கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்
நாவிஷ் செந்தில்குமார்
இரட்டைக்குழந்தைகள்
ஆணொன்று
பெண்ணொன்றுமாய்
வேண்டுமென்கிறாள்
வெற்றுமார்பில்
விரல் நகர்த்திக் கோலமிடும்
மனைவி
00
இருந்தால் ஆபத்தென்பதால்
குடல்வால்
அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி
கர்ப்பப்பையை
அகற்றிவிட்ட கதை
அறியாதவளிடம்
‘சரி’யெனச் சமாளிக்கிறான்
கணவன்
00
வெறுமை பரவிய
படுக்கையறையில்
ஏதுமறியாதவளின்
எண்ணங்களில்
கனவுகள் விரிய
எதார்த்தம் தெரிந்துகொண்டவனின்
கண்களில் குருதி வழிய
இனிவரும் இரவுகளில்
அவளது ஆண்மை
இவனைப் புணரும்
இவனது பெண்மை
கருவுற்ற நெஞ்சிலே
குழந்தையைச் சுமக்கும்!
—