சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

சத்தி சக்திதாசன்


நன்றாய்ப் பார்த்துவிடு உன்
நாட்டை ஒருதரம் நன்றாய்ப் பார்த்துவிடு !

அடுக்கிக் கொண்டே போன
அடுக்கு மாளிகைகள் அதனோடு
குறுகிக் கொண்டே போன
குடிசையின் வடிவங்கள்
நாட்டை ஒருதரம்
நன்றாய்ப் பார்த்துவிடு !

பணம் கொடுத்து வாங்கும்
பாட்டில் தண்ணீரில் கையலம்பும் கூட்டம்
குடிக்கத் தண்ணிரின்றி திண்டாடும் தோழன்
குட்டையைச் சுரண்டும் ஒரு காட்சி
நாட்டை ஒருதரம்
நன்றாய்ப் பார்த்துவிடு !

நிலத்தைப் பயிராக்கி
நாட்டு மக்கள்
வயிற்றை நிறைவாக்கி
நாட்டின் உயிர் மூச்சாய்
நாளெல்லாம் உழைக்கும் அவன்
சீரான வாழ்க்கைக்கு படும்
சிக்கல்களை சீர்தூக்கிப்பார்
நாட்டை ஒருதரம்
நன்றாய்ப் பார்த்துவிடு !

அடிமைத் தளையை
அறுத்தெடுக்க தம் வாழ்வை
அர்ப்பணித்த தியாகிகளின்
அடுத்த தலைமுறையின்
எதிர்காலம் நன்றாக
ஏதாவது செய்தவர் எத்தனைபேர் ?
நாட்டை ஒருதரம்
நன்றாய்ப் பார்த்துவிடு !

சரித்திரங்கள் எம்நாட்டில்
சகாப்தங்கள் தான்
சம்பிரதாயங்கள் எம்நாட்டில்
சாராமாரி தான்
யாதார்த்தத்தின் விலையறியா
யாபாரிகளின் நடமாட்டம்
நாட்டிலே கூடிவிட்டதே
தோழரே !
நன்றாய் ஒருதரம்
நாட்டைத் திரும்பிப்பாரும்

0000

ஏடெடுத்தேன்

சத்தி சக்திதாசன்

ஏடுதான் நானெடுத்தது எழுத்துத்தான் எனக்குக் கிடைத்தது
ஏனென்று கேட்காதீர் விடையறியா மூடன் நான்

நாடுதான் என் கனவு நாளைதான் என் பயணங்கள்
நியாயங்களை விளக்க என்னிடம் ஏனோ வாதங்களில்லை

வீடுதான் என் கோவில் குடும்பம் தான் என் தெய்வம்
வீசியெறிந்தும் கூட வாழ்வின் திசையறியா குருடன் நான்

சூடுதான் நான் பட்டது ஞானம் தான் நான் பெற்றது
சோறு போடுமா எனக் கேட்காதீர் ஏட்டுச்சுரைக்காய் நான்

கேடுதான் எண்ணாது பாடுதான் நான் பட்டது ஏனோ
கேட்டவரின் கண்களில் கண்ணீர் அல்ல கனவுகளே வந்தது

காடுதான் நாம் போவது கடைசிதான் நிரந்தரமானது
கண்களைத் திறந்து நான் பார்த்தபோது பாதை முடிந்தது.

0000

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்