சாத்தான் சொல்லும் வேதங்கள்

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

ஸ்ரீனி.


1)

பெண்மை – மனித இனத்தின்

திருக்கருவூலம்.

பிரம்மா இல்லையேல் சிவா, விஷ்ணு

இரண்டும் வெறும் பெயர்களாக

இருந்திருக்கும்

தோன்றுதல் – விதி

தோற்றுவித்தல் – பெண்தன்மை.

உணர்வோம்,

உறுதுணையாய் நிற்போம்.

2)

பிளந்தால் பேரழிவை

உண்டாக்கும் சின்னஞ்சிறிய

அணு – உலகில், அது அதுவாகக்

காரணமானது.

ஒன்றோடு ஒன்று புணரத்துடிக்கும்

இரு மாறுபட்ட உறுப்புக்களை

கொண்டது.

இரண்டில் ஒன்று குறைந்தாலும்

மிஞ்சுவது ஏதுமில்லை.

வாழ்வு – அணு.

உறுப்புக்கள் – ஆண், பெண்.

சமத்துவம் இல்லையேல்

சாத்தியம் ஏதும் இல்லை.

3)

வாழ வந்திருக்கிறோம்

இட ஒதுக்கீடு கொடுக்க

நமக்கு உரிமை இல்லை

இருக்கும் வரையில் இன்பமாய்

இருந்து பின்

இட நெருக்கடி எற்படுகையில்

இறப்பை பற்றி

நினைப்போம்.

4)

உள்சென்ற மூச்சுக்காற்று

வெடுக்கென வெளியேறும்.

உயிர்நாடி ஆயினும்,

உள்ளேயே நிறுத்த வழி இல்லை.

என் காற்று என ஏதுமில்லை

தேவை தீர்ந்தும் தேக்கி வைப்பதில்லை

நாம்.

வேண்டும் பொருட்களில் மட்டும்

வித்தியாசம் எதற்கு ?

தேவை எனில் தேடிப்பெறுவோம்

தேக்கி வைக்கும் பழக்கத்தை

தவிர்ப்போம்.

5)

புலப்படாத ஒன்றை ஆயுதமாய் கொண்டு

ஒருவரை ஒருவர் உடைத்துக்கொள்ளும்

இந்த மடமையை நிறுத்துவோம்.

வளர்ப்பில் வேற்றுமை

சூழ்நிலையில் வேற்றுமை

இன்னும் பல இருப்பினும்

‘வலி ‘ ஒன்றே.

‘மதம் ‘ பிடித்து அலையும்

மனிதர்களே,

இனியேனும் மனதை விட்டு

மதியினை பின்பற்றுங்கள்.

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி