சாதனைகள் பலதைத் தனதாக்கிக் கொண்ட சைவமங்கையாின் நவரச மேளா

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

கலை பண்பாட்டு அக்கறையாளர்


கடந்த சனி, ஞாயிறு 11-03-2006இ 12-03-2006 ஆகிய தினங்களில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நவரச மேளா என்ற நிகழ்வு இடம்பெற்றது. இதனை வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. முற்றுமுழுதாக எம்நாட்டுக் கலைஞர்களின் படைப்பாக நிகழ்வை அமைத்தது பாராட்டிற்குாிய விடயம்.

காலகாலமாக குஷ்புவுக்கும் ரேவதிக்கும் குடைபிடித்து அவர்களின் கூந்தல் மணங்களில் மயங்கிக் கிடந்தவர்கள் விழித்தெழுந்து சொந்தத் தோட்டத்துப்பூக்களை நுகர முற்பட்டமை ஒரு நல்ல அறிகுறியே. உள்நாட்டுக் கலைஞர்களின் நிகழ்வென்றாலே அனுசரணையாளர்கள் கையைவிாித்து விடுவார்கள். அதேபோல் நுழைவுச்சீட்டு விற்பனையும் மிகவும் மந்தமாகவே இருக்கும். இந்த இரண்டு சவால்களையும் வெற்றிகரமாக முறியடித்து ஏராளமான அனுசரணையாளர்களைக் கவர்ந்தும் ஆசிாிய அடிமைகளையும் மாணவர்களையும் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுக்களை ஏராளமாக விற்றும் (பெரும்பாலும் முழுவதும்) நிகழ்வை நேர்த்தியாக ஒழுங்கமைத்து நடாத்தி முடித்தமை முதலாவது சாதனையாகும். நான்கு நடன ஆசியர்களின் இயக்கங்களில் உருவான நடன நிகழ்வுகளும் ஒரு அழகுக் கலைநிபுணாின் அழகியல் காட்சி (Fashion Show) யும் இடம்பெற்றன. 06 மணிக்கு சில நிமிடங்கள் பின்பு தொடங்கிய நிகழ்வுகள் முடிவு வரை விறுவிறுப்பாக நகர்ந்தது. விறுவிறுப்புக்கான காரணங்கள் பல பலப்பல….

நிகழ்வில் ஏராளமான புதுமைகளும் பழைமை உடைப்புக்களும் சேர்க்கப்பட்டிருந்தன. நன்றியுரை உண்மையில் ஆச்சாியப்பட வைத்த ஒரு புதுமை. மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நவீன தொழில்நுட்பப் பிரயோகத்தின் ஊடாக தெளிவான வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டமை பாராட்டுக்குாியதும் ஒரு சாதனையும் ஆகும். ‘நவரச மேளா” மேளா என்றால் என்ன ? இது தமிழா ? அல்லது வேற்று மொழியா ? இதுபற்றி ஆராயும் அறிவு எனக்கில்லை என்பதால் அதை விட்டுவிடுவோம். நடன ஆசிாியர்கள் எல்லோரும் கூட்டாக ஒரு மிகப் பெரும் கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது ஈழத்தமிழர்களுக்கென்று எந்தவிதமான பாரம்பாிய நடனங்களோ கலை, பண்பாடோ இல்லை என்றும் ஈழத்தில் கிராமங்களே இல்லை என்றும் அதனால்தான் தாம் வங்காள, கேரள, ஆந்திர, ராஜஸ்தானிய இன்னும் பல இந்திய, மேற்கத்திய நடனங்களை வடிவமைத்தோம் என்றும் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். இதனையும் நாம் ஒரு சாதனையாகக் கொள்ளலாம். மிக ஆரோக்கியமான நடன ஆசிாியர்கள் என்று கருதப்பட்டவர்கள்கூட கடைசியில் சினிமா குலுக்கல் நடன இயக்குநர் கலாவின் கால்களைக் கண்களில் ஒத்தி நடனங்களை அமைத்திருந்தமை, பணம், பாிசு, பொன்னாடைக்கு முன்னே நாம் எதையும் இழக்கத் தயார் (கலை, பண்பாடு, புனிதம்…. மண்ணாங்கட்டி….) எனத் துணிந்திருப்பது தமிழர் சமூகம் புதுமைகள் செய்யப் புறப்பட்டு விட்டது என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறது, வாழ்த்துக்கள்!. ‘வடுமாங்காயின்” ருசியை நன்கு அனுபவித்திருப்பார்கள் போலும் ஆசிாியைகள். அதனால்தான் ‘தயிர்சாதத்தை” தயார்படுத்தக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் குழந்தைகளை எதற்குத் தயார்படுத்துகிறார்களோ என்பதுதான் பூியாமல் இருக்கிறது. ‘வடுமாங்காய்”, ‘தீ…. தித்திக்கும் தீ’ பாடல்கள் மிக ஆவலைத் தூண்டும், கிறங்க வைக்கும் அற்புதமான ஆபாசப் பாடல்கள். அவற்றிற்கும் எங்கள் மழலைகளை நன்றாக ஆடவும், அசைக்கவும் வைத்துள்ளார்கள். இலங்கையில் பாடசாலை மட்டத்தில் எந்தவொரு பெளத்த, கிறிஸ்தவ பாடசாலைகள்கூட இற்றைவரை செய்வதற்குத் துணிந்திராத விடயத்தை சைவத்தை வெறியாகவும், தமிழை குறியாகவும் கொண்டு இயங்கும் ஒரு பெண்கள் பாடசாலை செய்து முடித்துள்ளது என்பதில் சைவத் தமிழர்களாகிய நாங்கள் மிகவும் பெருமைப்படுவதோடு இதுவும் ஒரு பாடசாலை மட்டச் சாதனை எனவும் கொள்ளப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற் போல் இடம்பெற்ற அழகியல் காட்சி (Fashion Show) கூட ஒரு பாடசாலை மட்டச் சாதனையாக உள்ளது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இதுவரை இலங்கையில் எந்தப் பாடசாலையும் தங்கள் மாணவியரைக் கொண்டு இத்தகையதொரு நிகழ்வை நிகழ்த்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பாடசாலைக் காலத்தில் தம் வயதொத்த பெண் பிள்ளைகளின் முதுகு, இடை, தொப்புள் முதலியவற்றைக் காணும் சந்தர்ப்பம் எந்த பாடசாலைப் பையனுக்கும் கிடைப்பதில்லை என்ற குறையை மேடையில் சிறப்பாகத் தீர்த்துவைத்தார் அழகுக் கலை நிபுணர். கடந்த வருடம் இந்திய நடிகை குஷ்புவையும் அவரது ஆடல் அழகிகள் குழுவையும் அழைத்து சைவ மங்கையரோடு சேர்ந்து நிகழ்வுகளை நடாத்தி, பின்னர் அந்த அழகிகளை வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தியதாக இணையத் தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. அந்த நிபுணாிடம் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தமைதான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

ஒட்டுமொத்தமாக நடன நிகழ்வுகளும் சாி, அழகியல் காட்சிகளும் (Fashion Show) சாி விசிலடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பலத்த கரகோசத்தையும் விசிலடியையும் பெற்றுக்கொண்ட ஒரு பாடசாலை மட்ட நிகழ்வாக இந்நவரச மேளா சாதனை படைத்துள்ளது என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவற்றிற்கெல்லாம் முழுக்கமுழுக்கப் பொறுப்பாக இருந்து பல்வேறு ஒத்திகைகளைப் பார்த்து ஒப்புதலும் ஊக்கமும் கொடுத்த கழகத்தலைவி, கல்லூாி அதிபர், பழைய மாணவர் சங்க செயல்திறனாளர்கள் எல்லோருக்கும் தமிழ் ரசிகர்களாகிய நாங்கள் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தொிவித்துக் கொள்ளவேண்டிய கடமைக்கு உட்பட்டுள்ளோம்.

அந்நிய, இந்தியப் பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்களினது கைக்கூலிகளாக செயற்படுபவர்களை சாியாக இனங்காண உதவிய ஒரு நிகழ்வாக இதை நாம் கொள்ளலாம். தமிழர் தாயகக் கோட்பாடு வலுப்பெற்று வரும் இந்நிலையில் இத்தகைய பண்பாட்டு அழிவுகளை வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் ஊடாக செயற்படுத்த முயலும் இத்தகைய ஈழத்தமிழர் விரோதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக எங்கள் கலை, பண்பாட்டில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக தமிழீழ கலை பண்பாட்டுக் கழகத்தினரும் விழிப்பாக இருத்தல் அவசியமாகிறது. இல்லையேல் எங்கள் நாளைய சந்ததி கலை, பண்பாடு இல்லாத அம்மணச் சந்ததியாக நிற்க நோிடும் என்பது கவலைக்குாிய உண்மையாகும்.

கலை பண்பாட்டு அக்கறையாளர்

—-

abilashat@yahoo.com

Series Navigation

கலை பண்பாட்டு அக்கறையாளர்

கலை பண்பாட்டு அக்கறையாளர்