சங்ககால விளம்பரக் கருவிகள்

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,
E.Mail. sethumalar68 yahoo.com
விளம்பரங்கள் பொருள்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளன. கடையில் விற்கப்படும் பொருள்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு விற்பனையகங்களின் முன்பு பொருள்கள் குறித்த விளம்பரப் பெயர்ப் பலகைகள் வைப்பர். அதனைப் பார்த்து மக்கள் தமக்குத் தேவையான பொருள் எங்கு உள்ளதோ அங்கு சென்று வாங்குவர். பொருள்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கு இவ்விளம்பரப் பெயர்ப்பலகைகள் பயன்படுகின்றன. இவ்விளம்பரப் பலகைகள் தொன்றுதொட்டு பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்க காலத்தில் வணிகத்தில் உயர்ந்த நிலையை அடைந்திருந்த தமிழர்கள் இடையிலும் விளம்பரங்களைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தமை நோக்கத்தக்கது. பொருள்களைக் குறித்த விபரங்களைத் தெரிவிப்பதற்காகவும், வெவ்வேறிடங்களில் நடக்கும் விழாக்கள், ஒருவருடைய வெற்றிகள் ஆகியவற்றை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விளம்பரப் பலகைகளுக்குப் பதிலாகக் கொடிகளைப் பயன்படுத்தினர். பத்துப்பாட்டிலக்கியங்களான மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை ஆகியவற்றில் இவ்விளம்பரங்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
கொடிகளின்அடையாளத்தைக் கொண்டே பல இடங்களையும், நிகழ்ச்சிகளையும் பண்டைக் காலத்தில் மக்கள் தெரிந்து கொண்டனர். தற்போது கொடிகளுக்குப் பதில் விளம்பரப் பலகைகளை நாம் பயன்படுத்துகிற்றோம். அக்காலத்தில் இதற்குப் பதிலாக்க் கொடிகளையே பயன்படுத்தி வந்தனர்.
கொடிகள்
பண்டைக் காலத்தில் கொடிகளை விளம்பரக் கருவிகளாக்க் கொண்டிருந்தனர். மதுரைக்காஞ்சியில் விழாக்கொடி, வெற்றிக்கொடி, வியாபாரக் கொடி எனப் பலவகையான கொடிகள் மதுரை மாநகரில் பறந்து கொண்டிருந்தன.
கோவிலில் ஏற்றப்பட்ட கொடிகள்
மலர் அணிந்த கோயில் வாசலிலே வாசலிலே பலரும் தொழும்படி தெய்வத்தை ஆவாகனம் செய்து கொடி ஏற்றப்பட்டிருந்ததை,
“மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர்தொழு கொடியும்“
(பட்டினப்பாலை159-160)
எனப் பட்டினப்பாலை எடுத்துரைக்கிறது. இத்தகைய கொடிகள் எப்பொழுதும் கோயிலில் கட்டப்பட்டு பறந்துகொண்டிருக்கும். இவை கோவில்கள் உள்ளஇடங்களைப் பற்றி பிறர் தெரிந்து கொள்வதற்காக ஏற்றப்பட்ட கொடிகளாகும்.
திருவிழாவைப் பற்றிய கொடிகள்
கோவில்களில் விழா தொடங்கியவுடன் கொடியேற்றப்படும். கொடியேற்றினால் கோவிலில் இறைவனுக்கு விழா எடுத்துக் கொண்டாடப் போகிறார்கள் என்று பிறர் அறிந்து கொள்வார்கள். இங்ஙனம் பிறர் அறிந்து கொள்வதற்காகவே விளம்பரத்திற்காக இத்தகைய கொடிகளை விளம்பரக் கருவிகளாகப் பயன்படுத்தினர். இதனை,
‘‘சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி“ (மதுரைக் காஞ்சி366)
என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
திருவிழாக்களைத் தெரிவிப்பதற்காக அரிசிப் பலியிட்டு வணங்கி, நீண்ட மரச் சட்டங்களில் கொடியைக் கட்டி உயரத்திலே பறக்கும்படி நாட்டியிருக்கின்றனர். அவை வெள்ளைத் துணியாலான கொடிகள் ஆகும். திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட இக்கொடிகள் கரும்பு பூத்தது போன்று நெருக்கமாகக் காணப்பட்டதை,
“வருபுனல் தந்த வெண்மணல் கான்யாற்று
உருகெழு கரும்பின் ஒண்பூப்போலக்
கூழுடைக் கொடு மஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வால் அரிசிப் பலிசிதறிப்
பாகு உகுத்த பசு மெழுக்கில்
காழ் ஊன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற் கொடியும்“ (பட்டினப்பாலை 161-168)
என்று பட்டினப்பாலை நவில்கிறது.
வெற்றியை அறிவித்த கொடிகள்
அரசனுடைய தளபதிகள் அவன் ஆணையைப் பெற்றுச் சென்று அரசனுக்கு அடங்காதவர்களுடன் போர் செய்கின்றனர். போரில் பகைவர்களை வென்று அவர்களது கோட்டைகளைப் பிடிக்கின்றனர். அவ்வாறு கோட்டையைப் பிடித்தபின்னர் அவ்வெற்றியைப் பிறர் அறியக் காட்டுவதற்காகப் பல கொடிகளைப் பறக்கவிடுகின்றனர்.
மேலும் அரசன் கடல்போன்ற தனது படையுடன் சென்று பகைவர்களின் யானைப்படைகளை விரட்டி- வெற்றி பெறுகின்றனர். இவ்வெற்றிக்கு அடையாளமாகக் கொடிகளைப் பறக்கவிடுகின்றனர். இக்கொடிகள் பறப்பதை,
“வேறுபல் பெயர் ஆரெயில் கொளக்கொள
நாள் தோறெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர் ஒலித்தன்ன நிலவுவேல் தானையொடு
புலவுப் படக்கொன்று மிடைதோல் ஓட்டிப்
புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி“ (367-371)
என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
விற்பனையகங்களில் ஏற்றப்பட்ட கொடிகள்
மீனையும்,இறைச்சியையும் துண்டுகளாக்கி அவற்றை நெய்யிலே பொரிக்கின்ற ஓசை நிறைந்த முற்றம். இந்த முற்றத்திலே பலரும் புகும்படியான வாசற்படியில் மணலைக் குவித்து மலரைச் சிந்தி கள்விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிவிக்கும் கொடியைக் கட்டியிருக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினத்தில் காணப்பட்ட இக்காட்சியை,
“மீன் தடிந்து விடக்குஅறுத்து
ஊன் பொரிக்கும் ஒலிமுன்றின்
மணல்குவைஇ மலர் சிதறிப்
பலர் புகுமனைப் பலிப்புதவின்
நறவுக்கொடைக் கொடியோடு“(பட்டினப்பாலை, 176-180)
எனப் பட்டினப்பாலை விவரிக்கிறது. மதுரைகயில் உயர்ந்த மதுபானம் கிடைக்கும் இடத்தை அறிவிக்கும் கொடி பறந்து கொண்டிருந்த்தை,
“கள்ளின் களிநவில் கொடியொடு“ ( மதுரைக் காஞ்சி, 372)
என மதுரைக்காஞ்சி புலப்படுத்துகிறது.
பட்டி மன்றங்களில் ஏற்றப்பட்ட கொடிகள்
கல்விக் கேள்விகளில் வல்லவர்கள் முன்னையோர் முறையினின்றும் வழுவாதவர்கள், நல்ல ஆசிரியர்கள். நாங்கள் எதையும் விவாதிக்க வல்லவர்கள். உண்மையை நிலைநாட்டப் பின்வாங்க மாட்டோம். எவரும் எங்களுடன் வழக்கிடலாம் என்பதைத் தெரிவிக்க கொடிகளை நாட்டியிருக்கின்றனர். இது அறிஞர்கள் சபைக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் கொடியாகும்.
இத்தகைய கொடிகள் பட்டிமன்றங்களில் பறந்துகொண்டிருப்பதை,
“பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித்து எடுத்த உருகெழு கொடியும்“
(பட்டினப்பாலை, 169 -171)
என கடியலூர்உருத்திரங் கண்ணனார் காட்சிப்படுத்துகின்றார்.
கப்பல்களில் கட்டப்பட்டிருந்த கொடிகள்
காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் பல கப்பல்கள் நங்கூ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை கட்டுத்தறியை அசைக்கின்ற யானைகளைப் போன்று காட்சியளிக்கின்றன. அக்கப்பல்களின் பாய் மரங்களின் மேல் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன என்பதை,
“வெளில் இளக்கும் களிறுபோலத்
தீம்புகார்த் திரை முன்துறை
தாங்கு நாவாய்த் துவன்றிருக்கை
மிசைக் கூம்பின் அசைக் கொடியும்“ (பட்டினப்பாலை, 172 -175)
என பட்டினப்பாலை எடுத்துரைக்கிறது.
பலகொடிகளின் தோற்றம்
மதுரை மாநகரில் விளம்பரக் கொடிகள் பல பறந்து கொண்டிருக்கின்றன. இக்கொடிகள் பற்நது கொண்டிருக்கும் தோற்றம் பெரிய மலையிலிருந்து வீழும் அருவி நீரைப்போன்று காணப்படுவதை,
“பல்வேறு குழூஉக்கொடிப் பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க“
(மதுரைக்காஞ்சி, 373-374)
என மாங்குடி மருதனார் புலப்படுத்துகிறார்.
காவிரிப்பூம் பட்டினத்திலும் இவ்வாறு பல்வேறு கொடிகளும் கலந்து காணப்படுகின்றன. அவைகள் பல்வேறு வடிவங்களாக அமைந்தவை. சூரியனுடைய கதிரும் நகரத்தில் நுழைய முடியாதவாறு அக்கொடிகள் நெருங்கியிருந்து நிழல் செய்து கொண்டிருக்கின்றன. இத்தகு காட்சியை,
“பிறபிறவும் நனி விரைஇப்
பல்வேறு உருவின் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின்“
(பட்டினப்பாலை 181 -183)
எனப் பட்டினப்பாலையின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
மதுரை காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இருநகரங்களின் வணிகம் மற்றும் பிற சிறப்புக்களை கொடிகளை வைத்துப் புலவர்கள் எடுத்துக்காட்டியிருப்பது சிறப்பிற்குரியதாகும். காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் சிறப்பினை, “செழுநகர்“ எனும் சொல் மூலம் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார். கொடிகள் பண்டைக் காலத்தில் விளம்பரக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டமையை இவ்விரு பத்துப்பாட்டு நூல்கள் வாயிலாக அறியலாம்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.