வைரத்தோடு நல்லதாக தோசம் இல்லாமல் பார்த்து வாங்கப்பட்டது. (ப: 39)
ஜனனியின் மாமாவீடு அருகில் தச்சநல்லூரில் தானிருந்தது. ஒரு நல்லநாள் பார்த்து
ஜனனியை அங்கு மாமாவும், மாமியும் அழைத்து சென்று, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி,
பொங்கல் சாதத்துடன் விருந்து வைத்து, புத்தாடை எடுத்துக் கொடுத்து கொண்டுவிட்டனர்.
(ப: 43) – ஒரு சமுதாய பழக்கத்தின் பதிவு.

“ஆம்பிளை, ஆம்பிளைன்னு சொல்லிண்டு இடி.. ” மற்றும் மூக்குபிழிதல்.[ப : 63]

மாத்துப் புடவையை அவிழ்த்துவிட்டு, புதுப்புடவையை கட்டிக்கொண்டு இரு ; தலையெல்லாம்
ஒழுங்காக ஒதுக்கிண்டு இருக்கணும். அத்தை வந்து ஆரத்தி எடுப்பா பெரியவாளை
நமஸ்காரம் பண்ணனும். ‘ [ப: 50 ]

கொஞ்சம் கவித்துவமான இடங்களும் கூட :

“மழித்த தலையை முக்காடிட்டு மறைத்து, நார் மடியை உடுத்து கடுமையான வைதவ்யம்
காத்துக் கொண்டுருப்பவர். … கை தன்னிச்சையாக தலை முட்டாக்கை சரிசெய்து கொண்டிருந்தது. ”

செழித்து அடர்த்தியாக வளர்ந்த கூந்தல் இடுப்புக்குக் கீழே இருபுறமும்
அசைய, மெதுவாக ஜனனி கூட்டத்துக்குள் நுழைந்தாள். (ப: 24 ) பெண்ணிய எழுத்தாள
வர்ணனைகள்.

அவன் அம்மாமேல் அவன் வைத்த அன்பு, பயம் எல்லாம் அவன் ஒவ்வொரு லெட்டரிலும்
பளிச்சிடும். ஜனனிக்கு அதைப் படிக்கும்போது அடி வயிற்றில் புளியைக் கரைக்கும்..
(ப: 39 ) சரியான சொல்லமைப்பு. மெல்லிய பயத்தின் தெளிவான வெளிப்பாடு.

மெல்லிய விளக்கொளியில் ரயிலின் குலுக்கல் தாலாட்டலில், ஜனனியின் ஜிமிக்கிகள் குலுங்க,
தலையில் வைக்கப்பட்டுள்ள பூப்பந்து ஆட, அவளே ஒரு கவிதையாக தூங்கிக்கொண்டிருந்தாள்.
முதல் நாள் முயக்கம் முடிந்தபின் தாபத்துடன் முத்தமிடல், இரண்டாம் நாள் தேன் குடித்த நரியானான். லேனாவாலா டன்னலின் இருட்டில் முத்தம் ‘ – நல்லகவிதையான இடங்கள்.

கோத்திரம் மாற்றப்பட்டு, தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டபொழுது தன்னையறியாமல்
சுந்தரேசன் விசும்பிவிட்டார். – இது அற உணர்வு, பழக்கப்பட்ட பாசமா, உடைத்தெறிய வேண்டிய
மூடபழக்கமா.. ஒரு ஆங்கிலேயே அப்பா இப்படி அழிவானா.. ஆம் என்றால் இது உலகளவிய உணர்வா..

விட்டுபோன சில நல்லதுளிகள் :
முதலிரவுக்கட்டிலில் நன்கு வாழ்ந்த பெரியவர்கள் அமர்ந்து எழுந்து போவார்கள் . அவர்களின் கண்கள் சொல்லும் வாழ்ந்த அமைதியை, காதலை. நல்லபடியாய் இந்த பேரின்பத்தை அநுபவிப்பாயாடா.. என அவர்களின் வாழ்த்தொலி கண்களின் வழியாய் பாயும்.

‘மாமியாரையும், மாமானரையும் நமஸ்கரித்து எழுந்த ஜனனியை அவர்கள் பார்த்த பார்வையில் பெருமை தெரிந்தது.’ ப: 51 ; அழகான உணர்வுகள் அளவான வார்த்தையில்.

தேஸ்பாண்டேயின் வீட்டில் தன் மகளை பாராட்டுகிறார்கள் ‘ நம்ம சாதியில என்ன வாழ்ந்தது. நம்ம சுதாவை மகாராணி
மாதிரி கொண்டாடறா.. கீதாவை அவாத்தில பாராட்டி ஏதாவது சொல்லியிருப்பாளா ‘ – உண்மையான சுயவிமர்சனத்தோடு
பார்க்க, யோசிக்கவேண்டிய வரிகள். வடக்கிந்தியர்கள் கொஞ்சம் விசாலமனப்பான்மை கொண்டவர்களோ ? … [ப : 82]

“அப்பா ! அவாளும் மராட்டி பிராமின் தானே.. ஹிந்துதானே.. ” [ப : 75] சுதாவின் வார்த்தைகள் தன் காதலை நிறுவிக்க.

சரியான அம்பு :

மராட்டிக்காரி இந்துபாயின் – மாஸியின்- மஸாஸ் குளியல் மற்றும் சமோசா வடிவ துணிச்சுற்றல். [ப : 83]

‘ராமச்சந்திரனின் ட்வின்ஸ் கேலிகள்’ – எழுதப்பட்டிருக்கவேண்டிய வசனம். [ப:91]

தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் குழந்தைகள் ஆரோக்கியமான சிந்தனைகளுடன் வளர்ந்துவந்தார்கள் . எவ்வளவு காலத்தேவையான வரிகள். ஆரோக்கியமான சிந்தனைகளை இந்த அவசர உலகத்தில் யார் கொடுக்கமுடியும். எல்லாகுழந்தைகளுக்கும் இந்த சாபம் ஏன் வரமாய் போகக்கூடாது. [ப : 94]

‘வீட்டில் குழந்தைகள் இந்தி பேசுவது குறித்து ஆதங்கம் ஜனனிக்கு ‘ – நமக்கும்தானே. என் பாரதி என்னோடு செல்லரித்து போவானோ ? தலைமுறை என்பது வெறும் கோத்திரம் மட்டுமா.. வெறும் டின்ஏ தொடர்ச்சிதானா..என் இலக்கியமில்லையா.. என் இத்தனை நூற்றாண்டுகால தொடர்ச்சியில்லையா..பதில்களில்லா கேள்விகள்.
[ப : 94]

‘அவர்களுக்கு என் தோலை செருப்பாக தைத்துபோட்டாலும் தகும் ‘ [ப: 108 ]

‘பெண்கள் எப்பொழுதும் கம்பீரமாக இருக்கவேண்டும். பெண் குழந்தைகளை நாம் நமது பாரம்பரியங்களைச் சொல்லிக்
கொடுத்துதான் வளர்க்க வேண்டும். .. முதலில் எந்த உறவையும் நாம் மதிக்கவேண்டும். அதுவே நமக்குப் பலமாயிருக்கும்.’
[ப:111]
துக்கம் நிகழ்ந்த வீட்டில் நாட்கள் பறக்குமாம். [ ப: 106 ]

மிகச்சாதரணமாய் தொடுக்கப்பட்ட பகுதிகள்:
நாவலின் சில வேகாத பருக்கைகள் :

1) காலக்குழப்பம்
பிள்ளை வீட்டார் அவர்களுடைய டூர் புரோக்ராம் எல்லாம் முடித்து விட்டு,
திருநெல்வேலியில் ஹோட்டல் ஆர்யாவில் தங்கியிருந்தனர் (ப: 24) – ஹோட்டல்
ஆர்யா அப்போது இருந்ததா என்ன?
மும்பை நாகர்கோவில் – ரயில் எப்போது விடப்பட்டது ?

2) அதீத ஆழம், குறி தப்பும் அம்பு
மாப்பிள்ளை பார்க்கும் படலம் உணவு தயாரிப்பு – (ப: 24 & 25) – அதீத சமையல்குறிப்பு.
சில விசயங்களில் குறிப்பாக சமையல், புடவை, சம்பிரதாயங்களில் ஆழச்செல்வது கொஞ்சம் போரடிக்கிறது.
சினிமா டைட்டிலில் சொல்லபோனால்.. “மாமி.. உங்கள் வர்ணனை அழகாயிருக்கிறது. ஆனால் பயமாவுமிருக்கிறது ”
எங்காவது, வெங்காய பஜ்ஜி போடுவது எப்படி, மைசூர் பாகை பதமாய் இறக்குவது எப்படி என்று சமையல் குறிப்பு
ஏதாவது ஒரு கதாபாத்திரம் சொல்லத்தொடங்கி விடுமோ என்று பயமாயிருக்கிறது. எழுத வந்தது நாவல் என்று
யாராவது இவருக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார், தனக்கு பிடித்ததை எழுதும்போது
எழுத்து பின்னுக்குபோய், புடவை, சமையல் ஞாபகம் வருவதை தவிர்த்தல் நலம்.

3) சில இடங்கள் இன்னும் நன்றாகவே கையாளப்பட்டிருக்கலாம்.

1) கல்யாணத்திற்கு முன்னான முத்தமிட்டு கேட்டானாம், கல்யாணம் வரை இது போறுமா..
தடையான எழுத்து.. இன்னும் லவாகமாய் புகுந்து விளையாடவேண்டிய இடமிது.

2) “அசட்டு பெண்ணே.. நேக்கு பேரனை பெத்து கொடுக்க போறேடி.. ” [ப : 61] மிக மோசமாக வசனம் எழுதப்பட்ட இடம். இது மறுபடியும் தாலி என்றால் என்ன என்று தெரியாத சின்னதம்பி பிரபுபோல ஜனனி கதாபாத்திரத்தை கொண்டுசெல்கிறது.

3) தேஸ்பாண்டே, வெங்கிடகிருஷ்ணனிடம் தங்கள் குழந்தையின் காதலைப்பற்றி சொல்கிறார். கொதிக்கிற பாலை இறக்கிவைக்கிற அவசரத்தில் எழுதப்பட்ட வரிகள். இன்னும் அழகாய் தயக்கங்களை, மெளனங்களை கையாண்டிருக்கலாம். [ப : 76]

4) ராமச்சந்திரனின் இறுதி யாத்திரையை அவனின் மண ஊர்வலத்தோடு ஒப்பிடுவது எழுத்தாளர் தமிழ் சினிமாவின்
ரிப்போட்டர் என்பதை ஞாபகப்படுத்துகிறது.

இந்த நாவலில் உள்ள பெண்ணே நீ யார். விமர்சனம் செய்வதற்கு எதுவுமில்லை. அடுத்தபதிப்பில் யோசிக்காமல்
கத்திரித்துவிடலாம்.

பம்பாய் என்றவுடன் பதிவு செய்யப்பட்ட தாராவியும், வேகமாய் ஓடும் மின்சாரவண்டியும், கொஞ்சூண்டு மாட்டுங்காவும்தான்
நினைவுக்கு வரும். அது 80களின் பதிவு. கடந்த இருபது வருடங்களின் மும்பாய் தமிழர்களின் வளர்ச்சியும், கலாச்சார
கலப்பும் அதிகமாக பதிவுசெய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. மும்பையின் தாராவி தமிழர்கள் மட்டுமின்றி பாலக்காட்டு
பிராமணர்களும் ஒரு அதீத கலவையை, கலரை கொடுப்பவர்கள். அவர்களைபற்றிய பதிவு மிகவும் குறைவாகவேயிருப்பதாய் எண்ணுகிறேன். [இந்த கதை அதை ஒரளவு செய்யமுயன்றிருக்கிறது. கலாச்சார கலப்பு இந்த நகரமயமாக்கலின் முக்கியமான ஒன்று. ஐயப்ப மலைக்கு மாலைபோடும் குஜராத்திகளின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரிக்கிறது. தமிழர்கள் மாட்டுங்காவை குஜராத்திகளுக்குவிட்டு விட்டு டோம்பிவிலி, போர்விலி போன்ற புறநகரங்களுக்கு புலம்பெயர்ந்து ஒரு இருபது ஆண்டுகளாகிறது. தாராவியும் இன்னும் கொஞ்சநாளில் பெரிய மாற்றத்தை சந்திக்குமென்கிறார்கள். மும்பாய் தமிழ் எழுத்து என்றால், தமிழ் மக்கள் மட்டும் எழுதப்படவேண்டும், வேறெந்த ஊர்களிலுமில்லாத உ.பி, பீகார் போன்ற மற்ற மாநிலத்து மக்களின் கலவையும் மும்பையின் நிறத்தில், குணத்தில், மணத்தில் நிறைய வித்தியாசங்களை விதைக்கிறது.
இன்னும் மும்பாயில் எழுத நிறையயிருக்கிறது.

முரளிதர் என்கிற ஒரு தமிழ் இளைஞரை சந்திக்க நேர்ந்தது. ஐஐஎம் பெங்களூர் படிப்பு, பெரிய பொருளாதார வேலைகளை விட்டுவிட்டு மும்பாயை பற்றிய ஒரு நூறாண்டு வரலாற்றின் புத்தகத்தை எழுதியிருக்கிறார். பென்குவின் அதை இந்த மாத இறுதியில் வெளியிட உத்தேசித்துள்ளது. ஆர்வமாய் எதிர்பாக்கிறேன். படித்துவிட்டு பகிர்ந்துகொள்கிறேன்.

கவிதை என்பது இருமணித்துளி சேமியா பாஸ்ட் புட், கட்டுரை என்பது காலை சிற்றுண்டி, சிறுகதை நன்றாய்
நயமாய் செய்யப்பட்ட மதிய உணவு, நாவல் என்பது தவம். ஊண் உடல் உருகி, மனது கரைந்து செய்யவேண்டிய
தவம். அதற்கான பிரயத்தனங்கள் கூட. இந்த நாவலாசிரியர் கல்யாண வீட்டில் சேமியா பரிமாறியிருக்கிறார்.
நன்றி !


Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி