சக்கர வியூகம்

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

சோ.சுப்புராஜ்


நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு போய் விட்டது. அப்போது அவர் இரவு உடையாக பழுப்பெறிய நான்கு முழ வேஷ்டியும் ஒரு முண்டா பனியனும் மட்டுமே அணிந்திருந்தார். மாற்று உடை அணிந்து கொள்ளக் கூட போலீஸ் அவரை அனுமதிக்கவில்லை. அவரின் படபடப்பு விலகுவதற்குள்ளாகவே அரெஸ்ட் வாரண்ட்டைக் காட்டி அவசரப் படுத்தினார்கள்.
ஆதிராமனின் மனைவி முருகேஸ்வரிக்குத் தூக்கக் கலக்கம் கலைவதற்குள்ளாகவே அவள் புருஷனை போலீஸ் அள்ளிக் கொண்டு போய்விட்டது.பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களின் பையனுக்கே விடிந்து எழுந்த பின்பு தான் விஷயமே தெரிந்தது. ஆனால் அதிகாலைப் பத்திரிக்கைகள் எல்லாம் ஆதிராமனின் கைது பற்றிய செய்திகளை அனல் பறக்கும் தலைப்புகளில் சுடச்சுட அலறின.

அணுவியல் விஞ்ஞானி ஆதிராமன் பொடாசட்டத்தின் கீழ்க் கைது;
தேசத்துரோகக் குற்றச்சாட்டு

செய்தியை வாசித்த முருகேஸ்வரிக்கும் அவளுடைய மகனுக்கும் என்ன நடக்கிறதென்றே எதுவும் புரிய வில்லை. அரசின் பாதுகாப்பு ரகசியங்களை ஆதிராமன் அயல் நாடுகளுக்கு விற்றுவிட்டதாக அவரின் மீது குற்றஞ் சாட்டப் பட்டிருந்தது. முருகேஸ்வரியும் அவளுடைய மகனும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு ஓடிப்போய் விசாரிக்கவும், இரவோடிரவாக தலைநகரக் காவல் நிலையத்திற்கு ஆதிராமன் கொண்டு செல்லப் பட்டதாக தகவல் சொல்லப்பட்டது.
ஒரு வக்கீலின் உதவியோடு காவல் நிலையத்தை அணுகுவதுதான் சரியாக இருக்குமென்று புரிந்தாலும் அவர்களுக்கு வக்கீல் யாரையும் தெரிந்திருக்க வில்லை. கிராமத்து மனிதர்கள். அதிகம் பேருடன் பரிச்சயமில்லாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கம்பெனி குடியிருப்பில் ஆதிராமனுடன் வேலை பார்க்கும் சக விஞ்ஞானிகள் மட்டும் தான். ஆனால் அவர்களும் இவர்களுக்கு உதவத் தயாராய் இல்லை என்பதுதான் இதில் பெரிய சோகம்.
நேற்றுவரைப் பிரியமாய்ப் பழகியவர்களும் பத்திரிக்கைச் செய்தியைப் படித்ததும் விரோதமாய்ப் பார்த்தார்கள். இரக்கம் சுரக்கும் சில ஈர நெஞ்சுக்காரர்களும் எங்கே ஆதிராமனுக்கு உதவப் போய் தங்களையும் சந்தேகப்பட்டு, தேசத் துரோகச் சதியில் சம்பந்தப் படுத்தி விடுவார்களோ என்று பயந்து ‘நமக்கேன் வம்பு’ என்று நல்ல பிள்ளைகளாய் ஒதுங்கிக் கொண்டார்கள்.
முட்டிமோதி ஒரு வழியாய் முருகேஸ்வரி அவளுடைய மகனுடைய கல்லூரி நண்பனின் உதவியுடன் ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குப் போய் விசாரித்தால், பொடா என்றும் தேசியப் பாதுகாப்பு என்றும் பெரிய பெரிய சட்ட வார்த்தைகளைப் பேசி போலீஸ் பயமுறுத்த, இவர்கள் அழைத்துப் போன கத்துக்குட்டி வக்கீல் மிரண்டு போய் விட்டார். ஜாமீனில் கூட விடமுடியாது என்று போலீஸ் வம்படியாய் மறுத்து விட தங்களின் விதியை நொந்தபடி வீடுவந்து சேர்ந்தார்கள். இருவருக்கும் பிழியப் பிழிய அழ மட்டுமே முடிந்தது. அழுவதையும் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டு மட்டுமே செய்தார்கள். தெருவில் இறங்கினால் எதிர்ப்படுபவர்களின் முகங்களில் கசியும் ஏளனமும் பரிதாபமும் ரொம்பவே வதைத்தது. உற்றமும் சுற்றமும் இவர்களைக் குற்றவாளிகளாய் நோக்க வீட்டையே சிறையாகப் பாவித்து ஒடுங்கிப் போனார்கள்.
காவல் துறையின் பெரிய அதிகாரிகள் ஐந்து பேர் ஆதிராமனைச் சூழ்ந்து கொண்டு முதலில் கேள்விகளால் வறுத்தெடுத்தார்கள். என்ன உங்கள் திட்டம்? இன்னும் யாரெல்லாம் இந்தச் சதியில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்? எத்தனை இலட்சம் டாலர் உங்களுக்குக் கிடைத்தது? ஸுவிஸ் பாங்க் ரகசிய கணக்கு எண் என்ன? ஆதிராமனைச் சுற்றிலும் கேள்விகளே பாம்புகளாய்ச் சீறிக் கொண்டிருந்தன. அவருக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. பதிலற்ற கேள்விகளின் நெடியில் அவர் பெரிதும் மூச்சுத் திணறினார்.
‘நான் அந்த ரகமில்லை நண்பர்களே! சம்பளக் கவரை அப்படியே மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நானுண்டு என் ஆராய்ச்சியுண்டு என்று இயங்குபவன்; என் குடும்பத்துடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அவர்களை வெளியில் அழைத்துப் போய் சுற்றிக் காண்பித்ததில்லை. அதிகம் படிப்பறிவில்லாத மனைவி கூட அவளாகவே தான் இந்த டெல்லிக் குளிரையையும் வெயிலையும் ஹிந்தியையும் சமாளிக்கப் பழகிக் கொண்டாள். அதில் ஒரு துளிகூட நான் அவளுக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை; உதவியாய் இருக்கவும் இல்லை.
எனக்கும் நிறையக் கனவுகள் உண்டு. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் சத்தியமாய் சம்பாதிப்பதிலும் சொத்து சேர்ப்பதிலும் இல்லை; அணுவியலில் புதிது புதிதாய் சாதிப்பதிலும் நம் மூளை பலத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தி அவர்களை ஆச்சிர்யமூட்டுவதிலும் தான். அந்த முயற்சியில் தான் என் நேரங்களை எல்லாம் செலவிட்டுக் கொண்டிருந்தேன். புரிந்து கொள்ளுங்கள் என் போலீஸ் நண்பர்களே!’ என்று மனசுக்குள் முனங்கியபடி பலகீனமான மௌனத்தால் போலீஸை எதிகொண்டார் ஆதிராமன்.
“ஒரு விஞ்ஞானி ஆச்சேன்னு மரியாதை கொடுத்து விசாரிச்சா, நீ மசியறதாய்த் தெரியலயே! இனிதான் நீ போலீசோட நிஜமுகத்தைப் பார்க்கப் போற…..” என்றபடி ஒரு அதிகாரி ஆதிராமனின் அந்தரங்க உறுப்பை நோக்கி தன் பூட்ஸ்காலை வீச, மற்றவர்களும் மிருகத் தனமாய்த் தாக்கத் தொடங்கினர். போலீஸின் வழக்கமான சித்ரவதைகளில் ஆதிராமன் துடித்துப் போனார்.
துடிக்கத் துடிக்க நகக்கண்களில் ஊசி ஏற்றினார்கள். எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தார்கள். ஐஸ் படுக்கையில் படுக்க வைத்து அலற அலற ஆசனவாயில் லத்தியை நுழைத்தார்கள். தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு கதறக் கதற அடித்து நொறுக்கினார்கள். வலி தாளாமல் ஆதிராமன் மயக்கமானால், தெளிந்ததும் மீண்டும் மூன்றாம் தர விசாரணை முறைகளைத் தொடர்ந்தார்கள்.
ஆறுமாதங்கள் இப்படியே இடை விடாமல் தொடர்ந்தார்கள். வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு வெவ்வேறு வார்த்தைகளில் திருப்பித் திருப்பிக் கேட்டதையே கேட்டடர்கள். ஆளாளுக்கு அடித்து துவம்சம் செய்தார்கள். வெளிநாட்டுக் காரர்களுக்கு ஆதிராமன் விற்றதாய் ஒரு வரைபடத்தின் நகலையும் அதன் விளக்கமான கம்யூட்டர் சி.டி.யையும் காட்டினார்கள். விற்றதற்கு ஆதாரமாய் சக விஞ்ஞானிகள் மூன்றுபேர் கூட்டாக ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார்கள்.
தன்னை வேண்டுமென்றே சிக்கவைக்க ஏதேதோ வியூகம் வகுக்கப்பட்டு தானும் தன்னை அறியாமலேயே அதற்குள் அகப்பட்டுக் கொண்ட மர்மம் ஆதிராமனுக்கு மெதுவாய்ப் புரியத் தொடங்கியது. ஏன் இதெல்லாம்? யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? நானுண்டு; என் வேலை யுண்டு என்று யாரிடமும் அதிகம் ஒட்டாமலிருந்தது பெரிய பிசகா? ஆதிராமனுக்குத் துக்கம் பொங்கியது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்கிற சிறு கிராமத்தில் தொடங்கியது ஆதிராமனின் பால்யம். அவனின் அப்பாவின் வாழ்க்கையும் கால்களும் பனைமரத்துடன் பிணைக்கப் பட்டிருந்தன. பனை ஏறுதலும் பனைப் பொருட்களைத் தயாரித்து விற்பதும் அவர்களின் தொழிலாய் இருந்தது. ஆதிராமனுக்கு படிப்பு இளநொங்காய் இனித்தது. கள்ளாய்ப் போதையூட்டியது. பனை வெல்லமாய் அடி நாக்கையும் தாண்டி இதயம் வரை தித்திதது. பனை ஏறுகிற குடும்பத்திலிருந்து ஒரு விஞ்ஞானி உருவானது என்பது இயற்கை நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களில் ஒன்று. அதற்கான விதை அவருடைய பதின்மூன்றாம் வயதில் அவருக்குள் விழுந்தது. அன்றைக்கு இரத்தினசாமி வாத்தியார் அணுவைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும்; எப்படி பாடங்களை மாணவர்களின் மூளைக்குள் நேரிடையாக விதைப்பது என்கிற சூட்சுமம்.
பாடம் தொடங்குவதற்கு முன் அவர் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆளுக்கொரு சிறு சாக்பீஸ் துண்டைக் கொடுத்து சிறு துகளாக உடைக்கச் சொன்னார். யார் இருப்பதிலேயே சிறிய துகளாக உடைத்துத் தருகிறார்களோ அவனுக்கு மூன்று முழு கலர் சாக்பீஸ்கள் பரிசு என்று அறிவித்தார். மற்றவர்கள் சிறிதும் பெரிதுமாய் உடைத்து ஆசிரியரிடம் காண்பிக்க ஆதிராமன் ஒரு புள்ளி அளவிலான துகளை பேப்பரில் வைத்து நீட்டினான். ஆதிராமனுக்குத் தான் பரிசு கிடைத்தது.
அப்புறம் இரத்தினசாமி ஆசிரியர் பாடத்திற்குள் புகுந்தார்.”இப்ப ஆதிராமன் உடைத்துக் கொடுத்ததையும் கூட இன்னும் பல லட்சம் துகள்களாக உடைக்க முடியும். கண்ணுக்கே புலப்படாத சக்திவாய்ந்த மைக்ரோஸ் கோப்புகளின் மூலம் மட்டுமே பார்க்க முடிகிற மிக நுண்ணிய துகள் தான் அணுவென்பது. இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு பொருளும் கோடானுகோடி அணுக்களால் தான் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அவற்றைப் பிணைத்து வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்றதும் அதைக் கடவுள்னு புரிஞ்சுக்கிடாதீங்க; அதன் பேர் எலக்ட்ரான்…..”
ஆசிரியர் பாடத்தைத் தொடர்ந்தார். ஆதிராமனுக்கு அணுவின் மீது ஈடுபாடும் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்கிற தீவிரமும் ஏற்பட்டது. தேடித் தேடிப் படித்தான். நியூக்ளியர் சயின்ஸில் பட்டமேற்படிப்பு வரைப் படித்துவிட்டு வேலை இல்லாமல் அல்லாடினான். வயிற்றுப் பாட்டுக்கே போதாத சம்பளத்தில் ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராகக் கொஞ்சநாள் அவஸ்தைப் பட்டான். அப்புறம் தான் யூப்பிஎஸ்ஸி தேர்வெழுதி இளம் விஞ்ஞானியாக அந்த ஆராய்ச்சிக் கேந்திரத்துக்குள் அடியெடுத்து வைத்தான்.
விஞ்ஞானிக்குரிய எந்தப் பந்தாவும், வரவழைக்கப் பட்ட செயற்கையான மேதா விலாசமும் இல்லாமல் எளிமையான கிராமத்து மனிதனாய் இயல்பான பயத்துடன் முதல்நாள் அவன் வேலைக்குப் போனபோது, சக விஞ்ஞானிகள் பலரும் பரிகாசமாய்ப் பார்த்தார்கள்.
“ரிஸர்வேஷன் கோட்டாவுல வந்துருப்பான்; அரேபாபா, ஆராய்ச்சியில கூடவா ரிஸர்வரேஷன்?” இளக்காரமாய் முதுகுக்குப் பின்னால் சிரித்தார்கள். கேலியில் கிலியாகி தேம்பி அழுதவனை ஆராய்ச்சிக் கேந்திரத்தின் டீன் தேற்றினார்.
“இவர்களெல்லாம் சருகுகள்; சத்தம் போடத்தான் செய்வார்கள். இவர்களுக்கெல்லாம் ஆராய்ச்சி என்பது கனமான புத்தகங்களிலிருந்து காப்பி அடித்து கான்பிரன்ஸ்களில் கட்டுரை வாசித்து காலத்தை ஓட்டுவது. புதிதாய் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்! ஆனால் நீ தளிர்; கிளை விரித்துப் படறப் போகிறவன். இந்த வெட்டி ஆசாமிகளை எல்லாம் உதறிவிட்டு அடுத்தகட்டத்துக்குப் போகிற வழிகளைப்பார்….”
அணுவியல் பற்றிய ஆராய்ச்சிகள் ஒரு சுழல் மாதிரி ஆதிராமனை உள்ளிழுத்துக் கொண்டன. உயரதிகாரி கொடுத்த உற்சாகத்தில் ஊக்கம் பெற்று கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டு திகு திகுவென்று எல்லோரையும் எரித்துக் கொண்டு ஒளிர்ந்தான்.பேரும் புகழும் பதவி உயர்வுகளும் படிப் படியாய் வந்து சேர்ந்தன.
“அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்துல நியூக்ளியர் பிஷ்ஷன் சம்பந்தமான ஒரு ஃபெல்லோஷிப்புக்கு அரசாங்கமே உன்னை அனுப்பத் தீர்மானிச்சுருக்கு; இது மிகப்பெரிய கௌரவம். மறுக்காமப் போயிட்டு வா மேன்; அநேகமா அடுத்த உதவி டீன் நீ தான்….” தலைமை விஞ்ஞானி ஆதிராமனுக்கு கை கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஃபெல்லோஷிப் முடிந்து விடைபெறுகிற தினத்தில் ஆராய்ச்சிமையத்தின் தலைவர் ஃபிரடெரிக் ஜோன்ஸ் ஆதிராமனைத் தன் கேபினுக்கு அழைத்து அவர் அங்கு சமர்ப்பித்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரைபற்றி வெகுநேரம் சிலாகித்துப் பேசினார்.
“மிஸ்டர் ஆதி, நீங்கள் ஏன் எங்கள் நாட்டிலேயே தங்கிவிடக் கூடாது? இங்கு உங்களால் இன்னும் சிறப்பாகப் பிரகாசிக்க முடியும். இந்தியாவில் இப்போது நிங்கள் சம்பாதிப்பதைப்போல் இருபது மடங்கு சம்பாத்தியம்; உங்கள் பையனுக்கு இங்கேயே ஒரு உயர்தரமான கல்வி… இன்னும் என்னென்ன வேண்டும் கேளுங்கள்; எல்லாம் ஏற்பாடு செய்கிறேன்; உங்களை மாதிரி விஞ்ஞானிகளுக்கெல்லாம் இங்குதான் சிறப்பான மரியாதைகளும் வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும்; சரியென்று சொல்லுங்கள்….”
“உங்களின் அன்பிற்கும் அழைப்பிற்கும் ரொம்பவும் நன்றி ஜோன்ஸ்; ஆனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் ஆஃபரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது… அரசாங்கச் செலவில் இங்கு கற்றுக்கொள்ள வந்தவன் நான்; இங்கு அறிந்து கொண்டதை அங்குபோய் இன்னும் மேம்பட்ட தரத்தில் அமல் படுத்திப் பார்க்க வேண்டும் ….ப்ளீஸ் என்னை விட்டு விடுங்கள்…” ஆதிராமன் ஒரு புன்னகையுடன் மறுத்தார்.
“சொன்னால் புரிந்து கொள்ளுங்கள் ஆதிராமன்; உங்களின் அறிவையும் உழைப்பையும் இந்தியா மாதிரியான ஒரு ஏழை வெப்பப் பிரதேசத்தில் போய் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள்….! இந்த நாட்டுக்கு கற்றுக் கொள்ள வந்தவர்கள் எல்லோருமே இங்கு தங்கி விடுவது தான் வாடிக்கை; உங்களின் அரசாங்கம் உங்களை எதுவும் செய்துவிட முடியாது; இங்கு தங்க மறுத்து வெளியேறும் முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கும்…” செல்லக் கோபத்துடன் சீண்டினார் ஜோன்ஸ்.
“என்ன செய்வது ஜோன்ஸ்? நீங்கள் குறிப்பிடும் ஏழை வெப்ப பிரதேசத்தில் தானே என்னுடைய வேர்கள் விரவிக் கிடக்கின்றன. அவற்றை பிடுங்கிக் கொண்டு வருவது எனக்கு சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை; மேலும் என்னை உருவாக்கி விட்ட தேசத்திற்குத் தான் என்னுடைய அறிவும் உழைப்பும் பயன்பட வேண்டுமென்கிற பிடிவாதமும் உண்டு எனக்கு. வருகிறேன் நண்பரே!” ஜோன்ஸின் முகம் ஜிவு ஜிவுவென இரத்தச் சிவப்பாவதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஆதிராமன் கைகுலுக்கி விடைபெற்றார்.
அப்படி ஏன் ஓடி வர வேண்டும்? இங்கு வந்து என்ன சாதித்தோம்! தேசத் துரோகி என்கிற பட்டம் தான் கிடைத்தது! பொதுக் கழிப்பிடத்தை விடவும் மோசமான மூத்திர மலவாடை அடிக்கும் லாக்கப் ரூம்களில் அடைபட்டு அடிபட்டதுதான் மிச்சம்….. பேசாமல் ஜோன்ஸ் கொடுத்த வேலையை ஒத்துக் கொண்டு அங்கேயே சுகமாய் வாழ்ந்திருக்கலாம் என்று முதல் முறையாய் மனம் புழுங்கினார் ஆதிராமன்.
ஆட்சிமாறி பொடா சட்டம் விலக்கிக் கொண்டபோதும் ஆதிராமன் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியேற முடியவில்லை. ஆனால் ஜாமின் கிடைத்தது. வீட்டிற்குப்போய் மனைவியையும் மகனையும் பார்த்தவருக்கு இதயம் வெடித்து விடும் போலாகி விட்டது.இருவரும் துரும்பாய் இளைத்து அரை ஆளாய்க் கிடந்தார்கள்.முருகேஸ்வரி புருஷனைக் கட்டிக் கொண்டு வெடித்து அழுதாள். பையன் அனல் கக்கும் பார்வையால் ஆதிராமனை உலுக்கினான்.
“ஏம்ப்பா இப்படி பண்ணுன! உன்னைப் பத்தி எவ்வளவு உயர்வா நெனைச்சுக்கிட்டிருந்தேன் நான்; ஒரே ராத்திரியில எல்லாத்தையும் போட்டு ஒடச்சுட்டியேப்பா… என்னால காலேஸுக்குப் போக முடியல; அம்மாவால மார்க்கெட்டுக்குப் போக முடியல; கிராமத்துலருந்து வந்த நம்ம சொந்த பந்த மெல்லாம் காறித் துப்பிட்டுப் போயிட்டாங்க. ஆறுதலுக்குக் கூட ஆள் இல்லாம அனாதையா இந்த பட்டணத்துல அலையிறது எவ்வளவு கொடுமை தெரியுமா? உனக் கென்ன நீ பாட்டுக்கு ஜெயிலுக்குள்ள போயி ஹாய்யா உட்காந்துக்கிட்ட …..
“ஏன்ப்பா இதெல்லாம்… எனக்குத் துட்டுச் சேர்த்து வைக்கவா? ‘கல்விதான் நம்மள மாதிரி ஆட்களுக்கு ஒரே சொத்து; அதால கவனமாப் படின்னு’ எனக்கு அடிக்கடி அட்வைஸ் பண்ணீட்டு நீ புத்திய அலைய விட்டுட்டியேப்பா….!”முகத்தை மூடிக்கொண்டு அவன் குமுறி அழுதது ஆதிராமனைக் குலை நடுங்கச் செய்தது.காவல் நிலையங்களில் அவர் அனுபவித்த சித்ரவதைகளையும் விடக் கொடுமையானதாக இருந்தது அது.
“நான் ஒண்ணுமே பண்ணலைடா…. எப்படியோ பொய்யும் புரட்டுமா ஜோடிச்சு என்னை மாட்டி விட்டுட்டாங்கடா கண்ணு; என்னை நம்புடா…” அவனைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டு பலவீனமாய் முனங்கினார் ஆதிராமன். ஆனால் மாரிமுத்து அவரிடமிருந்து திமிறிக் கொண்டு, தமிழ், ஆங்கில மற்றும் ஹிந்திப் பத்திரிக்கைகளை அள்ளிக் கொண்டு வந்து அவருக்கு முன்னால் பரப்பினான். எல்லாவற்றிலும் ஆதிராமனே டாபிக்கல் செய்தியாக இருந்தார். அவர் செய்தது மிகப்பெரிய தேசத் துரோகம் என்று விலாவாரியான ஆதாரங்களுடன் பரபரப்பான செய்தி கட்டுரைகள் வெளியிடப் பட்டிருந்தன.
“இதெல்லாம் பொய்யாப்பா? ஏன் ஒட்டு மொத்தமா எல்லோரும் உனக்கெதிரா பொய் சொல்லனும்? உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலப்பா….” ஒரு தந்தை தானே தன் மகனுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட அவலம் எந்த தகப்பனுக்கும் வர வேண்டாம்; இவனைக் காப்பாற்றுவதற்காக வேனும் தன்னைக் குற்றமற்றவரென்று நிரூபிக்கிற வெறி கிளம்பியது ஆதிராமனுக்கு.
ஒருவழியாய் அவரின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதிராமனை பொடா சட்டத்தின் பிடியிலிருந்து ஆறாண்டுகளுக்கப்புறம் நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் அரசு இயந்திரத்தைக் கடுமையாக சாடி இருந்தார். ஒரு அப்பாவி விஞ்ஞானியின் மீது கொஞ்சமும் பொறுப்பில்லாமல், அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல், சட்ட ஷரத்துகளின் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட பொய்வழக்கு என்று. மேலும் இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகளையும் காவல் துறையினரையும் அவர்களின் துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி கடுமையாகத் தண்டிக்கவும் பரிந்துரை செய்திருந்தார் அவர்
தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடித்ததும் ஆதிராமன் செத்துப் போகவும் தயாராய் இருந்தார். தான் நிரபராதி என்று இந்த சமூகத்திற்கு நிரூபிக்கத்தானே இத்தனை நாட்கள் அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தார். ஆனாலும் ஆதிராமனின் குடும்ப வாழ்க்கை அவரின் தீர்ப்பு நாளுக்கெல்லாம் காத்திருக்காமல் ஏற்கெனவே இருண்டு போகத் தொடங்கி இருந்தது.
நீதிமன்றம் ஆதிராமனைக் குற்றமற்றவரென்று விடுதலை செய்து, என்ன புண்ணியம்? காலத்தின் கைமீறி என்னென்னவோ நடந்து விட்டதே! ஒரே செல்ல மகன் மனநிலை பிசகி, அப்பாவைத் தூக்கில் போடுங்கள் என்று பேதலித்த புத்தியுடன் பிதற்றிக் கொண்டு வீதிகளில் அலைந்தான். மகனின் பரிதாப நிலையைக் காண சகிக்காமல் முருகேஸ்வரி எப்போதோ தற்கொலை செய்து கொண்டு செத்துப் போயிருந்தாள்.
ஆதிராமன் உடல், மனம் எல்லாம் சோர்ந்து போய் வீட்டிலிருந்தபோது, அந்தப் பெண் அவரை அணுகினாள். துரு துருவென்று அலைபாயும் கண்கள் அவளுக்கு. பத்திரிக்கை அல்லது டீ.வி.யின் நிருபராக இருப்பாள் என்று நினைத்துச் சத்தம் போட்டார்.
“எத்தனை தரம் சொன்னாலும் ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேனென்று அடம்பி டிக்கிறீர்கள்? யாருக்கும் என்னால் பேட்டி தர முடியாது… போலீஸ்காரர்களை மட்டும் விசாரித்து ஏதோ மர்மக் கதை போலத் திரித்துத் திரித்து எழுதித் தானே என் மகனைப் பைத்தியமாக்கினீர்கள்; என் மனைவியை சாவை நோக்கித் தள்ளினீர்கள்; இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா? தயவு செய்து என்னைத் தனியாக விட்டு விட்டு வெளியே போய் விடுங்கள்…..” கை கூப்பி கெஞ்சினார்.
அவள் மிக அமைதியாகச் சொன்னாள்.”மன்னிக்க வேண்டும். நான் நீங்கள் நினைக்கிற மாதிரி நிருபர் இல்லை. உங்களின் மனவலிக்கு மருந்து போட வந்திருக்கிறேன். என் பெயர் காத்ரீனா. ஃபிரடெரிக் ஜோன்ஸ் என்னை உங்களிடம் அனுப்பி வைத்துருக்கிறார்…..” என்றபடி ஒரு மூடிய உறையைக் கொடுத்து பவ்யமாய் வணங்கி நின்றாள்.
உறையை உடைத்துப் படித்ததும் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் உறையை மூடினார் ஆதிராமன். உள்ளே ஆதிராமன் ஃபிரடெரிக் ஜோன்ஸின் ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் சேர்வதற்கான அப்பாயின்மெண்ட் ஆர்டரும், விசா விண்ணப்பத்திற்கான பேப்பர்கள் மற்றும் ஏர் டிக்கெட்டும் இருந்தன.
அந்த வெளிநாட்டுப் பெண்ணை உற்றுப் பார்த்தபடி சொன்னார் ஆதிராமன்.“மிஸ்டர் ஜோன்ஸிடம் சொல்லுங்கள்; அவர் கொடுத்த வேலையை நன்றியுடன் நான் ஒத்துக் கொண்டதாக. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கு வந்து நான் வேலையில் சேர்கிறேன். இந்த நன்றி கெட்ட தேசத்திற்கு விசுவாசமாக இருந்து, நான் அனுபவித்த பலன்கள் இந்த ஜென்மத்திற்குப் போதும்…” அவள் ஒரு துள்ளலுடன் கிளம்பிப் போனாள்.
காத்ரீனா தான் தங்கியிருக்கும் உயர்தர ஹோட்டலின் தனியறைக்குள் போய் தாழ் போட்டுக் கொண்டு தீப்பெட்டி சைஸிலிருந்த கைத்தொலைபேசியில் எண்களை ஒற்றி காதோடு வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் பேசினாள். “ஜோன்ஸ்; நம்முடைய ஆபரேஷன் வெற்றி! மிஸ்டர் ஆதிராமன் நம்முடைய தேசத்திற்கு வந்து வேலையில் சேர சம்மதம் தெரிவித்து விட்டார்…”
எதிர்முனையிலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் குரலிலேயே பொங்கியது.”வெரிகுட்; வெரிகுட்…. நீதான் இதை முடித்தாய். எல்லாப் புகழும் உனக்கே!”
“நான் என்ன செய்தேன் ஜோன்ஸ்! நீங்கள் போட்டுக்குடுத்த பாதையில் பயணம் செய்தேன்; ஆதியின் சக விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் அபாரமாய் ஒத்துழைத்து நம்முடைய வேலையை மிகச் சுலபமாக்கி விட்டார்கள்…..”
“அதுவும் சரிதான்; ஆதிதான் புவர் ஃபெல்லோ… அன்றைக்கே அவரை நம் ஆராய்ச்சி நிலையத்தில் வேலையில் சேர்ந்து விடும்படி எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர்தான் புரிந்து கொள்ளவே யில்லை. தேவையில்லாத சித்ரவதைகளையும் அவமானங்களையும் அனுபவித்த பின்பே இறங்கி வந்திருக்கிறார். சரி இனியும் நீ அங்கிருப்பது அவசியமில்லை. நாம் அமைத்த குற்ற வியூகத்திற்கு உதவி புரிந்த எல்லோருக்கும் எலும்புத் துண்டு உண்டு என்று உறுதியளித்து விட்டு சீக்கிரம் இங்கு வந்து சேர்…. நான் அவர்களின் இரகசியக் கணக்குகளில் டாலர்களை வரவு வைத்து விடுகிறேன்….” கைத் தொலை பேசியை அணைத்து விட்டு காத்ரீனா தன் அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயுத்தமானாள்.

— முற்றும்
: engrsubburaj@yahoo.co.in

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>