கோவில் சன்னதி

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

யாழினி அத்தன்கோவிலுனுள் தெய்வம் இருந்தும்
வழிப்போக்கரை வணங்கும்
பிரகாரத்து யாசகர்கள்!
“அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா”
என்றதொரு கூர்வாள்
நெஞ்சினில் நேராக பாய்ந்தாலும்
இதயத்தை சுற்றிய இரும்புக் கவசம்
இறுக்கமாய் பூட்டித்
தன்னை காத்துக் கொண்டதேனோ?
ஆயிரம் மிதியடிகளில்
அரும்பிய அழகிய வர்ணஜாலம்!
அவற்றில் ஒரு சொட்டு கலக்க
வெறும் ஐம்பது நாணயம்தான்!

தவிலும், நாதமும் கூடி
குடும்பம் நடத்துவது
கோவிலுக்குள்தானோ?
கடலலை இரைச்சலில்
அந்தத் தமிழிசை மங்கினாலும்
நின்ற இடம் மாறாத
தெய்வம் அந்த தேனிசையில்
மெய்மறந்திருக்குமோ?

தீபத்தின் சோதியில்
கலங்கரை விளக்கான
கடவுளது முகம்!
தீபாரதனை தட்டில்
சில்லரை வேட்கையின் கவலையில்
அர்ச்சகரின் முகம்!
புதிதாய் பூத்திருந்த ரோஜாக்கள்
காந்தமாய் கவர்ந்தது கண்களை!
ஒவ்வொரு ரோஜாவுக்கும்
முள்வேலி காவலாய்
புதுமாப்பிள்ளைகள்!
கூட்டுச் சிறையிலிருந்து விடுபட்ட
பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்து பறந்து
கோவிலுக்குள் தன்னுலகம் மறந்துபோன
காதலர்கள்!
வீட்டினில் விளையாட
தூண்களில்லை யென்பதாலோ
மண்டப கால்களில்
மறைந்து விளையாடும்
பிள்ளைகள்!
கோடி பணம் இருந்தும்
இன்னும் கோடி கோரிக்கைகளுக்கு
எழுதாத விண்ணப்பமிடும்
பட்டுவேட்டி பணக்காரர்கள்!
விண்ணளவு குப்பைகளை
தாங்கிய கனவு லாரியாய்
ஏழை மனிதர்கள்!
அறிவுப் பசியில்
அலசி அலசி தேடிக்
குழம்பிப் போயிருக்கும்
நான்!
ஆலயத்துள் தேங்கியிருந்த
சேற்றிலே சிந்தனை
காலை ஊன்றியபின்
இன்னும் அழுக்காகிப்போன
என் மனது!

சந்தைக்கடை நெருக்கதில்
கசங்கிப் போன நாயாய்
வெளியே வந்தேன்!
காலில்லாத அந்த
காவியுடை யாசகனின்
அழுக்காணி மனைவி
உடுப்பில்லாத பச்சிளம் பாலகனை
இடுப்பில் கொண்டு
ஒடுக்குப் பாத்திரத்தை குலுக்கி
“அய்யா தர்மம் பண்ணுங்கய்யா
ரெண்டு நாளா சாப்பிடலை!”
என்று கரைந்தக் கால்
என் கண்களின் ஓரம்
தேங்கிய துளியில்
இதயத்தின் இரும்புக்கதவு
உருகும் மெழுகானது!
அறிவுக் கண்கள் விழிக்குமுன் செய்த
அந்த கணக்கில்லாத தர்மத்தில்
அவளின் கணநேர மகிழ்ச்சி!
அதில் தெரிந்ததொரு
கடலளவு நிம்மதி!

கண்டுகொண்டேன்!
மரத்திலே கிட்டாத பழம்
மரத்தின் கீழே!


p.d.ramesh@gmail.com

Series Navigation