சங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

சு.பசுபதி, கனடா“ அண்ணா, வணக்கம்” தொலைபேசியில் ஒலித்தது ‘கஞ்சிரா’ கதிரின் குரல். “ நான் நடத்தும் சங்கீத சபாவில் ஆண்டுக்கொரு இசை விருதை இந்த வருடம் முதல் கொடுப்பதாகத் தீர்மானித்திருக்கிறோம் . பட்டத்திற்குப் புதிதாக, தகுந்த ஒரு பெயரை நீங்கள் தான் சொல்லவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டான் கதிர்.

“ மிகவும் மகிழ்ச்சி, கதிர். நிச்சயம் சொல்கிறேன். ‘பொருநர் ஆற்றுப்படை’ என்ற சங்க நூலில் ஓர் அழகான சொற்றொடர் இருக்கிறது. இசை விருதுக்கு மிகவும் பொருத்தமானது. சரியான சபாவிற்கு இதைப் பரிந்துரைக்க வேண்டும் என்று இத்தனை நாள் காத்திருந்தேன். இப்போது நீயே கேட்கிறாய். பழம் நழுவிப் பாலில் விழுந்தது! ” என்றேன். “ ஆகா! உடனே சொல்லுங்கள், அண்ணா ! எழுதிக் கொள்கிறேன்” என்றான் கதிர்.

“ அவசரப் படேல்! என்னைத் தான் தெரியுமே உனக்கு! நீ வீட்டிற்கு வா. அந்த சங்க நூலைப் பற்றி முதலில் உனக்கு ஓர் அறிமுகம் கொடுக்கிறேன். காபி சாப்பிடலாம்; பிறகு அந்த பட்டம் என்ன என்று சொல்கிறேன்” என்றேன்.

“ ஓ… அப்படியா… அங்கே நேரில் வரணுமா ” என்று இழுத்தான் கதிர். ‘கஞ்சிரா’வின் சுருதி ஒரு கட்டை கீழே போயிருந்தது.

“ என்ன… தயங்கறே? ‘பொருநர்’ என்றால் யார் தெரியுமா? இசைக் கருவிகள் வாசிப்பவர்கள். இந்த நூலில் வருபவன், தடாரி என்ற வாத்தியத்தை வாசிப்பவன். தடாரி ஒரு பறை, உடுக்கு போன்ற … ஏன், நீ வாசிக்கும் கஞ்சிரா போல் … ஒரு வாத்தியம் என்று வைத்துக் கொள்ளேன். உன்னைப் போன்றவர்கள் அந்த நூலை நிச்சயம் படிக்கத் தான் வேண்டும். நீ வரவில்லை என்றால் , அடுத்த முறை உன்னைப் பார்க்கும் போது உன் முதுகில் நாலு ‘ததிங்கணத்தோம்’ வைப்பேன் ” என்று அதட்டினேன்.

அரை மனசோ, முழு மனசோ தெரியாது. இரவில் கதிர் என் வீட்டிற்கு வந்தான். அவனுக்குச் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன், சரியா?

பொருநர் ஆற்றுப்படை பத்துப்பாட்டில் இரண்டாவது நூல். தடாரியை வாசித்துக் கரிகாற் பெருவளத்தானாகிய சோழ மன்னனிடம் நிறையப் பொருள் பெற்ற ஒரு பொருநன் , எதிரில் வந்த மற்றொரு பொருநனைப் பார்த்து, அவனையும் அரசனிடம் சென்று, தன் வறுமையைப் போக்கிக் கொள்ள ‘ஆற்றுப்படுத்தும்’ ( வழிப்படுத்தும்) வகையில் அமைந்த பாடல் தான் 248 அடிகள் கொண்ட இந்த நூல். பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர். இவர் பெண்ணாக இருக்கலாம், என்று கருதுகிறார்கள் அறிஞர்கள்.( தாமம் – தலையில் சூடும் ஒரு வகை மாலை; ஆர் – என்பது பெருமையைக் காட்டும் விகுதி; கண்ணி – இயற்பெயர்; முடமாக இருந்திருக்கிறார்; ) கரிகாலன் இவருக்குத் தாம மாலை சூட்டிச் சிறப்பித்ததால் இந்தப் பெயர் என்பர். யாழ், விறலிகள், கரிகாலனின் உபசார வகை, பொருநன் முன்னே இருந்த நிலை, பின்னர் அடைந்த நிலை, சோழ நாட்டுச் சிறப்பு முதலியவற்றை அழகுறப் பாடுகிறார் புலவர்.

ஆரம்பம் பாருங்கள்!

“அறாஅ யாணர் அகந்தலைப் பேரூர்.”

தொடர்ந்து புதுப்பணம் வந்துகொண்டேயிருக்கும் அவ்வளவு பெரிய ஊர். அங்கே ஒரு திருவிழா. விழாவிற்கு வரும் பொருநர் போன்றவர்கள் வயிறு புடைக்க உணவு உண்ணலாம்.

“சாறுகழி வழிநாள் சோறுநசை உறாது
வேறுபுலம் முன்னிய விரகறி பொருந! ”

சாறுகழி வழி நாள் — விழா முடிந்த மறுநாள் , சோறு நசை உறாது — (விழா முடிந்து போன பின்பும்) அங்கேயே இருந்து, சோற்றை வாங்கி உண்டு கொண்டிருக்க ஆசை இல்லாமல், வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந! — வேறு இடம் போவதற்கு உபாயம்(விரகு) அறிந்துள்ள பொருந!
ஆர்வமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த கதிர் உடனே நிமிர்ந்து உட்கார்ந்தான். “அடடா! ” கதிரின் உற்சாகம் கரை புரண்டோடியது. “ அண்ணா, புலவருக்கு என்ன தூர திருஷ்டி! சங்கீதம் தெரியாவிட்டாலும், இங்கிதம் தெரியணும் என்று எவ்வளவு நயமாகச் சொல்கிறார்! எனக்கே தெரியுமே, இந்த ரகத்தில் பல பேரை ! நல்ல விருந்து, தீனி போடும் வீடுகளில் கல்யாணம், கார்த்திகை என்றால் உடனே மூட்டை, முடிச்சுமாய்ப் போய்ப் பல நாள்கள் ‘டேரா’ போட்டுவிடுவார்கள்! நாளைக்கே நம் வீட்டிற்கு யாராவது, ‘வேண்டா விருந்தாளிகள்’ வந்தால், அவர்களை, நைச்சியமாக, “சோறுநசை உறாது வேறுபுலம் முன்னிய விரகறி நண்பா!” என்று கூப்பிட்டு, இடத்தைக் காலி பண்ணச் சொல்லலாம் போலிருக்கிறதே! அதுவும், தொடக்கத்திலேயே எச்சரித்து விடுகிறார்! நம்ப ‘கடம்’ கபாலி அடிக்கடி சொல்வான்: டேய், கதிர், ஒரு ரசிகர் வீட்டிற்குப் போனால், சும்மா கோந்து ஒட்டினாப் போல அங்கேயே குந்திக்கக் கூடாதுடா! சாப்பிட்ட உடனே கிளம்பு! ‘சாவு கிராக்கி’ மாதிரி நடந்துக்காதே” என்பான். அவன் இன்னிக்கும் சொல்வதை இந்தப் புலவர் அன்னிக்கே சொல்லிட்டாரே! அண்ணா, இந்த நூலைப் பற்றிக் கேட்க முதலில் நான் தயங்கினதற்காக நீங்கள் என்னை மன்னிக்கணும். நூல் ஒரு பொக்கிஷம் போலிருக்கிறது ! மேலே சொல்லுங்கள் ”

“ கதிர், நூல் முழுதும் பலசுவைகள் பொங்குகின்றன. நான் எதைச் சொல்வது? எதை விடுவது? இதோ ஓரிரண்டு! ”

* முதலில் ஒரு துணுக்குத் தகவல். உன் ‘ஜில்பா’வைப் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. கத்தரிக்கோல் சங்க காலத்தில் இருந்ததா? உண்டு என்கிறார் புலவர். அதற்கு ‘மயிர்குறை கருவி’ என்று பெயர்! ”

“ கரிகாலன் அரண்மனையில் கள்ளை ஊற்றி, ஊற்றித் தர , பொருநரும் குடித்துக் கொண்டே இருந்தாராம். அந்த அனுபவம் எப்படி இருந்ததாம்? ‘தவசிகள் போல் மரணத்திற்குப் பின் மோட்சம் அடையாமல், உடம்புடனேயே நாங்கள் மோட்சத்தை அடைந்தது போல இருந்தது ‘ என்கிறார் புலவர். ”

கதிர் இடை மறித்தான். “ இந்த அனுபவத்திற்குக் கள் குடிக்கக் கூட வேண்டாம், அண்ணா! ..சனிக்கிழமை காலை எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு, நல்ல ‘மசால் தோசை’ நாலு வெட்டிவிட்டு, படுக்கையில் பிற்பகலில் படுத்தால்… ஆகா! அந்த நித்ரா தேவியின் அரவணைப்பு இருக்கிறதே! ஐயோ! ”

நான் தொடர்ந்தேன் . “ சாப்பிட்டு, சாப்பிட்டுப் பொருநனின் பற்கள் எப்படி ஆனதாம்? புன்செய் நிலத்தை உழக்கூடிய கலப்பையின் முனை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்ந்து விடுமோ, அப்படி ஆகிவிட்டதாம்! ”

“ என் சிறுவயது நண்பன் ஒருவனுக்கு ஓர் ஆசை. சொல்லிக் கொண்டே இருப்பான். “டேய்! எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் மூவரையும் சேர்ந்து ஒரே மேடையில் பார்க்கணும்டா ” என்பான். அதேமாதிரி, மூவேந்தரையும் ஒரே இடத்தில் பார்க்கப் புலவருக்கும் ஆசை இருந்ததோ என்னவோ? ஆட்டம், பாட்டு, கொட்டு மூன்றும் சேர்ந்து ஒலித்தது மூவேந்தரும் ஒன்று சேர்ந்தது போலிருந்ததாம். ”

“ நாம் இப்போதும் , நம் வீட்டு விருந்தினர்க்கு வாசல் வரை கூடச் சென்று வழி அனுப்புவது வழக்கம்தானே. இது பழங் கால வழக்கம் என்கிறார் புலவர். பொருநரின் ஏழிசைக்கும் மரியாதை செலுத்துவது போல், அரசன் பொருநரின் பின்னே ஏழடி நடந்து வழி அனுப்புவானாம். ”

“ அண்ணா, நூலில் சங்கீதம் பற்றி வேறு ஏதேனும் குறிப்புகள் உண்டா? ” என்று கேட்டான் கதிர்.

“ ஓர் இடத்தில்

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க
[ மண் – மிருதங்கத்தின் ‘வலந்தரையில்’ பூசிய மண் ; முழவு – மிருதங்கம் , பாணி – தாளம் ]

என்கிறார். மிருதங்கத்தின் ஒரு பக்கம் தடவப்படும் கருஞ்சாந்து போன்ற பொருளை ‘மார்ச்சனை’ என்பர். பழங்காலத்தில் ஒரு வகை மண்ணை மார்ச்சனையாகப் பயன்படுத்தினர். அந்த மண் பூசப்பட்ட மிருதங்கத்தின் தாளத்திற்கேற்ப , அதனோடு ஒத்திசைக்கும் சிறுயாழ் உடைய விறலியர் ஆடுவர் என்கிறார் புலவர்.

இன்னொரு இடத்தில் , ‘இருசீர்ப் பாணிக்கு’ ஏற்ப ஒரு பாட்டைப் பாடினேன் என்கிறான் பொருநன். அதாவது, இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப !

கதிரின் கண்கள் விரிந்தன“ அண்ணா, இது அதிசயமாக இருக்கிறதே! இரட்டைத் தாளம் என்றால்…. ஒரு வேளை, இரண்டு கைகளில் இரு வேறு தாளங்கள் போட்டுக் கொண்டே பாடுவதைச் சொல்கிறாரோ? இது எளிதில்லையே! சில ‘பெரிசுகள்’ இம்மாதிரி இரண்டு தாளம் போட்டுப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அந்தக் காலத்திலேயே இந்த வழக்கம் இருந்தது போல் இருக்கிறதே? ” என்றான் கதிர். “ சரி, அண்ணா, எனக்கு நேரம் ஆகிவிட்டது. இசை விருதுக்கு ஏற்ற ஒரு பட்டம் இந்த நூலில் வருகிறது என்றீர்களே , அதைச் சொல்லுங்கள்! ”என்று கேட்டான்.

“ ஓ, மறந்தே விட்டேனே…. ஓரிடத்தில் பொருநன் மற்ற பொருநனைப் பார்த்து,

ஏழின் கிழவ!

என்கிறான். அதாவது, ‘ஏழு சுரங்களுக்கும் உரிமை உடையவனே!’ என்று அழைக்கிறான். கிழவன் என்றால் பழங்காலத்தில் ‘உரிமையுடையவன்’ என்றுதான் பொருள். ‘சோலைமலை கிழவனுக்கு அரகரோகரா’ என்று முருக பக்தர்கள் கோஷம் எழுப்புவதை நீ கேட்டிருப்பாயே? பிறகுதான் , ‘கிழவன்’ என்றால் ‘முதியவன்’ என்ற பொருள் பிறந்தது. அதனால், உன் சபையில் , ஆண்டுக்கொரு முறை ஓர் இசை விற்பன்னருக்கு , ‘ ஏழின் கிழவன் ’ என்றோ, பெண்மணியானால், ‘ஏழின் கிழத்தி’ என்றோ ஒரு பட்டம் கொடுக்கலாம் . புதிதான பெயர், அமர்க்களமாக இருக்கும் ” என்றேன்.

கதிர் ‘தடா’லென்று எழுந்து நின்று, என்னை முறை, முறை என்று முறைத்துப் பார்த்துவிட்டு, ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அவசரமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் போகிற வேகத்தில், அவன் பின்னால் ‘ஏழடி’ சென்று வழி அனுப்பக் கூட எனக்கு நேரமில்லை.

என்ன முணுமுணுத்திருப்பான் கதிர் என்று யோசித்துக் கொண்டே நான் தூங்கப் போனேன்.

~*~o0O0o~*~

pas_jaya at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா