க்ருஷாங்கினி கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

க்ருஷாங்கினி



வீட்டுத் தோட்டத்தின் மூலையில்,

அடையாளம் தெரியவரக், காகத்தின்

கூட்டிலிருந்து வெளியேறத் தொடங்கும்போதும்

இறகு முளைக்காக் குஞ்சுகள்

எகிறி வெளிவிழ

திறந்தவெளி பயமும் எதிர்காலமும் தரும்

அஞ்சுதல் அலறலாக

அதுவே இப்பருவத்தின் முதல் குரல்;

பின் இணைதேடி விட்டு விட்டுச்

சப்தமிட தொடர்கூவலாக

திசைகள் பலவும் எதிரொலிக்க

இரவென்றும், பகலென்றும்

இணைதேடி அலைந்து புணர்ந்து

பூரணமாகிறது.

மற்றபடி,

எப்போதும்

மெளனமாகவே செயல்படுகின்றன

குயில்கள்.


விதை நீர்க் கொலை

நீர் உறிஞ்சிய வாகனங்கள்

உருண்டு உருண்டு

ரணமாயின நெடுவழிப் பாதைகள்.

இணைத்திட்ட கம்பிவலை கொண்டு

பூட்டும் இட்டேன் கிணற்றிற்கு.

மொத்தநீருக்காய் அமைத்த

ஆழ்துளை குழாய்க்கும்

அடித்த காற்றுக்கும் வெயிலுக்குமாய்

கொள்ளை போனது நீர்,

பூட்டுக் கெடாமல்- கிணற்றில்.

நிகழ்த்துவதோ

விதைநீர்க் கொலைகள்-செய்ய

வேண்டுவதோ,

மழை நீர் அறுவடை.


நெடுவழிப் பாதை-2

நெடுவழிப்பாதையெங்கும்

ஸ்திரமில்லா சக்கரங்கள்.

திறந்த இயந்திர வாகனங்கள் மீது

சிறிய பிளாஸ்டிக் பைகளில்

கொஞ்சம் மண்ணும் கொஞ்சம் ஈரமும்

சில இலைகளும் அவசரப் பூக்களுமாய்

விற்பனைக்கு;

பரத்திய பிளாஸ்டிக் விரிப்பில்

பல வண்ணமாய், பச்சையுடன்கூட

வடிவங்கள் மாறி மாறி

கம்பிசார் இலைகள்

வேண்டுவன தேடி இணைத்து

சிறிய தொட்டிகளில் பெரிய மரங்களாய்

வேரின்றித் தொங்கவிடலாம்

விற்பனைக்கு;

குளிர்பதன அறையில், மாடியில்,

படியின் திருப்பத்தில்,ஜன்னல்

விளிம்பில், நாற்காலிக்கு

முன்னும் பின்னும் எங்கும்

எதிலும் தொங்கிக் கொண்டு

தேக்கிவைக்கப்பட்ட இயற்கையும் செயற்கையும்

விற்பனைக்கு;

நீல நிறம் கொண்ட பிளாஸ்டிக்

இழுத்துக்கட்டிக் கூரையாக,

நைலான் கயிற்றில்

குலைகுலையாய்த் தொங்கும் இளநீரும்

விற்பனைக்கே;

எவற்றின் மீதும் ஒளியில்

எப்போதும் சமமாய் சூரியக் கதிர்

கிழக்கிலிருந்து மேற்காக.


சூரியனும் ஆண்தானே

ஏழு குதிரை பூட்டிய இரதத்தில் பவனி

அவனின் துணைவி யார் அறியார்!

சாயா என்று;

அப்படியானால் சுவத்சலாவின் இடம் ?

மனைவியனவள் இராஜகுமாரி சுவத்சலா

சூரியனை நாம் நெருங்கினாலும்

அவன் நம்மை நெருங்கினாலும்

தஹிப்பு என்னவோ நமக்குத்தான்.

அடுக்கடுக்கான தஹிப்பு

அனலடிக்கும் நினைவுகள்

விடுபட வழியின்றி- அவள்

நொந்துகொள்ளவில்லை

பிரிய முடிவெடுத்தாள்

பிரிந்தும் வந்தாள்-

பெற்றோரின் அனுசரணையுடன்.

சுவத்சலாவின் நிழலாய் சாயா

தோழியாய், துணையாய்

தஹிப்பேற்கத் தன்னை

தயார் செய்து அறிவித்தாள்

சாயா நிழலாகாமல்

நேரடி தஹிப்பின் தடுப்பானாள்.

விருப்பமில்லாவிட்டால் விட்டுப்பிரிய

பெண்ணுக்கு உரிமையும் தைரியமும்

அன்றே இருந்த்தெனலாம்,

ஆனால்

அதுவும் அந்தோ!

இராஜகுமாரிக்கு மட்டுமன்றோ ?

குமாரியின் நிழலாய், சாயலாய்

இருந்த சாபத்தால் காலமெல்லாம்

யாருக்கு தஹிப்பு ?

பொறுமையின் புகலிடமா,

போக்கிடம் அற்றதாலா ?

இவை அனைத்தும் நேற்றைய

இறந்தகால வாழ்க்கை,

எனவே பெண்ணே!

உன் நிலை உணர்ந்து

முடிவெடுத்துச் செயல்படு.

ஏவுகணை மேலெழும்ப

தஹிப்பும் அவசியம்

அனால்,

அத்துடன் வெட்டிஎறி

வேண்டாத சுமைகளை

மேலேற மேலேற சுமைகள்

உன்னைக் கீழிறக்க

நேரம் பார்க்கும்.

இலேசான தளமும்

உயர்ந்த லட்சியமும்

பூமியில் சிலவற்றை

உதிர்த்துத்தான் பெறவேண்டும் எனில்-

தயாராகு;

உயரப் பற, ஊர்க்குருவியாக அல்ல

தன் இணைக்கதிர் எங்கும்

பரப்பும் ஏவுகணையாய்!

_________________________________________
nagarajan62@vsnl.net

Series Navigation

author

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி

Similar Posts