க்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G

0 minutes, 7 seconds Read
This entry is part [part not set] of 14 in the series 20010623_Issue


போல் பாட் இறந்ததும் அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸ் இதழில் முதல் பத்தியில் கொட்டை எழுத்தில், ‘ஏன் ? தன்னோடு தன் பதிலை எடுத்துக்கொண்டு போகிறார் போல்பாட் ‘ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. போல்பாட் அவர்களும், அவரது கேமர் ரூஜ் கட்சியும் சுமார் ஒரு பத்துலட்சம் கம்போடிய மக்களை ( அன்றைய மக்கள் தொகையில் ஏழில் ஒரு கம்போடியர்) கொன்று 20 ஆண்டுகள் கழித்து டைம்ஸ் ஏன் கொன்றார்கள் என்ற கேள்விக்கு பதிலை அறிய ஆர்வமாக இருக்கிறது. அந்தச் செய்திக் கட்டுரையில் ஒரு கம்போடியர் சொல்வதாக ‘ இன்னும் எனக்கு தெரிந்து கொள்ளவேண்டும். ஏன் போல் பாட் அவ்வளவு மக்களைக் கொன்றார் என்று ‘ வெளியிட்டிருக்கிறது.

டைம்ஸ் இதழும் அதன் கம்போடிய செய்தியாளரும் இந்தக் கேள்வியை இவ்வளவு நாள் கழித்துக் கேட்பது புதிரான விஷயம். இப்படிக் கேட்பது, வரலாற்றைப்பற்றிய குறைந்த அறிவையும், கொள்கைகள் கொண்டுவரும் விளைவுகளைப் பற்றி பேசாமல் நழுவிப்போவதையும் தான் குறிக்கிறது. உண்மை என்னவென்றால், போல் பாட் உலக மக்களின் நலனுக்காகவே அதை செய்தார். அவர் எதிர்காலத்துக்காகவே அந்தக் கொலைகளைச் செய்தார். அது புரட்சிக் கடமை என்பதற்காகவே அதைச் செய்தார். சிறுவயதில் கொலை செய்வது என்பது சட்டரீதியான அரசியல் முறை என்பதைக் கற்றதனாலேயே அதைச் செய்தார். இன்னும் அவர் அதைச் செய்ததன் காரணம், கொலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டால் அந்தப் பழக்கம் எளிதாக உடைக்கக் கூடியதல்ல.

லெனின், ட்ராட்ஸ்கி, ஸ்டாலின், ஹிட்லர், மாவோ என்ற மாபெரும் சமூக மாற்றக் கொலையாளர்களின் பாதையை போல்பாட் பின்பற்றினார். அவரைப் போலவே, மேற்கண்ட எல்லோருக்கும் தெளிவான காரணங்கள் இருந்தன. அவர்கள் எல்லோருக்கும், மிக ஆர்வமான மனப்பூர்வமான நியாயப்படுத்தல், கோபமான நேர்மையும், சரியான விஷயத்தையே செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் இருந்தது. அவர்கள் எல்லோருக்குமே இடக்கரடக்கலும் நிறைய வார்த்தைகளில் இருந்தது. கொடுங்கோலர்கள் எப்போதும் மொழியையும் கொடுமைப்படுத்துகிறார்கள். வர்க்கப்போர், இறுதி முடிவு, கலாச்சாரப்புரட்சி, இனச்சுத்திகரிப்பு.

பெரும்பாலான இந்தக் கொலையாளர்களுக்கு வெளிநாடுகளில் ரசிகர் கூட்டங்கள். இன்னும் இவை இருக்கின்றன. அவர்களது கருத்துக்கள் தவறானவையாகவும், விதண்டாவாதமானவையாகவும் நிரூபிக்கப்பட்டபின்னரும், கொலைகள் அவர்களது வாழ்க்கையை அமிலமாக்கிய பின்னரும், இவை தொடர்கின்றன. பல படித்தவர்களும், பணக்காரர்களும் கூட இந்த கம்யூனிஸக் கொலைகளை சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார்கள். பல லட்சக்கணக்கான மக்கள், அவ்வப்போது இவர்களது ‘அத்துமீறல்களுக்காக வருந்திக்கொண்டே, ‘இந்தக்கொலையாளர்களை ‘முற்போக்குச் சக்திகளாக ‘ ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், ஒரு ப்ரெஞ்ச் பழமொழி ‘முட்டைகளை உடைக்காமல் ஆம்லெட் பண்ணமுடியாது ‘ என்று கூறுகிறது. தெரிந்த, குடும்ப ஞானத்தையும், மிகக்கொடிய அக்கறையின்மையையும் சொல்லும் இந்த பழமொழியை கம்யூனிஸ்ட்கள் காதலித்தார்கள்.

ஜோஸப் ஸ்டாலின் ( ‘ஒரு இறப்பு சோகம், பல லட்சக்கணக்கான இறப்புகள் புள்ளி விவரம் ‘) தன்னை ஒரு தார்மீக மற்றும் பொருளாதாரத் தோல்வியாக நிரூபித்த பின்னரும் உலகத்தின் பல அறிவுஜீவிகள் கொலைகள் செய்வது சமூகப் பிரச்னைகளை தீர்க்கும் என்று இன்றும் நம்புகிறார்கள். ஃப்ரான்ஸ் ஃபானான் அவர்கள் ஒரு முன்னுதாரணம். 1950களில் ஃபானான் புரட்சிகர மனமருத்துவராக அல்ஜீரிய விடுதலைக்காக வேலை செய்துவந்தார். வன்முறை தேவையானது மட்டுமல்ல அது நல்லதும் கூட என்ற ஒரு கருத்தை அவர் சொன்னார். மூன்றாம் உலக விவசாயிகல் ஒரு பொதுமையான ‘புண்ணில் நெருப்பு செருகுவதன் ‘ மூலம் தங்களை விடுவித்துக்கொள்ளலாம் என்ற கருத்தைச் சொன்னார். இது ஒரு மன நலம் சார்ந்த விஷயம். அவர்களை நசுக்குபவர்களை கொல்வதன் மூலம் காலனியாதிக்கத்தின் கட்டுகளிலிருந்து மன ரீதியாக விடுதலை பெறலாம் என்று கூறினார். அவருக்கு ஆதரவாகச் சொல்லவேண்டுமென்றால் அவரது கற்பனைக்குப் பஞ்சமில்லை என்று கூறலாம். அவர் கம்போடியாவைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால், புரட்சியாளர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, தங்களுக்குள்ளாகவே வன்முறையை ஒருவர் மற்றவருக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும் அவர்கள் காலனியாதிக்கத்தின் கொடுமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வார்கள் என்றார். குறைந்தது அந்த வன்முறைகளிலிருந்து தப்பித்தவர்களுக்காகவாவது விடுதலை.

உலகம் முழுவதும் இருந்த அறிவுஜீவிகள் ஃபானானின் புத்தகத்தைப் படித்தார்கள். அவரை மேற்கோள் காட்டினார்கள். வருத்தத்துடன் தலையை ஆட்டி ஆமோதித்தார்கள். ஜார்ஜ் ஆர்வெல் ஒரு முறை கூறினார், ‘ இந்த மாதிரி விஷயங்களை நம்புவதற்கு நீங்கள் அறிவுஜீகள் கும்பலில் ஒருவராக இருக்கவேண்டும். ஒரு சாதாரண மனிதனால் இப்படிப்பட்ட முட்டாளாக இருக்க முடியாது… ‘. அல்லது ஒரு முட்டாளை முக்கியமானவனாக ஏற்றுக்கொள்வது.

பானானின் கருத்துகள் பாரிஸ் 1950-களில் இடதுசாரி வட்டங்களில் பரவத் தொடங்கியது. அங்கே இளம் ஸலோத் ஸார் என்றவரும் (இன்னும் இவருக்கு போல் பாட் என்ற பெயர் வரவில்லை) புரட்சி வியாபாரத்தைக் கற்றுக்கொண்டிருந்தார். வன்முறை என்பது புல்லரிக்க வைக்கும் ஃபேஷனாகி விட்டது. மனத்தை உயர்விக்கும் வேலையாகி விட்டது. 1960களில் ஜீன் லுக் கோதார் எடுத்த படங்கள் ஃபானான் சிந்தனை போன்ற சிந்தனைகளால் உந்தப்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தன. அன்றைய திரைப்பட இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்த கோதார், இளம் புரட்சியாளர்கள் முட்டாள்கள் என்பதை உணர்ந்திருந்தார். அதே நேரம் அவர்களது முட்டாள்த்தனத்தை பார்வையாளர்களிடம் காட்டி, சிரிப்புடன் கண்ணடித்தார்.

1950இல் கிழக்கு ஜெர்மானியர்கள் கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராக போராட்டம் செய்தபோது, அரசாங்கத்தில் இருந்த மாண்புமிகு கழுதை ஒன்று ‘மக்கள், தலைமையை ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டார்கள் ‘ என்றது. பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் அரசாங்கம் வருத்தப்பட்டதால், மக்களைக் கலைத்துவிட்டு, புதிய மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வருத்தத்துடன் ஒரு கவிதை எழுதினார். அது ஒரு நகைச்சுவை கவிதை. அது யாரிடமும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், அதே போலத்தான் சில அரசாங்கங்கள் ‘மக்கள் ‘ என்று குறிப்பிடும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கின்றன. ‘ஓ குடிமக்களே, நாங்கள் நடத்தும் அரசாங்கத்துக்கு ஏற்ற தரமான மக்களாக நீங்கள் இல்லை. உங்களை மேம்படுத்தவேண்டும் ‘

அரசாங்கத்தால் மக்களை மாற்ற முடியும் என்ற சிந்தனையின் தொடர்ச்சி, அரசாங்கம் திட்டமிடும் புதிய சமூகத்துக்கு ஏற்றாற்போல மனிதர்களை மாற்ற வேண்டும் என்பது. மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதற்கு அவர்களுக்கு எது நல்லது என்று தெரியவில்லை என்பதே காரணம். அவர்கள் சந்தோஷமாக இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டாலும் அது தவறுதான். அவர்கள் ‘பொய்யான மனப்பிராந்தியில் ‘ வாழ்கிறார்கள். அதாவது அவர்களுக்கு மறு படிப்பும், கட்டாய வேலைவாங்குதலும் கொடுக்கப்படவேண்டும். இந்த கட்டாய வேலைவாங்குதலினாலும், மறு கல்வியினாலும், சிலர் இறந்து போகலாம். என்ன செய்வது, சில நேரங்களில் கையை விட்டுப் போய்விடுகின்றன விஷயங்கள்.

நமது இந்த நூற்றாண்டுகளைப் பற்றி எதிர்காலம் நினைக்கும் சில விஷயங்கள் தான் இவை. போல் பாட் கிறுக்குத்தனமான வினோதமான ஒரு ஆளாகப் பார்க்கப்படாமல் அவரது நூற்றாண்டின் மாதிரி ஆளாகப் பார்க்கப் படலாம். சமூக முன்னேற்றத்துக்காக கொலைகளைச் செய்வது என்பதை பைத்தியக்காரத்தனமாக பார்க்கும் உலகம், 20ஆம் நூற்றாண்டை கேவலமாகப் பார்க்கும். நாம் அப்படியே நம்புவோம்.

Series Navigation

author

செய்தி

செய்தி

Similar Posts