சாம வேதமும் திராவிட வேதமும்

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

முனைவர் மு. பழனியப்பன்சமஸ்கிருத மொழியின் மூத்த இலக்கியமாகக் கருதத் தக்கவை வேதங்கள். அவை நான்கு. ரிக், யசூர், சாம அதர்வண என்ற இந்நான்கு வேதங்களும் இந்திய மொழிகள் அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தமி¢ழில் வேதம் தமிழ் செய்யும் முறைமை இருந்துள்ளது. நம்மாழ்வாரின் திருவாய்மொழி சாம வேதத்தின் கருத்துக்களை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. அதனால் வேதம் தமிழ் செய்தவராக நம்மாழ்வார் போற்றப்படுகிறார். சாம வேதத்தின் நுண்பொருளையும் திருவாய்மொழியையும் ஒப்பிட்டுக் காணும் பொழுது இக்கூற்று முற்றிலும் உண்மை உடையதாக, ஏற்கத் தக்கதாக உள்ளது.

சாம வேதம்
கீதையில் கண்ணன் ‘நான் வேதங்களில் சாம வேதமாக இருக்கிறேன்’ என்கிறார். அந்த அளவிற்குப் பெருமை வாய்ந்தது சாமவேதம். இவ்வேதம் இசையின் பிறப்பிடமாகக் கொள்ளத்தக்கது. இது இசையுடன் பாடத்தக்கது. தியானம்¢, வழிபாடு, பக்தி முதலானவை இறைவனை அடையச் சிறந்த வழிகள் என்பது இவ்வேதத்தின் அடிக்கருத்தாக விளங்குகிறது. வியாச முனிவரிடம் இவ்வேதத்தைக் கேட்டுப் பரப்பியவர் ஜைமிதி முனிவர் என்பர் ஆவார்.

இது மூன்று பிரிவுகளை உடையது. அவை 1. பூர்வ அர்ச்சிகா, 2. உத்தர அர்ச்சிகா, 3. மஹா நாமினி அர்ச்சிகா என்பனவாகும். இவற்றுள் இடம் பெறும் செய்யுள்களின் எண்ணிக்கை 1875 ஆகும். இவற்றுள் எழுபத்தைந்¢து செய்யுள்களே சாம வேதத்திற்கு உரியவை. மற்றையவை ரிக் வேதம் சார்ந்தவை என்ற கருத்தும் உண்டு.

திருவாய்மொழி
நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று கருதுவர். இவர் திருக்குருகூரில் பிறந்தவர். பதினாறு ஆண்டுகள் புளியமரத்துப் பொந்தில் இருந்து, பெருமாளைத் தியானம் செய்து பெருமாளின் அருளுக்குப் பாத்திரமானவர். இவரின் படைப்புகளான திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகிய நான்கு நூல்கள் நான்கு வேதங்களின் பிழிவாகக் கருதத் தக்கன. குறிப்பாக திருவாய்மொழி சாம வேத சாரமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்நூல் திராவிட வேத சாரம், செந்தமிழ் வேதம், ஆன்ற தமிழ் மறை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதனை பகவத் விஷயம் என்றும் பாராட்டுவர்.

இவ்வாறு வடமொழி சாம வேதத்திற்கும் தமி¢ழ் மொழி திருவாய்மொழிக்கம் நெருங்கிய தொடர்பு உள்ளதை அறியமுடிகிறது. இவை இரண்டையும் ஒப்பிட்டு இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு
தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கையே வேதங்கள் வலியுறுத்துகின்றன. தர்மம் என்பது ”மனிதனுக்கு உள்ள இயல்பு, அதன் அடிப்படையிலே உண்டான கடமை, தொழில், அதை ஆற்றும் முறை, அதற்கான விதி ஆகியவற்றை உள்ளடக்கியது” என வேதம் பொருள் கொள்கிறது. ”பொருள் என்பது அறவாழ்க்கையை நடத்தத் தேவையானது. பணம், துணை, நண்பர்கள், கருவிகள், சொத்து, புகழ், மனைவி போன்றன இவற்றுள் அடங்கும்” ”இன்பம் என்பது அப்படி வாழ்க்கையை நடத்தும்போது அனுபவிக்க விரும்புவது ஆகும்” ”வீடு என்பது வாழ்க்கையின் இறுதி இலட்சியம் ஆகும். அதை அடையச் செல்லும் பாதையில் வாழ்க்கைப் பயணம் நடக்க வேண்டும். அந்த நோக்கத்திலேயே அறம், பொருள், இ¢ன்பம் அனைத்தும் அமைய வேண்டும்.”

மேற்கண்ட நான்கு பொருள்களை அனைத்து வேதங்களும் சொன்னாலும், சாம வேதம் வீட்டின்பத்திற்கு முற்றிலும் வழி தரும் வேதமாகக் கருதப்படுகிறது. வீட்டின்பத்தை அடைய அது கடவுளை வணங்குவது, அவன் புகழ் பாடுவது, அவனை ஒருபொழுதும் மறவாமல் எண்ணுவது முதலான வழிகளைக் கூறுகிறது. இவ்வழிகளை அப்படியே திருவாய்மொழியில் காணமுடிகின்றது.

வீடுமின் முற்றவும்–வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை–வீடுசெய்ம்மினே.

மின்னின் நிலையில–மன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறை–உன்னுமின் நீரே.

நீர்நும தென்றிவை–வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அத–னேர்நிறை யில்லே.

இல்லது முள்ளதும்–அல்ல தவனுரு
எல்லையி லந்நலம்–புல்குபற் றற்றே.

அற்றது பற்றெனில்–உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்–அற்றிறை பற்றே.

பற்றில னீசனும்–முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்–முற்றி லடங்கே.

அடங்கெழில் சம்பத்து–அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி ல·தென்று–அடங்குக வுள்ளே.

உள்ள முரைசெயல்–உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை–யுள்ளிலொ டுங்கே.

ஒடுங்க அவன்கண்–ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை–விடும்பொழு தெண்ணே.

எண்பெருக் கந்நலத்து–ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்–திண்கழல் சேரே.

சேர்த்தடத் தென்குரு–கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து–ஓர்த்தவிப் பத்தே. (திருவாய்மொழி 2802 – 2812)

என்ற இப்பத்து வீடுபேறு அடைய வழி கூறும் பாசுரம் ஆகும். சாம வேதத்தின் அடிநாதமாக விளங்கும் வீட்டின்பத்தை இதனுள் விரித்துத் தொகுத்துத் தந்துள்ளார் நம்மாழ்வார்.

ஒரே கடவுள்
”தத் த்வமஸி” -”அந்த பிரும்மமாகவே நீ இருக்கிறாய்” என்று பொருள்படும் இந்தத் தத்துவத் தொடர்¢ வைணவர்களின் தலையாய கொள்கையாகும். காரண பிரும்மமாகவும் காரிய பிரும்மமாகவும் ஆண்டவனே இருப்பதால் அவன் ஒருவனே ஆவான் என்பது வேதம் கூறும் ஒரே கடவுள் கொள்கையாகும்.

அந்த ஒரே கடவுள் ஸ்ரீமத் நாராயணனே. இவனின் நாமத்தைச் சரியாக பூசை செய்பவன் இந்தப் பிறவியில் நீண்ட ஆயுளையும், மறுமை வாய்த்தால் நல்ல பலன்களையும் அடைகிறான் என சாமவேதம் கூறுகிறது. ”ஊழி முதல்வன் ஒருவனே (3857) ” என்று திருவாய்மொழி குறிப்பிடுகிறது.

இவ்வேதத்தின் இரண்டாவது பகுதி எட்டவாது பிரபாதகத்தில் இரண்டாவது அர்த்த பிரபாதகத்தில் ஐந்தாவது பகுதி வி¢ஷ்ணுவைத் துதி செய்கிறது.

1. விஷ்ணுவே உலகைப் படைத்து அதில் எங்கும் பரவியவர். பூ, புவர், ஸ¤வர் எனப்படும் மூவுலகங்களிலும் தமது சக்தியால் எல்லா உலகங்களையும் அவரே தாங்குகிறார். அவரே மூவுலகங்களையும் காத்து நிலைபெறச் செய்கிறார்.
2. விஷ்ணுவின் விசித்திரமான லீலைகளைக் காணுவாயாக. அதன்மூலம் எல்லாவகை அறிவும் உண்டாகும். இந்திரன் அடைந்ததைப்போல ஜீவன் எல்லா நன்மைகளையும் அடையும்.
3. சூரியன் பூமிக்கு ஔ¢ தருவதைப்போல ஞானிகள் விஷ்ணுவின் மேலான பரமபதத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர்.
4. உலக இயற்கை சக்திகளான தேவர்கள் நம்மை அவரிடம் அழைத்துப் போகட்டும்”

சாம வேதத்தின் உயர் கருத்துக்களான இவை விரிவாக நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அடங்கியுள்ளன.
முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே. என்னும்,
கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும் நான்முகக் கடவுளே. என்னும்,
வடிவுடை வானோர் தலைவனே. என்னும் வண்திரு வரங்கனே. என்னும்,
அடியடையாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.
-3473
என்ற பாடலில் முதல் செய்தியான மூவுலகாளும் செய்தி தரப்படுகிறது.

பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. -2813

என்ற பாடலில் கண்ணனின் வி¨ளாயட்டு¢ தெரிவிக்கப் படுகின்றது.

சொல்ல மாட்டேன் அடியேனுன் துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி றிரண்டு போலென் னுள்ளவா.,
அல்லல் என்னும் இருள்சேர்தற் குபாயம் என்னே?, ஆழிவழ்
மல்லல் ஞால முழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே. 3611

இப்பாடலில் சூரியன் போன்று என் உள்ளத்து இருப்பவன் என்ற உவமை கையாளப் பட்டுள்ளது. காணும் பொருளெல்லாம் கண்ணனாகக் கண்ட நம்மாழ்வாரின் ஞான உள்ளம் இதன்வழி தெரியவருகிறது.

சாம வேதத்தின் எட்டாவது பிரபாதகம் அர்த்த ப்ரபாதகம் ஒன்றில் நாலாவது பகுதியில் பின்வருமாறு பரமாத்வாகிய விஷ்ணு பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

1.விஷ்ணு, நீ சிபிவிஷ்டா என்றழைக்கப்பட்டாலும் உன்னுடைய இயற்கை வடிவத்தை மறைக்க வேண்டாம். தியானிக்கும் பக்தனின் நன்மை கருதி இதனைச் செய்வாயாக.

2. விஷ்ணு நீ சாத்வீகமானவர். உனது படைத்துக் காத்து அருளும் வல்லமையை தகுதியுள்ள பக்தன் நன்கு அறிவான். நான் ஞானமற்றவன். ஆதலால் நான் அறிய இயலாது.

3. வஷட் என்று கூறி உன்னை நாங்கள் தொழுகிறோம். எங்கள் போற்றுதல் மொழிகளை ஏற்று எங்களைக் காத்தருள்வீர்.

இக்கருத்துகளும் திருவாய்மொழியில் உள்ளன.

அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,
அவனே யதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. -3696

என்று படைத்துக் காக்கும் வல்லமை சுட்டப்படுகிறது. மேலும்

என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,
நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,
குன்றெழ் பாரேழ் வழ்கடல் ஞாலம் முழுவேழும்,
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே

என்று பக்தர்களை கரையேற்றும் வன்மை வினவப்படுகிறது.

இவ்வாறு சாமவேதத்தின் உயிர்ப்பகுதியான பரம்பொருள், திருமால், வீட்டின்பம் ஆகிய பகுதிகளின் விரிவாக திருவாய்மொழி விளங்குகிறது.

ஆனால் சாம வேதத்தின் எஞ்சிய பகுதிகள் இங்கு விளக்கம் பெறவில்லை என்பது இங்குக் காணத்தக்கது. நம்மாழ்வார் முழுமையான வைணவர், அவர் காணும் பொருளில் எல்லாம் கண்ணனைக் கண்டவர், குன்றும் அவருக்குக் கண்ணன், வானமும் அவருக்குக் கண்ணன் என்ற நிலையில் அவர் இருந்தமையால் அவரால் மற்ற பகுதிகளை இதனுள் கொண்டு பாட இயலவில்¢லை. இதனைத்தாண்டி அவர் திராவிட வேதம் இயற்றியவர் என்ற கருத்து இங்கு ஏற்கத் தக்கதே.

முடிவுகள்
1. நம்மாழ்வார் திராவிட வேதம் தந்தவர் என்ற கருத்து ஏற்கத்தக்கது.
2. இவர் சாம வேதத்தில்¢ விஷ்ணுவைப் பற்றிக் குறிப்பிடப்படும் பகுதிகள் திருவாய்மொழியில் கூறப்படும்¢ விஷ்ணு பற்றிய கருத்துகளோடு ஒன்றுபடத் தக்கன.
3. வீட்டின்பம் பற்றிய சாம வேத செய்திகளும் திருவாய்மொழியோட ஒத்துப் போவனவாக உள்ளன.
4. திருவாய்மொழியின் அனைத்துப் பாடல்களுமே சாமவேதம் கூறும் விஷ்ணுவுன் இயல்பினைக் குறிப்பனவே.
குறிப்புகள்


Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்